No menu items!

எடப்பாடிக்கு எதிராக மூவர் கூட்டணி – மிஸ் ரகசியா

எடப்பாடிக்கு எதிராக மூவர் கூட்டணி – மிஸ் ரகசியா

“பாஜக மேல, குறிப்பா அண்ணாமலை மேல செம கடுப்புல இருக்காராம் ஓபிஎஸ்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“பாஜக மேல எப்பவும் ஓபிஎஸ் கோபப்பட மாட்டாரே… அவங்க சொல்றதையெல்லாம் கேட்பாரே. இப்ப என்ன புது கோபம்?”

“ஜார்க்கண்ட் மாநில ஆளுநரா நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக சார்பா பாராட்டு விழா நடந்துருக்கு இந்த பாராட்டு விழாவுக்கு கூட்டணி கட்சிங்கிற முறையில எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கும், தமாகாவுக்கும் அழைப்பு கொடுத்திருக்காங்க. ஆனா ஓபிஎஸ் அணியை கூப்பிடல. இதுக்கு காரணம் அண்ணாமலைனு ஓபிஎஸ் நினைக்கிறார். இதுனால ஓபிஎஸ் கடுப்பாய்ட்டார். அப்போ பாஜக கேட்டுக்கிட்டதாலதான் எடப்பாடி அணியோட இணைஞ்சேன், அவங்க கேட்டுக்கிட்டதாலதான் துணை முதல்வர் பதவிக்குகூட ஒத்துக்கிட்டேன். அவங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் விழுந்தடிச்சுக்கிட்டு ஆதரவு கொடுத்தேன். ஆனா இப்ப என்னை மதிக்காம எடப்பாடியை கொண்டாடறாங்கன்னு தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட வருத்தப்பட்டிருக்கார் ஓபிஎஸ்”

“பாவம்தான். என்ன செய்யப் போறாரு?”

“அண்ணாமலையை கடுமையா விமர்சனம் செஞ்சு இரண்டாம் கட்டத் தலைவர்களை பேச வைக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா அதுக்கு ஒபிஎஸ் ஒகே சொல்லலையாம். டெல்லி மேலிடம் சொல்லி அண்ணாமலை இப்படி நடந்துக்கிட்டாரா இல்லை இதெல்லாம் அண்ணாமலையோட தனிப்பட்ட வேலையான்னு விசாரிச்சுட்டு விமர்சனம் பண்ணலாம்னு சொல்லியிருக்கார்.”

“அப்ப இன்னமும் பாஜக பயம் ஓபிஎஸ்க்கு போகல…அதானே?”

“ஓபிஎஸ்ஸுக்கு இப்ப ஒரே போக்கிடம் பாஜகதானே. அவங்களையும் பகைச்சுட்டு ஓபிஎஸ் என்ன பண்ணுவாரு? ஆனா அவருக்கு இன்னொரு வாய்ப்பு வந்துருக்கு”

“என்ன வாய்ப்பு. கவர்னராகப் போறாரா?”

“இல்லை. அரசியல் வாய்ப்பு. உங்களை பாஜக சேர்த்துக்காது. ஆனா நாங்க உங்களை சேர்த்துக்கறம். நாமெல்லாரும் ஒண்ணாயிருப்போம்னு தினகரன் கூப்பிட்டிருக்காரு. ஓபிஎஸ், சசிகலா, தினகரன் எல்லாம் ஒரே அணிக்கு வரலாம்னு திட்டம். அமமுகவுனே இயங்கலாம்னு சொல்லியிருக்கிறார். அமமுகவுல இருந்து அதிமுகவை கைப்பற்றலாம்னு பேசியிருக்கிறார்”

“அதுக்கு ஓபிஎஸ் என்ன சொன்னாராம்?”

“அவருக்கு இந்த டீலிங் பிடிச்சிருக்குனு கூட இருக்கிறவங்க சொல்றாங்க. முக்கியமா இப்போ அதிமுகவுனு சொல்லிக்கிட்டு இருக்கிற எடப்பாடிக்கு மேற்கு, வடக்கு மாவட்டங்கள்லதான் செல்வாக்கு. ஆனால் தெற்கிலயும் டெல்டா மாவட்டங்கள்லயும் தங்கள் பலத்தை காட்டலாம்னு ஓபிஎஸ் நினைக்கிறார். இந்தப் பகுதிகள்ல இவங்க சமூகத்தினர்தான் அதிகம். அந்த வாக்குகள் எடப்பாடிக்கு போகாம இருந்தாலே அவர் வழிக்கு வந்திருவார்னு கணக்குப் போடுறாங்க”

“சசிகலா ஒத்துப்பாங்களா?”

