No menu items!

அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்

அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்

மேனா. உலகநாதன்

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத புவி ஈர்ப்பு விசையாக, இன்றளவும் மக்களைச் சுண்டி இழுத்துச் சுழன்று வரும் மூன்றெழுத்து மந்திரச் சொல் ‘அண்ணா’.

1969 பிப்ரவரி 3 அவர் மறைந்த போது, அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், சுமார் ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினர்.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒரு மாநில முதலமைச்சரின் மறைவுக்கு இத்தனை பெரிய மக்கள் கூட்டமா என உலகமே வியந்தது. அண்ணனை வழியனுப்ப வந்த அந்தக் கண்ணீர்க் கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாகவும் இடம் பெற்றது.

காவிபடிந்த பற்கள்… அன்றாட சவரத்தை மறந்த முகம்… நிறமோ மங்கலானது… உயரமோ குட்டை… இப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதர் மீது, மக்களுக்கு இத்தனை பெரிய ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்…?

தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான் இது.

பகுத்தறிவு, சமூகநீதி பாதையில் அவர் மேற்கொண்ட பயணம், எழுச்சியுடன் தொடங்கிய அரசியல் இயக்கம், அசாத்தியமான அவரது பேச்சாற்றல், அனைவரையும் ஈர்த்த அவரது எழுத்தாற்றல் என அண்ணாவின் வசீகரிப்புக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பட்டுடை மிளிரும் பண்ணையார்களும் கிட்ட நெருங்க முடியாத மிட்டா மிராசுகளும் அரசியல் அரங்கில் ஆடம்பரமாக வலம் வந்து கொண்டிருந்த காலத்தில், தெருவோர தேநீர்க் கடைகளில் அன்றாடம் காண நேரும் சாமானிய மனிதரின் தோற்றத்துடன் அந்த உலகத்திற்குள் நுழைந்தார் அண்ணா.

குரலற்றவர்களின் குரலாக கணீரென ஒலித்தார். கண்ணீர் ததும்பும் அவர்களது வாழ்வை, வலிகளை எழுத்திலும் பேச்சிலும் கலை நேர்த்தி குறையாமல் வெளிப்படுத்தினார்.

புராண, இதிகாசங்களுக்குள் போதையேறிக் கிடந்த மொழியின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிவித்து, புழுதி மனிதர்களின் பக்கம் இழுத்து வந்தார் அண்ணா. எளிய மனிதர்களின் வதை மிகு வாழ்வை, ரத்தமும் சதையுமாக, தனது வீரியம் மிக்க மொழியால் தீராமல் பேசினார்.

உலகில் எங்குமில்லாத வகையில், அண்ணன் – தம்பி உறவு கூறி அழைத்து, தனது அரசியலை வளர்த்தெடுத்தார்.

ஆனால், இவை மட்டுமே அவர் மீதான மக்களின் ஈர்ப்புக்கும் அன்புக்குமான காரணங்கள் எனச் சுருக்கிவிட முடியாது.

அண்ணா மீதான வசீகரம் என்பது, பகுத்தறிவு, மொழி உரிமை, இன உரிமை, சமூகநீதி என வெகுமக்களால் எளிதில் ஏற்க முடியாது இறுகிய தத்துவங்களை, வெகுமக்கள் அரசியலாக மாற்றிய வேதிவினை போன்ற அவரது அசாத்தியமான அரசியல் லாவகமே ஆகும்.

காலனியாதிக்கத்தின் மறுவடிவாக உருவாகி வந்த புதிய மேற்குலக ஆதிக்க சூழலின் பின்னணியில், எளிய மக்களின் எந்த ஓர் உரிமைப் போராட்டமும் பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிக்கப்பட்டு, சிதைக்கப்படும் ஏகாதிபத்திய வியூகம் வேரூன்றத் தொடங்கிய காலம் அது.

அதன் அதிர்வலைகள் இந்தியாவிலும் எழத்தவறவில்லை. விளைவுதான், 1963ஆம் ஆண்டு பிரிவினை கோரும் இயக்கங்களைத் தடை செய்வதற்கான மசோதாவை அப்போதைய நேரு தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு எதிராக அண்ணா கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

ஆனாலும் என்ன… ஆதிக்க சக்திகளின் திட்டம்தானே இறுதியில் வெல்லும்… அதன் படி அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் அரசு இத்தகைய மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் காரணம்…?

