No menu items!

காந்தியா அம்பேத்கரா?  – கமல் கிளப்பிய Bigg Boss சர்ச்சை

காந்தியா அம்பேத்கரா?  – கமல் கிளப்பிய Bigg Boss சர்ச்சை

பிக்பாஸில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவும் நடிகை விசித்ராவும் தொடங்கி வைத்த கல்வி அவசியமா என்ற சர்ச்சை இரண்டு வாரங்களை கடந்து இன்னும் தொடர்கிறது. இந்த சர்ச்சையால்தான் பவா செல்லத்துரை பிக்பாஸில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தவாரம் கமல்ஹாசன், இந்தியாவில் அதிகம் படித்தவருக்கு உதாரணமாக காந்தியை சொன்னது புதிய சர்ச்சையாகியுள்ளது. காந்தியைவிட அதிகம் பட்டங்கள் பெற்ற அம்பேத்கரை ஏன் கமல் குறிப்பிடவில்லை; கமல் தெரியாமல் சொன்னாரா அல்லது அம்பேத்கர் பங்களிப்பை மறைக்கிறாரா என சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது?

படிப்பு சர்ச்சை தொடங்கியது எப்படி?

பிக்பாஸில் இந்த விவாதத்தை தொடங்கியவர்கள் ஜோவிகாவும் நடிகை விசித்ராவும்தான். “எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் ஒன்பதாம் வகுப்போடு நின்றுவிட்டேன். அதன் பிறகு நடிப்பில் ஒரு டிப்ளமோ படித்து வைத்திருக்கிறேன்” என்று ஜோவிகா கூறியதுதான் இதற்கு தொடக்கப்புள்ளி.

ஜோவிகாவுக்கு பதில் சொல்ல நடிகை விசித்ரா, “இந்த காலத்தில் ஒரு 12ஆம் வகுப்பு படித்திருந்தால் தான் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து நடந்த ஒரு டாஸ்கின் போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல நீங்கள் யார்” என்று ஆரம்பித்த ஜோவிகா ஒரு கட்டத்தில், ‘‘படிப்பு இருந்தால் தான் வாழ வேண்டும் என்று அவசியம் கிடையாது. படிக்க முடியவில்லை என எத்தனையோ பேர் தவறான முடிவு எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய சார்பாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். எல்லோரும் டாக்டருக்கு படித்தால் யார் கம்பவுண்டர் ஆவது?” என்று கேள்வி எழுப்பினார். ஜோவிகா நிலையை ஆதரித்து பவா செல்லத்துரை பேசினார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த விவாதம் வெளியே வந்து இணைய வட்டாரத்தில் பேசுபொருளானது. ‘படிப்பு தேவையில்லை என்பதை பொதுவாக்க முயன்றால் அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்” என பிக்பாஸ் ரசிகர்கள் பலரும்கூட தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த விவாதத்தின் போது, பவா செல்லத்துரையை குறிப்பிட்டு, ஒரு எழுத்தாளரே படிப்புக்கு எதிராக பேசுவது சரியா என அவருக்கு நெருக்கமானவர்களே கேள்வி எழுப்பினர். இதனால், மனம் நொந்து பிக்பாஸ் வீட்டில் இருந்தே பவா செல்லத்துரை வெளியேறி, அதற்கு நீண்ட விளக்கமெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பது தனிக்கதை.

சரி, இப்போது என்ன புதிய சர்ச்சை?

காந்தியா அம்பேத்கரா – கமல் சொன்னது சரியா?

நேற்று முன்தினம் (ஞாயிறு) பிக்பாஸில் பேசிய கமல்ஹாசன், அதிகம் படித்த தலைவருக்கு காந்தியையும் படிக்காத தலைவருக்கு காமராஜரையும் உதாரணமாக குறிப்பிட்டு பேசினார். இதனையடுத்து பிக்பாஸ் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

“பிக்பாஸில் அதிகம் படித்த தலைவராக காந்தியை மேற்கோள் காட்டுகிறார் கமல். இது பெரிய வரலாற்று சுரண்டல். காந்தியிடம் இருந்த ஒரே பட்டம் பாரிஸ்டர் மட்டும் தான். படிச்ச தலைவர்களாக காந்தி, நேரு, பட்டேல் என சொல்பவர்கள் ஏன் தப்பி தவறி கூட அம்பேத்கர் பெயரை சொல்வதில்லை? உண்மையில், இவர்களை அனைவரையும்விட அம்பேத்கர்தான் அதிகம் படித்தவர்.

