No menu items!

ஆண்டன் பாலசிங்கம் இடத்தை சிவராம் பிடித்த கதை

ஆண்டன் பாலசிங்கம் இடத்தை சிவராம் பிடித்த கதை

கருணாகரன்

துரோகம் – தியாகம் என்ற இருநிலைப்பட்ட அடையாளத்தின் மீது வரலாறு நிறுத்தியுள்ள மனிதர்களில் ஒருவர் ‘தராகி’ என்ற தர்மரத்தினம் சிவராம். ஒருபோது விடுதலைப்புலிகளால் துரோகியாகச் சித்திரிக்கப்பட்ட சிவராம், இன்னொருபோது அதே தரப்பினால் தியாகியாகப் பாராட்டப்பட்டார் – கொண்டாடப்பட்டார். இப்பொழுது சிவராமின் அடையாளம் ‘மாமனிதர் சிவராம்’ என்பதாகும். சிவராமின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை இந்த அடையாளத்துக்கு மேலும் மதிப்பைக் கூட்டியுள்ளது. வரலாற்றின் விசித்திரம் இது என்பதா அல்லது தமிழ் அரசியலின் நூதனம் இது என்று சொல்வதா என்று தெரியவில்லை. அல்லது அரசியலில் எதிரியுமில்லை, நண்பருமில்லை, எதுவும் நிரந்தரமில்லை, சூழ்நிலைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்ற எளிய முடிவுக்கு வருவதா?

ஆனால், சிவராமைப் புலிகள் தங்களுடைய எதிர் நிலையாளராகக் கருதியபோது (1990களில்) கொழும்பில் சிங்கள நண்பர்களும் புலிகளை எதிர்த்தவர்களும் தங்களின் நண்பர் என்றார்கள். இவர்களோடு சிவராமும் நெருக்கமாகவே இருந்தார். 2000இல் புலிகளால் உருவாக்கப்பட்ட வலுச்சமநிலை மாற்றங்களை அடுத்து பலரைப் போல சிவராமும் புலிகளோடு நெருங்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு, அதே கொழும்பு நண்பர்களும் புலிகளை எதிர்த்தவர்களும் சிவராமைச் சந்தேகித்து விலகத் தொடங்கினர். அவர்களுடைய கண்களில் சிவராம் புலிகளின் ஆளாகித் துரோகியானார்.

ஆக ஒரு தரப்பு ஆதரிக்கும்போது மறுதரப்பு எதிர்க்கிறது. மறுதரப்பு ஏற்றுக்கொள்ளும்போது அடுத்த தரப்பு நிராகரிக்கிறது. இப்படி இருநிலைப்பட்ட ‘துரோகம் – தியாகம்’ என்ற அடையாளத்திற்குள் சிக்குண்ட சிவராமும் அவரைப் போன்றவர்களும் அவிழ்க்கவே முடியாத புதிரின் முடிச்சாகவே இருக்க வேண்டியவர்களாகியுள்ளனர். வரலாறு இவர்களை எப்படி, எங்கே நிறுத்தப்போகிறது என்பது கேள்வியே.

ஈழ விடுதலைப் போராட்டத்திலும் இலங்கையின் ஊடகப் பரப்பிலும் முக்கியமான ஆளுமையாக வெளித்துலங்கியவர் சிவராம். சரியாகச் சொன்னால், ஈழப் போராட்டத்தில் சிவராமுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை விடவும் அவர் பெற்றுக்கொண்ட மதிப்பும் அடையாளமும் ஊடகப் பரப்பிலே வந்ததுதான்.

மொழியறிவு, மொழிதலில் உள்ள தனித்துவம், விடயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், அவற்றை முன் வைக்கும் விதமும் துணிவும், தொடர்புகளை உருவாக்குதல், அவற்றைச் சீராகப் பேணுதல், பயணங்களை மேற்கொள்ளுதல், றிஸ்க் எடுத்தல் போன்றவை சிவராமை குறுகிய காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு சென்றன. இவையெல்லாம் ஊடகவிலாளருக்கான பொதுவான அடிப்படைத் தகுதிகளாகும். இலங்கையில் இத்தகைய அடிப்படைகளைக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் குறைவென்பதால் சிவராம் போன்றவர்கள் தனித்துத் துலங்கினர்.

