No menu items!

மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. – மிஸ் ரகசியா

மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. – மிஸ் ரகசியா

 “கூடிய சீக்கிரம் பட்டாபிஷேகம் நடக்கப் போகுது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

 “யாருக்கு உதயநிதிக்கா? துணை முதல்வர் பதவிதானே? அவர் மறுத்திருக்கிறாரே?” 

 “மறுக்கதான் செய்வாங்க. அறிவாலயத்துல உறுதியா சொல்றாங்க. விரைவில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவினு”

“எப்படி?”

”சமீபத்துல நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல பேசின பொதுச்செயலாளர் துரைமுருகன், ‘முதல்வருக்கு இணையா கொஞ்சமும் சளைக்காமல் உதயநிதி ஸ்டாலின் கடுமையா உழைக்கறார். தளபதியை அங்கீகரிக்க தலைவர் கலைஞர் ரொம்ப யோசிச்சார். அவருக்கு அங்கீகாரம் கிடைப்பதை  தாமதப்படுத்தினார். உதயநிதிக்கு அப்படி நடந்துடக் கூடாது.  அவருக்கு உரிய அங்கீகாரத்தை முதல்வர் உடனே வழங்கவேண்டும்’னு பேசினாராம். அதாவது உதயநிதியை உடனடியா துணை முதல்வராக்கணும்னு சொல்லாம சொல்லி இருக்கார். முதல்வரோட ஒப்புதல் இல்லாம துரைமுருகன் அப்படி பேசியிருக்க மாட்டார்னு உடன்பிறப்புகள் நம்பறாங்க. அதனால உதயநிதி கூடிய சீக்கிரம் துணை முதல்வர் ஆவார்னு நினைக்கறாங்க”

“புகழ்ந்து பேசுறதுக்கு இப்படிலாம் பேசுறது வழக்கம்தானே..”

”உண்மைதான். ஆனா உதயநிதி பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து சொல்ல வந்த கூட்டத்தை பாத்திங்கல.  உதயநிதி ஸ்டாலினோட அரசு இல்லம் இருந்த பசுமை வழிச் சாலையில திருப்பதிக்கு இணையா கூட்டம் வந்துச்சு. அவருக்கு வாழ்த்து சொல்றவங்களுக்காக மூணு வழிகளை அமைச்சிருந்தாங்க. தொழிலதிபர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு வழி,  சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு  ஒரு வழி,  தொண்டர்களுக்கு ஒரு வழின்னு இந்த 3 வழிகளையும் அமைச்சிருந்தாங்க”

”பெரியார் வழி, அண்ணா வழி, கலைஞர் வழி மாதிரி சொல்ற?”

  ”உங்களுக்கு வேடிக்கையா இருக்கு. ஆனா அப்படிதான் நடந்தது.இது சில மூத்த தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் எரிச்சல் அடைய வச்சிருக்கு”

”ஏன்?”

”தொழிலதிபர்களும் நாமும் ஒண்ணான்னு முணுமுணுத்திருக்காங்க. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் முணுமுணுப்பு சத்தம் வெளில கேக்காம க்யூல நின்னு உதயநிதியை சந்திச்சு வாழ்த்து சொன்னாங்க. பலர் அவர் காலைத் தொட்டு கும்பிட்டிருக்காங்க. உதயநிதி தடுத்துப் பார்த்தும் அவங்க கேக்கல. நியூஸ் பேப்பர்ல 10 பக்கத்துல இருந்து 20 பக்கம் வரைக்கும் விளம்பரம் கொடுத்திருந்தாங்க. முரசொலியில 60 பக்கத்துக்கு மேல விளம்பரம் வந்திருக்கு. இதெல்லாம் பாத்தாலே தெரியுதுல பட்டாபிஷேகம் நெருங்குதுனு”

 “திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் பத்தி ஏதும் நியூஸ் இல்லையா?”

 “இருக்கு. இந்த கூட்டத்துல பேசின முதல்வர், ‘தொகுதி பங்கீடு பத்திலாம் நீங்க கவலைப்பட வேண்டாம். அந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். இன்னும் சொல்லப்போனா நான் வேட்பாளர் தேர்வு வேலையை கூட தொடங்கிட்டேன். 40 தொகுதிகள்லயும் நம்ம கட்சியை ஜெயிக்க வைக்கற வேலையை மட்டும் பார்த்தா போதும்.’னு மாவட்ட செயலாளர்கள்கிட்ட சொல்லி இருக்கார். இதன்மூலமா நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு கேட்டு யாரும் தன்கிட்ட வரவேண்டாம்னு அவர் மறைமுகமா சொல்லி இருக்கார்.”

“நல்ல பேர் வாங்கினவங்களுக்கு மட்டும்தான் தேர்தல்ல போட்டியிட வாய்ப்புனு முதல்வர் சொல்லியிருக்கிறாரே?”

