No menu items!

புற்று நோய் தொற்று நோயா? கேன்சரால் காலமான டாக்டர் செல்வலட்சுமி!

புற்று நோய் தொற்று நோயா? கேன்சரால் காலமான டாக்டர் செல்வலட்சுமி!

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் கதிரியக்க சிகிச்சை நிபுணருமான மருத்துவர் செல்வலட்சுமி கணேசராஜா (வயது 62) சென்னையில் நேற்று காலமானார். ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகளுக்கு மறுவாழ்வளித்த செல்வலட்சுமியின் மரணம் புற்று நோயாலேயே நிகழ்ந்துள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புற்று நோய் ஒரு தொற்று நோயா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

புற்று நோய் ஒரு தொற்று நோயா என்று பார்க்கும் முன்பு… டாக்டர் செல்வலட்சுமி பற்றி ஒரு சிறு பிளாஷ்பேக்.

பெண்களை அதிகம் பாதிக்கும் பேறு கால புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைத் தடுப்பதற்காக முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மருத்துவ சேவை ஆற்றியவர் செல்வலட்சுமி. சென்னையில் 1961-ல் பிறந்தவர். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மறைந்த வி. சாந்தா வழிகாட்டுதலுடன் புற்றுநோய் சிகிச்சைகளில் கவனம் செலுத்தினார். இந்த துறையில் பல்வேறு புதிய நுட்பங்கள், பரிசோதனைகள், தடுப்பு முறைகளை நன்கு கற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை புற்று நோயில் இருந்து காப்பாற்றி, அவர்கள் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ காரணமாக இருந்துள்ளார். அப்படிப்பட்டவர் புற்று நோயாலேயே காலமாகியுள்ளது உண்மையிலேயே பலருக்கும் அதிர்ச்சி.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே கழித்துள்ள செல்வலட்சுமியின் மரணம், புற்றுநோய் ஒரு தொற்றுநோயா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இதற்கு மருத்துவர்களின் உறுதியான பதில், எந்தப் புற்றுநோயும் தொற்றும் தன்மை உடையது அல்ல என்பதுதான். ஆனால், தொற்றக்கூடியது இல்லை என்றாலும் இன்னொரு வகையில் புற்று நோய் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறையினர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அது என்ன எனப் பார்ப்போம்…

நம் உடலில் சப்தமில்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்துக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் முதன்மையானது புற்று நோய். நமது உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோய்தான் புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது.

நம் உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் புற்று கட்டியாகத் தோன்றுகின்றன.

புற்று நோய் கட்டி உருவாக புகையிலை உபயோகித்தல், உணவு முறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கை முறை என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மரபணு மாற்றங்களால் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம். எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்ற சில வைரஸ்களும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.

புற்று நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரை உட்பட எத்தனையோ பெரிய தலைவர்களை, மிக உயர்ந்த சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. எனவே, கேன்சர் என்றாலே மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான். இன்று இந்த நிலை மாறியிருக்கிறது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்கள் போல் வாழ முடியும் என்றாகியிருக்கிறது. புற்றுநோய் சிகிச்சையில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

உலகம் முழுவதும் புற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களே இந்நிலைக்கு காரணம். அவர்களில் செல்வ லட்சுமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் புற்று நோயே செல்வலட்சுமி இழப்புக்கும் காரணமாகிவிட்டது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயது, நோயின் நிலையைப் பொறுத்து அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரபி மருந்துகள் மூலம் சிகிச்சை, நாளமில்லாச் சுரப்பிகள் சிகிச்சை எனப் பல வழிகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பெரும்பான்மையோருக்கு, அதாவது கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சையே வழங்கப்படுகிறது.

புற்று நோய் ஒரு தொற்று நோய் இல்லை என்றாலும் புற்று நோயாளிக்கு வழங்கப்படும் இந்த கதிரியக்கச் சிகிச்சை நோயாளிக்கு மட்டுமல்லாமல் அவருக்கு சிகிச்சையளிப்பவர்களுக்கும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இதனால்தான், புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை கொடுத்து சிறிது நேரம் வரைக்கும் குழந்தைகள் உட்பட மற்றவர்கள் அவர்களை நெருங்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார்கள்.

இந்த கதிர்வீச்சு புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது. இது தெரிந்துதான் டாக்டர் செல்வலட்சுமி உட்பட புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்களும் சரி, இதர மருத்துவ பணியாளர்களும் ஈடுபட்டார்கள், ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்யூட் டாக்டர் செல்வலட்சுமி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...