அதை விட இன்னொரு பிரதான காரணம், சிவராம், ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்புகளையும் அதன் அரசியலையும் நெருக்கமாக அறிந்தவர் என்பதோடு, அந்த நிலப்பரப்பையும் தெரிந்தவர் என்பதாகும். இந்தப் பிராந்தியங்களின் அறிவும் அனுபவமும் சிவராமின் ஊடக வெளிப்பாட்டை வித்தியாசமாக்கிக் காண்பித்தன. இதனால் 1990களின் முற்பகுதியில் தராகியின் இராணுவ ஆய்வுக் கட்டுரைகளுக்கு தனி மதிப்பிருந்தது. அப்பொழுது தராகி, கொழும்பிலிருந்து கொண்டு ‘The Island’இல் எழுதினார். இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் உச்ச மோதல்கள் நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை. யாருக்கு வெற்றி என்று மதிப்பிட முடியாத நிலையில் ஏற்ற இறக்கமாக மாறி மாறிக் களநிலவரம் இருந்தது. சில இடங்களில் புலிகளின் கை ஓங்கும், சில இடங்களில் படைகளின் கை ஓங்கும். சில இடங்களில் புலிகளை எதிர்கொள்ள முடியாமல் படையினர் திணறிக் கொண்டிருந்தனர். புலிகளின் முதுகெலும்பை முறிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அதை எப்படிச் செய்வது எனப் படைத்தலைமையும் அரசாங்கமும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன. இந்தச் சூடான களநிலவரத்தைப் பற்றி இக்பால் அத்தாஸ், தராகி சிவராம் போன்றவர்கள் போட்டிபோட்டு எழுதிக் கொண்டிருந்தனர்.

இருவருடைய கட்டுரைகளையும் புலிகளும் கூர்ந்து படித்து வந்தனர். படைத்தரப்பும் படித்தது. ஒரு கட்டத்தில் தராகி எழுதினார், “மன்னார் வழியாகப் படைத்தரப்பு யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதற்குத் திட்டமிடுகிறது. இந்த வழியாக நகர்ந்தால் படைகளுக்குப் பல அனுகூலங்கள் உண்டு. மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் வழி என்பது பெரும்பாலும் பெரிய வெளிகளையும் சிறிய பற்றைக் காடுகளையும் சிற்றூர்களையும் கொண்டது. இது மரபு வழி இராணுவத் தாக்குதலுக்கு – படையினருக்கு வாய்ப்பாக இருக்கும். இப்படி நகரும் படையினரைத் தடுப்பது புலிகளுக்குச் சவாலாக அமையும். புலிகளுக்கு பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தும்” என.

இந்தக் கட்டுரை 1994இல் வந்திருந்தது. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் அரை நிர்வாகக் கட்டமைப்போடு புலிகளிருந்தனர்.

இதைப் படித்த புலிகளுக்கு, சிவராமின் மீது உச்சக் கோபம் ஏற்பட்டது. “இராணுவத்துக்குப் புத்தி சொல்கிறாரா தராகி?” என்று சீற்றமடைந்தது புலிகளின் தலைமை. புலிகளுக்குப் பகையான புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்தோடிருந்த தராகியை, அரசாங்கத்தோடும் இணைத்துப் பார்க்க முற்பட்டனர் புலிகள்.

ஆனால், தராகி எழுதியதைப் போலவோ எதிர்பார்த்ததைப் போலவோ அப்பொழுது படையினர் மன்னார் வழியாகத் தாக்குதலைச் செய்யவில்லை. பலாலி, ஆனையிறவு, தீவுப்பகுதி என்ற மும்முனைகளின் வழியாகவே யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டனர்.

(பிறகு தராகி சொன்னதைப்போலவே, 2007இல் மன்னார் வழியாகவே இந்த நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டது. அதிலே படைத்தரப்புக்கு வெற்றியும் கிட்டியது). இதனால், 1995 ஒக்ரோபரில் புலிகள் யாழ்ப்பாணத்தை இழக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து புலிகள் கிளிநொச்சியையும் இழந்தனர். இதெல்லாம் புலிகளுக்குப் பின்னடைவாகவே இருந்தன.

