No menu items!

சிறுகதை: வரிக்குதிரை – ஆர்னிகா நாசர்

சிறுகதை: வரிக்குதிரை – ஆர்னிகா நாசர்

arnika nasser

அந்த அறை ஹோலி கொண்டாடும் வடஇந்திய நகரம் போல வர்ணஜாலம் பூண்டிருந்தது. இரட்டை மெத்தையில் பூச்சரங்கள் செவ்வக வடிவில் தொங்கிக் கொண்டிருந்தன. படுக்கையில் இருகூடை ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன. பட்டுவேட்டி பட்டு சட்டையில் அமர்ந்திருந்தான் பொதியவெற்பன். வயது 25. தோட்டக்கலை அதிகாரியாக பணிபுரிபவன்.

புத்தம் புது மனைவி வருகைக்காக அவனின் இதயம் தவளைத்தாவல் செய்தது.

திடீரென்று காற்று பொரபொரத்தது. செவ்வக திரை தோன்றியது. அதில் ஒரு ஐம்பது வயது ஆண் குளோஸப்பில் தெரித்தார்.

“பூமி அரசாங்கத்தின் இரவு வணக்கம். புதுமாப்பிள்ளையாகிய உனக்கு எங்கள் வாழ்த்துகள்!”

“நன்றி!”

“வெறும் வணக்கம் சொல்லவோ வாழ்த்து சொல்லவோ நான் இங்கு வரவில்லை. நான் பூமி அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் பிரிவை சேர்ந்தவன்…”

“உங்களை பார்த்ததுமே யூகித்துவிட்டேன். நான் இஸபெல்லா மருத்துவமனையில் சுகப்பிரசவமாய் பிறந்தேன். பிறந்ததுமே என் இடது புஜத்தில் ஒரு மைக்ரோபாட்டை பதித்து விட்டீர்கள். அதன் மூலம் நான் எங்கு போகிறேன் வருகிறேன் யாருடன் பேசுகிறேன் என்பதனை நொடிக்கு நொடி கண்காணிக்கிறீர்கள். என்னை சுற்றி ஆடியோ விடியோ பதிவுகளை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறீர்கள். இந்த ஏற்பாடு எனக்கு மட்டுமல்ல பூமி அரசாங்கத்தில் பிறக்கும் அனைவருக்கும். எனது சுகங்கள் துக்கங்கள் கோபங்கள் தாபங்கள் அனைத்தும் உங்களுக்கு அத்துப்படி…”

“ஆமாம்!” என மந்தகாச புன்னகை வெடித்தார் வரி அதிகாரி.

“நான் பிறந்ததுமே இரண்டு விதமான வரிகள் வசூலித்தீர்கள். ஒன்று குடிமகன் ஆயுள்வரி. ஒரு லட்சம் பிளாஸ்டிக் பணம் என் பெற்றோர் கட்டினர். இஸபெல்லா மருத்துவமனையில் நூறு குழந்தைகள் பிறந்தால் 95 குழந்தைகள் ஸிஸேரியன். நான் சுகப்பிரசவமாய் பிறந்தேன். ஸிஸேரியனுக்கு அய்யாயிரம் பிளாஸ்டிக் பணம் வரி. சுகப்பிரசவமான எனக்கு பத்தாயிரம் பிளாஸ்டிக் பணம் வரி!”

“அந்த வரிகள் மிக நியாயமானவை பொதியவெற்பன்!”

“அரசாங்கம் வெளியிட்டிருக்கும் பெயர் வங்கியிலிருந்து பெயர் எடுத்து குழந்தைக்கு சூடினால் அய்யாயிரம் பெயர் வரி. என் பெற்றோர் சுயமாய் ஒரு தமிழ் பெயரை தேர்த்தெடுத்து எனக்கு வைத்ததற்கு பத்தாயிரம் பெயர் வரி!”

“மதம் சார்ந்த பெயர்களுக்கு இருபதாயிரம் பெயர் வரி. தமிழ்பெயர் வைத்ததால் நீ பத்தாயிரம் பெயர் வரியோடு தப்பித்தாய்!”

“அதோடு விட்டீர்களா? தடுப்பூசி வரி ஒன்று போட்டீர்கள். ஒரு வயதிற்குள் பத்து வகையான தடுப்பூசிகள் போட இருபதாயிரம் பணம் தடுப்பூசி வரி!”

