No menu items!

முதல்வருக்கு எச்சரிக்கை மணி; திமுக அனுதாபிகளே குமுறுகிறார்கள் – எஸ்.பி. லக்‌ஷ்மணன் பேட்டி

முதல்வருக்கு எச்சரிக்கை மணி; திமுக அனுதாபிகளே குமுறுகிறார்கள் – எஸ்.பி. லக்‌ஷ்மணன் பேட்டி

மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் எஸ்.பி. லக்‌ஷ்மணன், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் எழுத்து வடிவம் இங்கே…

திருமண மண்டபங்கள், கான்பரன்ஸ் ஹால், கன்வென்சன் செண்டர், விளையாட்டு மைதானங்கள் இங்கெல்லாம் தனியார் நிகழ்ச்சிகளில் அரசு அனுமதி பெற்று மது அருந்தலாம் என அரசு அரசாணை வெளியானது. இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அதை  மறுத்தார். “திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை. ஐபிஎல் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டி நடைபெறும் போது, மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் விளையாட்டு மைதானங்களில் மதுவை அனுமதிக்க வேண்டும் என கேட்டிருந்ததால் அதற்கு மட்டும் அனுமதி” என்று கூறியுள்ளார். அரசாணை, தொடர்ந்து வந்த அமைச்சர் மறுப்பு – இது குறித்த உங்கள் பார்வை என்ன?

ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது விளையாட்டு மைதானங்களில் மது பானங்களை அனுமதிப்பது பல மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது உண்மைதான். அதுபோல் தமிழ்நாட்டிலும் அனுமதிக்க வேண்டும் என்று ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னால், அது தொடர்பான நிர்வாகிகள் அரசை அனுகி கேட்டுள்ளார்கள். அதன்படி அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதை நான் தவறாக கருதவில்லை. ஏனென்றால், ஐபிஎல் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன்தான் நடைபெறுகிறது. அங்கே தவறுகள் நிகழ வாய்ப்பு குறைவுதான். இந்த அரசாணை மார்ச் 18ஆம் தேதியே போடப்பட்டுள்ளது. இன்றுவரை ஐபிஎல் போட்டிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விளையாட்டு மைதானங்களுடன் நிறுத்தாமல் திருமண மண்டபங்களையும் இந்த அரசாணையில் சேர்த்ததுதான் இன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. முதல்நாள் இரவெல்லாம் குடித்துக் கொண்டிருந்தால் மறுநாள் திருமணம் நடக்குமா? உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தான் கலால் துறைக்கும் செயலாளர். நல்ல நிர்வாகி என்று பெயரெடுத்தவர். அவர்கூட இந்த அரசாணையை வெளியிடும் முன்பு ‘மெரேஜ் ஹால்’ என்று இருக்கிறதே, இது விபரீதம் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல துறை அமைச்சர், முதலமைச்சருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

இதைவிட விபரீதமான ஒன்றும் இந்த அரசாணையில் இருக்கிறது. ‘வீட்டு விசேஷங்கள் நடக்கும் வணிகமல்லாத பகுதிகளில் அனுமதி பெற்று மது அருந்தலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வீட்டு விசேஷங்கள் நடக்கும் வணிகமல்லாத பகுதி’ என்றால் என்ன அர்த்தம்? நம் வீடுகள் தான். அனுமதி பெற்று வீடுகளிலும் பார் மாதிரி கூத்தடிக்கலாம், கும்மாளம் போடலாம் என்பது என்ன நியாயம்? இது வெட்கக்கேடானது. இப்போது தவறை உணர்ந்து, திருத்திக்கொள்வதாக சொல்லியுள்ளார்கள். வரவேற்போம்.

அதேநேரம், இதை முதலமைச்சருக்கான எச்சரிக்கை மணியாகத்தான் நான் பார்க்கிறேன். முழு கவனத்தை செலுத்தாவிட்டால் அல்லது சில அதிகாரிகளை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தால் என்ன விளைவு வரும் என்பதை இது அவருக்கு உணர்த்திருக்கும். இந்த அரசாணை தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுகவை கழுவி கழுவி ஊற்றுகிறவர்கள் திமுக அனுதாபிகள்தான். எத்தனை தடவைதான் முட்டுக் கொடுப்பது என்று திமுகவினரே சமூக வலைதளங்களில் குமுறுகிறார்கள். இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்குதான் உள்ளது.

இந்த விவகாரம் போலவே சமூக வலைதளத்தில் கடும் விமர்சனத்து உள்ளாகியுள்ள இன்னொரு விஷயம் 12 பணி நேர வேலைத் திருத்த சட்டம். இந்த திட்டம் வாபஸ் பெறப்படுமா?

