No menu items!

மிஸ் ரகசியா-அமித் ஷா சந்தித்த 21 பேர்

மிஸ் ரகசியா-அமித் ஷா சந்தித்த 21 பேர்

ஆபீஸில் ஏசி வேலை செய்யாததால் ஃபேனை போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் ரகசியா. ஃபேனின் காற்றும் போதுமான அளவில் இல்லாததால் ஸ்கிரிப்ளிங் பேடை வைத்து விசிறிக்கொண்டு இருந்தார்.

“ஏசியை சீக்கிரம் சரி செய்யுங்கள். அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயில் இப்படி கொல்கிறதே” என்று புலம்பிய அவருக்கு 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான குண்டு ஐஸ் ஒன்றைக் கொடுத்தோம்.

“அப்பப்ப இப்படி ஏதாவது கொடுத்து கூல் செய்து விடுகிறீர்கள்” என்றவாறு அதை ருசிக்க துவங்கினார்.

அமித் ஷா சென்னை வந்திருந்தபோது யூடியுப் நடத்துபவர்களையெல்லாம் சந்தித்தாராமே?”

”ஆமாம். சந்தித்ததோடு மட்டுமில்லாம அவர் அவங்களைப் பத்தி சொன்னதுதான் பாஜக வட்டாராங்கள்ல சிரிப்பா பேசிக்கிறாங்க” என்றார் ரகசியா.

“என்ன சொன்னாராம்”

“பாஜகவுக்கு ஆதரவாக யூடியுப் சேனல்களை நடத்தும் 21 பேரை அமித் ஷாவுக்கு அறிமுகப்படுத்தினாராம் தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை. அவர்களிடம் அமித்ஷா, உங்களையெல்லாம் மக்கள் நம்புறாங்களா? மக்கள்கிட்ட மரியாதை கிடைக்கிறதா?னு கேட்டிருக்கிறார். வந்தவங்களுக்கு அதிர்ச்சி. நல்ல வரவேற்புனு பதிலளிச்சிருக்காங்க. உண்மையா நடத்துங்க, பொய் சொன்னா தமிழ் நாட்டு மக்கள் கண்டுபிடிச்சிருவாங்கனு சொல்லியிருக்கார். இதெல்லாம் சொல்லிட்டு பாராட்டவும் செஞ்சிருக்கார். பாஜகவை மக்கள்கிட்ட நீங்கதான் கொண்டு செல்லணும்னு சொல்லியிருக்கிறார்.”

’அமித் ஷா பேசுனதுல எதுக்கு பாஜகவுல சிரிப்புனு சொன்ன?” என்று ரகசியாவிடம் கேட்டோம்.

“சிரித்தவர்கள் அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டியை சேர்ந்தவங்க. இந்த யூடியுப் சேனல்கள் பாஜகவை முன்னிறுத்துவதைவிட அண்ணாமலையை முன்னிறுத்துவதுதான் அதிகம்னு அவங்க நினைக்கிறாங்க. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அமித்ஷா சொல்லியிருக்கார்”

“என்ன?”

“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”

“அத்தனை சீட் ஜெயிச்சுடுவாங்களா?…கஷ்டமாச்சே?’”

“அதற்கான வியூகங்களை அமைச்சுக்கிட்டு வராங்க. இன்னும் ரெண்டு வருஷம் இருக்குல. எத்தனையோ மாற்றம் வரப் போகுது…”

“கோவையில ஒரு நிகழ்ச்சியில பேசின தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் காவி பெரியது, வலியதுன்னு பேசி இருக்காரே? அதெல்லாம் அந்த வியூகத்துல வருமா?”

“அது பாஜக வியூகமா தமிழிசையோட தனிப்பட்ட வியூகமானு தெரியல. அந்த கூட்டத்துல அரசியல் சம்பந்தமான சில கருத்துகளையும் அவர் பேசி இருக்கார். கவர்னர் பதவியை விட்டுட்டு தமிழக அரசியல்ல மீண்டும் தீவிரமா ஈடுபட அவர் ஆர்வமா இருக்கிறதை இந்த பேச்சு எதிரொலிக்கிறதா சொல்லப்படுது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோட போக்கு பிடிக்காத மூத்த தலைவர்கள் சிலர், தமிழிசை திரும்பவும் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்கணும்னு விரும்பறாங்களாம். பொறுத்திருந்து பார்ப்போம்”

”எச்.ராஜா ஏதோ மன வருத்தத்துல இருக்கார்னு சொல்றாங்களே?”

