No menu items!

ஈரோடு கிழக்கு – பாஜக கணக்கு என்ன? – மிஸ் ரகசியா

ஈரோடு கிழக்கு – பாஜக கணக்கு என்ன? – மிஸ் ரகசியா

“ஈரோடு கிழக்கு தேர்தல் வந்தாலும் வந்தது. நிக்கக்கூட நேரம் கிடைக்கல. காலையிலேயே ஓபிஎஸ், ஈபிஎஸை அண்ணாமலை சந்திக்கப் போறாருன்னு நியூஸ். அது முடிஞ்சு திரும்பறதுக்குள்ள அண்ணாமலை பிரஸ் மீட்னு ஒரே டென்ஷன்” என்று அலுத்துக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்த ரகசியாவுக்கு நுங்கு சர்பத் கொடுத்து கூல் செய்தோம்.

“ இபிஎஸ், ஓபிஎஸ் வீட்டுக்கு அண்ணாமலையும் சிடி ரவியும் காலையிலேயே போயிருக்காங்க.. ரெண்டு அணிகளும் சேர்ந்து போட்டியிட்டாதான் ஜெயிக்க முடியும்னு ப்ரஸ் மீட்ல சொல்லியிருக்காங்க என்ன நடக்குது பாஜகவுல?”

”பாஜக இப்போ குழப்பத்துல இருக்கு. அதிமுகவுல எந்த குரூப்பை சப்போர்ட் பண்றதுன்ற குழப்பம் தீர்ந்த பாடில்லை. எடப்பாடியை சப்போர்ட் பண்ணா ஓபிஎஸ் கோவிச்சுப்பார், ஓபிஎஸ்ஸையும் கழற்றிவிட முடியாது. நடுவுல பாஜக நிக்குது”

“டெல்லியிலருந்து சொல்லியனுப்புனதை சொல்றதுக்குதான் அவங்க வீட்டுக்கு போனாங்கனு சொன்னாங்க.. டெல்லில என்ன சொல்லி அனுப்புனாங்களாம்?”

“இரண்டு பேரும் ஒண்ணா இருந்தாதான் பாஜகவோட சப்போர்ட் கிடைக்கும் இல்லாட்டி யாரையும் ஆதரிக்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்க”

”ஒபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் என்ன சொன்னாங்களாம்?”

“எடப்பாடி பழனிசாமி அதுக்கு வாய்ப்பே இல்லைனு சொல்லியிருக்கார். நாங்கதான் அதிமுக. அதுல ஒபிஎஸ் இல்லைனு சொல்லியிருக்கிறார். டெல்லில பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சொல்லி அனுப்புனாருனும் சொல்லியிருக்காங்க. ஆனா எடப்பாடி கண்டுக்கலையாம். அது சரியா வராதுனு சொல்லியிருக்கிறார். ஒபிஎஸ்க்கு சும்மா ஒரு பொறுப்பு கொடுத்துட்டு நீங்களே கட்சியை கண்ட்ரோல் எடுத்துக்கங்கனும் கடைசியா சொல்லியிருக்காங்க. அதுவும் முடியாதுனு சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.”

“இவ்வளவு உறுதியா இருக்கிறாரா?”

“ஆமாம். அவருக்குத் தெரியும் இப்போ விட்டுட்டா அப்புறம் பிடிக்க முடியாதுனு”

“ஒபிஎஸ் என்ன சொன்னாராம்?”

“அவர் எல்லாதுக்கும் தயார்னு சொல்லியிருக்கார். இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாயோட இணைஞ்சு பணியாற்றுவேன்னு சொல்லியிருக்கிறார். பாஜக தலைமை என்ன சொல்லுதோ அதன்படி நடக்கிறேன், இதை சுமுகமா முடிச்சுக் கொடுங்கனு சொல்லியிருக்கிறார்”

“ஐயோ பாவம்…”