முதலமைச்சருக்கான இரண்டாவது எச்சரிக்கை மணி மது விவகாரம் என்றால் முதல் எச்சரிக்கை மணி 12 மணி நேர வேலைத் திட்டம். 150 ஆண்டுகளுக்கு மேல் போராடி பெற்ற உரிமையை, திமுகவின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக இருக்கும் விஷயத்தை இப்படி போகிற போக்கில் முதலமைச்சர் கையாண்டது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. ஐம்பதாண்டு கால அரசியல் அனுபவம் உள்ளவர் துரைமுருகன். அமைச்சரவையில் 2ஆம் இடத்தில் இருக்கிறார், திமுக பொதுச் செயலாளராக இருக்கிறார். அவர்கூட இது ஆபத்தில் போய் முடியும், வேண்டாம் என்று சொல்லவில்லை.

12 மணி நேர வேலைத் திட்டத்தால் முதலீடுகள் வரும். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் அந்த திட்டத்தில் நாம் இருக்கும்போது அப்படி செய்யவில்லை என்றால் முதலீடுகள் வராது என்ற கருத்து இருக்கிறதே?

அந்த வாதத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்துக்காகத்தான் இந்த சட்டத் திருத்தத்தையே செய்துள்ளார்கள். சட்டத் திருத்தம் செய்வதற்கு பதிலாக, தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணன் மூலமாக ஆப்பிள் நிறுவனத்துடன்தான் பேசியிருக்க வேண்டும். இங்கு இருக்கிற நடைமுறையை எடுத்துச் சொல்லி, கூடுதலாக 500 தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது உட்பட மாற்று ஏற்பாடுகளை செய்யும்படி கேட்டிருக்கலாம்.

டெல்லியில்தான் பாஸ் இருக்கிறார். அவரிடம் பேசினால் போதும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. இதே நிலைப்பாடில் எடப்பாடியால் தொடர்ந்து நிற்க முடியுமா?

மாநில கட்சிக்கும் தேசிய கட்சிக்கும் இடையேயான கூட்டணி தொடர்பாக டெல்லியுடன் பேசுவது என்பது வழக்கமான நடைமுறைதான். காங்கிரஸ் – திமுக கூட்டணியில் ஒரு முரண் வந்தால் அழகிரியை அழைத்து பேசமாட்டார்கள். முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. இது அதிமுக – பாஜக கூட்டணிக்கும் பொருந்தும்.

அதிமுக கட்சி பெரும்பான்மை இபிஎஸ் கையில் போய்விட்டது. மீண்டும் ஓபிஎஸ்ஸால் அதிமுகவைக் கைப்பற்ற முடியுமா?

சட்டரிதியான வாசல்கள் எல்லாம் அவருக்கு அடைக்கப்பட்டுவிட்டது. அதனால் அவரது அரசியல் எதிர்காலம் முடிந்துபோய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. இனி அவர் களத்துக்குதான் சென்றாக வேண்டும். அதனால்தான் மாநாடு நடத்துகிறார். இந்த ஒன்றுடன் நிறுத்திக்கொள்வாரா தொடர்ந்து நடத்துவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

ஜி ஸ்கொயர் நிறுவனங்கள் மீது ரெய்ட் நடக்கிறது. இதற்கும் அண்ணாமலை வெளியிட்ட பட்டியலுக்கும் தொடர்பிருக்குமா?

அண்ணாமலை வெளியிட்டது ஊழல் பட்டியல் அல்ல, சொத்துப் பட்டியல்தான். ஆனால், அவர் இதுபோல் அதிமுகவினர் சொத்துப் பட்டியலையும் வெளியிட வேண்டும்.  திமுக ஊழலை மட்டும்தான் எதிர்ப்பேன் என்றால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மட்டுமல்லாமல் போகிறபோக்கில் சேற்றை வாரி இறைக்காமல் ஆதாரங்கள் அடிப்படையில், அடிப்படை முகாந்திரம் இருப்பவற்றை அவர் சொன்னால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு வருமானம் வந்தது என்று அண்ணாமலை கேட்கும் கேள்வி வருமான வரித்துறைக்கு தெரியாமல் இருக்காது. ஏன் இதுவரை சோதனைகள் நடத்தவில்லை என்று என்னைப் போன்றவர்கள்கூட கேள்வி எழுப்பி வந்தோம். இன்று சொதனைகள் நடக்கிறது. இதனுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஜி ஸ்கொயர் போன்ற பிற நிறுவனங்களிலும் இந்த சோதனையை தொடர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...