No menu items!

அமித் ஷாவுக்கு கண்டிஷன் போட்ட எடப்பாடி – மிஸ் ரகசியா

அமித் ஷாவுக்கு கண்டிஷன் போட்ட எடப்பாடி – மிஸ் ரகசியா

வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் லேட்டாக ஆபீஸ் வந்தாள் ரகசியா.

“ஓபிஎஸ் மாநாட்டுக்காக திருச்சிக்கு போயிருந்தேன். இன்னைக்கு காலையிலதான் வந்தேன் அதான் லேட்.”

“ஓபிஎஸ் மாநாட்டுக்குலாம் ஆர்வமா போயிருக்கியே. ஆச்சர்யம்”

“உங்களுக்கு ஒபிஎஸ்னா கிண்டலா போயிருச்சு”

”சரி, மாநாடு எப்படி இருந்துச்சு. கூட்டம் வந்துச்சா?”

“ஓபிஎஸ் மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்க திமுகவைச் சேர்ந்த ஒரு மீசைக்கார அமைச்சரே ஏற்பாடு செஞ்சாராம். தன்னோட சொந்த செலவுல சில ஆயிரம் பேரை அவர் மாநாட்டுக்கு அனுப்பினதாவும் ஒரு பேச்சு இருக்கு. ஓபிஎஸ்ஸே அவர் கிட்ட கேட்டதாகவும் சொல்றாங்க”

“இது என்ன கதை.. அப்படியா? திமுக அமைச்சர் ஏன் ஓபிஎஸ்க்கு உதவணும்?”

“எல்லாம் ஒரு வியூகம்தான். ஓபிஎஸ்க்கு அதிக கூட்டம் வந்தா எடப்பாடி இன்னும் முழுசா அதிமுகவை கைப்பற்றலைனு சொல்லலாம்ல. கூட்டமே இல்லனா எடப்பாடி குஷி ஆயிடுவார்ல”

“இது திமுக தலைமைக்கு தெரியுமா?”

“தலைமை அப்ரூவல் இல்லாமல் மீசைக்காரர் உள்ளே இறங்குவாரா?”

“சரி, எப்படி நடந்தது மாநாடு?”

“நல்லாதான் நடந்தது. ஓபிஎஸ் ரொம்ப ஆவேசமா இருந்தார். எடப்பாடியை கடுமையா திட்டினார். கபட வேடதாரி, அரசியல் வியாபாரி, நயவஞ்சக துரோகி, கல் நெஞ்சுக்காரர் இப்படி வரிசையா அடுக்கினார். சி.வி.சண்முகத்தையும் ஜெயக்குமாரையும் லூசு என்று கோபமாய் சொன்னார். இந்த மாதிரி ஓபிஎஸ் பேசி பார்த்ததில்லை”

“முழு சந்திரமுகியா மாறிட்டாரா?”

“அவர் ஆவேச சந்திரமுகியா மாறினார். ஆனா கூட இருந்தவங்க யாருக்கும் உற்சாகம் இல்லை. என்னதான் கூட்டம் சேர்த்தாலும் சசிகலா கண்டுக்கல, தினகரனும் எட்டிப் பார்க்கல. எடப்பாடியும் பயப்படலை. பாஜகவும் நம்மளைவிட எடப்பாடியைத்தான் நம்புது. இந்த லட்சணத்துல கூட்டம் வந்தா என்ன வராட்டி என்னன்னு ஓபிஎஸ் கூட புலம்பிட்டு இருக்காங்க.”

“எடப்பாடி டீம் இந்த மாநாட்டை எப்படி பாக்குது?”

“இது திமுக உதவியோட நடந்த மாநாடுன்னு அவங்க உறுதியா நம்பறாங்க. அதிமுக கொடி மற்றும் சின்னத்தை இந்த மாநாட்டுல பயன்படுத்த அனுமதிக்க கூடாதுன்னு காவல்துறைகிட்ட எடப்பாடி அணி புகார் சொல்லி இருந்துச்சு. ஆனா போலீஸ்காரங்க அதைக் கண்டுக்கல. அதனாலயும் அவங்க ரொம்ப கோபமா இருக்காங்க.”

“எடப்பாடி இன்னும் கெத்தாயிட்டார் போல! டெல்லில பாஸ் கூடதான் பேசுவோம். இவர் கூடலாம் என்ன பேச்சுனு அண்ணாமலையை லெஃப்ட் ஹேண்ட்ல ட்ரீட் பண்ணியிருக்காரே?”

“அமிக்ஷா வை எடப்பாடி இந்த வாரம் சந்திக்கிறது கிட்டத்தட்ட உறுதியாயிடுச்சு அந்த கெத்துதான். டெல்லில சில ஆட்களைப் பிடிச்சு வச்சிருக்கார். நீங்க அண்ணாமலையையெல்லாம் கண்டுக்காதிங்கனு சொல்லியிருக்காங்க. அதனால தைரியமா இருக்கிறார். அது மட்டுமில்லாம, அமித் ஷாவை சந்திக்கும்போது, சசிகலா, தினகரன், ஓபிஎஸை திரும்பவும் சேர்க்கறது பத்தி பேச்சே வரக்கூடாதுன்னு முன்கூட்டியே கண்டிஷன் போட்டிருக்காராம் எடப்பாடி”

”அமித் ஷாவுக்கு கண்டிஷன் போடுற அளவு எடப்பாடி வளர்ந்துட்டாரா?”

