No menu items!

வானிலை ஆய்வு மையம் Vs அரசு: அதிகன மழையை கணிக்க தவறியது யார்?

வானிலை ஆய்வு மையம் Vs அரசு: அதிகன மழையை கணிக்க தவறியது யார்?

தென்மாவட்டங்கள் அதிகன மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், “வானிலை முன்னறிவிப்பில் துல்லியம் இல்லை” என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட் செய்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்காதது தொடர்பாக அரசு மீது வரும் விமர்சனங்களை திசை திருப்ப இவ்வாறு சொல்கிறாரா அமைச்சர் அல்லது உண்மையிலேயே வானிலை ஆய்வு மையல் கணிக்க தவறியதா?

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மழை!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் வரலாறு காணாத பெருவெள்ளத்தை தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி எதிர்கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “தமிழகம் முழுவதிலும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இந்த ஆண்டு 44 செ.மீ மழை பெய்துள்ளது. இது வடகிழக்கு பருவமழை கால இயல்பான அளவான 42 செ.மீ மழையை விட 5% அதிகமாகும். இதில் மிக உச்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான அளவைவிட 135% அதிகமாக பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில்  103%, தூத்துக்குடியில் 68%, தென்காசியில் 80% அதிகமாக மழை பெய்துள்ளது. இம்மாவட்டங்களில் 24 மணி நேரங்களில் 39 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. 33 இடங்களில் மிக கன மழை, 12 இடங்களில் கன மழை பெய்துள்ளது.

வளிமண்டல சுழற்சியில் இருந்து இதுவரை இந்த அளவுக்கு மழை எதிர்பார்த்தது கிடையாது. இது மேக வெடிப்பு கிடையாது. ஒருமணி நேரத்தில் 10 செ.மீக்கும் மேல் மழை பெய்தால் மேக வெடிப்பு எனலாம். ஆனால், இது அதி கனமழை. எனக்கு தெரிந்தவரை இந்த அளவுக்கு அதி கனமழை பரவலாக அனைத்து இடங்களிலும் பெய்தது இல்லை” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக, வானிலை தரவுகளை சேகரிக்கும் தனியார் ஆய்வாளர் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டில் 1992ஆம் ஆண்டு 96.5 செ.மீ மழை திருநெல்வேலி மாவட்டத்தில் காக்காச்சியில் பெய்தது. அதுதான் இதுவரை தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும். அதன் பிறகு, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தான் அதிகமாக மழை பெய்துள்ளது. காயல்பட்டினத்தில் 24 மணி நேரங்களில் 95 செ.மீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஆண்டில் பெய்யும் மழை அளவை விட அதிக மழை இதுவாகும்” என்கிறார்.

புயல், மேக வெடிப்பு இல்லை; ஆனாலும் ஏன் அதிகனமழை?

வரலாறு காணாத இந்த அதி கனமழைக்கான காரணம் என்ன என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாகத்தான் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் ரமணன், “இந்த பெருமழைக்கு காரணம் வானிலை அமைப்புதான். கிழக்கிலிருந்து ஈரம் மிகுந்த வங்க காற்று தமிழ்நாட்டை நோக்கி வருகிறது, அதேபோல தெற்கில் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தும் ஈரம் மிகுந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வருகிறது. இவை இரண்டும் ஒன்று சேரும்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம், தரைமட்டத்திலிருந்து ஐந்து புள்ளி இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் பலத்த மழை பொழிவை உண்டாக்கியுள்ளது.

வங்கக்கடலில் இருந்து வந்த காற்றும் இந்திய பெருங்கடலில் இருந்து வந்த காற்றும் ஒன்றுடன் ஒன்று மோதி மேல்நோக்கி எழுந்திருக்கிறது. இப்படி மேலே எழும்புவதற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. இதெல்லாம் சேர்த்துதான் கனமழையை கொடுத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஆனால், ‘க்ளைமேட் ட்ரெண்ட்ஸ்’ (Climate Trends ) என்ற சூழலியல், காலநிலை ஆராய்ச்சி தொடர்பாக இயங்கும் தன்னார்வ அமைப்பின் கார்த்திகி, “இது எல் நினோ விளைவு. எல் நினோ ஆண்டில் இதுபோன்ற பாதிப்புகள் நடைபெறுகின்றன. 2015 சென்னை பெருவெள்ளம் ஏற்பட்டபோதும் எல் நினோ காலநிலை நிலவியது. இப்போது எல் நினோ தாக்கம் தீவிரமாக உள்ளது.