“கட்சியையும் இரட்டை இலையையும் காப்பாத்த நான் எல்லா முயற்சியையும் எடுக்கிறேன்ற பிம்பத்தை தொண்டர்களுக்கு சொல்லாமல் சொல்றார். நேற்று அவர் கொடுத்த பேட்டியிலகூட இரட்டை இலை சின்னத்துக்காக பி ஃபார்மில்கூட கையெழுத்துப் போட தயாரா இருக்கேன்னு சொன்னது அதனால்தான். இரட்டை இலை சின்னம் கிடைக்காட்டி அதுக்கு காரணம் எடப்பாடிதாங்கிற என்ற பிம்பத்தை உருவாக்க அவர் முயல்கிறார்”

”சரி, இப்போது பாஜக என்ன செய்யப் போகுது?”

“எடப்பாடியின் நிலைப்பாடு பாஜகவுக்கு தெளிவா தெரிஞ்சுடுச்சு. இன்று பொன்னையன் வேறு பாஜகவை விமர்சித்து பேசியிருக்கிறார். பாஜககிட்ட எச்சரிக்கையுடன் இருக்கணும்னு சொன்னதையும் பாஜக கவனிச்சிருக்கு. இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை பாஜக எடுக்கப்போகிறது. ஒன்றுபட்ட அதிமுகதான் எங்கள் விருப்பம்னு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். இடைத் தேர்தல் ஆதரவு நிலைப்பாடும் அதனையொட்டிதான் இருக்கும்னு பாஜகவில் சொல்கிறார்கள்”
”அண்ணாமலைதானே வழக்கமா பேசுவார். ஆனா இந்த முறை சிடி ரவி செய்தியாளர்கள்கிட்ட பேசியிருக்கிறாரே?”

“சிடி.ரவி பேசினால்தான் அது டெல்லி பாஜகவின் கருத்தாக பார்க்கப்படும் என்று பாஜக நினைக்கிறது. அது மட்டுமில்லாமல் அதிமுக விஷயத்தில் அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என்பது மேலிட எண்ணம். ஈரோடு கிழக்கு தொகுதியில அதிமுக சார்பா தேர்தல் பணிமனை திறப்பு விழாவுல வச்சிருந்த பேனர்ல பாஜக தலைவர்களோட படம் இல்லை, கூட்டணி பேரை மாத்தி எழுதுனாங்க…இதெல்லாம் பாஜகவுக்கு எடப்பாடி கொடுத்த எச்சரிக்கை. இந்த அளவுக்கு விட்டுருக்க கூடாதுனு பாஜக மேலிடம் நினைக்குது. இதெல்லாம் அண்ணாமலை மீது அதிருப்தியை கிளப்பியிருக்கு. எடப்பாடி தரப்பும் டெல்லில அண்ணாமலை மீது புகார்கள் சொல்லியிருக்கிறதா செய்திகள் வருது”

“இரட்டை இலை விவகாரம் என்ன ஆச்சு?”

“இரட்டை இலை சின்னம் பற்றி யாரும் இதுவரை பிரச்சினை எழுப்பலைன்னு உச்ச நீதிமன்றத்துல தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கு. அதோட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்துல இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கிறதுன்னு தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்னும் தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கு. எடப்பாடி தரப்பு இதை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்க நினைக்குது. உள்ளூர் தேர்தல் அதிகாரியோட பின்புலத்தைப் பற்றி விசாரிச்சு, அவரை எப்படி தங்களோட வழிக்கு கொண்டுவரலாம்னு இப்பவே திட்டம் போடத் தொடங்கிட்டாங்களாம். செங்கோட்டையனுக்கு உள்ளூர் அதிகாரிகள் ரொம்ப வேண்டப்பட்டவர்கள்ங்கிறதால அவங்க மூலமா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கிறாங்க. உளவுத் துறை மூலம் இந்த விஷயம் ஆளுங்கட்சிக்கு தெரியவர, அவங்களும் கண்கொத்திப் பாம்பா இதையெல்லாம் கவனிச்சுட்டு இருக்காங்க.”

“இரட்டை இலை சின்னம் கிடைக்கலனா எடப்பாடி அணி என்ன செய்யுமாம்?”

