No menu items!

நிபா வைரஸ்: அறிகுறிகள் என்ன? வருமுன் காப்பது எப்படி?

நிபா வைரஸ்: அறிகுறிகள் என்ன? வருமுன் காப்பது எப்படி?

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கேரளா எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது? வருமுன் காப்பது எப்படி?

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்

கேரளா, கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் (வயது 49) கடந்த 30-08-23 அன்று இறந்து போனார். அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தது.

இந்நிலையில் இன்னொருவரும் (வயது 40) காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (11-09-23) மரணம் அடைந்தார். இவருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தது.

இறந்த இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், கடந்த மாதம் இறந்தவரின் குழந்தைகள் இருவருமே காய்ச்சல் காரணமாக தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மரணமடைந்தவருடன் தொடர்பில் இருந்த சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் காரணமாக கோழிக்கோட்டில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் மரணம் அடைந்தனர. தொடர்ந்து கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி 17-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது வேகமாக செயல்பட்ட கேரளா மாநில சுகாதாரத் துறை தொடர்ந்து நிபா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தியது. இதற்காக உலக சுகாதார மையத்தின் பாராட்டுதலையும் பெற்றது.

இந்நிலையில், இப்போது மீண்டும் கேரளா நிபா வைரஸ் பரவல் அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது. 2018 போலவே கேரளா சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் (NiV) என்றால் என்ன?

நிபா வைரஸ் ஒரு ஜூனோடிக் வைரஸ். அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ். குறிப்பாக நிபா வைரஸ் பழம் உண்ணும் பழ வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகிறது.

மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் 1998-1999ஆம் ஆண்டில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு நிபா வைரஸ் என்று பெயர். 1999இல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் நோய் பரவியது. அப்போது, 100-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தார்கள். நோய் பரவலைத் தடுக்க இந்த இரண்டு நாடுகளிலும் 10 லட்சத்துக்கும் அதிகமான பன்றிகள் கொல்லப்பட்டன.

அதன் பிறகு, வங்கதேசத்திலும் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு பலரும் இறந்தார்கள். இந்த மூன்று நாடுகள் தவிர பல ஆசிய நாடுகளிலும் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் கேரளாவில் இந்தத் தொற்று ஏற்பட்டு 17க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தார்கள்.

நிபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

பழம் தின்னும் வெளவால்களின் உடலில் இந்த வைரஸ் இருக்கும். பதநீரில் வெளவால்களின் சிறுநீர் அல்லது உமிழ்நீர் கலக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் வழியாக பதநீரிலும், வெளவால்கள் கடித்த பழங்களிலும் இந்த வைரஸ் இருக்கும். அவற்றில் இருந்து பன்றிகள், குதிரை, ஆடு, பூனை, நாய் போன்ற பிற விலங்குகளுக்கு பரவும். இந்த விலங்குகளிடம் இருந்து அவற்றைக் கையாளும் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும். அதாவது இந்த விலங்குகளின் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவிவிடும். வெளவால்கள் கடித்த பழங்களை உண்பவர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். இப்படி நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிப் பழகுபவர்களுக்கும் தொற்று பரவும் வாய்ப்புள்ளது.

அறிகுறிகள் என்ன?

நிபா வைரஸ் ஒருவரது உடலில் நுழைந்த 4 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம்.

தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி, தசை வலி, பக்கவாதம், தொண்டை புண், தலைச்சுற்றல், தூக்கம் போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்.

தொடர்ந்து , மூளை அழற்சியைக் குறிக்கும் நரம்பியல் கோளாறுகள், நிமோனியா, கடுமையான சுவாசக் கோளாறு, வலிப்பு, குழப்பம், தன்னிலை இழந்து பிதற்றுதல், வாய் குழறுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். மூளை பாதிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகள் இவை.

தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம்.

வருமுன் காப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாம் என்னவெல்லாம் செய்தோமா அதேதான்…

கொரோனாவுக்காவது தடுப்பூசி வந்துவிட்டது. ஆனால், நிபா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆகவே, தொற்று ஏற்படாமல் தடுப்பது, தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவைதான், இந்த வைரஸ் நோயின் பிடியில் இருந்து மக்களைக் காப்பதற்கான ஒரே வழி!

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பை குறைக்கலாம்.

நிபா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர், மருத்துவப் பணியாளர்களும் முழு பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரும் சரி அவருடன் தொடர்பு கொண்டவர்களும் சரி தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும்.

கழிப்பறை அல்லது குளியலறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியாக சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

நிபாவால் மரணமடைந்த நபர்களின் உடல்கள் பொது சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கையாளப்பட வேண்டும். சிறு அலட்சியமும் நிலைமையை மிக மோசமாக்கும் வாய்ப்புள்ளது.

பழங்களை நன்றாகக் கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். பறவைகள் அல்லது விலங்குகளால் பாதி சாப்பிடப்பட்ட பழங்களை சாப்பிடக்கூடாது.

தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் வைரஸ் பரவுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பைத் தீவிரபடுத்த தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கேரளாவில் இந்த நோய் பரவி வருவது உண்மைதான் என்றாலும் தமிழ்நாட்டில் யாரும் பீதி அடைய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

எச்சரிகையுடன் இருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...