No menu items!

புத்தகம் படிப்போம்: ஒரு தமிழரின் பார்வையில் சான் ஃபிரான்ஸிஸ்கோ

புத்தகம் படிப்போம்: ஒரு தமிழரின் பார்வையில் சான் ஃபிரான்ஸிஸ்கோ

‘நகரங்களின் கதை’ என்ற வரிசையில் முக்கிய நகரங்களைப் பற்றிய தொடர் நூல்களை வெளியிட்டு வருகிறது சந்தியா பதிப்பகம். தஞ்சாவூர், திருநெல்வேலி, தேனி, சேலம், மதுரை, மாயாவரம், ஓசூர், நாகர்கோவில் ஆகிய தமிழ்நாட்டின் நகரங்கள் பற்றி  இந்த வரிசையில் இதுவரை நூல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வெளியே ‘பெங்களூர்’ பற்றியும் புத்தகம் வெளிவந்துள்ள நிலையில், ஓர் அயலக நகரம் பற்றிப் பேசுகிற நூல், ‘சான் ஃபிரான்ஸிஸ்கோ’. ஒரு தமிழரின் பார்வையில் இந்நூலை எழுத்தாளர் ச. சுரேஷ் எழுதியுள்ளார்.

இருபத்தைந்து வருடங்களுக்குக்கு மேலாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்த சுரேஷ் இப்பொழுது இலக்கியத் துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியிலுள்ள சரடோகா நகரில் தன்னுடைய குடும்பத்தாருடன் வாழும் சுரேஷ் பிறந்தது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில்; வளர்ந்தது மதுரையிலும் பின்னர் சென்னையிலும். B.I.T.S. பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மேல் படிப்பை முடித்த பின் இரண்டு வருடங்கள் ஹைதராபாதில் வேலை செய்தார். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடிபுகுந்தார்.

சுமார் நாற்பது வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் எழுத ஆரம்பித்த சுரேஷின் முதல் படைப்பான ‘வெளிச்சம்’ என்ற குறு நாவலையும், ‘தண்டவாளம்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்போது ‘சான் ஃபிரான்ஸிஸ்கோ’.

விரைவில் வெளிவர இருக்கும் இந்நூலில் இருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.

பகத் சிங்கின் குருவை உருவாக்கிய கத்தார் இயக்கம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்ந்த கத்தார் இயக்கம் முதல் உலகப் போருக்கு முன் பெர்க்லி, சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கியது. பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த சோஹன் சிங் பாக்னா, கர்த்தார் சிங் சராபா மற்றும் ஹர் தயாள் போன்ற பல புரட்சிவாதிகளைக் கொண்ட கத்தார் அரசியல் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இனவெறியின் காரணமாக அமெரிக்க தேசத்திற்கு வரும் இந்தியர்களை தள்ளி வைக்கும் கொள்கைகளை எதிர்த்து குரல் எழுப்பியது.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தார் பதினைந்து வயது கர்த்தார் சிங் சராபா. பெர்க்லி வந்த பின் சோஹன் சிங் பாக்னா, ஹர் தயாள் போன்ற புரட்சிவாதிகளை சந்தித்தார். அதன் பிறகு படிக்கும் எண்ணத்தை கை விட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழு மூச்சுடன் இறங்கினார். இளம் பிராயமான பதினைந்து வயதில் கத்தார் அரசியல் கட்சியில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகள் பெர்க்லி, சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரங்களில் கத்தார் கட்சியின் பிரச்சாரத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.

1914ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பிய கர்த்தார் சிங் சராபா, கத்தார் கட்சியைச் சார்ந்த பலருடன் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் ராஜ்யத்தைத் துச்சமாக மதித்த சராபா, லாஹூர் மத்தியச் சிறைச்சாலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மறு வருடமே கொல்லப்பட்டார்.

இருபது வயது கூட நிரம்பாத கர்த்தார் சிங் சராபாவின் தியாகம் இந்தியாவில் பலரை ஆழமாகப் பாதித்தது. அவர்களில் ஒருவர், அனைவரும் நன்றாக அறிந்த பகத் சிங்.

