No menu items!

வீடியோவில் பேசியது துவாரகாவா? AI டெக்னாலஜியா?

வீடியோவில் பேசியது துவாரகாவா? AI டெக்னாலஜியா?

பிரபாகரன் மகள் துவாரகா பேசுவதாக வீடியோ ஒன்று வைரலாகி ஈழத் தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தோன்றுவது உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகா தான் எனவும், துவாரகா இல்லை எனவும் ஏற்றும் மறுத்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது என்கின்றனர். உண்மை என்ன?

என்ன நடந்தது?

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போர் 2009 மே 18 அன்று முடிவுக்கு வந்தது. அன்றுதான் இலங்கை ராணுவத்தால் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்று பிரபாகரன் மீதான இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கையும் இந்திய அரசு முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போரில் பிரபாகரன் மட்டுமல்லாமல் அவரது மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால், இலங்கை ராணுவம் கூறும் தகவலை ஏற்காத சிலர், குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி வந்தனர்.

இந்நிலையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சில மாதங்களுக்கு முன்பு திடீரென தஞ்சையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி ‘வீடியோ’ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘மதிவதனியும் பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள்’ என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதனிடையே, இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் ‘வீடியோ’ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, மாவீரர் நாளில் (நவம்பர் 27) பிரபாகரனின் மகள் துவாரகா காணொலி வாயிலாக பேசுவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதன்படி, நேற்று மாலை துவாரகா பேசியதாக ஒரு வீடியோ நேற்று வெளியானது.

பேசியது பிரபாகரன் மகளா?

அந்த வீடியோவில் பிரபாகரன் மகள் துவாரகா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இளம்பெண் பேசுகிறார். அதில், “தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள். அந்த மகத்தான உன்னதமானவர்கள். எமது ஆழ்ந்த போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமது சுதந்திரத்திற்கான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கான எமது தாயகத்திலும், புலம்பெயர்ந்த மக்களும், அரசியல் தலைவர்களும் எமது தேசிய விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்த போராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மக்கள் என்றும், புலிகள் என்றும், ஈழத்தமிழர்கள் என்றும் வேறுபடுத்தி பார்ப்பது அர்த்தமற்றது. எனது அரசியல் போராட்டம் முன்னெடுத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கு இடையே வேறுபாடு கடந்து தமிழீழ தேச அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காவும், இன அழிப்புகளுக்கு ஆளாக்கப்பட்ட எனது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவு ஒற்றுமையோடும், வினைத்திறனோடும் தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் உண்டு.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தேசத்தின் அரசியல் உரிமை என்பது ஒரே கோட்டின் கீழ் பயணிக்க வேண்டும். அதேநேரத்தில் தாயகத்தின் வறுமை கோட்டின் கீழ் வாழும் எமது மக்களுக்காக கடந்த காலத்தில் போராடிய முன்னாள் போராளிகளின் மீது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்களாக தேசத்தின் வளங்கொண்ட தரப்பினர் இருக்கின்றனர். இதற்கான பொறுப்பு புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு” என்கிறார்.

அதில் தோன்றுவது உண்மையில் பிரபாகரன் மகள் துவாரகா தான் எனவும், துவாரகா இல்லை எனவும் ஏற்றும் மறுத்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ இது என்கின்றனர். இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த வீடியோ குறித்து இலங்கை அரசு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பழ. நெடுமாறன், ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா, மாவீரர் நாளில் இணையம் வழியாக உரையாற்றியிருக்கிறார். இது பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பிரபாகரன் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் அழிந்து போனதாக கூறினார்கள். இப்போது அவரது மகள் வந்து உலக மக்கள் முன்பாக பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை அவராக வந்து செய்திருக்க முடியாது. பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பது தான் உண்மை. இளவேங்கை உறுமியிருக்கிறது. சினவேங்கை விரைவில் உறுமும். இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஓர் எழுச்சியும், நம்பிக்கையும், புத்துணர்வும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் கவிஞர் காசி ஆனந்தனும் இந்த வீடியோவில் தோன்றுவது துவாரகாதான் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதனை விசிக தலைவர் திருமாவளவன் மறுத்துள்ளார். “இப்படிப்பட்ட தகவல்களில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பிரபாகரன் வெளிப்படையாக தோன்றினால் நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். அவர்கள் உயிரோடு இருந்தால் அது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் வௌிச்சத்திற்கு வரும்போது அதை ஏற்போம். ஆனால், தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் வெளிவருவது வேதனை அளிக்கிறது. இப்போது துளியளவில் கூட நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தனும் வீடியோவில் தோன்றுவது துவாரகா இல்லை எனத் தெரிவித்துள்ளார். “நிதி திருட்டுவதற்காக போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ இது” என்று கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இதுவரை இந்த வீடியோ தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

யார் சொல்வது உண்மை என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...