No menu items!

ராஜினாமா செய்கிறாரா பொன்முடி? – மிஸ் ரகசியா

ராஜினாமா செய்கிறாரா பொன்முடி? – மிஸ் ரகசியா

“திமுகவுக்கு அடிமேல அடி” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா.

“எதைச் சொல்ற?”

“முதல்ல சென்னை வெள்ளம், அப்புறம் நெல்லை வெள்ளம். நடுவுல 6000 ரூபாய் சரியா கொடுக்கலன்ற குற்றச்சாட்டு. இதுக்கு மேல பொன்முடி விடுதலை ரத்துன்ற நியூஸ்”

“ஆமாம். கஷ்டம்தான்..திமுகவுல என்ன பேசிக்கிறாங்க”

“வெள்ளம் வந்த பிரச்சினையை 6000 ரூபாய் கொடுத்து சமாளிச்சிரலாம்கிறதுதான் திமுகவின் மூத்த தலைவர்களின் கருத்து. ஆனா, 6000 ரூபாயை சரியா கொடுக்கலன்ற புகார் வந்திருக்கு. மக்களை லைன்ல நிக்க வச்சு காக்க வச்சு…ஏற்கனவே அவங்க மழை வெள்ளம்னு கஷ்டப்பட்டு இருக்காங்க. இதில இந்த கஷ்டம் வேறயானு விமர்சனங்கள் வந்திருக்கு”

“யாரோட திட்டம் இது? நேரடியா பேங்க்ல போட்டுருக்கலாமே?”

“பேங்க்ல போட்டா பணம் கொடுத்தா மாதிரி தெரியாது. அவங்க கையில ஆறாயிரம் ரூபாயைக் கொடுத்தாதன் எஃபெக்டிவா இருக்கும்னு மீடியா ஆலோசகர்கள் சொல்லியிருக்காங்க”

“அது சரி, ஆனா ஜெயலலிதா அரசு கொடுத்த மாதிரி எல்லோருக்கும்னு கொடுத்திருக்கலாமே..யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காதுன்றதுலேயே குழப்பம் இருக்கே”

“ஆமாம். இந்தப் பிரச்சினைக்கு காரணம் ஐஏஎஸ் அதிகாரிகள். மொத்தமா கொடுத்தா கட்டுப்படியாகாதுனு சொல்லியிருக்காங்க. ஆக விமர்சனங்கள் நிறைய வந்துட்டு இருக்கு”

“இதுக்கு நடுவுல நெல்லை, தூத்துக்குடி, குமரில வரலாறு காணாத மழை. இதை அரசு எதிர்பார்க்கல”

“வானிலையை சரியா கணிக்கலனு அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?”

“ஆமாம். சென்னை வெள்ளம் வந்த போதே வானிலை ஆய்வு மையத்துக்கும் திமுகவுக்கும் மோதல் வந்திருச்சு. சென்னைல ஒரே நாள்ல அதிகம் மழை பெய்தது இப்பதான்னு திமுககாரங்க சொல்ல, சென்னை வானிலை மையம் அப்படியில்ல, 2015ல பெய்ததுதான் அதிகம்னு கிராஃப் வெளியிட்டாங்க. இதுல திமுகவினர் கடுப்பாய்ட்டாங்க. அதன் எதிரொலிதான் இப்ப வானில மையம் சரியா சொல்லலன்ற குற்றச்சாட்டு”

“ஓ..அப்படி போகுதா கதை, சரி பொன்முடி ஜெயிலுக்கு போக வேண்டியதுதானா? என்ன செய்யப் போறார்?”

“இதுவும் திமுகவுக்கு ஷாக். உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்துமே அவர் கார்ல இருந்த தேசியக் கொடியை கழட்டிட்டாங்க. டெல்லிலருந்த முதல்வருக்கு தகவல் கொடுத்திருக்காங்க. உடனே வழக்கறிஞர்கள்கிட்ட ஆலோசனை பண்ணி இரவுக்குள்ள ஒரு ரிப்போர்ட் கொடுக்க சொல்லியிருக்கிறாராம்”

”அமைச்சர் பதவியை ராஜினாமா செஞ்சிடுவாரா? அரெஸ்ட் பண்ணிடுவாங்கனு சொல்றாங்களே?”