திமுக தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னர், 1957ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டது. அத்தேர்தலில் திமுக 15 இடங்களில் வென்றது. 1962 தேர்தலில் திமுகவை பிரிவினை பேசும் கட்சி என ஆளும் கட்சி விமர்சித்து பிரச்சாரம் செய்தது. மாநில மற்றும் இன உரிமை பேசும் திமுகவை தலைதூக்க விடக் கூடாது என்பதே அப்போதைய காங்கிரசாரின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், தமிழக மக்களோ திமுகவை முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற வைத்தனர். அந்தத் தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது.

திமுக பேசிய திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறியாக அப்போதைய ஆட்சியாளர்களால் இது பார்க்கப்பட்டது.

மக்கள் மன்றத்தில் திமுகவின் இன உரிமைக் குரலுக்கு முகம் கொடுத்து முறியடிக்க முடியாத நிலையில்தான், அக்கட்சியை பிரிவினை வாத இயக்கமாக அடையாளம் காட்டி, அழித்தொழிக்கும் வேலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மூன்றாம் உலகில், எளிய இனங்களின் உரிமைக் குரலுக்கு தீவிரவாத முத்திரை குத்தி, அவர்களை அழித்தொழிக்கும் தந்திரம், அரசியலாக உருவெடுக்கத் தொடங்கி இருப்பதை அண்ணா மிகச் சரியாகவே அடையாளம் கண்டார்.

எக்காரணம் கொண்டும் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட மாட்டோம் என எதிர்த்து நின்று இருக்கும் களத்தை இழப்பதா… அல்லது, சற்றே விவேகத்துடன், இன உரிமைக்கான கொள்கையை நீரு பூத்த நெருப்பைப் போல் உள்ளடக்கிக் கொண்டு, காலத்திற்கேற்ற தகவமைப்புடன் களத்தில் நிற்பதா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி திமுக முன் எழுந்து நின்றது.

எந்த இயக்கத்திற்கும் ஏற்பட்டிராத புதிய நெருக்கடி. கட்சியின் மூத்த தலைவர்கள், அடுத்தடுத்த தம்பிகள் என அனைவரையும் அழைத்து அண்ணா விவாதித்தார். இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையை எடுத்துரைத்தார். இறுதியில், 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திமுகவின் திராவிட நாடு கோரும் விதி திருத்தப்பட்டது.

‘தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள், இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது’ என்றவாறு கட்சியின் அந்த 2ஆவது விதி திருத்தப்பட்டது.

திமுகவின் விதி இவ்வாறு திருத்தப்படாமல் போயிருந்தால், பின்னாளில் அந்த இயக்கமே இல்லாமல் போயிருக்கும். இந்தியாவில் இன்று வரை தொடரும் கூட்டாட்சி அமைப்பிற்குள் ஊடுருவி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி உரிமைகளை பெற்றிருப்பதும் கூட சாத்தியப் பட்டிருக்காது.

அதுமட்டுமன்று… அண்ணாவின் அரசியல் தகவமைப்பு தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் கிடைக்காமல் போயிருந்தால், பீகார், சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில், எளிய மக்களுக்கான உரிமைப் போராட்டங்கள் தீவிரவாதமாக உருமாற்றப்பட்ட இன்றைய அவலம், இங்கேயும் அரங்கேறி இருக்கக் கூடும்.

அண்ணாவின் அறிவார் அரசியலால், ஆதிக்க சக்திகளின் அழித்தொழிக்கும் தந்திரத்தில் இருந்து திராவிட இயக்கம் தப்பியது. தமிழர்களின் உரிமைக்காக போராடும் இயக்கமாக அது தன் பயணத்தையும் தொடர்ந்து வருகின்றது.

வல்லாதிக்க சக்திகளால் வழிநடத்தப்படும் மூன்றாமுலக சூழலில், எளிய மக்கள் தங்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினால், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இனத்தையே காணாமல் அடித்துவிடுவர் எனும் அபாயத்தையும் அண்ணா, மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருந்தார்.

