No menu items!

ஓய்ந்தது பட்டாசு சத்தம்: அதிகரித்தது காற்று மாசு!

ஓய்ந்தது பட்டாசு சத்தம்: அதிகரித்தது காற்று மாசு!

தீபாவளி பட்டாசுகளால் டெல்லியில் வரலாறு காணாத வகையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. டில்லியுடன் ஒப்பிடும்போதும் சென்னையில் காற்று மாசு குறைவுதான்; ஆனால், சென்னையில் காற்றின் தரமும் மோசம் அல்லது மிக மோசம் என்ற நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி காற்று மாசு அதிகரிப்பது என்ன பிரச்சினைகளை உருவாக்கும்? எப்படி சமாளிப்பது?

அபாய கட்டத்தை தாண்டிய டில்லி

இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெருநகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு, அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் 7 நாட்கள் பின்பாகவும் ஒலி மாசும் காற்றுத் தர மாசும் கணிக்கப்படுகிறது. தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இந்த முடிவுகளை தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில், டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது, தெரியவந்துள்ளது. இதனால், காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிறப்பு பிரிவை தொடங்க அம்மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதாலும், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாகவும், டெல்லியில் ஏற்கெனவே காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசுகள் வெடிக்கவும் விற்பனை செய்யவும் சேமித்து வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் காற்று மாசு மேலும் அதிகரித்து, அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையும் மிக மோசம்

சென்னையில் தீபாவளி நாளான நவம்பர் 12ஆம் தேதியன்று காலை ஆறு மணி முதல் அடுத்த நாள் காலை ஆறு மணிவரை நகரின் ஏழு இடங்களில் காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) கணக்கிடப்பட்டது. இதில் பெசன்ட் நகர் 207, தி.நகர் 306, நுங்கம்பாக்கம் 364, திருவல்லிக்கேணி 253, சவுகார்பேட்டை 336, வளசரவாக்கம் 365, திருவொற்றியூர் 227 என காற்றின் தரக்குறியீடு தீபாவளிக்கு மறுநாள் பதிவாகியுள்ளது. அதிகமாக வளசரவாக்கத்தில் 365, குறைந்த அளவாக பெசன்ட் நகரில் 207 பதிவாகி உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு சென்னையில் 40% காற்று மாசு குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் சென்ற ஆண்டைவிட பாதி அளவுக்குக் குறைந்திருந்தது. சௌகார்பேட்டையில் கடந்த ஆண்டு காற்று மாசு 786 என இருந்த நிலையில், இந்த ஆண்டு 336 ஆகக் குறைந்திருந்தது. திருவல்லிக்கேணியில் 503 இருந்தது, தற்போது 253 ஆகக் குறைந்திருக்கிறது.

“காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரப்பதத்தின் காரணமாகவும் காற்றின் மிகக் குறைந்த வேகத்தாலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகை வான்வெளியில் கலைவதற்கான சூழ்நிலை அமையவில்லை. இது சென்னையில் கடந்த ஆண்டைவிட காற்று மாசு குறைவாக பதிவாக காரணம்” என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் நிலைமை மேம்பட்டிருந்தாலும், தேசிய அளவில் அனுமதிக்கப்பட்ட மாசுபாட்டு அளவைவிட சென்னை காற்றில் மாசு மிகமிக அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தேசியத் தரக் குறியீடுகள் AQI 50க்குள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. தற்போது சென்னையில் நிலவிய அளவுகள், மோசம் அல்லது மிக மோசம் என்ற வகைப்பாட்டிற்குள்ளேயே வருகின்றன.

காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை விட்டம் கொண்ட துகள்கள் ‘பிஎம் 10’ என்று அழைக்கப்படுகின்றன. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுகொண்ட துகள்கள் ‘பிஎம் 2.5’ என்று அழைக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைப்படி காற்றில் அனுமதிக்கப்பட்ட ‘பிஎம் 10’ துகள்கள் அளவு 100 மைக்ரோகிராம், ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் அளவு 60 மைக்ரோகிராம் இருக்கலாம்.

காற்றில் துகள்கள் அதிகமாக இருந்தால் என்ன நடக்கும்?

காற்றை நாம் சுவாசிக்கும்போது அதிலுள்ள ‘பிஎம் 2.5’ நுண் துகள்கள் உள்ளிழுக்கப்பட்டு நுரையீரல் திசுக்களில் ஆழமாக செல்கிறது. இரத்த ஓட்டத்திலும் நுழைகிறது. இது ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாச நோய்கள் உட்படப் பல உடல்நல பிரச்சினைகள் உருவாக காரணமாகும். ‘காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் (பிஎம் 2.5) ஒவ்வொரு ஆண்டும் அதிகமான மக்களைக் கொல்கின்றன,’ என்கிறது உலகளவில் காற்று மாசை அளவிடும் IQAir அமைப்பு.

சென்னையில் காற்று மாசால் மட்டும் கடந்த 2020ஆம் ஆண்டு 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தியா முழுவதும் அதிக இறப்பை ஏற்படுத்தும் காரணங்களில் ஐந்தாவது இடத்தை காற்று மாசு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 – 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது.

பட்டாசு காரணமாக சென்னையில் ஏற்பட்ட இந்த மாசுபாடு, கடல்காற்றின் வருகையால் ஒன்றிரண்டு நாட்களில் நீங்கிவிடும். ஆனாலும், இந்த ஒன்றிரண்டு நாட்களுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

“எந்த வித நோயும் இல்லாத ஆரோக்கியமானவர்களுக்கு இந்த மாசுபாடு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. என்றாலும், அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்கு இவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போதும் முகக் கவசம் அணிந்து செல்வது நல்லது.

ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வெளியே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மீறிச் செல்லும்போது என்95 முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...