No menu items!

சுஜாதா ஏன் அப்படி செய்தார்?

சுஜாதா ஏன் அப்படி செய்தார்?

நம்ம நாட்டில் வேலை கிடைப்பதே பிரச்சினை. வேலை கிடைத்தவர்களுக்கு வேலையே பிரச்சினை.

“வேலைக்கு போகவே புடிக்கல”

“மேனஜர் கடுப்படிக்கிறார்”

“ஆபிஸ்ல பிரஷர் ஜாஸ்தியாயிருச்சு”

தினம் ஒரு முறையாவது இது போன்ற டயலாக்கை கேட்டுவிடுகிறோம். காலையில் சாலையில் வேலைக்குப் போகும் யாருடைய முகத்திலும் உற்சாகம் இருப்பதாக தெரியவில்லை. பேருந்து ஜன்னல்களின் வெளியே தெரியும் திங்கள் காலை முகங்களில் வெறுமை. கடுப்பு. எரிச்சல்.

இந்தியாவின் உத்தியோகஸ்தர்களில் 80 சதவீதத்தினர் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் இருக்கிறார்களாம். சென்ற வருடம் எடுக்கப்பட்ட டைம்ஸ் புள்ளிவிவரம் சொல்கிறது. உலக சராசரி 60 சதவீதம் என்கிறது மற்றொரு புள்ளிவிவரம். இந்த மன அழுத்தம் தரும் பக்க விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கின்றன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு இவற்றையெல்லாம் தாண்டி தற்கொலை வரை இந்த மன அழுத்தங்கள் கொண்டு சென்று விடுகின்றன.

வேலையை குறித்து இத்தனை மன அழுத்தம் தேவைதானா?

வேலையும் வேலையினால் ஏற்படும் மன அழுத்தமும் ஒட்டிப் பிறந்த சியாமிஸ் இரட்டையர்கள். வேலையும் அதன் மூலம் கிடைக்கும் பணமும் வாழ்க்கையின் ஆதாரப் புள்ளியாக ஆகிவிட்ட சூழலில் வேலையில் அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத சங்கதி. அதை எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

என் உறவினர் ஒருவர் இருக்கிறார். என்ஜினியர், சாஃப்ட்வேர் அல்ல. ஒரு வேலையில் நான்கு வருடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். நல்ல வேலையாக இருக்கும். சகல உபசரிப்புகளும் கிடைக்கும் ஆனால் அந்த வேலையை விட்டு புது வேலைக்கு போய்விடுவார். மூன்று வருடங்கள் ஆனதுமே அடுத்த வேலை தேட ஆரம்பித்துவிடுவார். அவருடைய சிவி பக்கம் பக்கமாக இருக்கும். அவருக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கும் தெரியும் நான்கு வருடங்களுக்கு மேல் இந்த ஆசாமி தாங்க மாட்டான் என்று ஆனாலும் வேலை தருவார்கள். அந்த நான்கு வருடங்களும் புத்தம் புதிதாய் அவர்களுக்காக உற்சாகமாய் வேலை செய்வார்.

“நல்ல வேலைதானே, ஏன் விட்டுட்டிங்க?”

“போரடிச்சிருச்சு. ஒரே வேலையை எத்தனை வருஷம் பாக்கிறது” இதுதான் அவருடைய பதிலாக இருக்கும்.

அவர் சேரும் அடுத்த நிறுவனத்திலும் இவரது அனுபவத்தின் அடிப்படையில்தான் வேலை தருவார்கள். கிட்டத்தட்ட அதே வேலை போல்தான் இருக்கும். ஆனால் புது இடம், புது முகங்கள், புது சவால்கள். வாழ்க்கை புதிதாக மாறிவிடும், பழைய அலுப்பு போய்விடும் என்பது அவர் வாதம்.

”புதிய வேலை பிடிக்காவிட்டால்?”

“வேறு வேலை தேடுவேன்”

“புதிய சாத்தான்களைவிட பழைய சாத்தான்களே சமாளிப்பதற்கு எளிது என்பார்களே?”

”சாத்தான்களில் என்ன பழசு, புதுசு. எல்லாம் சாத்தான்களேதானே” என்று கடந்து போய்விடுவார்.