இதைத் தாக்குப் பிடிப்பதற்கு அவர்கள் முல்லைத்தீவுப் படைத்தளத்தைத் தாக்கிப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும் 1997இல் தொடங்கிய ஜெயசிக்குறு படை நடவடிக்கை புலிகளுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத ஒரு நிலை வளர்ந்து கொண்டிருந்தது. இந்த நாட்களில் அத்தாசும் சிவராமும் என்ன எழுதுகிறார்கள் என்று புலிகளின் தளபதிகளே அறிவதற்கு ஆவலாக இருந்தனர். இந்த ஆவலுக்காக பிரபாகரனுக்கு இந்தக் கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. இருவருடைய இராணுவ ஆய்வுகளும் புலிகளுக்குப் பல சந்தர்ப்பங்களிலும் எரிச்சலையூட்டியதுண்டு. ஆனாலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிக்கொண்டேயிருந்தன.

ஜெயசிக்குறு படை நடவடிக்கையை ஓயாத அலைகள் நடவடிக்கை மூலம் முறியடித்து, ஆனையிறவுப் படைத்தளத்தையும் கைப்பற்றினர் புலிகள். இது புலிகளுக்குப் பெரிய வெற்றியாக – பெரும் இராணுவச் சாதனையாக அமைந்தது. இதைப் பார்த்துப் பலரும் திகைத்துப்போனார்கள். தராகியும் திகைத்தார். அதற்கு முதல் வாரம்வரை, அதாவது ஆனையிறவுத்தளம் வீழ்ச்சியடைவது வரை இராணுவத்தின் கை ஓங்குகிறது என்று எழுதி வந்தவர், இப்பொழுது படையின் முதுகெலும்பு உடைந்து விட்டது. புலிகள் தேசிய இராணுவமாக – தமிழர்களின் மரபுப் படையணியாக வளர்ச்சியடைந்து விட்டனர் என்று எழுதினார். என்றாலும் புலிகளைப் பற்றிய, அவர்களுடைய அரசியல் முறைமை பற்றிய தராகியின் எண்ணங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. தராகியைப் பற்றிய புலிகளின் குறிப்பேட்டிலும் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.

2002 ஏப்ரல் 10இல் நடந்த பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சிவராம் சர்வதேச ஊடகவியலாளர்களுடன் இணைந்து கிளிநொச்சிக்கு வந்திருந்தார். அப்படி வந்தவர் கிளிநொச்சியைச் சுற்றிப் பார்த்தார். கிளிநொச்சியைச் சுற்றிப் பார்த்தவருக்கு சில அதிர்ச்சிகள் ஏற்பட்டன. முக்கியமாகப் புலிகளின் ‘அறிவு அமுது’ புத்தகக் கடையில் அவர் பார்த்த புத்தகங்கள். பெரியார் தொடக்கம், மாக்சிஸ, இடதுசாரியப் புத்தகங்களின் பெருந்தொகை. போதாக்குறைக்குச் ஷோபாசக்தியின் புத்தகங்கள், கோவிந்தன் எழுதிய ‘புதியதோர் உலகம்’ உள்பட இன்னொரு வகை. அருகில் ‘சரிநிகர்’, ‘தினமுரசு’ என புலிகளுக்கு எதிர்நிலையில் நிற்கும் பத்திரிகைகள்.

இதையெல்லாம் எப்படிப் புலிகள் அனுமதித்தனர்? என்று திகைத்துப் போனார் சிவராம். “புலிகளுக்கு எப்படி ஞானோதயம் ஏற்பட்டது? எப்படி மாறினார்கள்?” என்ற கேள்விகள் எழுந்தன. தான் நினைத்திருக்கும் புலிகள் வேறு. இங்கே நடைமுறையில் உள்ள புலிகள் வேறா? என்ற குழப்பம் ஏற்பட்டது.