“சசிகலாவுக்கு இதுல முழுமையான உடன்பாடு இல்லை. அதிமுகதான் என் கட்சினு சொல்லிக்கிட்டு இருக்கும்ப்போது தினகரன் கட்சியோடு செயல்பட்டா அது பலவீனமா முடியும்னு நினைக்கிறார். அதனால முதல்ல ஓபிஎஸ்ஸும் தினகரனு இணைஞ்சி பலத்தைக் காட்டட்டும் அப்புறம் நாம பாத்துக்கலாம்னு சொல்லியிருக்காராம்”

”சரி, ஈரோடு இடைத் தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு? வாக்களர்களுக்கு காசு கொடுத்து அதிமுக கூட்டங்களுக்கு போக விடாம திமுக தடுக்கிறதா அதிமுகவினர் சொல்றாங்களே?”

“திமுக தேர்தல் வேலைகளை ரொம்ப சீக்கிரம் ஆரம்பிச்சிடுச்சு. இவங்க இரட்டை இலை சின்னம் பிரச்சினையெல்லாம் முடிச்சுக்கிட்டு களத்துக்கு வரும்போது அவங்களுக்கு வேலை செய்ய ஆள் கிடைக்கல”

“என்ன வேலை?”

“கூட்டத்துக்கு ஆள் வேணும்ல. எடப்பாடி ஒரு இடத்துல பேசுறார்னா அதுக்கு கூட்டம் காட்டணும்ல. அதுக்கு கூட்டம் வேணும்ல. ஆனா திமுககாரங்க கூட்டம் சப்ளை பண்றவங்களை மொத்தமா காண்ட்ராக்ட் எடுத்துட்டாங்க. அதிமுககாரங்க கூட்டத்துக்கு ஆள் கிடைக்கல. அதிமுககாரங்க டென்ஷன் ஆனதுக்கு இதுதான் காரணம்”

“இப்ப எப்படியிருக்கு நிலைமை? யார் பக்கம் ஓங்கியிருக்கிறது?”

“எடப்பாடி டீம் அசுரத்தனமா வேலை செய்யுது. எடப்பாடி 24 மணி நேரமும் ஈரோடு தேர்தல் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கிறார். ஜெயிக்கணும் இல்லாட்டி குறைந்த வாக்கு வித்தியாசத்துல தோக்கணும். இதுதான் அவர் கட்சிக்காரங்ககிட்ட சொல்றது. வேலுமணியும் தங்கமணியும் செங்கோட்டையனும் தொகுதி முழுக்க சுத்திக்கிட்டு இருக்காங்க. பணமும் ஏராளமா இறக்கிக்கிட்டு இருக்காங்க”

“எவ்வளவு கொடுக்கிறாங்களாம்? ஏதாவது தெரிஞ்சதா?”

“இவ்வளவு ஒப்பனா கேக்குறிங்க. எனக்கு கிடைச்ச நியூசை சொல்றேன். உண்மையாவும் இருக்கலாம் பொய்யாவும் இருக்கலாம். ஆனா தொகுதில பேசிக்கிற நியூஸ் இது. ஒரு குடும்பத்துக்கு அதிமுக 9 ஆயிரம் ரூபாயும், திமுக 6 ஆயிரம் ரூபாயும் கொடுக்கறதா சொல்றாங்க. ந்த தொகை இன்னும் கூடலாம். அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படலாம்னு பேசிக்கறாங்க”

“பேசாமா ஈரோடு ஷிஃப்ட் ஆயிரலாம் போல!”

