No menu items!

இந்திய அணியில் அஸ்வின் – நல்லதா கெட்டதா?

இந்திய அணியில் அஸ்வின் – நல்லதா கெட்டதா?

தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணியில் தமிழக வீர்ர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த அக்ஷர் படேல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக அஸ்வினுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் உலகக் கோப்பைக்கான அணியில் தமிழர்களுக்கு இடமில்லையா என்ற ஏக்கம் தீர்ந்துள்ளது.

அஸ்வினை சேர்த்ததால் தமிழர்களின் ஏக்கம் தீர்ந்தது சரி… ஆனால் அஸ்வினை உலகக் கோப்பைக்கான அணியில் சேர்த்திருப்பது அணிக்கு பலமா பலவீனமா என்பதைப் பார்ப்போம்.

2011-ம் ஆண்டு, உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அஸ்வினும் இடம்பெற்றிருந்தார். இத்தொடரில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாலும், யுவராஜ் சிங், சேவக், சச்சின், ரெய்னா ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் சிறந்தவர்களாக இருந்ததாலும், 2 போட்டிகளில் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த 2 போட்டிகளிலும் சேர்த்து அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த்தாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இருந்தார். இந்த தொடரில் அவர் மொத்தம் 13 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்த உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அவரது இடத்தை குல்தீப் யாதவும், சாஹலும் தட்டிப் பறித்தனர். 2018-ம் ஆண்டில் இருந்து அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்க, டெஸ்ட் போட்டிக்கான வீர்ராக அஸ்வின் சுருங்கிப் போனார். இதனால் கடந்த உலகக் கோப்பை தொடரில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உலக்க் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்திருக்கிறார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அணியில் அஸ்வின் இல்லாத சூழலில், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்‌ஷர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதில் சிறப்பாக பந்துவீசி 2 போட்டிகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியதால் இப்போது உலகக் கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதை நினைத்து நாம் மகிழும் அதே நேரத்தில் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அவ்வளவாக ஆடாத அஸ்வினுக்கு இப்போது திடீரென்று இடம் அளிப்பதா என்ற கேள்வியும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. நவீனமாக மாறிய ஒருநாள் கிரிக்கெட்டில் டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு ஈடு கொடுக்க முடியுமா என்பது அவர்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆனால் இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ”94 டெஸ்ட் போட்டிகளிலும், 115 ஒருநாள் போட்டிகளிலும் ஆடிய அனுபவம் கொண்டவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அதனால் அவர் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராகவே இருப்பார். மேலும் ஒருநாள் போட்டிகளில் ஆடாவிட்டாலும், ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற போட்டிகளில் அவர் தொடர்ந்து ஆடிவருகிறார். அதனால் அவர் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை அளிப்பார்” என்று கூறியுள்ளார்.

மேலும் அஸ்வினை இந்திய அணியில் சேர்ப்பதால் 3 விதங்களில் இந்தியாவுக்கு பலம் கிடைக்கும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

முதலாவதாக உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடக்கிறது. இப்போதைய அணியில் உள்ள வீர்ர்களிலேயே, இந்திய பிட்ச்களில் அதிக ஆட்டங்களில் ஆடி, அதிக விக்கெட்களை எடுத்த வீர்ராக அஸ்வின் இருக்கிறார். நம் நாட்டில் உள்ள அத்தனை ஆடுகளங்களும் அஸ்வினுக்கு அத்துப்படி. அதனால் மற்ற வீர்ர்களுக்கும் அவரது அனுபவம் கைகொடுக்கும்.

இரண்டாவதாக இந்திய அணியைப் பொறுத்தவரை ஓரளவு பேட்டிங்கும் செய்யக்கூடிய பந்துவீச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் பல போட்டிகளில் இந்தியாவை சரிவில் இருந்து காத்த கடைநிலை பேட்ஸ்மேனான அஸ்வின் அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு போட்டியில் வெல்ல, எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய வீர்ராக அஸ்வின் இருக்கிறார்.

மூன்றாவதாக கிரிக்கெட்டில் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய வீர்ர் என்று பெயர் பெற்றவர் அஸ்வின். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக ஆடும்போது அவரது யுக்திகள் நிச்சயம் கைகொடுக்கும் என்றும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்த உலக்க் கோப்பையை இந்தியா வென்றால், 2 உலகக் கோப்பைகளை வென்ற வீர்ர் என்ற பெருமை அஸ்வினுக்கு கிடைக்கும். இப்படி தனக்கும், அணிக்கும் பெருமை சேர்க்கும் விஷயத்துக்காக அஸ்வின் எப்படி செயலாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...