புவி வெப்பமயமாதலே இதற்குக் காரணம். புவி வெப்பமயமாதலின் விளைவாக 93 சதவீத வெப்பத்தை கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால் கடலின் மேல்பரப்பு சூடாகி புயல் உருவாக ஏதுவான சூழலை ஏற்படுத்துகிறது. அதேவேளையில் புயல் உருவாவதை முழுக்க முழுக்க கடல் நீரின் வெப்பம் மட்டுமே ஊக்குவிப்பதில்லை. கூடவே கடல் நீரின் அளவும் ஊக்குவிக்கிறது. புவி வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்திக்கொண்டே இருக்கின்றன. புவி வெப்பமயமாதலால் கடல் மேல்பரப்பின் வெப்பம் உயர்வதால் புயலின் உட்கரு பகுதிக்கு நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒரு நாள் சராசரி மழையளவு 6.5 செ.மீ என்ற அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்து உச்சபட்ச அளவை எட்டக்கூடும். புயலின் மையப் புள்ளியில் இருந்து 300 கிமீ தொலைவு வரை இருக்கும் பகுதிகளில் கனமழை பெய்கிறது. மிக்ஜாம் புயல் தாக்கம் இப்படித்தான் பரலாக பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது குமரிக் கடல் பகுதியில் நிலவிய உயர்மட்ட இடஞ்சுழி காற்று அதிக ஈரப்பற்றை உள்வாங்கி வலுப்பெற்று ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று வறண்ட காலநிலை கொண்ட உள் மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. இத்தகைய மழைக்குப் பின்னணியில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.

இந்த பெருமழையை கணிக்க தவறியது யார்?

பெருமழையால் தென்மாவட்டங்கள் கடல் நீர் புகுந்தது போல் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் மீட்புப் பணிகளை அரசு முடக்கிவிட்டுள்ளது. அதேநேரம், மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் அரசு எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலியில் மழை கொட்டிக் கொண்டிருக்கும் போது, மாநகராட்சி மேயர் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டு பணிகளில் மும்முரமாக இருந்ததை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை வெள்ளத்துக்கு பிறகு நமது வானிலை ஆய்வுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் இதுபோன்ற இயற்கை பேரழிவு நேரங்களில் நமது ஒருங்கிணைந்த இயக்கம் என இரண்டையும் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டியது முக்கியம். வானிலை முன்னறிவிப்பில் துல்லியமான கணிப்பு என்பது ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது. மழையின் வீரியம் குறித்து சரியாக கணிக்கப்படவில்லை. மழை எச்சரிக்கை போதுமான அவகாசம் அளிக்கும் வகையில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

ஆனால், வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனோ, “ஒரு இடத்தில் 7 செ.மீ முதல் 11 செ.மீ வரையிலான மழை பெய்ய வாய்ப்பிருந்தால் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் வழங்கப்படும். அதுவே 12 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மிக கன மழை பெய்யும் என்றால் ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 20 செ.மீக்கும் மேலாக அதி கன மழை பெய்யும் என்றால் ரெட் அலர்ட் வழங்கப்படும். வாய்ப்பு அடிப்படையிலேயே எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. உறுதியாக எதையும் சொல்ல முடியாது. 21 செ.மீக்கு மேல் மழைப் பொழிவு இருக்கும்பட்சத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்படும்.

இதனடிப்படையில், தற்போதைய சூழ்நிலையை கணித்தே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி முதல் நேற்று வரைக்கும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தோம். அதி கனமழைக்கான வாய்ப்பு குறித்தும் எச்சரிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இனி வருங்காலங்களில் வட கிழக்குப் பருவமழையின்போது இதுபோன்ற தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் (Extreme Precipitation – எக்ஸ்ட்ரீம் பிரிஸிபிடிஷேன்) ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இனிமேல் எதிர்பார்க்காததை எதிர்பார்க்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனும், “அதிக கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டும்தான் வானிலை ஆய்வு மையத்தால் உறுதி செய்ய முடியும், எச்சரிக்க முடியும். ரெட் அலர்ட் என்பது 20 சென்டிமீட்டருக்கு மேலே என்றால் அது 90 சென்டிமீட்டராகவும் இருக்கலாம் 45 சென்டிமீட்டர் ஆகவும் இருக்கலாம்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...