No menu items!

கோடைகால சின்னம்மை – தடுப்பது எப்படி?

கோடைகால சின்னம்மை – தடுப்பது எப்படி?

அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை; அதற்குள் கடந்த சில நாட்களாக கோடை வெயில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொடுகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. இதனிடையே, மே 1 தொடங்கி 4 வரை வெப்ப அலை இன்னும் அதிக உச்சத்தை தொடும் என்கிறார் வெதர்மேன் பிரதீப் ஜான். இந்த கோடை உச்ச வெப்பம் பல உடல்நலப் பிரச்சினைகளையும் கொண்டு வரலாம். குறிப்பாக கோடை கால நோய் என்றதும் அனைவரது நினைவுக்கும் வரக்கூடியது ‘சின்னம்மை’. இந்நோய் ஏன் வருகிறது? தடுப்பது எப்படி?

பொது நல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா தரும் அட்வைஸ் இங்கே…

“சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் வேனிற் காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளி பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்

ஒருமுறை தொற்று கண்டவர்களுக்கு பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் – முதல் தொற்றின் மூலம் பெறப்படும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியானது மீண்டும் அதே நபருக்கு சின்னம்மை வராமல் தடுக்கிறது.

எனினும், குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு முதல் முறை குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்திருந்தாலும் மீண்டும் வளர் இளம் பருவத்தில் கல்லூரி காலத்தில் ஏற்படலாம். இன்னும் வயது முதிர்ந்தோருக்கும் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் பெரும்பாலும் அச்சறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும்தான், எனினும்

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைவான / ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர், முதியோர் ஆகியோருக்கு சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம்.

என்னதான் சாதாரண தொற்று என்று கூறினாலும் குழந்தைகளுக்கும் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கும் முதியோருக்கும் இந்த நோய் நிலை ஏற்படும் போது குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு – தீவிர நுரையீரல் தொற்று ( நியுமோனியா) – தீவிர கிருமித் தொற்று நிலை – தீவிர மூளைத் தொற்று போன்ற தீங்குகளை ஏற்படுத்தி வெகு சிலருக்கு மரணம் வரை கொண்டுய்க்கும் தன்மை கொண்டது.

எனவே, கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

இதர வைரஸ் காய்ச்சல்கள் போல முதல் இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். பின் நெஞ்சுப் பகுதி, முதுகுப்பகுதி, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் தோன்றும்.

இந்தக் கொப்புளம் பார்ப்பதற்கு பட்டானிப் பயறு (Chick Peas) போல இருந்தமையால் ஆங்கிலேயர் சிக்கன் பாக்ஸ் என்று பெயர் வழங்கினர். மற்றபடி, இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் (ப்ராய்லர் / நாட்டுக் கோழி) துளி தொடர்பும் இல்லை.

தமிழில் இதற்கு சின்னம்மை என்று பெயர் வைத்துள்ளோம். காரணம் இதை விட கொடூரமான பெரியம்மை என்ற தொற்று 1970களின் இறுதி வரை நமது உலகில் இருந்து வந்தது. பலருக்கும் மரணத்தையும் உயிர் பிழைத்தோர்க்கு ஆறாத வடுக்களையும் பரிசாக வழங்கிய கொடூர நோய் அது. அழியாத பெரியம்மை வைரஸ்க்கு எதிராக செயல்படும் தடுப்பூசியைக் கொண்டு அந்த நோயை விரட்டியடித்தோம்.

சின்னம்மைக்கு எதிராகவும் தடுப்பூசி உள்ளது. ஆயினும் இது பெரியம்மை போல கொடூரமானது இல்லை என்பதாலும் மரண விகிதம் மிகவும் குறைவு என்பதாலும் இந்த தடுப்பூசி எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு மட்டும் அவர் விருப்பத்தின் பேரில் செலுத்தப்படுகிறது.

கொப்புளம் அனைத்தும் அடுத்த ஏழு முதல் பத்து நாட்களுக்குள் சருகாகி விழுந்துவிடும். கொப்புளங்கள் தோன்றத் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி சருகாகுவது வரை தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். தொற்று கண்டவர் இருமும் போதும் தும்மும் போதும் தொற்று கண்டவருடன் நேரடியாக தொடர்பில் இருப்பவருக்கும் பரவும்.

எனவே, இந்தத் தொற்று கண்டவர்களை நோய் பரவும் காலம் மட்டும்  தனிமையில் (Isolation)  வைக்க வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை இரண்டு வாரமேனும் தனிமைப்படுத்திக் (Quarantine) கொள்ள வேண்டும்.

இந்தத் தொற்றுக்கு  எந்த மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என்ற கூற்று வைக்கப்படுகிறது. ஆனால், இந்த நோய் தரும் ஆபத்தான தீங்குகளை விட்டும் காத்திட முறையான மருத்துவ சிகிச்சை வழங்குவதே சிறந்தது.

முதல் முறை தொற்று ஏற்பட்டவர்களுள் 30% பேருக்கு இந்த சின்னம்மை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் அவர்களது உணர்ச்சிக்கான நரம்பு மண்டலத்தில் அமைதியாக பல வருடங்கள் துயில் கொண்டிருக்கும். அவர் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப் பிறகு எதிர்ப்பு சக்தி குறைபாடு நிலை ஏற்படும் போது திடீரென கண்விழித்துக் கொண்டு மீண்டும் நோய் நிலையை உருவாக்கும் தன்மை கொண்டது இந்த வைரஸ்.

எனவே, சின்னம்மை வந்தால் மருத்துவரை அணுகி இதற்கென உள்ள வைரஸ் கொல்லி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் விரைவாக அறிகுறிகள் நீங்கும். மேலும், நியூமோனியா / மூளைத் தொற்று போன்ற தீங்குகள் நேராமல் இருக்கும். கூடவே  பின்னாளில் மீண்டும் தொற்று ஏற்படாத நிலையையும் உறுதி செய்யலாம். தொற்றுக்கு சிகிச்சை எடுக்கும் ஒருவரிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு பரவும் வாய்ப்பும் குறையும்.

சின்னம்மையில் ஏற்படும் கொப்புளங்கள் தானாக குணமடையக் கூடியவை. எனவே, அதன் மீது கிருமிநாசினிகள் பூசத் தேவையில்லை. இந்த கொப்புளங்கள் பெரும்பாலும் தழும்பாக மாறாது. எனவே, கவலை வேண்டாம்.

அரிப்பு அதிகமாக ஏற்படும் என்பதால் மருத்துவர் பரிந்துரையுடன் அரிப்புக்கு லோசன் பூசலாம். நல்ல காற்றோட்டத்துடன் கூடிய அறையில் ஓய்வு எடுத்து சருகு நிலை அடைந்தவுடன் குளிக்கத் துவங்கலாம்” என்கிறார் டாக்டர் .ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...