No menu items!

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

கோவையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவுக்கு கமல்ஹாசன் ஒரு காரை பரிசாக கொடுத்திருப்பதுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். இது சரியா தவறா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் காரசாரமாக நடந்து வருகிறது.

கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் ஓட்டுநராக பணிக்குச் சேர்ந்தார் ஷர்மிளா. ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கிய சில நாட்களிலேயே அவர் புகழின் உச்சிக்கு சென்றார். அவர் இயக்கிய பேருந்தில் வானதி திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் பயணம் செய்து அவருக்கு புகழ் வெளிச்சம் பாய்ச்சினர். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் கோவைக்கு பயணம் மேற்கொண்ட திமுக எம்.பி. கனிமொழி, அவரது பேருந்தில் ஏற, அதிலிருந்த நடத்துனர் அவரிடம் டிக்கெட் கேட்டு தவறாக நடத்தியதாக குற்றம் சாட்டினார் ஷர்மிளா.

இதைத்தொடர்ந்து பேருந்து நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவர் வேலையில் இருந்து விலகினார். இந்த சூழலில்தான் அவரை தொழில் முனைவோராக மாற்றும் விதமாக, ஒரு காரை அவருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன்.

இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. ஷர்மிளாவைவிட பல ஆண்டு அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

இதுகுறித்து தானது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், “பணிக்குச் செல்லும் ஒரு பெண்ணை கார் கொடுத்து தொழில் முனைவராக்கிய கமலுக்கு நன்றி.

கூடவே சில கேள்விகளும்… இதற்கு பல காலம் முன்பே கனரக வாகனம் ஓட்டிய பெண்கள் இருக்கிறார்களே.. அந்த சாதனைப் பெண்களில் இருந்து எந்த வகையில் இவரின் சாதனை தனித்துவம் கொண்டது?

பேருந்தில் ஏறியிருப்பது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், அதிலும் ஆளும் கட்சியின் செல்வாக்கு மிக்க ஆளுமை என்றபோதும், தன் கடமை தவறாமல் பயணச் சீட்டு வாங்கச் சொன்ன பேருந்தின் நடத்துனர் பெண்மணி செய்ததில் துணிச்சலும், நேர்மையும் தெரியவில்லையா? அவருக்கு அட்லீஸ்ட் ஒரு ஸ்கூட்டராவது கொடுத்திருக்கக் கூடாதா கமல் சார்?

அந்தத் தனியார் பேருந்தின் உரிமையாளர் பேட்டியைப் பார்த்தீர்களா? வேலையை விட்டு அவர் நிறுத்தவில்லை. அவர் மறுபடி பணிக்கு வந்தாலும் தாராளமாக வரட்டும் என்கிறார். தன் வாகனத்திற்கும், பயணிகளுக்கும் பாதிப்பு வந்துவிட்டாலும் பரவாயில்லை என்று பெண்களுக்கு சிரமமான இந்த்ப் பணிகளில் வாய்ப்பு கொடுக்க முன்வந்த அந்த முதலாளி கடைசியில் ஊடகங்களில் வில்லன் போல சித்தரிக்கப்பட்டது சரியா சார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது இந்த கருத்தை பலரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக ராஜேஸ்வரி கோபால் என்பவர் எழுதியுள்ள பதிவில், “இந்த பெண்ணின் செயல் சரியானதல்ல. வண்டியை பாதி வழியிலேயே விட்டு விட்டு இந்த பெண் செய்த செயல் ஒரு வித எரிச்சலை உண்டாக்குகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட பேருந்தில் எவ்வளவோ பேர் பயணம் செய்து இருப்பார்கள் பயணியர் பலர் நேரத்திற்கு செல்லாமல் கஷ்டப்பட்டு இருப்பார்கள்.
ஊடக வெளிச்சத்தை பயன்படுத்தி அந்த பெண் பெரிய லாபம் அடையும் போக்கில்தான் செயல்பட்டு இருக்கிறாள். கமலைத் தொடர்ந்து நிறைய அரசியல்வாதிகளும் திரைப் பிரபலங்களும் பரிசுகளை கொட்டுவார்கள். அரசு பணி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பெண்ணுக்கு உதவுவதற்கு பதில் தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனருக்கு அவரின் முதுமை காலத்தினை நன்றாக கழிக்க கமல் உதவி இருக்கலாம்” என்கிறார். இப்படி பலரும் கமல் செய்த உதவியை விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் இந்த விஷயத்தில் கமலுக்கும், ஷர்மிளாவுக்கும் ஆதரவான கருத்துகளையும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.

தங்கபாண்டியன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “செய்கிற உதவியை கொச்சைப்படுத்தும் போக்கு நல்லதல்ல. மற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், எவ்வளவோ வள்ளல்கள் இருக்கிறார்கள் செய்யட்டும்….

அவர் தன் பார்வையில் பட்டவர்களுக்கு உதவி செய்கிறார். இதற்கு விளம்பரம், வெளிச்சம், பரப்புரை என எவ்வளவு பதிவுகள்…

சினிமாவில் சம்பாதித்து… சினிமா சார்ந்த இனங்களில் முதலீடு செய்து, வணிக ரீதியாக இவருக்கும் நஷ்டம் மற்றவர்களுக்கும் நஷ்டம் என வந்தாலும், சினிமாவை அதிகம் நேசிக்கும் திரைக்கலைஞர் கமல். முடிந்தால் வாழ்த்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி பலர் இந்த விஷயத்தில் கமலையும் ஷர்மிளாவையும் ஆதரித்துள்ளனர். கனிமொழியிடம் டிக்கெட் கேட்ட நடத்துனர், அந்த பேருந்தில் அவருக்கு முன் சென்ற வானதி திருநாவுக்கரசிடம் டிக்கெட் கேட்கவில்லையே என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

எப்படியோ நடந்த சம்பவங்களால் ஷர்மிளா புகழ்பெற்று விட்டார். அடுத்து அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...