No menu items!

2.4 கோடி ரசிகர்களை இழந்த இந்திய சினிமா!

2.4 கோடி ரசிகர்களை இழந்த இந்திய சினிமா!

இந்திய சினிமா திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களைக் கொண்டாடும் 24 மில்லியன் ரசிகர்களை இழந்திருக்கிறது. காரணம் உலகை உலுக்கிய பெருந்தொற்று.

2020-ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் திரையரங்குகளுக்கு போய் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை சுமார் 146 மில்லியன். அதாவது கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்த நிலவரம் இது. ஆனால் இப்பொழுது வெறும் 122 மில்லியன் ரசிகர்கள் மட்டுமே சினிமா பார்க்க திரையரங்குகள் பக்கம் எட்டிப் பார்க்கிறார்கள் என தெரியவந்திருக்கிறது.

இப்படியொரு தகவலை வெளியிட்டு சினிமா ரசிகர்களை அதிர வைத்த இருக்கிறது சினிமா மற்றும் மீடியா தொடர்பான பல்வேறு சர்வேக்களை எடுத்து வரும் ஒர்மேக்ஸ் நிறுவனம்.

கோவிட்டின் பாதிப்பினால், திரையரங்குகளில் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்த சுமார் 24 மில்லியன் சினிமா ரசிகர்களை நாம் இழந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. என ’மீடியா சைஸிங் த சினிமா 2023’ அறிவிக்கை தெரிவிக்கிறது. [கடந்த 12 மாதங்களில் ஒரு முறையாவது திரையரங்குக்குச் சென்று படம் பார்த்தவர்களை மட்டுமே சினிமா ஆடியன்ஸ் என்ற அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது]

ஒர்மேக்ஸ் மேற்கொண்ட இந்த ஆய்வு, 2023 ஜனவரியில். நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 15,000 சினிமா ஆடியன்ஸ் என்றழைக்கப்படும் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு சராசரி இந்திய சினிமா ஆடியன்ஸ் ஒரு வருடத்தில் 1.5 மொழியிலாவது படங்களைப் பார்த்துவிடுகிறார் என்கிறது ஓர்மேக்ஸ்.

திரையரங்குகளுக்குப் போய் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஹிந்தி சினிமா ரசிகர்கள்தான் இந்தியாவிலேயே மிக அதிகம். காரணம் சினிமா ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் மொழிப்படங்கள் கூட ஹிந்திப்படங்கள்தான். ஏறக்குறைய 58 மில்லியன் சினிமா ஆடியன்ஸ் ஹிந்திப் படங்களைப் பார்க்கிறார்கள்.

ஆனால் சுள்ளென்று அடிக்கும் சென்னையின் வெயில் சட்டென்று குறைவது போல், ஆனால் அந்த எண்ணிக்கையும் கூட 2022-ல் கணிசமாக குறைந்திருக்கிறது. பெருந்தொற்றுக்குப் பின் ஹிந்தி சினிமா ஆடியன்ஸ் எண்ணிக்கை 21.5% குறைந்திருப்பதாக ஒர்மேக்ஸ் தெரிவிக்கிறது.

இந்த நிதியாண்டில். திரையரங்குகளுக்கு வருகைத் தந்து படம் பார்க்கும் சினிமா ஆடியன்ஸின் எண்ணிக்கை, கோவிட்டுக்கு முன்பு இருந்ததை விட 25 முதல் 30 சதவீதம் வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் மக்கள் ரசிக்கும் படியான கன்டென்ட் இல்லை என்பதே. அதேநேரம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சில படங்கள், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் மட்டுமே இப்போதைக்கு திரையரங்குகளில் நன்றாக ஓடுகின்றன. [2023 முதல் காலாண்டில் ஆர், ஆர். ஆர்., கேஜிஎஃப், பூல் புலாயா படங்கள் வெற்றிப்பெற்றன]. சினிமா இந்த வீழ்ச்சியில் இருந்தது மீட்சி காண 2024 முதல் காலாண்டு வரை பிடிக்கலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.