” நாடாளுமன்றத் தேர்தல் முடிற வரைக்கும் அதிமுககிட்ட பாஜக அடக்கிதான் வாசிக்கும். அமித் ஷா தரப்பிலிருந்து கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை வாபஸ் பெறச் சொல்லி கேட்டிருக்காங்க. அவரை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய உத்தரவிடணும்னும் சொல்லியிருக்காங்க. இதுக்கு எடப்பாடியும் ஓகே சொல்ல, இப்ப புலிகேசி நகர் அதிமுக வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் வாங்கி தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்கார்.”

“12 மணிநேர வேலைத் திட்டத்துலயும், திருமண மண்டபங்கள்ல மதுபானத்தை அனுமதிக்கற விஷயத்துலயும் மாநில அரசு பல்டி அடிச்சிருக்கே?”

“இந்த ரெண்டு விஷயத்துலயும் கொஞ்சம் அவசரப்பட்டுடோமோன்னு முதல்வர் கவலைப்படறாராம். வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல இதனால கட்சிக்கு பெரிய அளவுல பாதிப்பு இருக்கக் கூடாதுன்னுதான் அவசர வசரமா மாத்தி இருக்காங்க. அதுலயும் 12 மணிநேர வேலை திட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. 12 மணி நேர வேலை மசோதா பற்றி அமைச்சர்களோட நடந்த பேச்சுவார்த்தையில கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிங்க கொதிச்சுப் போய் பேசியிருக்காங்க. ‘இந்த மாதிரி முடிவுகளை எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகள்கிட்ட கேட்க மாட்டீங்களா? நீங்களாவே முடிவு செய்வீங்களா? அவசர அவசரமாக இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? பாரதிய ஜனதாவை கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசுன்னு சொல்றீங்க. இப்ப நீங்களும் அதைத்தானே செஞ்சிருக்கீங்க’ன்னு அவங்க பொரிஞ்சு தள்ள அமைச்சர்கள் பதில் பேச முடியாம உட்கார்ந்து இருந்தார்களாம். இதையெல்லாம் கேள்விப்பட்டுதான் இந்த மசோதாவை நிறுத்திவைக்க முதல்வர் உத்தரவு போட்டிருக்கார்.”

“முதல்வர் குடும்பம் பத்தி நான் எதுவுமே பேசலைன்னு நிதியமைச்சர் மறுத்திருக்காரே? முதல்வரையும் தன்னையும் பிரிக்க நடக்கும் சதி இதுன்னும் சொல்லி இருக்காரே?”

“அவர் மறுத்தாலும் ஆடியோல இருக்கறது அவரோட குரல்தான்னு சைபர் க்ரைம் போலீஸார் முதல்வர்கிட்ட உறுதிப்படுத்தி இருக்கறதா ஒரு தகவல் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டு முதல்வர் அப்செட் ஆயிட்டாராம்.”

“பிடிஆர் அப்படி பேசியிருப்பாரா?”

“பிடிஆர் குரல்தான் அது. ஆனா அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளை எடுத்து வெட்டி ஒட்டி இந்த மாதிரி அர்த்தம் வர்ற மாதிரி செஞ்சிட்டாங்கனு சொல்லப்படுது. அதனாலதான் முழு வீடியோவையும் வெளியிடாம வெறும் 26 நொடி வீடியோவை வெளியிட்டிருக்காங்கனு பிடிஆர் தரப்புல சொல்றாங்க”

“முதல்வர் ரியாக்‌ஷன் என்ன?”

“அப்செட்தான். ஆரம்பத்திலருந்தே பிடிஆர் கூட சிக்கல்தான். ஏதையாவது பேசி, அல்லது சோஷியல் மீடியாவுல பதிவிட்டு கட்சியை மாட்டி விட்டுறாருன்னு கட்சி மூத்தவர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார்.”

“அமைச்சரவைலருந்து தூக்கப் போறதா சொல்றாங்களே?”

“உடனடியா பண்ணா அவர் பேசுனது உண்மைனு ஆகிடும்னு கொஞ்சம் நாட்கள் கழிச்சு அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம். நிதியமைச்சர் பதவி தங்கம் தென்னரசுக்கு போகலாம். தங்கம் தென்னரசோட இப்போதைய பதவி பழனிவேல் தியாகராஜனுக்கு போகலாம். கூடவே ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு புதுசா 2 மந்திரிகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்குன்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க”

“பிடிஆர் சிக்கல்ல இருக்கிறதை திமுககாரங்களே கொண்டாடுறாங்களாமே?”

“ஆமாம். மதுரையில் இருக்கிற மற்றோரு அமைச்சருக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். அது மட்டுமில்லாம தனக்கு நிதித் துறை வருவதற்கு வாய்ப்பிருக்குனு தங்கமான அமைச்சரும் உற்சாகத்துல இருக்கிறாராம்”

“திமுகவும் மாநாடு நடத்தப் போறதா கேள்விப்பட்டேனே?”

“திமுக சார்பா ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடப்படறது வழக்கம். நாடாளுமன்றத் தேர்தல் வரப் போறதால இந்த வருஷம் அதையே கொஞ்சம் பெருசாக்கி மாநாடா நடத்த திமுக மேலிடம் திட்டமிட்டிருக்கு. அந்த மாநாட்டை மதுரைல நடத்தறதா இல்லை திருச்சியில நடத்தறதான்னுதான் இப்ப யோசிச்சுட்டு இருக்காங்க. மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளர்களா வடக்கத்திய தலைவர்களையும் அழைக்கிறாங்க”

“ தேசிய அளவில் எதிர்க் கட்சிகளின் கூட்டணி அங்க உறுதி செய்யப்படுமா?”

“அப்படிதான் திமுக தலைமை கணக்குப் போடுது. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...