அதனால் தான், ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தனது இனத்தை, “கத்தியைத் தீட்டாதே தம்பி, புத்தியைத் தீட்டு” என இதமாக வழிநடத்த அவரால் இயன்றது.

உலகைத் தொழில் மயமாக்கிய நவீன யுகத்தின் அரசியலை மட்டுமின்றி, அதன் மறுதலிப்பாக கிளர்ந்தெழுந்து வரும், தேசிய இனங்கள் தங்களது அடையாளங்களைக் காத்துக் கொள்ளப் போராடும் தற்போதைய அரசியலுக்கான அணுகுமுறைகளையும் கூட, அண்ணாவின் இத்தகைய தகவமைப்புத் தந்திரத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

பெரியார் என்ற பெரு நவீனத்தின் தத்துவப் பிள்ளையான அண்ணா, அரசியலின் அதி நவீனத்திற்கான அரிச் சுவடியாக நமக்குக் கிடைத்திருக்கிறார்.

திராவிட நாடு கோரிக்கையை ஏன் தற்காலிகமாக கைவிட நேர்ந்தது என்பதற்கு அண்ணா அளித்துள்ள விளக்கத்தின் (இதுதொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவாக விளக்கமளித்துள்ளார்) இந்தச் சிறு பகுதி மூலம், அரசியலில் காலத்திற்கேற்ப பதுங்கிப் பாயும் தகவமைப்புத் தந்திரம் அவசியமானது என்பதை அவர் அறிவுறுத்துகிறார்.

அண்ணா கூறுகிறார்…

“எழக் கூடிய எல்லா வகையான எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, கலந்து பேசிப் பேசிப் பேசி, கடைசியாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்த வழியில் பணியாற்றி வந்தால், திராவிட நாடு தனிநாடு எனும் திட்டத்தின் மூலமாக நாம் அடைய வேண்டும் என்று கருதிடும் பல நலன்களை, நாம் பெற்றிட வழி கிடைக்கும் என்று மனதார நம்புகிறேன். நல்லாட்சி அமைந்திட வழி கிடைக்கும் என நம்புகிறேன். உதவிக்கு யாரும் கிடைக்காத நிலையில், வண்டி உளைச் சேற்றில் இறங்கினால், பயணம் அடியோடு தடைப்பட்டு விடும். பாதையைப் பார்க்கிறேன். பயங்கர உளை தெரிகிறது. வண்டியை வேறு பக்கம் திருப்புகிறேன் – எனக்கு இன்னல் ஏற்படும் என்ற எண்ணத்தால் அல்ல. வண்டியில் உள்ளவை பாழ்படக் கூடாது என்பதற்காக. இந்த என் மனநிலையின் தூய்மையினை உணருபவர்கள், பயணத்தில் என்னுடன் வருவார்கள் என நம்புகிறேன். நல்லாட்சி அமைத்திடும் பணியிலே நாம் ஈடுபடலாம் வாரீர் என்று அழைக்கிறேன்.”

அண்ணாவைப் போற்றுவது மட்டும் போதாது, அவரை புரிந்துகொள்ளவும் வேண்டும்.


கட்டுரையாளர் மேனா. உலகநாதன், மூத்த பத்திரிகையாளர், திராவிட இயக்க பற்றாளர்.

1 COMMENT

  1. அண்ணா நம் உணர்வான உயிரோடு கலந்துவிட்ட பேராற்றல் அதனால்தான் என்றும் வாழும் தன்மை பெற்றார். அண்ணன் தம்பி உறவின் தன்மையை இன்னும்புரிந்துகொள்ள இயலாத மக்களும் இருக்கும் இவ்வுகில் சூக்குமத்தை புரிந்துகொண்டு நம்இன மக்களின் உள்ளக்கிடக்கையான வேட்கையினை அவர்கருத்தாக வெளிப்படுத்திய தீர்க்கதரிசி.
    சிக்கனமான வார்த்தை பிரயோகத்தில் மேனா. உலகநாதன் பெருங்கடலான செய்தியை சுருங்கச்சொல்லியுள்ளார்.
    வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...