No menu items!

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

அநீதி (தமிழ்) – ஆஹா

வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா நடித்துள்ள அநீதி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றும் அர்ஜுன்தாஸ், வீட்டு வேலை செய்யும் துஷாராவை காதலிக்கிறார். இந்த நேரத்தில் துஷாரா வேலை செய்யும் வீட்டின் முதலாளியம்மா இறந்துபோக, அவரது பிள்ளைகள் தங்கள் அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளிக்கிறார்கள். அவர்களால் துஷாராவின் உயிருக்கு ஆபத்தும் வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து துஷாராவை அர்ஜுன் தாஸ் காப்பாற்றினாரா? அந்த முதலாளியம்மா எப்படி இறந்தார் என்பதுதான் கதை. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் பார்க்கலாம்.

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை இப்படத்தில் மென்மையான கதையோடு சொல்லியிருக்கிறார் வசந்தபாலன்.


ஹட்டி (Haddi – இந்தி) – ஜீ 5

அக்‌ஷத் அஜய் சர்மா இயக்கத்தில் நவாசுதீன் சித்திக்கி நடித்துள்ள ஹட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகி உள்ளது.

நொய்டாவில் திருநங்கைகள் பெருமளவில் வசிப்பதற்காக ஒருவரால் தானம் கொடுக்கப்பட்ட மாளிகையை கைப்பற்ற அவர்களை ஒரே நாளில் கொன்று குவிக்கிறார் ஒரு அரசியல்வாதி. இந்த சம்பவத்தில் இருந்து உயிர்தப்பும் ஹட்டி என்ற திருநங்கை, அந்த அரசியல்வாதியை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. ‘பேட்ட’ படத்தில் தமிழக ரசிகர்களை கவர்ந்த வில்லனான நவாசுதீன் சித்திகி, இப்படத்தில் திருநங்கையாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.


தயா (Dayaa – தெலுங்கு வெப் சீரிஸ்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்

பவன் சடினேனி இயக்கத்தில் ஜே.டி.சக்ரவர்த்தி, ரம்யா நம்பீசன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு வெப் சீரிஸ் தயா.

ப்ரீசர் வேனை ஓட்டும் டிரைவரான ஜே.டி.சக்ரவர்த்தி, துறைமுகத்தில் இருந்து மீன் லோடுகளை பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் வேலையைப் பார்த்து வருகிறார். ஒரு நாள் அவரது வேனுக்குள் ரம்யா நம்பீசனின் உடல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கிடக்கிறது. அவர் யார்? எதற்காக கொல்லப்பட்டார்? அந்த கொலைகாரர்களை சக்ரவர்த்தியால் கண்டுபிடிக்க முடிந்ததா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.

பரபரப்பான த்ரில்லர் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற வெப் சீரிஸ் இது.


ஆயிரத்தொந்நு நுணகள் (Aayirathonnu Nunakal – மலையாளம்) சோனி லைவ்

கே.வி.தமர் இயக்கத்தில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் மலையாள திரைப்படம் ஆயிரத்தொந்நு நுணகள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சிலர், அங்குள்ள தங்கள் நண்பரின் திருமண நாளை கொண்டாடுவதற்காக கூடுகிறார்கள். அப்போது அவர்கள் வினோதமான ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். தங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதுவரை அவர்கள் சொல்லிவந்த பொய்யை, அல்லது மறைத்துவந்த உணமையை நண்பர்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த விளையாட்டு. அந்த விளையாட்டால் எழும் பிரச்சினைகள் என்ன, அது எப்படி தீர்கிறது என்பதுதான் படத்தின் கதை.

ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும், கடைசிவரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...