No menu items!

தமிழ்நாட்டின் ஆன்மிகம் வேறு, பாஜக ஆன்மிகம் வேறு – ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

தமிழ்நாட்டின் ஆன்மிகம் வேறு, பாஜக ஆன்மிகம் வேறு – ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேட்டி

பிரபல பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

கலைஞர் கால திமுக, ஸ்டாலின் கால திமுக – இரண்டையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?

திமுக 1957இல்தான் தேர்தல் அரசியலுக்குள் வருகிறது. அதற்கு முன்னால் இருந்தது, தேர்தல் அரசியலுக்கு முற்பட்ட திமுக. 1957 – 1967 பத்தாண்டு காலம் எதிர்கட்சி திமுக. 1967இல் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அதன்பின்னரும் தொடர்ந்து திமுகவை ‘செட்டில்’ ஆகவே விடவில்லை. 1971இல் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும் அடுத்த ஆண்டே 1972இல் கட்சி உடைந்தது. அதனை சமாளித்து தக்கவைத்துக்கொண்ட ஆட்சியை கலைத்துவிட்டார்கள். அதன்பின்னர் 13 ஆண்டுகள் எதிர்கட்சி. மீண்டும் 1989இல்தான் ஆட்சிக்கு வருகிறது. அதன்பின்னர் 1991க்கு பிறகுதான் மு.க. ஸ்டாலின் போன்றவர்கள் அரசியலுக்குள் வருகிறார்கள். அதன்பின்னர் சந்தைக்கு என்ன இடம், அரசுக்கு என்ன இடம் என்பது குறித்த ஒரு பார்வை இருப்பவர்களாக மாறுகிறார்கள்.  இந்த இரண்டு காலகட்டத்திலும் கலைஞர் ஆட்சியில் இருந்துள்ளார். அவரிடம் இருந்து வேறுபட்ட ஒரு திமுகவை இன்று நான் பார்க்கவில்லை.

ஆனால், ஒரு மென் இந்துத்துவ எதிர்ப்பு போக்கையே இன்றைய திமுக கொண்டிருக்கிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?

இந்த விமர்சனம் புதுசு இல்லை; 1952இல் ‘பராசக்தி’ படத்தில் வந்த ‘கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது’ என்ற வசனத்திற்கே ‘சமரசம்’ செய்துகொண்டு விட்டார்கள் என்ற விமர்சனம் வந்தது. 1953இல் பிள்ளையார் சிலைகளை பெரியார் உடைத்தபோது, அண்ணா சொன்னார்: ‘நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன்.’ அந்த நிலைப்பாட்டில்தான் இன்றும் திமுக இருக்கிறது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றுதானே அன்றுமுதல் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதில் நீர்த்துபோய்விட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? நம்பிக்கைக்களுக்கு எதிராக திமுக இல்ல; நம்பிக்கை என்பது மத விரோதத்தை தூண்டுவதாக இருந்தால் அதை எதிர்க்கிறார்கள். இந்த நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தே மிக தெளிவாக இருக்கிறது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் விமர்சனம் திமுக மீது நீண்ட காலமாக இருக்கிறது.  இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதன் மூலம் இந்த விமர்சனங்களை வைப்பவர்களுக்கு திமுகவே ஒரு ஆயுதத்தை கொடுக்கிறதா?

பதவிகளுக்கு வருபவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களா இல்லையா என்பதைத்தான் நான் முக்கியமாக பார்க்கிறேன். மு.க. ஸ்டாலினும் உதயநிதியும் தேர்தலில் போட்டியிட்டுதான் வந்தார்கள். இப்படி போட்டியிட்டு, மக்கள் அங்கீகாரம் பெற்று வந்தவர்கள் குடும்ப அரசியல் என்றால், தேர்தலில் போட்டியிடாமல் வந்த, ஒருமுறைகூட போட்டியிட தயாராகவே இல்லாத ஜி.கே. வாசன் வருகை ஜனநாயக அரசியலா? அதிமுகவுக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் இருக்கிறார், அவர் ஓ. பன்னீர்செல்வம் மகன். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அதிகார மையத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலை இல்லாத கட்சிகளே இல்லை. எனவே மக்கள் அங்கீகாரம் இருக்கிறதா, அவர்களின் அரசியல் பொது நன்மையை நோக்கியதாக இருக்கிறதா என்பதைத்தான் நான் பார்க்கிறேன். இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டு பேசுவது தேவையற்ற விவாதமாகத்தான் மாறும்.

