No menu items!

PTR 2வது Audio – திமுக சிக்குமா? தப்பிக்குமா?

PTR 2வது Audio – திமுக சிக்குமா? தப்பிக்குமா?

தமிழ்நாட்டு நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளி வந்த முதல் ஆடியோவில் முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகன் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

நிதியமைச்சர் பிடிஆர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அது தனது குரல் அல்ல என்று கூறியிருந்தார். ஆனால் திமுகவிலிருந்து யாரும் ஆடியோ குறித்து எதுவும் பேசவில்லை.

இப்போது பிடிஆர் பேசியதாக மற்றொரு ஆடியோவை தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார். திமுக உள்ளிருந்து சிதைந்து வருகிறது என்றும் கூறியுள்ள அவர், திமுக மற்றும் பாஜக இடையே சரியான வேறுபாட்டைக் காட்டிய நிதி அமைச்சருக்கு சிறப்பு நன்றி என்று ஆடியோவை வெளியிட்டு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோவில் மீண்டும் முதல்வரின் மகன், மருமகன் குறித்து இருக்கிறது.

இரண்டாவது ஆடியோவைத் தொடர்ந்து மூன்றாவது, நான்காவது என்று தொடர்ச்சியாக வரலாம்.

இப்போது திமுக என்ன செய்யப் போகிறது?

மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதால், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி உருவாக்க முயற்சிப்பதால் இது போன்ற அவதூறுகள் திமுக மீது சுமத்தப்படுகின்றன என்று அரசியல் ரீதியாக கூறலாம். பிடிஆர் அப்படி பேசவில்லை என்று அறிக்கை விடலாம்.

பிடிஆர் பதவி விலகலாம். என் குரல் அல்ல ஆனாலும் என்னால் கட்சிக்கு தர்ம சங்கடங்கள் வரக் கூடாது என்று ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கூறலாம்.

இந்த இரண்டு காரியங்கள் நடந்தாலும் திமுக என்ற கட்சியின் மீது மட்டுமல்ல, அது ஆட்சியின் மீது வரப் போகும் விமர்சனங்களும் குறையாது.

பிடிஆரை அமைச்சரவையிலிருந்து நீக்கலாம். ஆனால் அது திமுகவுக்கே எதிராக முடியும்.

பிடிஆரின் இலாகாவை மாற்றலாம். ஆனால் இதுவும் திமுகவுக்கு எதிராகவே முடியும்.

மிகவும் சிக்கலான இடத்தில் திமுக நிற்கிறது. இந்த வாரம் பல சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு அரசு திட்டங்கள் எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பிடிஆர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளி வந்து திமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இது போன்ற சர்ச்சைகள் திமுகவை நிச்சயம் பலவீனப்படுத்தும்.

வலிமையான முதல்வர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அந்தப் புகழுக்கு ஏற்றவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்துக் கொண்டால்தான் இது போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

நிதியமைச்சர் பிடிஆர் மட்டுமல்ல, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்தே அமைச்சர்களால் முதல்வருக்கு பிரச்சினைகள்தாம்.

இது குறித்து முதல்வரே பேசியிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த தி.மு.கவின் பொதுக் குழுவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின், கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறினார்.

அவர் அப்படி சொன்னதுக்கு காரணங்கள் இருக்கிறது.

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., நாசர் என பலர் தங்களது பேச்சுக்களால் செயல்களால் முதல்வரை தூங்கவிடாமல் செய்திருக்கிறார்கள்.

இப்போது அமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளிவந்திருக்கும் பிடிஆர் ஆடியோ.

மற்ற பிரச்சினைகள் அரசியல் ரீதியாக அதிக பாதிப்பை விளைவிக்காதவை. ஆனால் இந்த உண்மையா பொய்யா என்று தெரியாத அண்ணாமலை வெளியிட்டிருக்கும் ஆடியோ திமுகவின் அரசியலை அசைத்துப் பார்க்கும் வலுவுடையவை.

கடந்த வருடம் ஜூலை மாதம் ஒரு கூட்டத்தில் பேசும் போது நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று பேசியிருந்தார்.

வலிமையான, சர்வதிகாரியாக மாறி தனது கட்சியினரை முதல்வர் ஸ்டாலின் நிர்வகிக்க வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால், இது போன்ற சர்ச்சைகள் எழுந்து திமுகவை பலவீனப்படுத்திக் கொண்டேதான் இருக்கும்.

திமுக இது போன்ற ஆடியோ அரசியலை இதுவரை எதிர்கொண்டதில்லை. சமூக ஊடகங்கள் வலிமையாக மாறிவிட்ட சூழலில், அண்ணாமலை போன்றவர்கள் வெளியிடும் அந்தரங்க பேச்சு ஆடியோ அரசியலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதற்கு அந்தக் கால அரசியல் வியூகங்கள் உதவாது என்பதை ஸ்டாலின் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இது திமுகவுக்கு.

முதல்வராகவும் அவர் செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

ஒரு அமைச்சர் பேசியதாக வெளியிடப்படும் ஆடியோக்களை அரசு சோதிக்க வேண்டும். அது குறித்து மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. முதலில் ஆடியோவில் என்ன நடந்தது என்பதை விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும். இது அரசின், முதவரின் கடமை.

ஆடியோ பிரச்சினை மட்டுமல்ல, மற்ற நிர்வாக முடிவுகளிலும் முதல்வர் ஸ்டாலின் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.

இந்த அரசு பதவியேற்றதிலிருந்து ஏகப்பட்ட குழப்பங்கள், சர்ச்சைகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.

கல்வி தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பு குறித்த் சர்ச்சை

அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுக்கள்

கடலூர் பள்ளி கலவரங்கள்

வேங்கைவயல் மலம் கலந்த விவகாரம்

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கி சித்திரவதை

திருமணக் கூடங்களில் மது

12 மணி நேர வேலை….

இப்படி பட்டியல் நீள்கிறது.

இதற்கெல்லாம் முடிவு வேண்டுமென்றால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிமையாக சாட்டையை எடுக்க வேண்டும். சர்ச்சைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி வலிமையான முதல்வராக நடந்துக் கொண்டால் …. முதல்வர் ஸ்டாலின் முதல்வர்களில் முதல்வராக நீடிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...