“மன வருத்தம்லாம் கிடையாது. ஆரம்பத்தில் ஆளுநர் பதவிக்காக கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர், இப்ப அப்பதவி கிடைக்காவிட்டாலும் ராஜ்யசபாவில் நியமன எம்.பி பதவியாவது கிடைச்சா நல்லதுன்னு நினைக்கிறாராம். ஆனா அதுவும் சாத்தியமில்லைன்றதுபோல் செய்திகள் வருது. அதனால லேசா அப்செட். ஆனா கட்சி ஏதாவது செய்யும்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்.”

ஏசி வேலை செய்ய தொடங்க அறை குளிர்ந்தது.

“அப்பா, இப்பதான் நல்லா இருக்கு. வெயில் கொல்லுது”

“இந்த வெயிலுக்கே இப்படி புலம்புகிறாயே… டெல்லி பக்கமெல்லாம் இன்னும் மோசமாம். 44 டிகிரி வரை வெயில் அடிப்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்னு அரசு எச்சரிக்கை விடுத்திருக்காம்”

“ஆமாம்… நானும் கேள்விப்பட்டேன். ஒரு பக்கம் வெயில் வறுத்தெடுக்க, மறுபக்கம் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் சப்ளையும் பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமா உத்தரப் பிரதேசத்துக்கு தினமும் 23 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுது. ஆனால் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறதாம். அதனால மாநிலத்தின் பல பகுதிகளில் மின் வெட்டால் மக்கள் கஷ்டப்படறாங்க. ஜம்மு காஷ்மீர், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் 2 முதல் 8 மணிநேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கறதால மக்கள் கடுமையா பாதிக்கப்பட்டிருக்காங்க. முக்கியமாக பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கறதா சொல்றாங்க.”

“இதனால் அரசாங்கத்துக்கு கெட்ட பெயர் வருமே”

“ஆமாம். இப்பவே உத்தர பிரதேசத்தில் சமஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுக்காக பிரச்சினை பண்ண ஆரம்பிச்சிருக்கார். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்புக் குரல் அதிகரிச்சு வர்றதால நிலைமையை சீராக்க மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துட்டு வருது. உதாரணமா ரயில்கள் மூலம் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல வசதியாக 670 பயணிகள் ரயில்களை ரத்து செஞ்சிருக்காங்க.”

”சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்துட்டாரே?”

“பலருக்கும் இதில் ஆச்சரியம் இருக்குது. 2011-ம் ஆண்டுமுதல் தான் வகித்துவரும் மாவட்ட செயலாளர் பதவியை என்ன ஆனாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருந்திருக்கார். இந்த முறையும் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் இதை ரசிக்கவில்லை. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு, மாவட்டச் செயலாளராகவும் இருக்கலாமான்னு கேட்டிருக்காங்க.”

“ஓஹோ”

“மூத்த தலைவர்களின் தொடர் நச்சரிப்பால், தனது ஆதரவாளரான இளங்கோவனை கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யவைத்து, அவரை மாவட்ட செயலாளர் ஆக்கியுள்ளார் எடப்பாடின்னு சொல்றாம்ங்க. அதேநேரத்தில் கோடநாடு எஸ்டேட் கொலைவழக்கின் விசாரணை வளையத்துக்குள் இளங்கோவன் இருப்பதால், விசாரணையின்போது அவர் ஏதாவது உளறிக் கொட்டிவிடக்கூடாதே என்பதாலும் இப்பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது”

”இலங்கை மக்களுக்கு தன் சொந்த நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறாரே ஓ.பன்னீர்செல்வம்”

“ஆமாம், முதல்வர் கூட நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனா இதை அதிமுக மூத்த தலைவர்கள் ரசிக்கவில்லையாம். கட்சி ரீதியாக உதவி செய்திருக்கலாம். அப்படியில்லாமல் தனிப்பட்ட முறையில் பணம் கொடுத்திருப்பது தவறான முன்னுதாரணம்னு முணுமுணுக்கிறாங்க. இது கட்சிக்குள்ள ஒற்றுமை இல்லை, ஒன்றுபட்டு முடிவு எடுக்க முடியலன்கிறதை காட்டுதுனு சொல்றாங்க”

“கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கின் விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருதே?”

“கோடநாடு வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் தென் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டிருக்கார். விசாரணை விவரங்கள் சிலவற்றை எடப்பாடிக்கு லீக் செய்ததால் அவர் மாற்றப்பட்டதாக சொல்கிறார்கள்”
“நீ கோடநாட்டைப் பற்றிப் பேசியதும் எனக்கு சசிகலா ஞாபகம் வந்துடுச்சு. அவர் எப்படி இருக்கார்?”