கர்த்தார் சிங் சராபாவைப் பற்றி நன்றாக அறியாதவர்கள் பலர். ஆனால், பகத் சிங்கைப் பற்றி அறியாத இந்தியர்கள் இருப்பது அபூர்வம். சுதந்திரப் போராட்டத்தின் புரட்சித் தலைவரான பகத் சிங், கர்த்தார் சிங் சராபாவை தன்னுடைய மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

பகத் சிங்கின் வாழ்க்கையும் அவர் குருவாகக் கருதிய கர்த்தார் சிங் சராபாவின் வாழ்க்கையை ஒத்திருந்தது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வியப்பூட்டும் சம்பவங்களில் ஒன்று.

சராபா தூக்கிலிடப்பட்ட அதே லாஹூர் மத்தியச் சிறைச்சாலையில், அவரைப் போலவே இளம் பிராயத்தில், பகத் சிங்கும் தூக்கிலிடப்பட்டு இந்திய சுதந்திரத்திற்கு தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்தார்.

1931ஆம் ஆண்டு பகத் சிங் பிரிட்டிஷ் ராஜ்யத்தினால் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது வெறும் இருபத்தி மூன்று.

1915ஆம் ஆண்டு கர்த்தார் சிங் சராபா பிரிட்டிஷ் ராஜ்யத்தினால் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது வெறும் பத்தொன்பது.

கர்த்தார் சிங் சராபா ஒரு புரட்சிவாதியாக மாறியது பெர்க்லி நகரத்தில். அவர் சேர்ந்த கத்தார் இயக்கம் உருவானது பெர்க்லி சான் ஃபிரான்ஸிஸ்கோ நகரங்களில். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தொடங்கிய போராட்ட மனப்பான்மை இன்றும் பெர்க்லி நகரத்தில் வாழும் தெற்கு ஆசிய மக்களிடம் இருக்கிறது.

11 செப்டம்பர் 2001 தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

பிறந்து வளர்ந்த இடத்தைத் துறந்து, வேறொரு தேசத்தில் குடிபுகும் சமயம், ஒருவருக்கொருவர் இடையே உள்ள வேறுபாடுகளும் மாநில, தேச எல்லைகளும் மாயமாக மறையாவிட்டாலும் ஓரளவு குறைவது பொதுவாக நடக்கும் உண்மை. அத்துடன், தற்செயலாக நடக்கும் முக்கிய நிகழ்வுகள் ஒருசில, அவ்வித வேறுபாடுகள் மறைவதற்கும் அதுவே நட்பாக மாறுவதற்கும் ஏதுவாக இருக்கின்றன.

11 செப்டம்பர் 2001 நியூ யார்க் மாநகரத்தில் அல் – கைதா தாக்குதலுக்குப் பிறகு பெர்க்லியில் நடந்ததும் அதுதான்.

எங்களுடைய இரண்டாவது குழந்தை பிறந்து ஒன்பது நாட்களே சென்றிருந்தது. அப்பொழுது சான் ஃபிரான்ஸிஸ்கோவில் காலை மணி 5:46. ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு விமானங்கள் நியூ யார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களின் மீது மோதின. உலக வர்த்தக மையத்தின் இரண்டு கோபுரங்களும் இடிந்து விழுந்தன.

நியூ யார்க், வாஷிங்டன் டி.ஸி., பென்சில்வேனியா மூன்று இடங்களிலும் விமானத்தை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தி நடந்த தாக்குதலில் 3000 மனிதர்கள் உயிரிழந்தனர்.

அந்தத் தாக்குதலை நடத்தியது அல்-கைதா என்பது விரைவில் தெரியவந்தது.

