No menu items!

செமிஃபைனல் சவால் – இந்தியா இதை செய்ய வேண்டும்!

செமிஃபைனல் சவால் – இந்தியா இதை செய்ய வேண்டும்!

இன்னும் இரண்டே போட்டிகள்தான்… கடந்த 9 போட்டிகளிலும் ஜெயித்ததைப்போல் இதிலும் ஜெயித்தால் உலக்க் கோப்பை நம் கையில். அந்த இரண்டு போட்டிகளில் முதல் போட்டியான அரை இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஒரு சிறு முன்னோட்ட்த்தைப் பார்ப்போம்

பிட்ச் எப்படி?

மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் (ஆடுகளம்) பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த பிட்சில் கடந்த 10 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் எடுத்த சராசரி ஸ்கோர் 318. இதிலிருந்தே இந்த பிட்சில் பேட்ச்மேன்கள் வாணவேடிக்கை காட்டுவார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒருசில பிட்ச்கள் முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கும், சில பிட்ச்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்பவர்களுக்கும் சாதகமாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால் வான்கடே மைதானத்தில்  இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள்தான் அதிக போட்டிகளில் (60 சதவீதம்) வென்றுள்ளன. அதனால் டாஸில் வெற்றி பெறும் அணி சேஸிங்கை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் மொத்தமுள்ள 100 ஓவர்களுக்கும் பிட்சின் தன்மை மாறாது என்பதால், டாசில் தோற்றால் ஆட்டமே போச்சு என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. 

வான்கடே மைதான ஆடுகளத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இது வேகப்பந்து வீச்ச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பது. இங்கு இதுவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 83 சதவீத விக்கெட்களை இங்கு எடுத்துள்ளனர். அதனால் இந்தியா நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களையே அதிகம் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

மழை வருமா?

வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் இப்போது பெய்யும் மழை மும்பையில் பெய்யுமா? இதனால் ஆட்டம் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. வானிலை ஆய்வாளர்களின் கணிப்பின்படி அங்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் மழையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. வெப்ப நிலை சராசரியாக 28 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீர்ர்கள்:

இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி இதுவரை எந்த தனிப்பட்ட வீரரையும் நம்பியில்லை. பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலி (594 ரன்கள்), ரோஹித் சர்மா (503 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (421 ரன்கள்) ஆகிய மூவரும் இந்த தொடரில் ரன்களைக் குவித்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியில் ஆடி வெற்றிக்கு உதவியிருக்கிறார்கள். இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கைப் போலவே பந்துவீச்சிலும் இந்தியா தனிப்பட்டு யாரையும் நம்பி இருக்கவில்லை. முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் என அனைவரின் கூட்டு முயற்சியாலேயே இந்தியா ஒரு போட்டியில்கூட தோற்காமல் அரை இறுதியை எட்டியிருக்கிறது.

அதேநேரத்தில் நியூஸிலாந்து அணிக்கு பேட்டிங்கில் முக்கிய பலமாக ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். இந்தியரான அவர், இந்த உலகக் கோப்பையில் நியூஸிலாந்தின் பேட்ஸ்மேனாக வெளுத்து வாங்குகிறார். இந்த தொடரில் மொத்தம் 565 ரன்களைக்  குவித்துள்ள ரச்சினின் சராசரி ரன்கள் 70.63. அவருக்கு அடுத்ததாக மிட்செல் 418 ரன்களைக் குவித்துள்ளார். இவர்களைப் போல் இதுவரை ரன்களைக் குவிக்காவிட்டாலும் இந்திய பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.

அதிகம் வென்றது யார்:

இந்தியாவும் நியூஸிலாந்தும் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளன. இதில் இந்தியா 59  முறையும், நியூஸிலாந்து அணி 50 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இந்த இரு அணிகளும் மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் அனைத்திலுமே இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த முறையும் நாம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருந்தாலும், கடந்த உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்றதால் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த சவால்களையெல்லாம் எதிர் கொள்ளும் வகையில் இந்திய அணி ஆடவேண்டும். மிக முக்கியமாக இது அரை இறுதிப் போட்டி என்ற பிரஷர் இல்லாமல், சாதாரண போட்டி என்று நினைத்துக்கொண்டு ஆடவேண்டும். அப்போதுதான் சுதந்திரமாக ஆட முடியும். அடுத்ததாக சிராஜுக்கு முன், அதிக விக்கெட்களை எடுத்த ஷமியை பும்ராவுடன் சேர்ந்து முதலில் பந்துவீச வைக்கவேண்டும். விராட் கோலி அல்லது கில்லை ஒருபுறம் நிதானமாக ஆடவைத்து மற்றவர்கள் அதிரடி காட்ட வேண்டும். இதன்படி   இந்திய அணி செயல்பட்டால் நிச்சயம் இந்தியாவுக்குதான் வெற்றி.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...