”முன்னலாம் இரவு நேரத்துலதான் பணப் பட்டுவாடா இருக்கும். ஆனா இப்ப எதிரணியோட கண்ல மண்ணத் தூவ, மதிய நேரத்துலயும் பணப் பட்டுவாடா நடக்குதாம். திமுக அணியைப் பொறுத்தவரைக்கும் திமுக தொண்டர்கள்தான் அதிகமா பிரச்சாரத்துல ஈடுபடறாங்க. காங்கிரஸ் கட்சிக்காரங்க அப்பப்ப வந்துட்டு போறாங்க. மத்த கூட்டணி கட்சிக்காரங்களை அவ்வளவா பார்க்க முடியலை. இது திமுகவை கொஞ்சம் அப்செட் பண்ணி இருக்கு”

“ஆனாலும் இந்த இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கான சோதனை ஆச்சே. ஜெயிச்சுத்தானே ஆகணும்.”

“ஆமா.. இது அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கு. அதானலதான் இந்த தேர்தல்ல வாக்காளர்களைக் கவர புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தறாங்க. உதாரணமா ஈரோடு கிழக்கு வாக்காளர் பட்டியல்ல இருக்கற சுமார் 30 ஆயிரம் பேரு வெளியூர்ல தங்கி வேலை பார்க்கிறாங்க. அவங்களோட செல்போன் நம்பர்களை கேட்டு வாங்கி, ஓட்டு போடச் சொல்லி கூப்பிடறாங்களாம். வந்துட்டு போறதுக்கான வசதிகளையும் செஞ்சு கொடுக்கறதா சொல்றாங்க. 50 வெளியூர் வாக்காளர்களுக்கு ஐந்து பேர் கொண்ட குழுவை அமைச்சு அவங்களோட பேசிட்டு வர்றாங்க. உள்ளூர் வாக்காளர்களைவிட வெளியூர் வாக்காளர்களுக்கு தனி மரியாதை கொடுக்கறாங்க.”

“ராணுவ வீரர் ஒருவரோட கொலையில திமுக பிரமுகர் மகனுக்கு தொடர்பு இருக்கறதா பாஜககாரங்க சொல்லிட்டு இருக்காங்களே?”

“இதுமாதிரியான புகார்களை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கறதா இல்லை. எல்லாத்தையும் தீவிரமா விசாரிச்சுட்டுதான் வர்றார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்களின் வாரிசுகள் செய்யுற தடாலடி அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க உளவுத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறதா அறிவாலயத்துல பேசப்படுது. ஈரோடு கிழக்குத் தேர்தலுக்குப் பிறகு இந்த அத்துமீறல் ஆசாமிகளோட கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படலாம்.”

“ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பேர் வர்றதுக்கு முன்னால விழிச்சுக்கிட்டா சரி.”

“முதல்வரோட இப்போதைய பெரிய பிரச்சினை திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் சிலர்தான். இளைஞரணி முக்கிய பிரமுகர்கள் உதயநிதி ஸ்டாலினோட பேரைச் சொல்லி அமைச்சர்கள்கிட்ட சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்றதா புகார் வரத் தொடங்கியிருக்கு. சமீபத்தில சேகர்பாபுவை சந்திச்ச ஒரு இளைஞர் அணிப் பிரமுகர், சிஎம்டிஏல ஒரு வேலையை முடிச்சுத் தர சொல்லி இருக்கார். அவர் உத்தரவிடும் பாணியில இதைச் சொன்னதும் சேகர் பாபு கடுப்பாயிட்டாராம். ‘அதெல்லாம் செய்ய முடியாது. நான் உங்க தலைவர்கிட்ட பேசிக்கறே’ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாராம். சக அமைச்சர்கள்கிட்ட அவர் இதைச் சொல்ல, அதேமாதிரி சம்பவம் தங்களுக்கும் நடந்திருக்கறதா அவங்க சொல்லி இருக்காங்க. இந்த விஷயம் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதுக்கு போயிருக்கு. இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், ‘சட்டத்துக்கு புறம்பா எந்த வேலையும் செய்ய வேணாம்’னு அமைச்சர்கள்கிட்ட சொல்லிட்டாராம். உதயநிதி ஸ்டாலினும் இதுல தலையிடலையாம். தப்பு செஞ்சா தாராளமா நடவடிக்கை எடுங்கனு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம்”

“நல்ல விஷயம்தானே..இந்த ஆட்சில திமுகவுக்கு பெரிய தலைவலியே கட்சிக்காரங்கதான்”

“உண்மை” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...