அம்பேத்கர் தான் உலகிலேயே Most Educated Person, உலகிலேயே முதன்மையான அறிஞர் (No 1 Scholar) என கல்வியாளர்களே சொல்கிறார்கள்.

அம்பேத்கர் 32 பட்டங்களை தன் பெயரின் பின்னால் கொண்டவர். உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவர். இந்திய ரிவர்வ் பேங்கை உருவாக்கியவர். இத்தனை சிறப்பு, பெருமை உள்ள, உலகம் போற்றும் ஒரு அறிஞரின் வல்லமையை, வரலாற்றை அழிக்க எல்லா முயற்சிகளும் இங்கே நடைபெற்றுள்ளது. அதன் தொடர்ச்சிதான் கமல் பேச்சு” என பதிவிட்டுள்ளார் கிஷோர் குமார் என்ற பதிவர்.

கிஷோர் குமார் பதிவை பார்வர்ட் செய்துள்ள எழுத்தாளர் சாரு நிவேதிதா, “சினிமா நடிகர்களிடமிருந்து இந்த எழவு வரலாற்றுப் பாடத்தையெல்லாம் கேட்பதை எப்போது நிறுத்தப் போகிறது தமிழ்நாடு?” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்த விவாதத்துக்கு பதிலளித்து பேராசிரியரும் காந்திய ஆய்வாளருமான சித்ரா பாலசுப்பிரமணியன், ‘‘இந்தியாவை அதிகம் படித்தவர் காந்தி” என கிண்டலாக கூறியுள்ளார்.

உண்மையில் அதிகம் படித்தவர் யார்?

காந்தி சுய சரிதையான ‘சத்திய சோதனை’ நூலில் அவரே குறிப்பிட்டுள்ள படி, காந்தி பள்ளிப் படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். தனது 18ஆம் வயதில் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பை முடித்தார். அதன் பின்னர் தாயகம் திரும்பி பம்பாயில் வழக்குரைஞராக பணியாற்றத் தொடங்கினார். கிஷோர் குமார் கூறுவது போல் காந்தி படித்து பெற்ற பட்டம் என்பது ‘பாரிஸ்டர்’ மட்டும்தான்.

அம்பேத்கருக்கு வருவோம்…

காந்தியுடன் ஒப்பிட வறுமையான குடும்ப பின்னணி உள்ளவர் அம்பேத்கர். வறுமையுடன் அக்காலத்தில் நிலவிய சாதி கொடுமையும் அம்பேத்கர் கல்வி கற்பதற்கு எதிராக இருந்தது. அம்பேத்கர் படித்த பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடக்கூடாது. கேள்விகள் கேட்பதும் கூடாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். பள்ளியில் அமருவதற்கு ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1900 ஆண்டில் சாதாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார் அம்பேத்கர். தொடர்ந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். பள்ளிக் கல்விக்குப் பின்னர் பரோடா மன்னர் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. அதற்கு இடையே கல்லூரி படிப்பை முடித்த அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வியையும் பரோடா மன்னர் உதவியுடன் முடித்தார். இதற்காக, 1913ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அம்பேத்கருக்கு உண்டு.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்த அம்பேத்கர் அங்கு 1915-ல் ‘பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையையும் இக்காலகட்டத்தில் எழுதினார்.

பின்னர், ‘இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் ‘இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி’ என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இது இன்றும் இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப் பார்க்கும் உயர் நூலாக உள்ளது.

மேலும், அம்பேத்கர் ‘பிரிட்டீஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டமும் பெற்றுள்ளார். ‘ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-இல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். இவற்றின் அடிப்படையில் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியை அம்பேத்கர் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு படித்திருந்தும் படிப்பாளி என்றால் உதாரணமாக அம்பேத்கர் பெயரை குறிப்பிட தடுப்பது எது என்பதுதான், இந்த விவகாரத்தில் கமலுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கேள்வியாக உள்ளது.

அடுத்த வாரம் கமல் இதற்கு பதில் சொல்வாரா?

காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...