“தடுப்பூசிகள் தயாரிப்பு செலவுக்கு பூமி அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தைதானே நம்பி இருக்கிறது?”

“குடிமகன் ஆயுள்வரி, சுகப்பிரசவ வரி, பெயர் வரி, தடுப்பூசி வரி போட்டதோடு நின்றீர்களா? இல்லையே… மருத்துவமனையிலிருந்து என்னையும் என் தாயாரையும் டிஸ்சார்ஜ் செய்யும் போது டிஸ்சார்ஜ் வரி அம்பதாயிரம் வசூலித்தீர்கள்!”

“இதெல்லாம் உனக்கெப்படிப்பா தெரியும்? இம்… உன் பெற்றோர் பின்னாளில் உன்னிடம் சொல்லி புலம்பியிருப்பார்கள்!”

“ரத்தக்கண்ணீர் வடித்தார்கள்!”

“ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் பிறந்தால் இரண்டு குழந்தைகளுக்கான வரியை தாராளமாக வசூலிப்போம். ஒற்றை குழந்தை இருந்தால் அது அரசாங்கத்திற்கு நஷ்டம்தானே? அதனால், ஒற்றை குழந்தை வரி அம்பதாயிரம் வசூலித்தோம். இரண்டாவது குழந்தை பிறந்தால் இரண்டாவது குழந்தைக்கான வரியிலிருந்து பாதியை கழித்துக் கொள்வோம்!”

“ஒற்றைக் குழந்தை வரி வசூலித்தீர்கள். மலஜல சிறுநீர் வரியும் நாப்கின் வரியும் போட்டீர்கள். முணங்கிக்கொண்டே கட்டினோம்.”

“நீ மொத மொத உன் மழலைக்குரலால் உன் பெற்றோரை அம்மா அப்பா என்று விளித்தாயே… அப்போது மழலைமொழி வரி விதித்தோமே… மறந்துவிட்டாயா?”

“நான் தத்திதத்தி நடக்கும் போது நடைவரி போட்டீர்கள். நான் முதன்முதலாக கிண்டர்கார்டனில் சேரும்போது மழலையர் பள்ளிவரி போட்டீர்கள். ஒன்றாம் வகுப்பு சேரும்போது ஆரம்பபள்ளிவரியும் ஆறாம் வகுப்பு சேரும்போது உயர்நிலைபள்ளி வரியும் காலேஜில் சேரும்போது கல்லூரிவரியும் வசூலித்தீர்கள்!”

“ஹிஹி!”

“வாகனங்களில் போகும்போது மட்டுமின்றி நடைமேடையில் நடந்து போகும் போதும் ஹெல்மேட் போடவேண்டும் என சட்டம் போட்டீர்கள். நடக்கும் போது ஹெல்மேட் போடாதவர்களுக்கு கடும் அபராதம் விதித்தீர்கள். நான் பல தடவை அபராதம் கட்டியுள்ளேன்!”

“நடைமேடையில் நடக்கும்போது நீங்கள் சகமனிதரோடு முட்டி கொள்ளலாம் அல்லது விண்வெளிக் கல் உங்க தலைமேல் விழலாம். இவற்றிலிருந்து பாதுகாக்கவே நடக்கும்போது ஹெல்மேட் அணிய கட்டளையிடுகிறோம்!”

“நாற்பது வயதானவர்களுக்கு தொப்பைவரி விதிக்கிறீர்கள்!”

“ஆமாம்… தொப்பை இல்லாதவர்களுக்கு ‘ஸ்லிம்பிட் வரி’ விதிக்கிறோமே…”

“பருவ வயது ஆணோபெண்ணோ எதிர்பாலினரை பார்த்து ஜொள்ளு விட்டால் உடனே ‘ஜொள்ளு வரி’ வசூலிக்கிறீர்கள். காதலர்கள் மணிக்கணக்கில் போனிலோ நேரிலோ கதைத்தால் ‘கடலை வரி’ போடுகிறீர்கள். காதல் கடிதங்களை மின்னஞ்சலிலோ எஸ்எம்எஸ்ஸிலோ ஹோலோகிராபிக் திரையிலோ எழுதி அனுப்பினால் அதற்கு தனிவரி கட்ட வேண்டும். குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் குடிவரி. எந்த கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாதவர்களுக்கு யோக்கிய சிகாமணி வரி. கல்யாணம் பண்ணாமலேயே இருப்பவருக்கு பிரம்மச்சாரி வரி. திருமணமாகி குழந்தை இல்லாதவர்களுக்கு மலடுவரி. வாகனங்களுக்கு சூரியசக்தியை எரிபொருளாக உபயோகித்தால் சூரியசக்தி வரி!”