அந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு சாரி அமெரிக்க மக்களிடையே, முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவரிடமும் பார்ப்பதற்கு முஸ்லிம் என்று கருதக் கூடியவரிடமும் அர்த்தமற்ற இனவெறி உருவானது. ஹிஜாப் அணிந்த பெண்கள் மீதும் தாடி வைத்த தெற்கு ஆசிய ஆண்கள் மீதும் ஒரு சிலர் துவேஷம் கொண்டாட ஆரம்பித்தனர் .

மத்திய கிழக்கு ஆசிய தேசத்து மனிதர்களுக்கும் தெற்கு ஆசிய தேசத்து மனிதர்களுக்கும் உள்ள உருவ ஒற்றுமையின் பேரில் அவர்கள் அனைவர் மீதும் தங்களுடைய வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தனர் அமெரிக்க மக்கள்.

வீதியில் நடக்கும்போது அவர்களை ஏசுவது; காரித் துப்புவது, “உன்னுடைய தேசத்துக்கே திரும்பிப் போ” என்று கூறுவது; அவர்களுடைய உடைமையையும் உடலையும் தாக்குவது; இது போன்ற பல கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டனர்.

பெர்க்லி உயர்நிலைப் பள்ளியிலும் இவ்வித தாக்குதல்கள் அந்த செப்டம்பர் மாதம் நடந்தது. முஸ்லிம், சீக் மற்றும் பிரவுன் கலர் தோல் உள்ள மாணவர்கள் மீது பெர்க்லி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒருசில மாணவர்கள் கடுமையாக துவேஷம் காண்பித்தனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தேசத்திலிருந்து வந்த ஹிந்து, முஸ்லிம், சீக் மாணவர்கள் அனைவரும் கணக்கிலடங்காத இன்னல்களுக்கு உட்பட்டனர். இதனால், அவர்களுக்கு இடையே இருந்த மத வேறுபாடுகளும் தேச எல்லைகளும் தகர்ந்தன. அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்கள் மீது காட்டப்படும் காரணமற்ற இனவெறியை எதிர்க்க முடிவு செய்தனர்.

முஸ்லிம், சீக், ஹிந்து மதத்தைப் பற்றியும் தங்களுடைய கலாச்சாரத்தைப் பற்றியும் பள்ளியிலுள்ள ஒவ்வொரு அறையாகச் சென்று, அங்கிருந்த மாணவர்களிடம் நேரடியாகப் பேசினர். இனவெறி துவேஷத்தை எதிர்கொள்வது எவ்வளவு கொடுமையானதாகவும் பயம் தரக்கூடியதாகவும் இருக்கும் என்று மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினர்.

அவ்வாறு செய்தபின், ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு அளிப்பது என்று உறுதி செய்து கொண்டனர்.

கலாச்சார ஒற்றுமை, ஒன்றுபட்ட இளைஞர்கள் என்ற இரண்டு மாணவ குழுக்கள் ஒன்றிணைந்து, பெர்க்லி உயர்நிலைப் பள்ளியில் நடத்திய நிகழ்வுக்குப் பிறகு, பெர்க்லி ‘வெறுப்புக்கு அப்பாற்பட்ட பகுதி’ என்ற தீர்மானத்தை பெர்க்லி நகர சபை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.

உரிமைக் குரல் எழுப்புவது, பெர்க்லி மாணவர்களின் ரத்தத்தில் ஊறிப்போன குணங்களில் ஒன்று. பெர்க்லி தெற்கு ஆசிய மாணவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மற்றொரு சம்பவம் 1975இல் நடந்துள்ளது.

25 ஜூன் 1975 அன்று இந்தியாவின் பிரதம மந்திரியான இந்திரா காந்தி அவசரகால சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்தார். அன்றிலிருந்து, அடுத்த இருபத்தி ஒரு மாதங்கள், அதாவது, 21 மார்ச் 1977 வரை, இந்திய குடிமக்களின் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன; பத்திரிகை சுதந்திரம் மறைந்தது; இந்திரா காந்தியின் அரசியல் எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் இருந்த இந்தியர்கள் பயத்துடன் வாழ்ந்த இருண்ட நாட்கள் அவை.