“21ஆம் தேதி தண்டனை பத்தி தீர்ப்பு வரும். அதுக்கப்புறம்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள். அரெஸ்ட் பண்ண முடியாதுனு சொல்றாங்க. சுப்ரீம் கோர்ட் போய் ஸ்டே வாங்கிடுவார்னு அறிவாலயத்துல பேசிக்கிறாங்க”

”மழை வெள்ளத்தை பார்வையிடாம முதல்வர் டெல்லி போய்ட்டார்னு எதிர்க் கட்சிகள் விமர்சனம் வைக்குதே? இந்தியா கூட்டணி கூட்டம்தான் முக்கியமானு கேக்குறாங்களே?”

“அதுக்குதான் பிரதமரை சந்திச்சு வெள்ள நிவாரணம் கேட்டுட்டாரே முதல்வர். மத்திய அரசுகிட்ட இருந்து வெள்ள நிவாரண நிதி கேட்டு பிரதமரை சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பத்தான் முதல்வர் முதல்ல திட்டமிட்டு இருந்தாராம். அவர்கூட டி.ஆர்.பாலு போற மாதிரி ஏற்பாடு. இந்த நேரத்துல எதிர்பார்த்ததை விட மழை பாதிப்புகள் அதிகம். மிக்ஜாம் புயலைவிட இந்த மழையால அதிக மக்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தலைமைச் செயலாளர் சொன்னதும் அந்த முடிவை மாத்தி, தானே டெல்லிக்கு போக திட்டமிட்டு இருக்கார் முதல்வர். அவர் நேரம் கேட்டதும் அரை மணி நேரத்தில் பிரதமரும் நேரம் ஒதுக்கி இருக்கார். மழை நிவாரணம் மட்டுமில்லாம அவங்க கொஞ்சம் அரசியலும் பேசுவாங்கன்னு அறிவாலய வட்டாரத்துல பேசிக்கறாங்க.”

“ஸ்டாலின்தான் இந்திய கூட்டணியில இருக்காரே. அப்புறம் பிரதமரோட என்ன ஆரசியல் பேச வேண்டியிருக்கு?”

“இந்தியா கூட்டணியில ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்ப இல்லைன்னு முதல்வர் நினைக்கறார். அதேபோல ஒரிசா முதல்வர் மாதிரி மத்தியில பாஜக, காங்கிரஸ்னு ரெண்டு கட்சியோட கூட்டணியும் இல்லாம தனியா நடுநிலையோட இருந்தா மத்திய அரசுகிட்ட இருந்து மாநிலத்துக்கு அதிக நிதி கிடைக்கும்னு அவருக்கு சிலர் ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க. அதனால இந்தியா கூட்டணியை கைகழுவிட்டு என் வழி தனி வழின்னு மாநில அளவுல புதுசா ஒரு கூட்டணியை உருவாக்கினா என்னனும் முதல்வர் யோசிச்சுட்டு இருக்காராம்”

“ட்ராக் மாறுறாரா? சரி, இளைஞர் அணி மாநாட்டுக்கு பிறகு உதயநிதிக்கு பிரமோஷன் இருக்குமா?”

“தமிழ்நாட்ல பல பகுதிகள்ல வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. இதுல பல இடங்கள்ல திமுக அரசு முறையா நிவாரண பணிகளை செய்யலைங்கிற கோபம் மக்கள் கிட்ட இருக்கு. இந்த நேரத்துல உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினா, அது மக்களோட கோபத்தைத்தான் அதிகரிக்கும்னு முதல்வர் நினைக்கறார். அதனால இப்போதைக்கு அவருக்கு பிரமோஷன் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதுக்கு பதிலா வெள்ள பாதிப்பு பகுதிகள்ல மீட்புப் பணியில தீவிரமா ஈடுபட்டு, மக்கள் மத்தியில நல்ல பெயர் வாங்கணும்னு உதயநிதிக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்கார்”

“ஏற்கனவே அவருக்கு நல்லப் பேர்தானே இருக்கு. களப் பணில தீவிரமா இருக்காருனு.”

” துணை முதல்வரா இப்போதைக்கு பதவி வழங்கலைன்னாலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டுதான் வர்றார் முதல்வர். முக்கியமான துறை கூட்டங்கள்ல அந்த அமைச்சர் கூட உதயநிதியும் உட்கார்ந்து ஆலோசனை நடத்துறார். எல்லா துறைகள் பத்தியும் தெரிஞ்சக்கணும்னு இது ட்ரைனிங்காம்”

“இதை சீனியர்ஸ் எப்படி எடுத்துக்கறாங்க?”