’பிஸினெஸ் டுடே’ நாளிதழுக்கு பேட்டியளித்த பிவிஆர் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் திரு. சஞ்சீப் குமார் பிஜ்லி, ‘ஜனவரி 2022-லிருந்து கடந்த 9 மாதங்களில் பிவிஆர் திரையரங்குகளுக்கு இதுவரையில் 41 மில்லியன் சினிமா ஆடியன்ஸ் வந்து திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார்கள். இது கோவிட்டுக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 75.6% ஆகும். இதனால் கோவிட்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் திரையரங்குகளுக்கு வந்த சினிமா ஆடியன்ஸின் எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று காலாண்டுகள் பிடிக்கும் என தெரிகிறது’ என்கிறார்.

இந்திய பாக்ஸ் ஆபிஸில், 2022-ம் ஆண்டில் திரைப்படங்கள் 10,637 கோடி வசூல் செய்திருக்கின்றன. இந்த வசூல் கோவிட்டுக்கு முன்பாக 2019-ல் வசூல் செய்த 10,948 கோடியை விட குறைவு. ஆனாலும் 2022, இந்திய பாக்ஸ் ஆபிஸில் 10,000 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ’கேஜிஎஃப்2’, ’ஆர்,ஆர்,ஆர்’,. ’பிரம்மாஸ்திரா’, ’த்ரிஷ்யம்2’ போன்ற ஒரு சில படங்களின் வெற்றிதான் இந்த இலக்கை எட்டிப் பிடிக்க வைத்திருக்கின்றன.

ஆனால் தென்னிந்திய மொழிப் படங்கள் சினிமா ஆடியன்ஸ் விஷயத்தில் ஹிந்தி மொழியைப் போல் சொல்லிக்கொள்ளுமளவிற்கு ஆட்டம் காணவில்லை. சிறிய சினிமா உலகமான கன்னட சினிமாவில் சினிமா ஆடியன்ஸ் 25 சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள். திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்கும் கன்னட சினிமா ஆடியன்ஸ் எண்ணிக்கை 11-6 மில்லியனில் இருந்தது 14.5 மில்லியனாக அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் இந்திய சினிமா இழந்த தனது ஆடியன்ஸை 2023-ல் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஷாரூக்கான் நடித்த ‘பதான்’ இந்தியாவில் மட்டும் சுமார் 472.95 கோடி வசூல் செய்திருக்கிறது. [2023 பிப்ரவரி 13-ம் தேதி நிலவரப்படி] உலகளவில் இதன் வசூல் சுமார் 115.40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என அறிவித்திருக்கிறது இப்படத்தை எடுத்த யாஷ் ராஜ் ஃப்லிம்ஸ்.

நீண்டநாட்களாக திரையரங்குகள் பக்கமே தலைக்காட்டாத ஹிந்தி சினிமா ஆடியன்ஸ் ‘பதான்’ படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். காஷ்மீரிலும் கூட நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்களை திரையரங்குகளுக்கு இப்படம் வருகைத் தர வைத்திருக்கிறது.

தென்னிந்திய மொழிப் படங்களைப் பொறுத்தவரையில், அந்தந்த மொழி பாக்ஸ் ஆபிஸிலும், அப்படங்களின் டப்பிங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் 32% வசூலை ’கேஜிஎஃப்2’, ’ஆர்.ஆர்.ஆர்’. ’காந்தாரா’, ‘விக்ரம்’ படங்களின் ஹிந்தி டப்பிங் பதிப்புகள்தான் பெற்றிருக்கின்றன. இது மொழி கடந்து கன்டென்ட்டுக்கு கிடைத்திருக்கும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய சினிமா இன்னும் சில மாதங்களில் வேகமெடுக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் துளிர் விட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...