No menu items!

அண்ணாமலை – விஜய் – லண்டன் – மிஸ் ரகசியா

அண்ணாமலை – விஜய் – லண்டன் – மிஸ் ரகசியா

“கோவை பெண் ஓட்டுநருக்கு கார் கொடுத்த கமல், அப்படியே பெண் மீடியா ஆளான எனக்கும் ஒரு கார் கொடுத்திருக்கலாம். வெயில் மழைன்னு எல்லாத்திலும் ஓட வேண்டியிருக்கு” என்று துப்பட்டாவால் விசிறிக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அமிதாப், பிரபாஸ் கூட நடிக்கப் போற குஷில கார் கொடுத்துருப்பார். இந்தப் படத்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம்னு சொல்றாங்களே?”

”அப்படிதான் கமல் ரசிகர்கள் பூஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. விஜய், ரஜினியையெல்லாம் முந்திட்டாருன்னு சோஷியல் மீடியாவுல பரப்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா இதை கமல் ரசிக்கலை”

“ஏன்?”

“ஏற்கனவே தமிழ்நாட்டுல ரெய்ட் தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. இவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு தெரிஞ்சா இன்கம்டாக்ஸ் ரெய்ட் வரும்ல. அதனால தன்னுடைய ரசிகர்களை அடக்கி வாசிக்க சொல்லியிருக்கார்னு ஒரு நியூஸ் இருக்கு”

“ரெய்ட்னதும் ஞாபகத்துக்கு வருது. செந்தில் பாலாஜி பத்தின நியூஸ் இப்ப குறைஞ்சிக்கிட்டே வருதே. எதிர்க் கட்சிகளும் பேசறதில்லையே?”

”செந்தில் பாலாஜி பத்தி பேசற அண்ணாமலையும் லண்டனுக்குப் போயிருக்கிறார். அவர் அங்க போனதால இங்க அரசியல் டல்லாயிடுச்சு”

”லண்டன்ல அவருக்கு எப்படி வரவேற்பாம்?”

“அங்க தமிழர்கள் வேலை பார்க்கிற இடங்கள்ல அண்ணாமலை சந்திப்புக்கு வாங்கனு கூப்பிடுருக்காங்க. நிறைய பேர் போய் அண்ணாமலையையும் பார்த்திருக்காங்க”

”அப்போ, அண்ணாமலையோட லண்டன் டூர் வெற்றியா? விஜய் மாமனாரை அண்ணாமலை சந்திச்சாருனு ஒரு நியூஸ் வருதே?”

“அப்படிலாம் இல்லனு லண்டன்வாசிகள் சொல்றாங்க”

“விஜய் அரசியலுக்குப் பின்னால பாஜக இருக்குனு சொல்றாங்களே?”

“அப்படிலாம் இல்லனு பாஜககாரங்களே ரகசியமா சொல்றாங்க. விஜய் பாஜக சப்போர்ட்டா வரார்னு அண்ணாமலை ஆட்களே கிளப்பிவிட்டிருக்காங்கனு பேச்சு இருக்கு”

“அரசியல் எப்படிலாம் இருக்கு..ஆமா செந்தில் பாலாஜி பத்தி எதுவும் நியூஸ் உண்டா?”

”கைது நடவடிக்கைக்கு பிறகு கொஞ்சநாளா, திமுக மற்றும் தமிழக அரசு தரப்புல செந்தில் பாலாஜியைப் பத்தின செய்திகள் ஏதும் வராம இருந்துச்சு. பொதுவா ஒரு அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாம இருந்தா சுகாதாரத் துறை செயலாளர், அமைச்சர்னு யாராவது ஒருத்தர் அமைச்சரோட உடல்நிலை பற்றி பத்திரிகைகளுக்கு அறிக்கை தர்றது வழக்கம். ஆனா செந்தில் பாலாஜி விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கலை. சுகாதாரத் துறை அமைச்சர் கூட எனக்கு தெரிந்ததை சொல்றேன்னு சில விவரங்களை மட்டும்தான் சொல்லிட்டு வந்தார். இந்த சூழல்ல ரொம்ப நாளைக்கு பிறகு முரசொலி விளம்பரத்துல செந்தில் பாலாஜி இடம் பிடிச்சிருக்கார். கரூர் திமுக சார்பில் நடக்கப் போற கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பான விளம்பரத்துல, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையின்பேரில்’னு போட்டிருக்கு.”

“காவேரி மருத்துவமனை நிர்வாகம் ஏதோ மன வருத்தத்துல இருக்கறதா கேள்விப்பட்டோமே?”

“செந்தில் பாலாஜி உள்ள ட்ரீட்மெண்ட்ல இருக்கறதால காவேரி மருத்துவமனையில் அமலாக்கத் துறையோட கண்காணிப்பு அதிகரிச்சு இருக்கு, இதை மருத்துவமனை நிர்வாகம் இடைஞ்சலா ஃபீல் பண்ணுது. அதோட தங்கள் மருத்துவமனைக்கு திமுக சார்புள்ள மருத்துவமனைங்கிற முத்திரை குத்தப்பட்டு இருக்கறது தங்களோட வளர்ச்சியை பாதிக்கும்னு நினைக்கறாங்க. அதனால இனி திமுக தலைவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கறது பத்தி யோசிக்கணும்னு முடிவு செஞ்சிருக்காங்களாம்.”