“அவங்களுக்கென்ன..அவங்க பதவிக்கு பிரச்சினையில்லாம இருந்தா போதும்னு நினைக்கிறாங்க. கூட்டணி தொகுதி உடன்பாடு பத்தி மத்த கட்சிங்களோட பேசற குழுவிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் கொடுக்க முதல்வர் திட்டமிட்டு இருக்காராம். கூட்டணி பத்தி முக்கிய முடிவுகளை அவர்தான் எடுப்பார்னு கட்சி வட்டாரத்துல பேசிக்கறாங்க. திமுகவில் உதயநிதி வேகமாக முந்திக் கொண்டிருக்கிறார்”

“அதிமுக கூட்டணி முறிஞ்ச நிலையில தமிழ்நாட்ல பாஜக 3-வது அணி அமைக்கும்னு சொல்றாங்களே?”

“அப்படி 3-வது அணி அமைஞ்சா அது தங்களுக்கு நல்லதுன்னு திமுக நினைக்குது. அப்படி மூன்றாவது அணி அமைஞ்சா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும். அதனால திமுக ஜெயிக்கும்ங்கிறது முதல்வரோட கனக்கு. ‘இப்போதைக்கு நாம் பூத் கமிட்டியை வலுவானதாக அமைச்சிருக்கோம். அந்த கமிட்டியில் இருப்பவர்கள் வாக்காளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க அறிவுரை சொல்லுங்கள்’னு மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் அட்வைஸ் பண்ணி இருக்கார்.”

“தமிழ்நாட்டின் அடுத்த காங்கிரஸ் தலைவரா கார்த்தி சிதம்பரத்தை அறிவிக்கப் போறதா ஒரு நியூஸ் பரவுதே?”

“டெல்லியில் சமீபத்தில் பிரியங்கா காந்தியை சந்திச்ச கார்த்தி சிதம்பரம், ‘ராகுல் காந்தி என்னை சந்திக்காமல் தவிர்க்கிறார்’ன்னு புகார் சொல்லி இருக்கார். பிரியங்கா காந்தி இதை ராகுல் காந்திகிட்ட சொல்லி இருக்காங்க. அதைத் தொடர்ந்து கார்த்திகிட்ட பேசுன ராகுல் காந்தி, ‘நான் உங்களை தவிர்க்கவிலை. தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்க’ன்னு சொல்லி இருக்கார். இப்படி கார்த்தி சிதம்பரம்கிட்ட ராகுல் காந்தி பேசுனதை வச்சுத்தான் அவரை அடுத்த தலைவரா போடப்பாறதா கார்த்தியோட ஆதரவாளர்கள் சொல்லிட்டு இருக்காங்க.”

“அவருக்குதான் அமலாக்கத் துறை நோட்டீஸ் மேல நோட்டீஸ் அனுப்பிட்டு இருக்கே?”

“அமலாக்கத் துறையைப் பார்த்து பயப்படற நிலையில இப்ப எந்த எதிர்க்கட்சிகளும் இல்லை. கார்த்தி சிதம்பரத்தோட நிலையும் அதுதான். அமலாக்கத்துறை இந்த மாசம் ரெண்டு தடவை கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கு. முதல் முறை நோட்டீஸ் அனுப்பினப்ப, ‘நான் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துக்க வேண்டி இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது’ன்னு பதில் அனுப்பி இருக்கார். ரெண்டாவது தடவை நோட்டீஸ் அனுப்பினப்ப, ‘நான் வந்து அங்கு என்ன செய்யப் போகிறேன்? திரும்பத் திரும்ப கேட்ட கேள்வியை கேட்கப் போகிறீர்கள். இந்த வழக்கே ஒரு பொய் வழக்கு நான் ஏற்கனவே உங்களிடம் கொடுத்துள்ள ஆதாரங்களை வைத்துக் கொண்டு என்ன சட்ட நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்’ன்னு பதில் அனுப்பி இருக்கார். அதனால கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏதாவது வழி இருக்கான்னு அமலாக்கத் துறை யோசனை பண்ணிட்டு இருக்கு.”

“யோசனைல ஏதாவது கிடைச்சதா?”

”எதிர்க் கட்சி ஆளுங்கனாலே அமலாக்கத் துறை ரொம்ப நிறைய யோசிக்குமே… யோசிச்சுக்கிட்டே இருக்கு” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...