இந்தியாவில் நடக்கும் அவசரகால அட்டூழியங்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை என்று எண்ணவில்லை பெர்க்லி பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களும். பெர்க்லி பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் ஒன்று சேர்ந்து மாணவர்களும் இந்திய மக்களும் போராட்டக் குரல் எழுப்பினர். பெர்க்லியிலிருந்து சான் ஃபிரான்ஸிஸ்கோ சென்று, அங்குள்ள இந்திய தேச தூதரகத்தின் முன், இந்தியாவில் அரசியல் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1975-77 இந்திய அவசரகால சட்டத்தை எதிர்த்து, முகத்தை மறைத்தவாறு பெர்க்லியில் வசிக்கும் இந்தியர் குரலெழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களை தண்டிக்கத் தயாராக இருந்தது இந்திரா காந்தியின் அரசாங்கம். ஆனாலும், மனம் தளராமல், முகத்தை மறைக்கும் முகமுடி அணிந்தவாறு அவசரகால சட்டம் நீங்கும் வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தங்களுடைய கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல், புடவை அணிந்த பெண்கள் முகமுடி அணிந்திருந்தாலும் தங்கள் நெற்றியில் உள்ள பொட்டை பிரதிபலிக்கும் வண்ணம், பேப்பரால் செய்யப்பட்ட முகமுடியில் பொட்டை வரைந்து, போராட்டத்தில் கலந்துகொண்டது அதைப் பார்க்கும் அமெரிக்க மக்களுக்கு வியப்பாக இருந்தது.

அவசரகால நிகழ்வுகளைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த, ‘இந்தியா ஃபோரம்’ என்ற பத்திரிகை 1975ஆம் ஆண்டு பெர்க்லிக்கு அருகிலுள்ள ஓக்லாண்ட்டில் அச்சடிக்கப்பட்டு விரிகுடாப் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது. அவசரகால சட்டம் நீங்கியபின் நடந்த தேர்தலை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஏப்ரல் 1977இல் ‘இந்தியா ஃபோரம்’ பத்திரிகையின் நான்காவது இதழ் வெளி வந்தது. இந்தியாவில் அவசரகால சட்டம் நிலவிய அதே சமயம் பாகிஸ்தானில் பூட்டோவின் தலைமையில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளும் இந்த இதழில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்திய துணைக் கண்டத்திலுள்ள அனைத்து தேசங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவது மட்டுமல்லாமல், பல்வேறு பரிமாணங்களில் மனித உரிமைக்காகப் போராடி, சமுதாய சீர்திருத்தங்களை நிலைநாட்டுவதில் முன்னோடியாக இருந்துள்ளனர் பெர்க்லியில் வாழும் தெற்கு ஆசிய தேச வம்சாவளி மக்களும் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்களும்.

விரிகுடாப் பகுதியின் முதல் இந்தியர்?

இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்யம் நிலை நாட்டப்படுவதற்கு முன்னோடியாக இருந்த கிழக்கு இந்தியா நிறுவனத்தின் காலத்தில் நடந்த சம்பவங்கள் இவை. 1799இல் திப்பு சுல்தான் ஆண்டு வந்த ஸ்ரீரங்கப் பட்டினம், கிழக்கு இந்தியா நிறுவனத்தின் போர் வீரர்களால் முற்றுகையிடப்பட்டது. மைசூர் ராஜ்யத்துக்கும் கிழக்கு இந்தியா நிறுவனத்துக்கும் இடையே நடந்த நான்காவது போரில் திப்பு சுல்தான் வீழ்ந்தது இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க சம்பவங்களில் ஒன்று.

