No menu items!

எச்சரிக்கை! தமிழகத்தை தாக்கப் போகிறது வெப்பம்!

எச்சரிக்கை! தமிழகத்தை தாக்கப் போகிறது வெப்பம்!

பிப்ரவரி 3-வது வாரத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டதே என்று கவலைப்படுகிறீர்களா? வழக்கமாக வீட்டில் ஏபரல் மாதம் முதல் போடவேண்டிய ஏசியை பிப்ரவரி மாதம் முதலே போடவேண்டி இருக்கிறதே என்று பர்சைத் தடவுகிறீர்களா? பகலில் கொஞ்ச தூரம் நடந்தாலே உங்கள் கண்கள் ஜூஸ் கடையை தேடுகிறதா?

இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆமாம் என்று இருந்தால் நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கிறீர்கள் என்று அர்த்தம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக ஆய்வு:

அண்ணா பல்கலைக்கழகத்தின் Centre for Climate Change and Disaster Management சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் தமிழகத்தில் வெப்பம் மிகுந்த நாட்களின் எண்ணிக்கை சராசரியாக 41.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி பார்த்தால் குளுமையான சூழல் கொண்ட நாட்களின் எண்ணிக்கை குறைந்து, வெப்பம் மிகுந்த நாட்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த சூழல் கட்டுக்குள் வர 2050-ம் ஆண்டுவரை நாம் காத்திருக்க வேண்டி இருக்கும் என்றும் இந்த ஆய்வு நமக்கு பயம் காட்டுகிறது.

கடந்த 1985-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தமிழகத்தில் சராசரியாக 107 நாட்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. மற்ற நாட்களில் குளுமையான சூழலோ அல்லது தாங்கக் கூடிய வெயில் உள்ள சூழலோதான் இருந்துள்ளன. அதாவது 29 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழேதான் பெரும்பாலான நாட்களில் வெப்பம் பதிவாகி உள்ளது. ஆனால் 2014-ம் ஆண்டுமுதல் வெப்பம் மிகுந்த நாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருவாரூரில் அதிகம்:

தமிழகத்தில் வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படுவது திருவாரூர் மாவட்ட மக்கள்தான். இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 214 நாட்கள் 29 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அடுத்ததாக தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆண்டுக்கு சராசரியாக 211 நாட்களுக்கு 29 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 169 நாட்களும், நாமக்கல்லில் 162 நாட்களும், திருவண்ணாமலையில் 148 நாட்களும் அதிக வெயில் அடிக்கிறது.

கொடுத்துவைத்த நீலகிரி:

தமிழகத்தைப் பொறுத்தவரை வெயிலால் மக்கள் அதிகம் பாதிக்கப்படாத மாவட்டம் நீலகிரி. அங்கு ஆண்டுக்கு சராசரியாக 44 நாட்கள் மட்டுமே இயல்பை விட அதிக வெயில் பதிவாகிறது. அடுத்ததாக கன்னியாகுமரியில் 52 நாட்களும், கிருஷ்ணகிரியில் 60 நாட்களும் மட்டுமே வெயிலால் மக்கள் ஆவஸ்தைக்கு உள்ளாகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மலைப்பகுதி என்பதால் அங்கு பல நாட்களுக்கு இதமான சீதோஷண நிலை நிலவுகிறது. அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு சீசன்களிலும் மழை பெய்வதால் அங்கு குளுமையான சூழல் நிலவுகிறது.

தூத்துக்குடியில் அதிகரிக்கும் வெயில்:

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் சமீப காலமாக வெயிலின் கொடுமை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டுவரை இந்த மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 76 நாட்கள்தான் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. ஆனால் 2021-ம் ஆண்டின்படி அந்த சராசரி நாட்களின் எண்ணிக்கை 152-ஆக அதிகரித்துள்ளது.

காரணம் என்ன?

எல் நினோ விளைவு மற்றும் காலநிலை மாற்றத்தால் காற்றின் ஈரப்பதம் குறைந்து, வெப்பம் மிகுந்த நாட்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்த ஆய்வை நடத்திய குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ஏ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெப்பம் மிகுந்த நாட்களின் எண்ணிக்கை வரும் 2050-ம் ஆண்டுவரை குறைய வாய்ப்பு இல்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதைப் பார்க்கும்போது வரும்காலத்தில் வெயிலால் இன்னும் எப்படியெல்லாம் கஷ்டப்படப் போகிறோமோ என்று கவலையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...