“சசிகலா அத்தனை உற்சாகமா இல்லைன்னு அவரைச் சுற்றி இருப்பவர்கள் சொல்றாங்க. அதிமுக உள்கட்சித் தேர்தலில் குழப்பம் வந்து ஒரு பிரிவினர் தன்னை ஆதரிப்பார்கள்னு அவர் நம்பியிருந்தார். ஆனால் அப்படி ஏதும் நடக்கல. இது ஒருபக்கம் கவலையைக் கொடுக்க, அவரால் உருவாக்கப்பட்ட தினகரனே தற்போது அவருக்கு எதிராக செயல்படுகிறாராம். முன்பெல்லாம் சசிகலா எந்த ஊருக்குப் போனாலும் அமமுகவினர் சசிகலாவை வரவேற்கச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது அவர் செல்லும் இடங்களில் அமமுகவினர் வரவேற்கச் செலவதில்லையாம். தினகரனின் உத்தரவால்தான் அவரை யாரும் வரவேற்க போகலைன்னு சொல்றாங்க. இதனால் சசிகலா மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம்”

“சசிகலாவும் தினகரனும் ஆளுநர் – முதல்வர் ரூட்டில் போறாங்கன்னு சொல்லு. சரி, பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மர்ம மரணம் பற்றி இப்ப திரும்பவும் ஒரு சர்ச்சை வந்திருக்கு. சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருக்குங்கு மாதிரி அவரோட கணவர் ஹேமந்த் சொல்லியிருக்காரே”

“ஆமாம். சித்ராவோட மரணத்துல மர்மம் இருக்கிறதா அப்பவே அவரோட அப்பா புகார் கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதா கைது செய்யப்பட்ட ஹேமந்த், பிறகு ஜாமீன்ல வெளியில வந்தார். அவர்தான் இப்ப திரும்பவும் பேசி இருக்கார். சித்ரா இறந்த ஓட்டலுக்கு ஒரு அமைச்சரோட கார் வந்து போயிருக்கு. அது மட்டுமில்லாம அதிமுக பிரமுகர் ஒருவர் மூலமா திருச்சில நடந்த விழாக்கள்ல சித்ரா கலந்துக் கொண்டது அப்பவே செய்திகள்ல வந்தது. இப்போ ஹேமந்த் திடீர்னு முன்னாள் அமைச்சரை தொடர்புபடுத்தி பேசியிருப்பதை அவ்வளவு எளிதா கடந்து செல்ல முடியாது. பின்னணில ஏதோ திட்டம் இருக்கிறதை காட்டுதுனு அதிமுகவினர் கூறுகிறார்கள். மீண்டும் விசாரனை நடக்கலாம். அந்த விசாரணை அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்”

”பாஜக, அதிமுக செய்திகளை கொடுத்துட்ட. திமுக பக்கம் எந்த நியூஸும் இல்லையா?”

“திமுகவினர் செம குஷில இருக்காங்க. மே 2ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் ஆகிறது. அதை விமரிசையாக கொண்டாடனும்னு உற்சாகமா இருக்காங்க. 10ஆம் தேதி பெரிய பொதுக் கூட்டத்தை ஏற்படுத்தியிருக்காங்க. அந்தக் கூட்டம் முடிந்ததும் சில அமைச்சர்களுக்கு அதிர்ச்சி வரலாம்”

“ஏன்?”

“அமைச்சர்கள் இலாகா மாற்றம் நடக்கும்னு சொல்லப்படுது. அநேகமா உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம். இளைஞர் நலன் அல்லது விளையாட்டுத் துறை வழங்கப்படலாம் என்று திமுகவுல சொல்றாங்க. ஆனால் சிலர் துணை முதல்வர் பதவியே கொடுக்கலாம்னு தலைமைக்கு சிபாரிசு செஞ்சிருக்காங்களாம்”

“துணை முதல்வர் ஆக்கிடுவாங்களா?”

“இல்லை. முதலில் அமைச்சர். பிறகுதான் மற்றவை என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. உதயநிதியும் கட்சிக்காக சளைக்காமல் உழைப்பதால் கட்சிக்குள் அவருக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. சமீபத்தில் சட்டப் பேரவையில் தயக்கமின்றி பேசியதும் குறிப்பாக தாத்தாவைப் போல் நகைச்சுவையாக பேசியது பலருக்கு பிடித்திருந்தது. அதனால் இனி அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்” என்று கூறியவாறு கிளம்பினார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...