ஸ்ரீரங்கப் பட்டினத்தின் முற்றுகையை நேரில் பார்த்த சாமுவேல் வரியப்பா என்பவரைப் பற்றிய கட்டுரை 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சான் ஃபிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர்’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. நூறு வயதிற்கும் மேலான சாமுவேல் வரியப்பா, கிழக்கு இந்தியா நிறுவனத்தின் கப்பல் ஒன்றில் சமையற்காரராக வேலை செய்து, 1843ஆம் வருடம் அமெரிக்காவுக்கு வந்திருக்கக்கூடும் என்றும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

அவர் ஆங்கிலத்தை விட, அன்றைய கலிஃபோர்னியாவில் பரவலாகப் பேசப்பட்ட ஸ்பானிஷ் மொழியை நன்றாக அறிந்திருந்தார். சாமுவேல் என்ற கிறித்துவப் பெயரால் அழைக்கப்பட்டாலும் வரியப்பா ஹிந்து மதத்தவர்; தமிழ் மொழியை நன்றாக அறிந்தவர். சாமுவேல் வரியப்பா, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதிக்கு வந்த முதல் தமிழ் & இந்தியராகக் கூட இருக்கலாம்.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில் துணிமணிகளைத் துவைக்கும் சலவைக்காரராக வேலை செய்தார் சாமுவேல் வரியப்பா. காலப்போக்கில் கண் பார்வையை இழந்த பின்னும், தன்னுடைய வேலைகளை தானே கவனித்துக்கொண்டு, கேட்டரினா என்ற அமெரிக்கப் பெண்மணி சான் ஃபிரான்ஸிஸ்கோவில் அவருக்கு மானியமாக அளித்த சிறிய வீடு ஒன்றில், இறுதி வரை வாழ்ந்தார்.

தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை, ஒரு ஹிந்துவாக, 19ஆவது நூற்றாண்டு கிறித்துவர்களின் மத்தியில், சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வாழ்ந்த சாமுவேல் வரியப்பாவின் வாழ்க்கையும் ஒரு கண்ணோட்டத்தில் புரட்சிகரமானதே என்று கருதுவதில் தவறு என்ன?

1947 இந்தியா & பாகிஸ்தான் பிரிவினையின் சோகக் கதைகள்

சுதந்திரம் வந்த அதே ஆகஸ்ட் மாதம் நடந்த பிரிவினையின் கொடுமையில் கணக்கற்றோர் உயிரிழந்தனர். இரண்டு கோடி மக்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் இடம்பெயர்ந்தனர். இந்தியா, பாகிஸ்தான் தேசங்களின் வரலாற்றில் மிகவும் வேதனை நிறைந்த சம்பவம் இது.

ஆங்கிலேயர் சிரில் ராட்க்ளிஃப்வரைந்த கோடு பஞ்சாப், வங்காளம் மாநிலங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய கொந்தளிப்பு, சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளுக்குப் பின்னும் அடங்கவில்லை. பிரிவினையின் கொடுமையால் பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்வில் அந்த அலைகள் இன்றும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.

காலத்தால் காயங்கள் ஆறினாலும் பிரிவினையின் கதைகள் மறைந்தோ, மறந்தோ போகக்கூடாது என்ற உன்னத எண்ணத்துடன் குனீதா சிங் பல்லா, ‘1947 பிரிவினை ஆவணக்காப்பகம்’ என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் தொடங்கியதும் பெர்க்லி பல்கலைக்கழகத்தில்தான். பௌதீகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற குனீதா சிங் பல்லா, பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் சமயம், பிரிவினையைப் பற்றிய கதைகளை வாய்மொழி வரலாறாக காணொலியில் பதிக்கத் தொடங்கினார்.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய பிரிவு, 1947 பிரிவினையின் 75ஆவது நினைவு நாளை ஒட்டி நடத்திய நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய குனீதா, பத்து வருடங்களுக்கு முன் ஆவணக்காப்பகம் தொடங்கியது எவ்வாறு என்று கூறினார். ஹிரோஷிமா அமைதி நினைவுச் சின்னம் ஒன்றில் இருந்த வாய்மொழி பதிப்புகளைக் கேட்க நேர்ந்த குனீதா, நமது தேசத்தின் சோகமான வரலாறு மறந்துவிடாமல் இருக்க இந்தக் காப்பகத்தை நிறுவியதாகக் கூறினார்.