இதைப் பற்றி கிளிநொச்சியில் தனக்குத் தெரிந்தவர்களைத் தேடிச் சென்று விசாரித்தார். “கிளிநொச்சியில் மட்டுமல்ல, வன்னி முழுவதிலும் இது போல பத்துப் பன்னிரண்டு கடைகளைப் புலிகள் திறந்திருக்கிறார்கள். இதைவிட கிராமங்களில் உள்ள மாவீரர் படிப்பகங்களிலும் இந்த மாதிரிப் புத்தகங்கள் போடப்பட்டுள்ளனர். இதைவிட இந்தப் புத்தகங்களைக் கூடுதலாக வாங்கிப் படிப்பது போராளிகளே” என்று சொல்லப்பட்டது. “இந்தக் கடைக்கு யார் பொறுப்பு?” என்று விசாரித்த தராகி, ‘அறிவு அமுது’வுக்குப் பொறுப்பான இளங்கோவை (ரமேஸ்) சந்தித்தார். ரமேஸ், பெரியாரியவாதி. தமிழ்ப் பற்றாளர். இதெல்லாம் சிவராமிற்கு மேலும் வியப்பையளித்தது. தராகிக்கும் பெரியாரில் ஈடுபாடுண்டு. மேலும் தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. இளங்கோவோடு பேசிய தராகிக்கு மேலும் ஆச்சரியங்கள்.

இதற்குப் பிறகு தராகியின் கட்டுரைகளில் பெரிய மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. புலிகள் கருத்தியல் ரீதியிலும் புதிய – முற்போக்குப் பார்வையைக் கொண்டிருக்கிறார்கள்; வெளியே கட்டமைக்கப்பட்டிருக்கும் அபிப்பிராயங்களுக்கு மாறாக நடைமுறையில் பல நல்ல விடயங்களைச் செய்கிறார்கள்; பன்மைத்துவ வாசிப்புக்கு இடமளிக்கிறார்கள் என்பதால், பன்மைத்துவத்தை, ஜனநாயகத்தை நோக்கிப் புலிகள் நகருகிறார்கள் என்று நம்பினார் சிவராம். எனவே, இது எதிர்காலத்தில் நல்லதொரு ஜனநாயகச் சூழலைத் திறக்கும்; தமிழ்த் தேசியம் இதன் வழியே கட்டமைக்கப்படுவது சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் சிவராமிற்கு ஏற்பட்டது.

தொடர்ந்து தராகியின் கட்டுரைகள் புலிகளுக்கு ஆதரவான சாய்வு நிலையைக் கொள்ளத் தொடங்கின. ஒரு கட்டத்தில் தராகி ‘The Island’இல் எழுதுவதைக் கைவிட்டார் அல்லது குறைத்துக்கொண்டார் அல்லது தராகியின் கட்டுரைகளை ‘The Island’இல் பிரசுரிக்க முடியாத நிலை உருவானது.

இந்த வளர்ச்சி ஏற்கனவே தமிழ் நெற் (Tamil Net)இல் தொடங்கியிருந்தது. தமிழ் நெற்றில் தமிழர்களுடைய மெய்நிலையை வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளையும் அரசின் ஒடுக்குமுறையையும் அறியப்படுத்தலாம் என முயன்றார். கூடவே தமிழ் ஊடகத்துறையை அறிவுபூர்வமாக முன்னெடுத்து, சர்வதேசத் தரத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் விரும்பினார். இதெல்லாம் மெல்ல மெல்லத் தராகியைப் பற்றிய புலிகளின் மதிப்பீட்டில் புதிய நிலையை உருவாக்கின. இந்த வளர்ச்சி தராகிக்கும் புலிகளுக்கும் இடையிலான நெருக்கத்தை உண்டாக்கியது. ஒரு கட்டத்தில் புலிகளின் முக்கிய தளபதிகளும் தராகியும் கூடிக் கூழ் குடிக்கிற அளவுக்குச் சென்றது.

தராகிக்கும் புலிகளுக்கும் இடையிலான நெருக்கம் கூடி நட்பாக வளர்ந்தபோது, புலிகளில் ஒரு சாராருக்கு தராகியின் ஆலோசனைகள் சரியென்று படத் தொடங்கியது. அது சமாதானப் பேச்சுகள் நடந்து கொண்டிருந்த காலம்.

