No menu items!

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்

வாரிசு (Varisu – தமிழ்) அமேசான் ப்ரைம்

அப்பா பேச்சைக் கேட்காமல் இருக்கும் மகன், பின்னர் குடும்பத்தையே தாங்கும் ஹீரோவாக மாறும் பழைய கதைதான், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு என்று நட்சத்திர பட்டாளத்தைப் போட்டு பக்கா கமர்ஷியலாக தந்திருக்கிறார்கள்.

தனக்குப் பிறகு மொத்த பிசினஸையும் நடத்தும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களிடையே போட்டி மனப்பானமையை வளர்க்கிறார் அப்பா சரத்குமார். முதல் 2 மகன்களும் அந்த ரேஸில் ஆவேசமாய் பங்கேற்க, 3-வது மகனான விஜய் அதில் கலந்துகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கடைசியில் மகன்களின் போட்டியால் சரத்குமாரின் பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கை தடுமாற, அவருக்கு கைகொடுக்க திரும்பி வருகிறார் விஜய்.

ஆக்‌ஷன் படங்கள் அதிகமாகிவிட்ட காலத்தில் ஒரு குடும்ப கதையை எடுத்ததற்காக இயக்குநர் வம்சியைப் பாராட்டலாம். விஜய்யும் காமெடி, ஆக்‌ஷன், டான்ஸ் என்று தன்னால் முடிந்த எண்டர்டெயின்மெண்ட் தருகிறார். ஆனால் இதே டைப் படங்களையும் சீரியல்களையும் பல காலமாக பார்த்து வருவதால், பழையது என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

நண்பகல் நேரத்து மயக்கம் (Nanpakal Nerathu Mayakkam – மலையாளம்) – நெட்பிளிக்ஸ்

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து சொந்த ஊரான சங்ஙனாசேரிக்கு பஸ்ஸில் திரும்புகிறது மலையாளிகளின் குழு. அந்த குழுவில் இருக்கும் ஜேம்ஸ் என்பவர் நண்பகலில் நடுவழியில் தமிழக கிராமம் ஒன்றில் அந்த பஸ்ஸில் இருந்து இறங்குகிறார். மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் பஸ்ஸில் இருந்து இறங்கும் ஜேம்ஸ், திடீரென் அங்கு இறந்துபோன சுந்தரமாக மாறி ஊருக்குள் வலம் வருகிறார்.

ஜேம்ஸின் மனைவி, மகன் – சுந்தரத்தின் மனைவி, மகள், ஜேம்ஸுடன் வந்தவர்கள் ஒருபக்கம் … காணாமல் போன சுந்தரம் எப்படி ஜேம்ஸ் உருவத்தில் வந்தான் என்று குழம்பும் அவரது கிராமத்தினர் மறுபக்கம். இப்படி இரு தரப்பினரும் குழம்பிக்கொண்டிருக்க, மறுநாள் மீண்டும் ஜேம்ஸாகவே மாறும் அவர் ஊருக்குத் திரும்புகிறார். இப்படி ஒரு நாள் மதியத்தில் தொடங்கி, அடுத்த நாள் மதியத்தில் கதை முடிகிறது.

அங்கமாலி டயரீஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை எடுத்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரிதான் இப்படத்தின் இயக்குநர். தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்தையும் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இயக்கியுள்ளார்.

பொதுவாக படங்கள் ஏதாவது ஒரு மொழியில் இருக்கும். ஆனால் இந்த படத்தில் வரும் மலையாள கலைஞர்கள் மலையாள மொழில்யிலும், தமிழ்க் கலைஞர்கள் தமிழிலும் பேசுவது வித்தியாமான முயற்சி. இப்படத்திற்கென்று இசை அமைப்பாளர்கள் யாரும் இருக்கிறார்களா என்று தெரியாத அளவுக்கு, பின்னணியில் பழைய தமிழ் மற்றும் மலையாள பாடல்களை இசைக்க விட்டிருப்பது வித்தியாசமான முயற்சி.

அதிக வேகமில்லாத, மெதுவாக நகரும் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம் இது.

வீரசிம்மா ரெட்டி (Veera Simha Reddy – தெலுங்கு) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

மேலே சொன்ன மலையாள படத்தை பார்க்க விரும்பாத ஆக்‌ஷன் ரசிகர்கள், இந்த தெலுங்குப் படத்துக்கு தங்கள் ரூட்டை மாற்றிக் கொள்ளலாம்.

பொங்கல் சமயத்தில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களோடு ரிலீஸாகி வசூலை அள்ளிய தெலுங்குப் படம் வீரசிம்மா ரெட்டி. கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த இப்படம் இப்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழிலும் பார்க்கலாம்.

ஒரு பாலகிருஷ்ணா நடித்தாலே ஆக்‌ஷன் காட்சிகள் அள்ளும். இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ஆக்‌ஷன் காட்சிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அப்பாவைப் பற்றி தெரியாமல் இஸ்தான்புல்லில் அம்மாவுடன் வசிக்கும் ஜெயசிம்மா ரெட்டிக்கு, ஒரு கட்டத்தில் தனது அப்பா வீரசிம்மா ரெட்டி உயிருடன் இருப்பது தெரிகிறது. அதேநேரத்தில் அவரைக் கொல்ல சிலர் சதித்திட்டம் போடுகிறார்கள். சதித்திட்டங்களை தகர்த்து அப்பாவும் மகனும் இணைகிறார்களா என்பதுதான் கதை. அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்து படம் பூராவும் எதிராளிகளை அடித்துக்கொண்டே இருக்கிறார் பாலகிருஷ்ணா.

மைக்கேல் (Michael – தமிழ்) – ஆஹா

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் தியேட்டர்களில் வெளியான ‘மைக்கேல்’, இப்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

கேங்ஸ்டர் ஆகும் ஆச்சையில் மும்பைக்கு வருகிறான் மைக்கேல். அங்கு மிகப்பெரிய டானாக இருக்கும் குருவை ஒரு ஆபத்தில் இருந்து மைக்கேல் காப்பாற்ற அவருடன் சேர்கிறான். மைக்கேலுக்கு ஒரு முக்கிய வேலையைக் கொடுக்கிறார் குரு. அந்த வேலையை மைக்கேல் செய்து முடித்தானா? உண்மையில் மைக்கேல் யார் என்பதுதான் படத்தின் மையக் கரு. இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...