2010இல், தனிநபர் ஒருவரின் முயற்சியாகத் தொடங்கிய, ‘1947 பிரிவினை ஆவணக்காப்பகம்’, இன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது.

இந்திய & பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கம் வட இந்தியாவில் உண்டான அளவு தென் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஏற்படவில்லை. இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கும் தெற்கே உள்ள மாநிலங்களுக்கும் இடையே உள்ள தூரம் அந்தத் தாக்கத்தின் தீவிரத்தை ஒருவேளை குறைத்திருக்கலாம்.

ஆனால், பிரிவினையை நேரடியாக அனுபவித்த அலி ஷான், பல்ஜித் தில்லன் விக்ரம் சிங், ரவீந்தர் குமார் சோப்ரா முதலியோரின் வாழ்வில் நடந்தது அவ்வாறு இல்லை. குனீதா சிங் பல்லா சிறப்புரையாற்றிய நிகழ்வில், பிரிவினையைப் பற்றிய நேரடி அனுபவமுள்ள அந்த மூன்று நபர்களும் சிறு வயதில் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த கொடூரங்களை, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எங்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

ஆறு வயதான அலி ஷானின் குடும்பத்தினர் அவருடைய கண் முன் கொல்லப்பட்டனர். அவர்களைக் கொன்ற கும்பலில் இருந்த ஒரு மனிதன் அலி ஷானை கொல்லாமல், அந்த சிறுவனுடைய உயிரைக் காப்பாற்றினார். தாய், தந்தை, சகோதரன், சகோதரி அனைவரையும் இழந்த அலி ஷான், பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து, தூரத்து உறவினரால் வளர்க்கப்பட்டார். எண்பது வயதான அலிஷான் இன்று விரிகுடாப் பகுதியிலுள்ள ஃபிரீமான்ட் நகரில் வாழ்ந்து வருகிறார்.

‘பாகிஸ்தான் போகும் ரயில்’ என்று குஷ்வந்த் சிங் எழுதிய கதையை ஒட்டியது ரவீந்தர் குமார் சோப்ராவின் கதை. ரயில் பெட்டியில் பயணம் செய்தவர் பிணமாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சென்றடையும் கொடுமையை நேரில் பார்த்த அனுபவம் ரவி சோப்ராவினுடையது. லாஹூரிலிருந்து ஃபெரோஸ்பூருக்கு ஒரு முஸ்லிம் ஸ்டேஷன் மாஸ்டரின் உதவியுடன் தப்பி வந்த ரவி சோப்ரா, இன்று விரிகுடாப் பகுதியிலுள்ள சான் ஹோஸே நகரில் வாழ்ந்து வருகிறார்.

பிறந்த தேசத்தின் வரலாற்றை மறக்க மறுக்கும் அனிர்வான் சாட்டர்ஜீ, பர்னாலி கோஷ், குனீதா சிங் பல்லா முதலியவர்களுடைய அயராத முயற்சி பாராட்டத்தக்கது. அமெரிக்காவில் குடிபுகுந்த முதல் தலைமுறையினர், பிறந்த தேசத்துடன் கொண்டிருக்கும் சிறப்பான உறவுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது இம்மூவருடைய செயல்களும்.

விரிகுடாப் பகுதியிலுள்ள பெர்க்லி நகரம் இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல் தொலைவிலிருக்கலாம். தூரத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தெற்கு ஆசிய தேசங்களின் வரலாற்றை முக்கியமாகக் கருதும் இவர்களுடைய முயற்சியின் விளைவாக, பள்ளிகளிலும் கற்றுக்கொடுக்கப்படாத வரலாற்று உண்மைகள், இன்று உலகெங்கும் தெரிய வந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ – ச. சுரேஷ்; வெளியீடு: சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083; தொலைப்பேசி: 04424896979, வாட்ஸ்அப்: 9444715315 / 9840952919

ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...