“எங்கள் வரிவசூலிப்பு முறைகளை விரல்நுனியில் மனப்பாடமாக வைத்திருக்கிறாயே… சபாஷ்!”

“மதவழிபாட்டு ஸ்தலங்களுக்கு போனால் மதவரி போடுகிறீர்கள். நாத்திகர்களுக்கு தனிவரி. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அசைவவரி. சைவம் சாப்பிடுபவர்களுக்கு சைவவரி. சுற்றுலா போனால் சுற்றுலா வரி. எங்கு வெளியே போகாமல் வீட்டிலேயே அடைபட்டுக்கிடந்தால் சும்மா தேமேவரி. டிசைனர் ஜட்டி அணிந்தால் ஒரு வரி. லங்கோடு அணிந்தால் ஒருவரி. உள்ளாடை அணியாமல் தவிர்ப்போருக்கு ஒரு தனிவரி!”

“நிர்வாண காலனியில் நிர்வாணமாய் வசிப்பதற்கு பிரத்தியேக வரி உண்டு!”

“வருடத்திற்கு 50 சினிமா பார்ப்பவருக்கு ஒரு வரி. வருடத்திற்கு நூறு சினிமாக்களுக்கு மேல் பார்ப்பவருக்கு ஸ்பெஷல் வரி. எந்த குறிப்பிட்ட நடிகர் நடிகைக்கும் ரசிகராய் இருந்தால் ரசிகர் வரி உண்டு!” – பொதியவெற்பன்.

“அம்பது வயதுக்கு பிறகு உயர்இரத்த அழுத்தம், நீரழிவு நோய் வரவில்லை என்றால் அதற்கு தனி அபராத வரி கட்டவேண்டும்!” வரி அதிகாரி.

“மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் பூமிமக்கள் மீது நீங்கள் 679 வகையான வரிகளை விதித்து கொழிக்கிறீர்கள்!”

“இப்போது நான் உன் எதிரில் எதற்காக தோன்றினேன் என்பதனை தெரிந்துகொள் இளைஞனே!”

“சொல்லுங்கள்!”

“இன்று உனக்கும் உன் புதுமனைவிக்கும் இடையே முதலிரவு. இருபத்தியைந்து வயது வரை நீ தேக்கி வைத்த காமத்தை இன்று தகனம் செய்யப் போகிறாய். உனக்கும் கிளுகிளுப்பு உன் மனைவிக்கும் கிளுகிளுப்பு. மனிதரின் உச்சபட்ச கேளிக்கை செக்ஸ்தான். செக்ஸில் திருப்தியுற்றவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுவர்.

உனக்கும் உன்மனைவிக்கும் சேர்த்து ‘முதலிரவு வரி’ விதிக்கிறோம். வரியை இரண்டாய் பிரித்து நீ பாதி உன் மனைவி பாதி கட்டலாம்!”

“முதலிரவு வரி கட்டாவிட்டால்?”

“நீங்கள் இருவரும் கூட அனுமதிக்க மாட்டோம். அடுத்த ஐந்தாவது நிமிடம் பூமி அரசாங்கத்தின் காவல்படை உங்கள் வீட்டுகதவை தட்டும். உங்களை கைதுசெய்து சிறையில் அடைப்போம். ஒரு வருட கடும்காவல் தண்டனை விதிப்போம்!”

“ரொம்பதான் மிரட்டாதீர்கள் முதலிரவு வரி தானே உங்களுக்கு வேண்டும்? எவ்வளவு கட்ட வேண்டும் என கூறுங்கள். உடனே கட்டித் தொலைக்கிறேன்!”