எல்லோரும் இத்தனை அதிர்ஷ்டசாலிகள் அல்ல. வேலையை விடுவது என்பதும் புதிய வேலையைத் தேடுவது என்பதும் வாழ்க்கையின் மிகப் பெரிய சங்கடங்கள்.

ஆனால் இந்த உறவினர் உதாரணத்தின் அடிப்படை வேலையை விடுவது அல்ல, புதுப்பித்தல். ஏதோ ஒரு புதுப்பித்தல் வாழ்க்கையில் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வேலையில் புதுப்பிக்க முடியவில்லை என்றால் அந்த வேலை முடிந்த மற்ற நேரங்களில் ஒரே வாழ்க்கையை வாழாதீர்கள் என்கிறார்கள் உளவியலாளார்கள்.

ஏழு மணிக்கு அலுவலகம் கிளம்பி இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பி, முகம் கழுவி, டிவியைப் போட்டு பிக் பாஸ் பார்த்து, பத்து மணிக்கு செய்திகளை ஒரு பார்வை பார்த்துவிட்டும் மீண்டும் அடுத்த நாள் அதே ஏழு மணி என்ற வாழ்க்கையில் அலுப்பு வரத்தான் செய்யும். அதை சமாளிப்பது உங்கள் முயற்சிகளில்தான் இருக்கிறது. தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்களாவது நடை பயிற்சி செல்லுங்கள், கடற்கரைக்கு சென்று காசு செலவில்லாமல் காற்று வாங்குங்கள், வொட்ஸப்பில் உலகத்தை பார்க்காமல் வெளியில் வந்து உலகத்தை பாருங்கள். நிச்சயம் இவை புத்துணர்ச்சியைத் தரும். ஆபிசைப் பற்றியே அசைப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

புதுப்பித்தல் ஒரு புறம் இருந்தாலும் தினம் தினம் வேலையில் ஏற்படும் சிக்கல்களை சமாளிப்பதே பலருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதிக வேலை,

மேலதிகாரியின் அதிகாரம், பக்கத்து சீட்டுக்காரன் பாலிடிக்ஸ் என எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சினைகளாகவே தெரியும்.

ஆனால் இவையெல்லாம் இல்லாத அலுவலகம் ஒன்று கிடையவே கிடையாது. அளவுகள் மட்டுமே மாறுபடும். அத்தனையும் இக்கரைக்கு அக்கரை பச்சை.

இதற்கு சில தீர்வுகளைத் தருகிறார்கள் மனிதவள ஆலோசகர்கள்.

அடுத்தவருடன் உங்களை ஒப்பிட்டு மனதை குழப்பிக் கொள்ளாதீர்கள். அவன் அலுவலகம் எளிதாக இருக்கிறது என் அலுவலகம் மட்டும் ஏன் எப்படி என்ற பொறாமை சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொள்ளாதீர்கள். வீணான மன அழுத்தத்தைதான் இது தரும்.

மேலதிகாரியின் கொடுமையா? எதிர்த்து நில்லுங்கள். பல சமயங்களில் எதிர்ப்பு இல்லாததினாலேயே கொடுமை அதிகரிக்கும். கொடுமைக்கார மேலாதிகாரிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை என்பதில்தான் அவரது பலம் இருக்கிறது. ஒரு முதல் எதிர் குரல் ஒலித்துவிட்டால் ஆதரவு குரல்கள் எழுந்துவிடும் அதிகாரி அடங்கிவிடுவார் என்பதுதான் நிஜம்.

வேலையில் சிறப்பாக இருந்துவிட்டால் பக்கத்து சீட்காரரின் பாலிடிக்ஸ் அடிபட்டு போய்விடும், போகவில்லையா உங்கள் பிரச்சினையை உங்களுக்கு மேல் இருப்பவரிடம் கொண்டு செல்லுங்கள். அதுவும் சரிபட்டு வரவில்லையா வேறு வேலை தேடுங்கள். இதுதான் தீர்வு. இல்லாவிட்டால் நாளுக்கு நாள் மன அழுத்தம் தான் அதிகரிக்கும்.

வேலை அதிகமாக கொடுக்கிறார்களா யோசித்துப் பாருங்கள் அதிக வேலை செய்தால் சம்பளம் அதிகரிக்குமா, பதவி உயருமா என்று. அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றால் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். சில அலுவலகங்களில் வேலை செய்வதற்கென்றே சில அடிமைகள் சிக்கிக் கொள்ளும். அந்த அடிமையாக மாறிவிடாதீர்கள்.