“ஆமாம். அப்படிதான் பேசியிருக்கிறார். வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து வச்சுருக்கார்னும் கேள்விப்பட்டேன். ஒவ்வொரு தொகுதிக்கும் மூணு பேரை லிஸ்ட்ல வச்சிருக்காராம்?”

“அந்த மூணு பேர்ல யாருக்கு வாய்ப்பு கொடுப்பார்..யார் ரொம்ப நல்லவன்னு பேர் எடுத்தவங்களுக்கா?”

“உங்களுக்கு கிண்டலா இருக்கு. ஆனா அவங்க வேட்பாளர்கிட்ட எல்லா சக்தியும் இருக்கானு பாத்துதான் சீட் கொடுக்கப் போறாங்க”

“எல்லா சக்தியுமா? code word accepted”

”நீங்க ரொம்ப காமெடி பண்றிங்க..முதல்வர் உருக்கமாகவும் பேசியிருக்கிறார்”

 “என்ன சொன்னார்?”

 “ ‘எனக்கு 15 நாட்களா உடல்நிலை சரியில்லை.  மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க.  மாவட்டச் செயலாளர் கூட்டம் ரொம்ப முக்கியமான கூட்டம்கிறதால கலந்துகிட்டேன்’ன்னு இந்த கூட்டத்துல முதல்வர் பேசியிருக்கார். உடலநலத்தையும் பொருட்படுத்தாம முதல்வர் பேசுறாரேனு மாவட்ட செயலாளர்கள்லாம் உருகியிருக்காங்க”

“திமுகவுல கே.என்.நேரு முக்கியத்துவம் அதிகரிக்குதாமே?”

 ”ஆமாம்.  இளைஞர் அணி மாநாட்டை கவனிக்கற பொறுப்பை அமைச்சர் நேருகிட்ட அவர் கொடுத்திருக்கார்.  இளைஞரணி மாநாட்டுக்கு அவரை ஒருங்கிணைப்பாளரா நியமிச்சு இருக்கார். ஒரு காலத்துல இந்த மாதிரி வேலைகளை செந்தில் பாலாஜி கிட்டதான் முதல்வர் கொடுப்பார். இப்ப நேருகிட்ட கொடுத்ததன் மூலமா, தன்னோட நெருக்கமான தளபதியா நேருவை முதல்வர் அறிவிச்சிருக்கார்.”

”திருச்சினாலே அன்பில் மகேஷ்னு மாறிடும்னுலாம் சொன்னாங்க..ஆனா கே.என்.நேரு இன்னும் வலுவாதான் இருக்கிறாரா?”

“அன்பில் மகேஷ் இன்னும் தீவிரமா பணியாற்றவில்லை என்ற வருத்தம் திமுக தலைவர்கிட்ட இருக்குனு மூத்த தலைவர்கள் சொல்றாங்க. இன்னும் கட்சிப் பணிகள்லயும் அமைச்சர் பணியிலும் ஆர்வம் காட்டணும்னு அன்பிலை அழைத்து முதல்வர் சொன்னதாகவும் ஒரு செய்தி இருக்கு”

 “இளைஞர் அணி மாநாட்டு வேலைகள் எப்படி போயிட்டிருக்கு?”

 “இதுக்கு இளைஞர்களை திரட்டற பொறுப்பை மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் கொடுத்திருக்காரு. இது சில மாவட்ட செயலாளர்களுக்கு பிடிக்கல. ‘இளைஞர் அணி மாநாட்டுக்கு  நாமே ஆட்களை திரட்டணும்னு சொல்றாங்க. ஆனா  இளைஞர் அணி நிர்வாகிங்க நம்மளை மதிக்கறதே இல்லை. நாம ஏதாவது பொதுக்கூட்டமோ, போராட்டமோ நடத்தினா சரியா ஆதரவும் தர்றதில்லை. ஆனா நாம மட்டும் அவங்க மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்கணுமா’ன்னு சிலர் புலம்பியிருக்காங்களாம். அதேபோல மாநாட்டு செலவுக்காக பணம் ஏதும் வசூலிக்க கூடாது. நிதிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களே கவனிக்கணும்னு முதல்வர் சொன்னதையும் அவங்க ரசிக்கல. அவ்வளவு பணத்துக்கு எங்க போறதுன்னு புலம்பறாங்க.”

”அப்புறம் இதை கேக்கணும்னு நினைச்சேன். வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வந்திருந்தாங்க. ஆனா காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் காணோமே.. என்ன காரணம்?”