கலைஞர் – எம்.ஜி.ஆர். பிரிவுக்கு பின்னர் தேசிய கட்சிகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால், இப்போது பாஜக நாங்கள் தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; வரும் தேர்தலில் இத்தனை இடங்கள் பிடிப்போம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல் தமிழ்நாட்டில் பாஜக வளர்கிறதா?

இன்று பாஜக சொல்வது எல்லாமே 1980களில் காங்கிரஸும் ஆர். வெங்கட்ராமனும் சொன்னதுதான். 1988இல் ஒரு வருடம் குடியரசு தலைவர் ஆட்சியை இங்கே நடத்தி, 13 முறை ராஜீவ்காந்தி வந்து, அப்போது ஜி.கே. மூப்பனாரும் இதையேதான் சொன்னார். “நாங்க வந்துட்டோம்” என்றார். எங்கே வந்தார்கள்? காங்கிரஸாலேயே வரமுடியவில்லை என்னும் நிலையில் பாஜகவால் வரமுடியும் என்று நான் நம்பவில்லை.

தமிழ்நாட்டில் திமுக வேண்டாம், அதிமுக வேண்டாம் என்கிற மனநிலை 12 சதவிகித மக்களிடம் இருக்கிறது. இந்த 12 சதவிகித வாக்கு வங்கி ஒன்றாக சேரும்போது மூப்பனார், வைகோ, விஜயகாந்த் வருகிறார்கள். பிரியும்போது நோட்டா, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் உட்பட எல்லோரும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். சென்ற தேர்தலில் அதுதான் நடந்தது. ஒரு கட்சிக்கு 20 சதவிகிதத்துக்கு மேலே வாக்கு வங்கி வந்தால்தான் ஒரு மாற்றம் வரும். பாஜக அந்தளவு வாக்கு பெறுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் இன்னும் ஏற்பட்டுவிடவில்லை.

பாஜகவின் மத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாதா?

தமிழ்நாட்டில் பெரியார் போல் வள்ளலார் என்ற பொதுப் புரிதல் ஒன்றும் இருக்கிறது. வள்ளலார் வழி ஆன்மிகம் அன்பின் அடிப்படையில் வந்ததே தவிர, வெறுப்பின் அடிப்படையில் வந்தது அல்ல. இது பொதுப் புத்திக்குள் இறங்கி இருக்கிறது. ‘அரசியல் தலைவன் என்பவன் ஒரு பசிப்பிணி மருத்துவன்’ என்று வள்ளலார் சொல்கிறார். அதாவது அடுத்தவன் பசியைக் கண்டால் வருத்தம் வருகிறது. இந்த ஆன்மிகமும் இன்னொருவனை வேறு மதத்தவன் என வெறுக்கும் வெறுப்பு அரசியல் ஆன்மிகத்துக்கும் இடையேயான இடைவெளி மிகப்பெரியது. இந்த இடைவெளியை பாஜகவினர் புரிந்துகொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நீங்கள் 1980இலேயே ‘Aside’இல் இளையராஜா பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த பின்புலத்தில் இதை கேட்கிறோம், இன்று பாஜகவுடன் இளையராஜா நெருங்குவதை, அவரது அரசியல் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

கலைஞர்களிடம் அவர்களின் கலையைத் தவிர்த்து மற்ற விஷயங்களை தேடுவது அர்த்தம் இல்லாதது. மத்திய அரசு என்பது செல்வாக்குடைய பெரிய இயந்திரம். அதன் ஆதரவு பெற்றவர்கள், ஈவிகேஎஸ் சம்பத் தொடங்கி இன்று சசிகலா புஷ்பா வரைக்கும், மாநில அரசியலுக்கு எதிராக செயல்பட்டுள்ளதை பார்க்கலாம். ஜெயலலிதாவை எதிர்த்து சசிகலா புஷ்பாவால் ஒரு அறிக்கை வெளியிட முடிந்ததுக்கு அவர் எம்.பி. ஆனதுதான் காரணம். வைகோ, எம்.ஜி.ஆர். போன்றவர்களே மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக போகும்போது இளையராஜா போன்ற ஒரு கலைஞர் எதிராக போவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கலைஞர்கள் கலகக் குரல் என்பது ஒரு பக்கம் என்றால், மிக இயல்பாக அரசு இயந்திரத்துக்கு இயைந்து போகக்கூடியவர்கள் கலைஞர்கள் என்பதுதான் இன்னொரு பக்கம். எனவே, இளையராஜாவின் போக்கை ஒரு முரண்பாடாகவே நான் பார்க்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...