No menu items!

புத்தகம் படிப்போம்: கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்!

புத்தகம் படிப்போம்: கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்!

ஜெகநாத் நடராஜன்

இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற பயண எழுத்தாளர், ஃப்ரேயா ஸ்டார்க். நான்கு தலைமுறைக்கும் மேலாக எழுதியவர். இவரது புத்தகங்களைப் படித்த பின் இவர் எழுதிய இடங்களை தேடிச் சென்றவர்கள் அனேகம் பேர்.

ஃப்ரேயா ஸ்டார்க், பாரீசுக்கு கலை தொடர்பாக படிக்க வந்த போலந்து ஜெர்மானிய வம்சாவளி அம்மாவுக்கும் ஆங்கிலேய அப்பாவுக்கும் மகளாக 1893இல் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோர் மணமுறிவால் பிரிந்து போனதால் உறவினர்களால் வளர்க்கப்பட்டார். இவரது ஒன்பதாவது பிறந்த நாளில் பரிசாகக் கிடைத்த ‘1001 அரேபிய இரவுகள்’ புத்தகம் இவரது தனிமைக்கு வடிகாலாக இருந்திருக்கிறது. 13 வயதில் தொழிற்சாலை இயந்திரமொன்றில் தலைமுடி மாட்டிக்கொண்டதால் தோல் பிய்ந்து தோற்றம் சிதைந்தது. நான்கு மாத சிகிச்சைக்குப் பின் புது தோற்றம் பெற்றார். ஃப்ரென்ச், லத்தீன் மொழிகளுடன் அராபி, பெர்ஷியன் மொழியையும் கற்றிருக்கிறார். மூதல் உலகப்போரில் செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்றினார்.

ஃப்ரேயா ஸ்டார்க்கின் முதல் பயணம், , 1927இல் ஆஸ்லோ நகருக்கு சென்றது. அடுத்த சில மாதங்களில் பேய்ரூட் பயணமானார். அங்குள்ள தூதரகத்தில் பணியாற்றிய புகழ்பெற்ற கவிஞர் ஜேம்ஸ் எல்ராய் ஃப்ளெக்கரை சந்தித்து பக்தாத்தில் அவரது வீட்டில் தங்கியிருந்தார். ஜேம்ஸ் எல்ராய் ஃப்ளெக்கர் கவிஞர் மட்டுமல்லாது கலையார்வம் மிக்கவர், பல வரலாற்றாய்வாளர்களின் நண்பர்.

ஜேம்ஸ் எல்ராய் ஃப்ளெக்கரை சந்தித்த பின் ஸ்டார்க்க்கின் மன நிலையில் பெரும் மாறுதலகள் ஏற்படுகிறது. சைப்ரஸ், கிரீஸ், லெபனான், சிரியா, பாலஸ்தீனம், துருக்கி, எகிப்து, ஜோர்டான், லிபியா ஆகிய நாடுகளைக் கொண்ட மத்திய தரைக்கடல் பகுதி அவருக்குப் பிடித்த பிரதேசமாகிறது. பிரயாணம் அவர் வாழ்வின் அங்கமாகிறது. பிரயாணம் மனித மனதிற்குள் ஏற்படுத்தும் குதூகலம், ஆச்சர்யம், தனிமை, தன்னம்பிக்கை, விதவிதமான மனிதர்களின் சந்திப்பு அனைத்தும் அவருக்குள் இருந்த எழுத்தாற்றலை தூண்டுகிறது. அராபி, பெர்ஷிய மொழிகளைக் கற்றுக் கொள்கிறார். 1932இல் அவரது முதல் புத்தகம் ‘Baghdad Sketches’ வெளியானது. அப்போது அவருக்கு 35 வயது.

இரண்டாம் உலகப்போருக்கு சில வருடங்களுக்கு முன்னால் ஃப்ரேயா ஸ்டார்க், ஈராக் பயணப்பட்டார். அதுவரை அந்தப் பிரதேசத்தில் ஆங்கிலேய பயணிகள் பயணித்திருக்கவில்லை. தொடர்ந்து அவர் பயணப்பட்ட குவைத் அப்போது ஒரு குக்கிராமமாக இருந்தது என்பதையும், தன்னை அவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் என்பதையும், வாடகைக்கு தங்க அனுமதித்தார்கள் என்பதையும் ஸ்டார்க் எழுதியுள்ளதை படிக்கப் படிக்க, ஒரு பயணி வரலாற்று ஆசிரியராக உருமாற்றமடைவதை உணர முடியும்.