“ராஜீவ் காந்திக்கு எதிரா வி.பி.சிங் இருந்தார் அது ஒரு காரணம். ஆனா அதைவிட முக்கியமா கூட்டத்துக்கு யார் போறதுன்றதுல வழக்கம்போல காங்கிரஸ்ல பிரச்சினை. அதனால யாருமே போகல. காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் யாரும் வரலங்கறதை முதல்வர் ரசிக்கல. நாம ஒன்றுபட்டு நின்னு ஜெயிக்கணும்னு நினைக்கிறோம். இவங்க இப்படி பண்றாங்களேனு வருத்தப்பட்டிருக்கிறார்”

“திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டியையும் காங்கிரஸ்காரங்க ரசிக்கல போல. அவங்க ஏன் திடீர்னு மேதகு பிரபாகரன்னு விடுதலைப் புலிகளை பாராட்டி பேசுனாங்க?”

”திமுகவுலயும் அவங்க பேச்சை ரசிக்கல. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்கள்ல திமுகவை கடுமையாக விமர்சித்து பதிவிடுறாங்க. நாம் தமிழர் கட்சியினரோடு சேர்ந்து திமுகவுக்கு எதிராக இருக்காங்க. அப்படி இருக்கும்போது முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்து பிரபாகரனிடம் மன்னிப்பு கேட்பேன்னு எப்படி சொல்ல்லாம்னு தமிழச்சி தங்கபாண்டியன் மேல திமுகவினர் கடுப்புல இருக்காங்க. அனேகமா இந்த முறை நாடாளுமன்றத் தேர்தல்ல அவங்களுக்கு திமுக வாய்ப்பு கொடுக்காதுனும் பேச்சு இருக்கு”

 “அதிமுக செய்திகள் ஏதும் இல்லையா?”

 “சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் பேசின எடப்பாடி, ‘என்கிட்ட பேச மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும்,  பியூஷ் கோயலும் முயற்சி செய்தாங்க. நான் அவங்களை சந்திக்க மறுத்துட்டேன். இப்பத்தான்  அவங்களுக்கு நம்ம அருமை தெரியுது. நாம எவ்வளவு முக்கியம்னு யோசிக்கறாங்க.  டெல்லி தலைமை  அண்ணாமலை மேல அதிருப்தியில இருக்கு.  இதுவும் எனக்குத் தெரியும். அவங்களோட கூட்டணி நமக்கு தேவையில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தல்ல நம்ம செல்வாக்கை நிரூபிச்சு அதிக இடங்களில் வெற்றி பெறும் வேலையை பார்ப்போம். பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியோட மருமகன் அசோக் குமார், பாஜகல இருந்து விலகி  இப்ப நம்மளோட இணைஞ்சிருக்கார். பாஜகல அண்ணாமலை மேல பலருக்கு அதிருப்தி இருக்கு. நம்ம மாவட்ட செயலாளர்கள் அவங்களோட பேசி எப்படியாவது நம்ம கட்சிக்கு கொண்டு வரணும்’னு பேசி இருக்கார்.”

“நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டிப் போடவே அதிமுகவுல யாரும் முன்வரலனு சொல்றாங்களே?”

“ஆமாம். நிறைய பேர் தயங்குறாங்க. ஜெயிக்கிறது நிச்சயமில்லாத தேர்தல்ல எதுக்கு பணம் செலவழிச்சு போட்டி போடணும்னு சொல்றாங்க”

“கரெக்ட்தான். காசு செலவழிச்சு எதுக்கு தோக்கணும்”

“அதிமுக தோக்கும்னு நீங்க முடிவு பண்ணிட்டிங்களா?”

“அப்படிதானே இருக்கு. களத்துல இப்ப திமுக, பாஜக இருக்கிற மாதிரிதானே இருக்கு. அதிமுகவையே காணோமே”

“இதைதான் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக தலைவர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார். அண்ணாமலை நடைபயணம் முடிந்ததும் அதிமுக பெரிய அளவுல களத்துல இறங்கும். போராட்டங்கள் நடத்தும்னு அதிமுகவினர் சொல்றாங்க”

 “இதைப் பார்த்து பாஜக சும்மா இருக்குமா என்ன?”

 “அவங்க எப்படி சும்மா இருப்பாங்க? 5 மாநில தேர்தலுக்கு பிறகு அதிமுக பிரமுகர்களுக்கு எதிரா அமலாக்கத் துறையை பாஜக முழு வேகத்தில் இயக்கும். அதுக்கு பயந்து பல அதிமுக தலைகள் பாஜகல ஐக்கியமாகும்னு கமலாலயத்துல பேச்சு இருக்கு.”

”பாஜககிட்ட ஓட்டு இருக்கோ இல்லையோ அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இருக்கு. அது போதும் அவங்களுக்கு எல்லோரையும் வளைச்சுப் போட”

“தேர்தல் ஆணையத்தை விட்டுட்டுட்டிங்களே. எதிர்கட்சிகள் அதையுதானே பாஜக கூட்டணினு சொல்றாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...