No menu items!

பிரதமர் Vs முதல்வர் – பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

பிரதமர் Vs முதல்வர் – பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

 பெட்ரோல், டீசல் விலையை யார் குறைக்க வேண்டும் என்ற மோதல் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒடிக் கொண்டிருக்கிறது.

கடந்த 27-ம் தேதி மாநில முதல்வர்கள், அமைச்சர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, ‘பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அது போன்று மாநிலங்களும் குறைக்க வேண்டும். சில மாநிலங்கள் குறைந்திருக்கின்றன. ஆனால் சில மாநிலங்கள் குறைக்கவில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் கூறிய கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்தும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜனிடமிருந்தும் மறுப்பு வந்துள்ளது.

சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பிரதமர் பேச்சை ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது’ என்று குறிப்பிட்டார்.

’ கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைக்காமல், உபரி வருவாயை மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத்திய அரசு கைவைத்தது.

பெட்ரோல், டீசல் மீதான மத்திய மேல் வரியை – செஸ் வரியை  (Cess Tax) மாநில அரசுகளுடன் பகிரவேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி மக்கள் மீது திணித்து, பல லட்சம் கோடி வருவாயை மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது.

சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அதிரடியாக குறைத்து வேடம்போட்டது. தேர்தல்கள் முடிந்த பிறகு, முன்பு இருந்ததைவிட விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை மத்திய அரசு சுமத்தியுள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.

நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் ராஜனும் பிரதமர் கருத்தை கடுமையாக எதிர்த்தார். சட்டப் பேரவையில் அவர் பேசும்போது, ‘கடந்த 2014-ல் மத்தியில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மொத்த வரி ரூ.9.48, டீசல் மீதான வரி ரூ.3.47. இப்போது ரூ.10 குறைத்த பிறகும் டீசல் மீதான வரி 21.80  ரூபாயாக இருக்கிறது.

பெட்ரோல் வரியில் 5 ரூபாய் குறைத்தப் பிறகும் 27.90  ரூபாயாக இருக்கிறது.  கிட்டத்தட்ட  7 மடங்கு வரி உயர்ந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி மூலம் மத்திய அரசுக்கு 3.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இது 2019-20 ஆண்டு வருவாயைவிட 63 சதவீதம் அதிகமாகும். அந்த நிதியாண்டில் 2.39 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.  2020-21 காலக் கட்டத்தில் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பெட்ரோலிய வரிகளிலிருந்து 837.75 கோடி ரூபாய் மாநில பங்காக கிடைத்தது. 2019-20ல் 1163.13 கோடி ரூபாய் கிடைத்திருந்தது.மத்திய அரசு வரி வருவாய் இந்த அளவுக்கு அதிகரித்த நிலையில் நாமும் அதிகரித்திருந்தால், அவர்கள் குறைக்கும்போது, நாமும் குறைக்கலாம். நாம் அதிகரிக்காத நிலையில் குறைக்க சொல்வது நியாயம் அல்ல. வரி பகிர்வு அளிக்காதது கூட்டாட்சி தத்துவமா? கூட்டாட்சி தத்துவத்தை யார் பின்பற்றவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

பெட்ரோல், டீசல் விலையில் என்ன நடக்கிறது? மத்திய, மாநில அரசுகள் செய்வது என்ன? சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

மத்திய அரசு வரிகளை இரண்டு விதமாக வசூலிக்கிறது. ஒன்று ஜிஎஸ்டி முறை. இந்த வகையில் வரும் வரித் தொகையை மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு வசூலிக்கும் இந்த வரித் தொகையில் 41 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வகையிலும் மத்திய அரசு பணம் ஈட்டுகிறது. அது செஸ் வரி (cess tax).  இந்த வரியை மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டியதில்லை.

சில குறிப்பிட்ட காரணங்களுக்கா செஸ் எனப்படும் மேல் வரி விதிக்கப்படுகிறது. கல்வி, மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக செஸ் வரி அல்லது உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கான செஸ் வரி என்று வசூலிக்கப்படுகிறது. அந்தக் குறிப்பிட்டத் தேவைக்கான நிதி வசூலானதும் அந்தக் குறிப்பிட்ட செஸ் வரி நிறுத்தப்படும்.

பெட்ரோல் ஒரு லிட்டர் வாங்கும்போது அதில் மத்திய அரசின் வரி 27.90 ரூபாய். இதில் செஸ் வரி 26.50 ரூபாய். இந்த வரி மாநிலங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தேவையில்லை. மீதம் இருக்கும்1.40 ரூபாய்தான் பொது வரி. இதில் வரும் தொகையைதான் மாநில அரசுகளுடன் மத்திய அரசு பகிர்ந்துக் கொள்கிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 56.55 ரூபாய்க்கு விநியோகஸ்தருக்கு விற்கப்படுகிறது. இதற்கு மேல் மத்திய அரசின் வரியான 27.90 ரூபாய் சேருகிறது.