“சமாதானப் பேச்சுகளின் வழியே அமெரிக்கா, புலிகளைத் தோற்கடிக்க முயற்சிக்கிறது. இதற்காக அது நோர்வேயைப் பயன்படுத்துகிறது. இதையே அது பலஸ்தீனத்திலும் செய்தது. புறத்தோற்றத்துக்கு பலஸ்தீனத்தில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் யாஸீர் அரபாத் வெற்றியடைந்ததைப் போலவும் தெரியலாம். ஆனால், ஒஸ்லோ உடன்படிக்கையின் மூலம் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பலவீனப்படுத்தப்பட்டதே நடந்தது. ஒஸ்லோவின் பொறியில் அரபாத் சிக்கினார். அதைப்போல ஈழப் போராட்டத்தையும் தோற்கடிப்பதற்கு நோர்வே மூலமாக அமெரிக்க – இந்தியக் கூட்டு முயற்சிக்கிறது” என்றார் சிவராம்.

இந்த அபிப்பிராயம் புலிகளின் உள்ளே மெல்ல விவாதத்தை உருவாக்கியது. இதன் விளைவாக உள்ளக சுய நிர்ணய உரிமையைப் பற்றி விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஒரு காலத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தக் கடுமையாகக் கஸ்ரப்பட்டார். மறுபக்கத்தில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளியக சுயநிர்ணய உரிமை – உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு வகையான சுயநிர்ணய உரிமைகளைப் பற்றிப் பேசி அரசாங்கத் தரப்புப் பிரதிநிதிகளின் வயிற்றை அந்த நாட்களில் கலங்க வைத்தார் அன்ரன் பாலசிங்கம். இந்த இரண்டு சுயநிர்ணய உரிமைகளைப் பற்றியும் அறிவதற்காக அப்போது தங்களுடைய ஆய்வுகூடங்களில் இரவு பகலாகக் கிடந்து தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர் சிங்கள அரசியல் ஆய்வாளர்களும் சிங்கள அரசியலாளர்களும்.

ஆனால், “இது ஒரு டப்பாக் கதை. இதில் பெரிதாக ஒன்றுமே இல்லை. உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது தமிழர்களின் அரசியல் அபிலாஷையை ஒரு போதுமே நிறைவேற்றாது. தமிழர்களுடைய போராட்டத்துக்கும் அவர்கள் செய்த தியாகத்துக்கும் இது ஈடாக அமையாது. இது ஒரு வார்த்தை விளையாட்டே தவிர, அரசியல் வடிவம் அல்ல. பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கு மேற்குலத்தின் ஏற்பாட்டில் நோர்வே முன்வைத்த வடிவம் ஏறக்குறைய இவ்வாறான ஒன்றே. ஆகவே தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்போர் இதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார் தராகி சிவராம்.

அன்ரன் பாலசிங்கத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற பரிந்துரையை தராகி கடுமையாக விமர்சித்தார். சிவராம் செல்வாக்குச் செலுத்திய தமிழ் நெற்றிலும் இந்தத் தொனி வெளிப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான விவாதங்கள் மெல்லச் சூடு பிடிக்கத் தொடங்கின. ஒரு கட்டத்தில் சிவராமின் வாதங்கள் புலிகளிடத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. ஆயிரக்கணக்கான போராளிகளையும் பொது மக்களையும் இழந்து நடத்திய போராட்டத்துக்கு சின்னஞ்சிறியதொரு அதிகாரப் பகிர்வா கிடைக்கப் போகிறது என்று குழம்பிப்போனார்கள் புலிகளின் தளபதிகளில் பலரும். இதைப்பற்றி புகழ்மிக்க தளபதியாக இருந்த கேணல் பால்ராஜ் பகிரங்கமாகவே ஒரு பொது மேடையில் பேசினார். “நாங்கள் தமிழீழத்தை அடைவதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம். அந்தக் கனவோடுதான் ஆயிரக்கணக்கான போராளிகள் மாவீரர்கள் ஆனார்கள். (மாவீர்கள் என்பது களத்தில் போராடிச் சாவடைவது). இப்போது உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்று ஏதோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளங்காத விசயத்துக்காக நாங்கள் போராடவில்லை. எங்களைப் பொறுத்தவரை – களத்தில் நிற்கும் போராளிகளைப் பொறுத்தவரை தமிழீழம்தான் ஒரே முடிவு. அதுதான் தீர்வு” என்றார் பால்ராஜ்.