“மதுவிலக்குத் துறை அமைச்சர் ஆனதும், முத்துசாமி பம்பரமா சுத்திட்டு இருக்காரே?”

“ஆமா… டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளைக்கூட சமீபத்துல கூப்டு பேசியிருக்கார். அவங்களோட பிரச்சினைகளை சொல்லச்சொல்லி கேட்டிருக்கார். அதுக்கு அவங்க, ‘நீங்க இப்படி கேட்டது எங்களுக்கு சந்தோஷம்’னு பாசமா பேசியிருக்காங்க. பத்து ரூபாய் விஷயம் பற்றி அமைச்சர் கேட்டதுக்கு, ‘அதிமுக ஆட்சியில்கூட கூடுதல் விலைக்கு விற்று அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிடுவோம். இல்லைன்னா அவர் சொல்ற நபர்ட்கிட்ட கொடுத்திடுவோம். இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுக்காக மாவட்டம்தோறும் பிரதிநிதிகளை நியமிச்சார். அவங்களும் மிரட்டும் தொனியில் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டாங்க. இதை விரும்பாத தொழிற்சங்கங்கள்தான் பத்திரிகைகளுக்கு செய்தியா கொடுத்துச்சு. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிதான் இதை கடுமையா எதிர்த்தது. நீங்க அவங்ககிட்ட பேசுங்க’ன்னு சொல்லி இருக்காங்க.”

“தமிழக காங்கிரஸ் தலைவரை மாத்தப் போறதா ஒரு நியூஸ் வந்துச்சே?”

“பொதுவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 3 வருஷங்களுக்கு மேல தாக்குப்பிடிக்க மாட்டார்கள். ஆனா அழகிரி கிட்டத்தட்ட 5 வருஷத்தை ஓட்டிட்டார். டெல்லியில அவருக்கு இருந்த செல்வாக்கும், தோழமைக் கட்சிகளோட ஆதரவும்தான் இதுக்கு காரணம். இப்ப 4 மாநில தலைவர்களை மாத்த காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்திருக்கு. அதுல தமிழ்நாடும் ஒண்ணு. அழகிரியைப் பொறுத்தவரைக்கும் அவர் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர விருப்பம் தெரிவிச்சிருக்கார். இது தொடர்பா கார்கேகிட்ட அவர் பேசியிருக்கார். அதுக்கு அவர், ‘நீங்க தலைவரா தொடர்ந்தா நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட முடியாது. நீங்க எம்.பி. ஆகணும்னுதான் நம்ம கட்சியும், திமுகவும் விரும்புது. நீங்கள் கடலூரில் போட்டியிட நான் உத்தரவாதம் தர்றேன்’ன்னு சொல்லி இருக்கார்.”

“தலைமைப் பதவியை யாருக்கு கொடுக்கப் போறாங்களாம்?”

“ஜோதிமணி, செல்லக்குமார், திருநாவுக்கரசர், செல்வப்பெருந்தகைன்னு எல்லாரும் தலைவர் பதவிக்கு ஆசைப்படறாங்க. கார்த்தி சிதம்பரமும் தலைவராக விருப்பம் தெரிவிச்சு இருக்கார். ஆனா சோனியா காஅந்தி குடும்பம் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஆதரிச்சப்ப, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதருரை கார்த்தி சிதம்பரம் ஆதரிச்சார். அவருக்கு ஆதரவா பிரச்சாரமும் செய்தார். அதனால அவருக்கு வாய்ப்பு குறைவுன்னு சொல்றாங்க. ஜோதிமணியை மத்த தலைவர்களுக்கும், திமுகவுக்கும் பிடிக்காது. திருநாவுக்கரசர் பல கட்சிகள் மாறி வந்தவர். அதனால அவருக்கும் வாய்ப்பு கம்மி. அப்படிப் பார்த்தா இப்போதைக்கு செல்லக்குமாருக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்கு.”

“செல்லக்குமாரால காங்கிரஸ் கோஷ்டிகளை சமாளிக்க முடியுமா?”

“வேற வழி கிடையாது. சமாளிச்சுதான் ஆகணும்”

“இன்னும் டிஜிபி அறிவிப்பு வரலையே?”

“சங்கர் ஜெய்வால்தான்னு உறுதியா காவல்துறை வட்டாரங்கள் சொல்லுது”

“அப்ப சென்னை கமிஷனர்?”

”அங்கதான் பிரச்சினை. டேவிட்சன் ஆசிர்வாதம் வருவதற்கு ஆசைப்படறார். அவர் அங்க வந்துட்டா உளவுத் துறைக்கு யாரைப் போடறதுனு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க”

“எப்போ யோசிச்சு முடிப்பாங்களாம்?”

“இந்த மாசக் கடைசிக்குள்ள” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...