இவற்றையெல்லாம் நிஜத்தில் செய்துப் பார்க்க முடியுமா என்றால் செய்து பார்த்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் அலுவலக வரலாறுகள் சொல்லுகின்றன. மனிதவள ஆலோசகர்களும் சொல்கிறார்கள்.

ஆனால் வேலையில் இருக்கும் அழுத்தங்களுக்கு அடிப்படையில் இருப்பது பொருந்தாத வேலையில் இருப்பது அல்லது பிடிக்காத வேலையில் இருப்பதுதான். பிடிக்காத வேலை ஒன்றை செய்யும் போது அதில் உள்ள எல்லாம் நமக்கு சிரமங்களாக தெரிகின்றன. மன அழுத்தங்களாக மாறுகின்றன.

சரி, தலைப்பிலிருக்கும் சுஜாதா இங்கு எங்கு வருகிறார்?

இதோ வந்துவிட்டார்.

ஒரு முறை சென்னை பார்சன் காம்ப்ளக்ஸ் பாரதிராஜா அலுவலக வாசலில் எழுத்தாளர் சுஜாதாவை தற்செயலாய் சந்தித்தேன். இரவு ஏழு மணி இருக்கும்.

“என்ன சார், இங்க?” என்றேன்.

“பாரதிராஜா பட டிஸ்கஷன்பா”

அவர் கண்களில் சிதறாத பார்வை. கதைகளில் யோசனைகள் இருக்கும்போது இது போன்ற சிதறா பார்வையை அவரிடம் கவனிக்க முடியும்.

இரண்டு, மூன்று நிமிடங்கள் பேசியிருப்பார். கிளம்பிவிட்டார்.

மறுநாள் காலை வேறொரு வேலையாக அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்றார்.

“ என்ன மேட்டர் சார்?”

“நேத்து டிஸ்கஷன் பண்ணவரைக்கும் ஸ்கிரிப்ட் எழுதிட்டேன்.”

”ஆமாப்பா, நைட் ஒரு மணி வரைக்கும் டைப் அடிச்சிக்கிட்டு இருந்தார்” என்றார் திருமதி. சுஜாதா.

“ஒரு மணி வரைக்குமா?”

“பெங்களூருல இருக்கும்போதும் இப்படிதாம்ப்பா. வேலைக்குப் போய்ட்டு வந்து எழுத உக்காந்துருவார்”
பிரிண்ட் அவுட் எடுத்தால் நாற்பத்தியிரண்டு பக்கம் வந்தது. காலை முழுவதும் டிஸ்கஷன். இரவு அதை உடனடியாக டைப் செய்து…. நாற்பத்தியிரண்டு பக்கங்கள்….ஆச்சர்யம்.

விவாதித்த காட்சிகளை நாளையே டைப் அடித்து எடுத்து வாருங்கள் என்று நிச்சயம் பாரதிராஜா கூறியிருக்க மாட்டார். அத்தனை அவசரமும் கிடையாது.

ஆனால் சுஜாதா ஏன் அப்படி செய்தார்?

அவருக்கு அந்த வேலையின் – வேலைனு சொல்லலாமா?- மீது இருந்த ஆர்வம். பிடித்தம்.

பிடித்த வேலையை செய்யும்போது நமக்கு காலம் நேரம் தெரியாது, அதன் பளு தெரியாது, அதில் இருக்கும் சிரமங்கள் கண்களில் படாது. பிடித்த வேலை கிடைப்பதும் அதை செய்வதும் மனித வாழ்க்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்று.

பிடித்த வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? முதலில் நமக்கு என்ன வேலை பிடிக்கும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையைத் தேட வேண்டும்.

இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது, இந்த வேலைதான் என்கிட்ட இருக்கு, இதுல பிரச்சினைகள் இருக்கு, வேற வேலைக்கும் போக முடியல, இதுக்கு என்ன பண்ணனும் என்கிறீர்களா. உங்களுக்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அதனால் பயனடையப் போகும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களது சந்தோஷ முகங்களை நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவே.

-ரஞ்சன்
அக்டோபர் 2017 அந்தி மழை இதழில் எழுதியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...