தராகி சிவராமுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக இருந்தது. ஏறக்குறைய இந்த வாய்ப்பின் மூலமாகப் பாலசிங்கத்தைப் பின்னுக்குத் தள்ளித் தோற்கடித்தார். இதற்குப் பிறகு அன்ரன் பாலசிங்கம் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது இல்லாமற் போனது.

அதற்கு கூறப்பட்ட காரணம் அவருடைய உடல்நிலை சரியில்லை என்பது. அதில் பாதி உண்மை இருந்ததும் உண்டு. ஆனால், அதையும் விட பாலசிங்கம் மனரீதியாகக் களைப்படைந்து விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் எனலாம். பின்னாட்களில் அவர் கவலைகளையே அதிகமாகக் கொண்டிருந்தார்.

நிலைமைகளும் நிகழ்ச்சிகளும் எதிர்மறையாகிக் கொண்டிருந்தன. ஆனால், அதுவரையிலும் புலிகளுக்கு வெகு தொலைவிலிருந்த சிவராம் இந்த ஒரு விளக்கத்தோடு மிகக் கிட்டவாக வந்தார். பின்னர், புலிகளின் மிக முக்கியமான தளபதிகளும் பொறுப்பாளர்களும் சிவராமின் பெயரை அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கினர். சிலர் சிவராமுடன் உறவுகளைப் பலப்படுத்தினார்கள். சிவராம் அடிக்கடி வன்னிக்குப் பயணித்துத் திரும்பினார்.

ஆனால், பாலசிங்கம் தெரிவித்திருந்த, “ஒரு மக்கள் சமூகத்திற்கு அதன் உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரசாட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்டால், அம்மக்களுக்கு வெளியக சுயநிர்ணய உரிமைக்கு, அதாவது பிரிந்து சென்று அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டும் உரிமைக்கு உரித்துண்டு. உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டு, அரச அடக்குமுறைக்கு ஆளாகும் மக்கள் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள்” என்ற கருத்தைப் பலரும் கவனத்திற் கொள்ளத் தவறினார்கள்.

இது புலிகளின் தரப்பில் சமாதானப் பேச்சுகளில் தலைமை வகித்துக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கியது. புலிகளிடையே இரண்டு அபிப்பிராயங்கள் மேலெழுந்தன. ஒரு தரப்பு அன்ரன் பாலசிங்கத்தை ஆதரித்தது. மறு தரப்பு தராகி சொல்வதையிட்டு யோசித்தது. இதனால் அவர்கள் மேலும் தராகியை நெருங்கினர். இதைப் பயன்படுத்தி புலிகளுக்குள் நுழையத் தொடங்கினார் தராகி .

இந்த வளர்ச்சியானது, ஒரு காலம் புலிகளின் எதிர்ப்பட்டியலில் இருந்த தராகியை இடம்மாற்றி நட்புச் சக்தியாக நெருக்கமாக்கியது. மறுவளத்தில் அரசு தராகியின் பெயரை எதிர்ப்பட்டியலில் ஏற்றியது. வன்னியில் புதிய ஞானோதயம் பெற்றுவிட்டார் தராகி என்று சிங்கள விமர்சகர்கள் குறிபிடுமளவுக்கு நிலைமைகள் மாறின. விளைவாக 28 ஏப்ரல் 2005 முன்னிரவில் கொழும்பிலே வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார் சிவராம். கொழும்பில் துரோகி என்ற மதிப்பீட்டில் கொல்லப்பட்ட தராகியை வன்னியில் – கிளிநொச்சியில் புலிகள் மாமனிதர் என மதிப்பளித்தனர்.

துரோகிப் பட்டியலில் இருந்தவர் தியாகியானார். நட்புப் பட்டியலில் இருந்தவர் எதிரியானர். வரலாறு இப்படி எத்தனை சுவாரசியங்களைத் தன்னுடைய மடியில் ஏந்தி வைத்திருக்கிறது!

இப்போது புலிகளும் இல்லை, பாலசிங்கமும் இல்லை, பிரபாகரனும் இல்லை, சிவராமும்இல்லை. ஆனால், உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் என்ற கருத்து நிலையும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் மட்டும் மிஞ்சியுள்ளன. இந்த இரண்டு நிலைப்பாட்டையும் இரண்டு தரப்புகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளாகக் கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...