“நான் தனியாகவே எங்கும் செல்ல விரும்பினேன். நான் சுற்றுலா பயணி அல்ல. நான் பயணி. தெரியாத இடத்தைப் பற்றி தெரிந்துகொள்வது எனக்குப் பிடித்தமான ஒன்று. அந்த ஆர்வமே என் பயணங்களின் காரணம். நான் சந்தித்த மனிதர்கள் பற்றியோ, உணவுகள் பற்றியோ, கண்ட நோய்கள் பற்றியோ, சந்தித்த குளிர், மழை, புயல் பற்றியோ எழுத விரும்பியதில்லை. நான் காண விரும்புவது உறைந்திருக்கும் காலத்தை…” என்று சொல்லும் ஃப்ரேயா ஸ்டார்க் தன் பயண அனுபவங்கள் குறித்து 22 நூல்களை எழுதியிருக்கிறார்.

இதில் ‘The Valleys of the Assassins’ (கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்) பயண இலக்கியத்தின் மிக முக்கியமான நூலாக குறிப்பிடப்படுகிறது. 1930-32இல் அவர் பாக்தாத்தில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்தார். அது ஒரு கடுமையான காலம். அவரது மனதிடம் தவிர வேறொன்றும் அவரைக் காப்பாற்றிவிட முடியாது என்ற சூழல். அவர் தன் மனதிடத்தை இன்னும் வலுவாக்கி எவரும் போகாத பகுதிக்கு செல்ல ஆசைப்பட்டார். குறிப்பாக லூரிஸ்தான், பெர்சியா (இப்போது ஈரான்) எல்லைப் பகுதிகளுக்கு அவர் செல்ல ஆசைப்பட்டபோது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். கொலைகாரப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டு, சென்றவர்கள் திரும்பிவர உத்திரவாதமில்லாத பகுதி அது. கொலையும் களவும் சார்வசாதாரணமாக நிகழும் காவலில்லாத பிரதேசம். எனவே, யாரும் செல்ல அச்சப்படும் பகுதி. ஆனாலும், அங்கு சென்றே ஆகவேண்டும் என்பதில் ஃப்ரேயா ஸ்டார்க் உறுதியாக இருந்தார். அவரிடம் உத்தேசமான வரை படங்கள் மட்டுமே இருந்தன. வழிகாட்டிகள் இல்லை.

இந்த பகுதிக்கு ஃப்ரேயா ஸ்டார்க் சென்ற பயண அனுபவங்களே ‘கொலையாளிகளின் பள்ளத்தாக்குகள்’ நூல். நான்கு பகுதிகளாக அவரது பிரயாணம் இந்த நூலில் அமைந்திருக்கிறது. பொறுமையும் நிதானமுமாக அவரது தேடல் இருந்திருக்கிறது. அவர் திரட்டிய தகவல்கள் இந்நூலில் ஒரு போக்கிஷம் போல இருக்கிறது.

பள்ளத்தாக்குகள்,  மாளிகைகள், கல்லறைகள், கோட்டைகள், வழித்தடங்கள், மலை முகடுகள், மறைந்த நதிகள் என்று அவர் தான் கண்ட, கேட்ட விஷயங்களை எல்லாம் இதில் பதிவு செய்திருக்கிறார். அவரை நோக்கி சுடப்பட்ட தோட்டாக்களிலிருந்து தப்பியிருக்கிறார். நோய் கண்டு உயிர் பிழைத்திருக்கிறார். தன் தேடலில் கிடைத்த மண்டையோடுகள் சிலவற்றை மியூசியத்திற்கு அளித்திருக்கிறார்.

நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஃப்ரேயா ஸ்டார்க் பயணம் சளைக்காமல் தொடர்ந்திருக்கிறது. யாருமற்ற, முடிவு தெரியாத பாலைப் பயணம், நதிப் பயணம், மலைப் பயணம், கடற்கரையோரப் பயணம் என்று பயணியாக வாழ்ந்த இவர் தனது 54 வயதில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் பயணத்துக்கு தடையாக முயன்ற போது கணவனைப் பிரிந்தார். அதன்பின்னர் பாலைவனங்களையே உறவாகத் தொடர்ந்த இணையற்ற பயணியானார். 1993இல் தன் 100ஆவது வயதில் ஃப்ரேயா ஸ்டார்க் மரணமடைந்தார்.

ஃப்ரேயா ஸ்டார்க் நூல்கள் பயண அனுபவ தூறல்கள். கண நேரத்தில் காலத்தின் பின் நோக்கி நம்மை அழைத்துச் செல்பவை. முகமறியாத மனித வாழ்வின் மிச்சங்களைக் காட்டி, அம்மனித வாழ்வு பற்றிய கற்பனையை நமக்குள் விதைப்பவை. நிஜமான இடத்தில் நின்று நிஜத்தையே கற்பனையாகக் காணவைப்பவை.


நூலை வாங்க இங்கே அழுத்தவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...