“சின்னம் கிடைக்கறது சந்தேகம்னு எடப்பாடி அணிக்கு முதல்ல இருந்தே தெரியும். அதனால அந்த சின்னம் கிடைக்கலனா எந்த சின்னத்தை மாற்று சின்னமா கேட்டு வாங்கலாம்னு அவங்க ஏற்கெனவே முடிவு செஞ்சு வச்சிட்டதா சொல்றாங்க. இடைத்தேர்தலை எப்படி அணுகணுங்கிற விஷயம் தெரிஞ்ச பல மூத்த தலைவர்கள் அதிமுகவுல இருக்காங்க. வெளியூர்கள்ல இருக்கற ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் யார்னு லிஸ்ட் எடுத்து அவங்களை வாக்களிக்க ஊருக்கு கொண்டுவர்ற வேலையை இப்பவே அவங்க தொடங்கி இருக்காங்க. ஆளுங்கட்சிக்கு இணையா அவங்களோட பிரச்சாரம் நடந்துட்டு இருக்கு. அதே நேரத்துல இரட்டை இலை சின்னம் கிடைக்காம போனா, அதுக்கு காரணம் பாஜகதான்னு சொல்லி மாநிலம் முழுக்க பல இடங்கள்ல அவங்களுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் நடத்தவும் அதிமுகவுல ஒரு பிரிவினர் தயாரா இருக்காங்களாம்.”

“அப்ப சின்னம் கிடைக்காதுங்கிறதுல அவங்க உறுதியா இருக்காங்கன்னு சொல்லு.”

“எடப்பாடியோட சட்ட ஆலோசகர்கள் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செஞ்ச பிரமாண பத்திரம் தங்களுக்கு ஆதரவாத்தான் இருக்குன்னு நினைக்கறாங்க. எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும்னு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் சொல்லி இருக்கு. அந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்னும் தடை விதிக்கல. தன்னை கட்சியை விட்டு நீக்கினதுக்கு எதிரா ஓபிஎஸ் இதுவரைக்கும் தடை வாங்கலை. ஜூலை 11 பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏத்துக்கிட்டு இருக்கு. 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவா தேர்தல் ஆணையத்துல பிரமாண பத்திரம் தாக்கல் செஞ்சிருக்காங்க. தேர்தல் ஆணையம் இதுவரைக்கும் அதை நிராகரிக்கலை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பி ஃபார்மில் கையெழுத்து போட்டால் அதை ஏத்துக்க கூடாதுன்னு தேர்தல் அதிகாரிகிட்ட எடப்பாடி தரப்பு மனு கொடுக்கப் போகுது. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட ஓபிஎஸ் தரப்பு இடைத் தேர்தலை நிறுத்த கோர்ட்டுல கேஸ் போடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கு”

“எதிரணி இப்படி இருக்கிறதுனால திமுக -காங்கிரஸ் கூட்டணி உற்சாகமா இருக்குமே?”

“காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்திச்சு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி இருக்கார். அப்ப, ‘ஏற்கனவே நான் மகனை இழந்த சோகத்துல இருக்கேன். இப்ப என்னை தேர்தலில் நீங்கள் நிறுத்திட்டீங்க. இப்போதைக்கு எங்கிட்ட தேர்தல் செலவுக்கு பணம் கிடையாது. ஏதாவது சொத்தை வித்துத்தான் பணம் திரட்டணும். இப்போதைக்கு பணம் என் கைக்கு வர டைம் ஆகும்’ன்னு சொல்லி இருக்கார். அப்ப செந்தில் பாலாஜி தேர்தல் செலவை நாங்கள் பார்த்துக்கறோம். நீங்கள் ஓட்டு கேட்கும் வேலையை மட்டும் பாருங்க’ன்னு சொன்னாராம். செந்தில் பாலாஜி இப்படி சொன்னதும் இளங்கோவன் உற்சாகமா தேர்தல் வேலைகளை பார்த்துட்டு இருக்கார்”

”வைட்டமின் எம் வந்தாலே எல்லோருக்கும் உற்சாகம்தானே” என்றோம். சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...