மாநில அரசின் வரி 22.52 ரூபாயும் சேர்கிறது. இவற்றுடன் விநியோகஸ்தரின் கமிஷன் 3.86 ரூபாய் சேர்ந்து 110.83 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையாகிறது.

உள்கட்டமைப்பு வசதிகளை நாட்டில் பெருக்குவதற்காக அதிகப்படியான செஸ் வரி விதிக்கப்படுகிறது என்பது மத்திய அரசின் வாதம். கொரோனா மருத்துவச் செலவுகளை இந்த வகையில்தான் சரிகட்ட முடிந்தது என்று மத்திய அரசின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை மத்திய அரசு கொடுக்காத போது மாநிலங்கள் வருவாய்க்கு எங்கு செல்லும்? மாநில வரிகள் மூலம்தான் மாநிலத்துக்கான வருவாயை பெருக்க முடியும் என்று மாநிலங்கள் கூறுகின்றன. இதனால்தான் பெட்ரோல். டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதை எதிர்க்கின்றன. ஜிஎஸ்டி வரம்புக்குள் சென்றால் மாநில அரசின் வரி வருவாய் குறைந்துவிடும் என்பது அவர்கள் கவலை.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசும் பெட்ரோல். டீசல் வரிகளைக் குறைத்தது. பெட்ரோலுக்கு 5 ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களும் தங்கள் வரிகளைக் குறைத்தன. இதைதான் நேற்றைய முன் தினம் நடந்த கூட்டத்தில் பிரதமர் கூறியிருக்கிறார்.

நவம்பர் மாதம் மத்திய அரசு வரிகளைக் குறைத்த போது தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தார்கள். அப்போது நிதியமைச்சர் அளித்த விளக்கத்தில், ‘மத்திய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல, சாத்தியமும் அல்ல. இதனைக் கருத்தில் கொண்டு, 2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

2014ல் இருந்த அளவிற்குக் குறைத்துக்கொண்டால், மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்து விடும்.

ஏனென்றால், இந்த வரி விதிப்பு அடிப்படை விலை மற்றும் மத்திய அரசின் வரி விதிப்பின் மீது விதிக்கப்படும் வரியாகும்’ என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

1.8.2014ல், ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோலைப் பொறுத்த அளவில் லிட்டர் ஒன்றிற்கு 9.48 ரூபாயும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 3.57 ரூபாயும் இருந்தன என்று தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் நிதியமைச்சர் பிடிஆர்.   

இப்போது பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றிற்கு 27.90 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டர் ஒன்றிற்கு 21.80 ரூபாயாகவும் இருக்கிறது.

’2014 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, (அடிப்படை விலை ஏறத்தாழ சமமாக இருந்தபோது) பெட்ரோலுக்கு 18.42 ரூபாயும், டீசலுக்கு 18.23 ரூபாயும் இன்னும் மத்திய அரசு கூடுதலாக விதித்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்பொழுது பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டர் ஒன்றிற்கு ரூ.21.46 ஆகவும், டீசல் மீதான வரி லிட்டர் ஒன்றிற்குரூ.17.51 ஆகவும் உள்ளன.

2014 ஆம் ஆண்டில் இருந்ததை விட இந்தக் கூடுதலான வரியை (பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் – இதில், 3 ரூபாய் நாங்கள் ஆகஸ்ட் மாதத்தில் குறைத்தோம் மற்றும் டீசல் மீது ஒரு லிட்டருக்கு 7.25 ரூபாய்) கடந்த அதிமுக அரசு தான் செலுத்தியது.’ என்று குறிப்பிடுகிறார் பிடிஆர்.

இந்த விலை உயர்வுப் பிரச்சினையைத் தீர்க்க பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

ஆனால் இந்த வாதத்துக்கு மாநிலங்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது.

‘எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்து கொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல் , டீசல் , ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாய் ஒன்றிய அரசு எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும் , நிலைமைக்கு ஏற்ப வரியை மாற்றம் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. தமிழகத்தில் சூழ்நிலை , சுற்றுச்சூழல் மாறும் போது திமுகவின் நிலைப்பாடும் மாறும் , பெட்ரோல் , டீசல் விலையில் ஒன்றிய அரசு செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயாராக உள்ளோம்.’ என்கிறார் பிடிஆர்.

இந்த வரிகளை மாநில உரிமையாகவும் தமிழ் நாடு அரசு பார்க்கிறது என்பது பிடிஆர் சொல்வதிலிருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது ஏற்றிய வரிகளை கச்சா எண்ணெய் விலை குறைந்தப் பிறகும் மத்திய அரசு குறைக்காமலிருப்பதுதான் இன்றைய வில உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பார்ப்போம், அரசுகள் என்ன செய்கின்றன என்று. இடையில் அழுதுக் கொண்டே பெட்ரோல் நிரப்புவோம் நாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...