“நீ முதலிரவு வரியாக முப்பதாயிரம் பிளாஸ்டிக் பணம் கட்ட வேண்டும்!”

“சரி!”

“அதில் சில சலுகை தருகிறோம். நன்கு காது கொடுத்து கேள். இப்போது இரவு பத்துமணியாகப் போகிறது. அடுத்து எட்டுமணி நேரத்தில் நீங்கள் மூன்றுமுறை தாம்பத்யம் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தனியாக கூடுதல் வரி கட்டவேண்டும்!”

“இந்த கணக்கெல்லாமா பார்ப்பீர்கள்- சீச்சீ… வெக்கக்கேடு!”

“எட்டுமணிநேரத்தில் பத்து முத்தங்கள் ப்ரீ. பத்து முத்தங்களுக்கு மேல் நீ கொடுக்கும் பெறும் ஒவ்வொரு முத்தத்திற்கும் தனி வரி கட்டவேண்டும்!”

பால்செம்புடன் பட்டுபுடவை சரசரக்க அறைக்குள் பிரவேசித்தாள் குயிலி

“யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பொதியவெற்பன்?”

“வரி அதிகாரியுடன்!”

“என்ன சொல்கிறார்?”

“முதலிரவு வரி கட்டச் சொல்கிறார்!”

திரையில் தெரிந்த வரி அதிகாரியிடம் திரும்பினாள் குயிலி. “மக்களுக்கு அரசாங்கம் செய்யும் சேவைகள் இருபது சதவீதம் என்றால் வசூலிக்கும் வரி இரண்டாயிரம் சதவீதம்.

உங்கள் செயல்பாடு மோடிதனமாக உள்ளது. புதிதாக திருமணம் செய்துகொண்ட எங்களுக்கு திருமண பரிசாய் என்ன தருவீர்கள்?”

“முதலில் முதலிரவு வரியை கட்டுங்கள். அப்புறம் திருமண பரிசை பற்றி பேசலாம்!”

கைபேசி எடுத்தான் பொதியவெற்பன். வரிவசூலிப்பு செயலி மூலம் பணத்தைக் கட்டினான்.

“மகிழ்ச்சி. உங்கள் முதலிரவு சிறப்பாக நடக்க வாழ்த்துகள். திருமண பரிசு கேட்டீர்கள் அல்லவா? புதிதாக என்ன விஷயத்துக்கு வரி வசூலிக்கலாம் என அரசாங்கத்திற்கு யோசனை சொல்லுங்கள் யோசனை சிறப்பானதாக இருந்தால் ஒருலட்சம் பிளாஸ்டிக் பணம் பரிசு!”

குயிலி நாக்கை சுழற்றி யோசித்தாள்.

பின் வாய் திறந்தாள். “மனிதராய் பிறந்தவர் அனைவரும் உயிரோடு இருக்கும் கடைசி கணம் வரை மூச்சு விட்டாக வேண்டும் குடிமகன்/ குடிமகள் வரி நீங்கள் தனியாக வசூலித்தாலும் சுவாசவரி விதிக்கலாம். வருடா வருடம் பத்தாயிரம் ரூபாய் சுவாசவரி!”

வரி அதிகாரி வாய் விட்டு சிரித்தார்.

“சுவாச வரி! நல்லா ஐடியாவா இருக்கே!” பூமி அதிபருக்கு இந்த யோசனையை அனுப்பினார். அறுபது நொடி கரைசலுக்கு பிறகு “உங்கள் யோசனை ஏற்றுக்கொள்ளபட்டது. உங்களுக்கான சுவாசவரி இருபதாயிரம் எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி எண்பதாயிரம் உங்கள் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. மீண்டும் சந்திப்போம். வணக்கம்!”

ஹோலோ திரைமங்கி மறைந்தது.

“எது எப்படியோ இன்று நமக்கு அம்பதாயிரம் லாபம்!” காதல் மல்யுத்தத்திற்கு ஆங்கில முத்தம் கொடுத்து தயாராகினர் பொதிய வெற்பனும் குயிலியும்.

தனிமனித சுயநலங்கள் அரச பயங்கரவாதத்தை ஆல் போல் தழைக்கச் செய்யும் காரணிகள்.

வியம்: அச்சுதன் ரவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...