No menu items!

குல்தீப் யாதவ் – மீண்டும் பாய்ந்த பந்தய குதிரை!

குல்தீப் யாதவ் – மீண்டும் பாய்ந்த பந்தய குதிரை!

இந்திய கிரிக்கெட் அணிக்குள் நுழைந்த காலத்தில் எப்படி இருந்தாரோ, அதே ஆக்ரோஷத்தை இப்போது மீண்டும் வெளிக்காட்டி வருகிறார் குல்தீப் யாதவ். இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்களையும், இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்களையும் வீழ்த்திய குல்தீப் இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளராக மீண்டும் உருவெடுத்துள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணியின் பெரும் நம்பிக்கையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு இருப்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த குல்தீப் யாதவ், பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில்கூட ஒதுக்கப்பட்ட காலம் இருந்தது. இப்போது அதையெல்லாம் கடந்து மீண்டு வந்திருக்கிறார் குல்தீப் யாதவ். 150 விக்கெட்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது எட்டி இருக்கிறார். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான தரப் பட்டியலிலும் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள் கொஞ்சமல்ல.

குல்தீப் யாதவை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது மும்பை இந்தியன்ஸ் அணிதான் 2012-ல் முதலில் குல்தீப் யாதவை தங்கள் அணியில் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ். ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத குல்தீப் யாதவ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து 2014-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 14 விக்கெட்களை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதில் ஒரு ஹாட்ரிக்கும் அடங்கும்.

இந்த சாதனையைத் தொடர்ந்து கேகேஆர் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் யாதவ், அங்கிருந்த பிராட் ஹாக்கிடம் சுழற்பந்து வீச்சின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். 2016-ம் ஆண்டு கொல்கத்தா அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மாறிய குல்தீப் யாதவ், பின்னர் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

2017-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டிதான் அவருக்கு முதல் போட்டி.

“ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாளை நீ ஆடப் போகிறாய். உன்னிடமிருந்து 5 விக்கெட்களையாவது நான் எதிர்பார்க்கிறேன்” – தர்மசாலாவில் உள்ள ஓட்டல் அறையில் குல்தீப் யாதவைப் பார்த்து இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியபோது இரவு மணி 10.

“நீங்கள் நினைப்பதுபோல் நிச்சயமாக செயல்படுவேன்” என்று கும்ப்ளேவை வழியனுப்பி வைத்தாலும் குல்தீப்பின் மனது அடித்துக்கொண்டு இருந்தது. “எத்தனை நாட்களாக காத்திருந்து கிடைத்த வாய்ப்பு இது. இதை நாம் நிச்சயமாக தவற விடக் கூடாது” என்று அவரது மனம் சொன்னது. கண்கள் தூக்கத்தை இழந்தன. புரண்டு புரண்டு படுத்தவர், அதிகாலை 3 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்தார். விடியலை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவரது மனது தூங்க மறுத்தது. பந்தை எடுத்தார். பாதுகாப்பு விதிப்படி வெளியே செல்லக்கூடாது என்பதால் தனது கட்டிலிலேயே பந்தை வீசி பயிற்சியைத் தொடங்கினார். அடுத்த நாள் காலை களம் புகுந்தவர், தன் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 68 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இப்படி அதிரடியாக இந்திய அணிக்குள் நுழைந்தவர், மிக விரைவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவின் சைனாமேன் பாணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணிகள் திணறின. மளமளவென்று விக்கெட்களை அள்ளினார். ஆஅனால் திடீரென யாருடைய கன் பட்டதோ, குல்தீப் யாதவின் பந்துவீச்சின் மாயம் குறைந்து போனது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில்கூட அவரால் விக்கெட்களை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எதிரணி பேட்ச்மேன்கள் அவரை குறிவைத்து தாக்க, கேகேஆர் அணி, அவரை சப்ஸ்டிடியூட் வீர்ராக ஒதுக்கி வைத்து முக்கிய பந்துவீச்சாளராக வருண் சக்ரவர்த்தியை பயன்படுத்தியது. 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுத்தது கேகேஆர். அதிலும் அவர் ரன்களை வாரி வழங்கியதால் இந்திய அணியும் அவரை ஒதுக்கியது. . ஆனால் இதற்காக கலங்காத குல்தீப் யாதவ், தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டார். புதிய பந்துவீச்சு உக்திகளை கற்றுக்கொண்டார்.

இந்தச் சூழலில்தான் 2021-ம் ஆண்டில் கேகேஆர் அணி அவரை விடுவித்தது. அந்த ஆண்டில் நடந்த ஏலத்தில், குரைந்த தொகையான 2 கோடி ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணியின் கேப்டனான ரிஷப் பந்த், குல்தீப்பை நம்பினார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் சரசரவென விக்கெட்கலை எடுத்து டெல்லியின் நாயகனாக மாறினார் குல்தீப். எந்த ஐபிஎல் தொடரில் தான் அவமதிக்கப்பட்டாரோ அதே ஐபிஎல் தொடரில் மீண்டும் நாயகனாக உருவெடுத்தார் குல்தீப் யாதவ். அதைத் தொடர்ந்து இந்திய அனியிலும் அவருக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

அஸ்வின், சாஹல் போன்ற பந்துவீச்சாளர்களை கடந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார் குல்தீப் யாதவ். அணிக்குள் மீண்டு வருவதில் காட்டிய போர்க்குணத்தை உலகக் கோப்பையிலும் அவர் காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...