No menu items!

இலங்கை இறுதி போரில்  Wagner Group ராணுவம்!

இலங்கை இறுதி போரில்  Wagner Group ராணுவம்!

ரதன்

ரஷ்யாவைச் சேர்ந்த வக்னர் என்ற தனியார் ராணுவ அமைப்பு (Wagner Group) அண்மையில் பிரபலமானது. அதன் பின்னர்தான் அரசுகள் மட்டுமல்ல தனியார்களும் ராணுவம் வைத்துள்ளார்கள் என்பதே பலருக்கும் தெரிய வந்தது. அதுவும் அரசுகளே அந்த தனியார் ராணுவ உதவியை பெற்றிருப்பதையும் அறிந்தோம். ஆனால், தனியார் ராணுவ நிறுவனங்களை அரசுகள் போர்க்களங்களில் பயன்படுத்துவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1200களிலேயே ஐரோப்பாவில் நடைபெற்ற பல யுத்தங்களில் தனியார் ராணுவங்களும் போரிட்டுள்ளன.

வக்னர் இல்லாத அண்மை உதாரணம் ஒன்று…

நைஜீரியாவில் 2009லிருந்து 2015 வரை ‘பொக்கோ ஹராம்’ ((Boko Haram) என்ற முஸ்லீம் தீவிரவாத அமைப்பு பல தாக்குதல்களை நடத்தியது. பாடசாலை மாணவிகளை பலாத்காரமாக கடத்தி பாலியல் துன்புறுத்தல்களை செய்ததுடன், அவர்களை அடிமைகiளாகவும் மனைவிகளாகவும் நடத்தினார்கள்.

நைஜீரியா ராணுவத்தால் ‘பொக்கோ ஹராம்’ தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆப்பிரிக்க பழமொழி ஒன்று உண்டு. ‘யானைகள் சண்டையிடும் பொழுது, புற்கள் மிதிபட்டே அழியும்’. அதே போன்றே நைஜீரிய மக்கள், பொக்கோ ஹராமினால் அல்லல்பட்டார்கள்.

இந்நிலையில், நைஜீரிய அரசு தனியார் ராணுவ நிறுவனத்தின் உதவியை நாடியது. Mi-24 Hind helicopter gunships—flying tank ஆயுதங்களுடன் களமிறங்கியது தனியார் ராணுவம். ஒரு சில வாரங்களில் ‘பொக்கோ ஹராம்’அமைப்பினர் கட்டுப்படுத்தப்பட்டனர். பொக்கோ ஹராமினரின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும், கடத்தப்பட்ட 276 பாடசாலை மாணவிகளில் பலரை மீட்க முடியாமல் போய்விட்டது. இன்றும் ‘பொக்கோ ஹராம்’ அமைப்பினர் நைஜீரியாவிலும் நைஜீரியாவின் சுற்றுப்புற நாடுகளிலும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.

இதுபோல் பல நாடுகள் அண்மைக் காலங்களில் தனியார் ராணுவங்களை பயன்படுத்தியுள்ளன.

ஐரோப்பா போல் ரஷ்யாவிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த தனியார் ராணுவம் என்பது தொடங்கிவிட்டது. செர்கி சுகான்ஹின் (Sergey Sukhankin) என்பவர், தனது கட்டுரை ஒன்றில், ரஷ்யா – லிவோனியன் போரின் போது (1558–1583), சுவீடனின் தனியார் ராணுவத்தை (1598–1613) ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடுகின்றார். செர்கி உட்பட பல மேற்கு சார்பு ஆய்வாளர்கள் சோவியத் யூனியன் காலத்திலும் ரஷ்யா தனியார் ராணுவ நிறுவனங்களை பயன்படுத்தியுள்ளது என குறிப்பிடுகின்றனர்.

உக்ரெய்ன் அரசியலில் செல்வாக்குடன் கூடிய மிகப் பெரிய செல்வந்தர், ஈகார் ஹொலமாஸ்கி. இவர் உக்ரெய்ன் -ரஷ்ய யுத்தத்தில் தனது உற்பத்தி நிறுவனங்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க தனியார் ராணுவ நிறுவனம் ஒன்றை ஈடுபடுத்தியுள்ளார்.

க்னர் தனியார் ராணுவம் உருவாகிய முறையையே, தனியார் ராணுவங்கள் எவ்வாறு தோன்றி வளர்ச்சி பெறுகின்றன என்பதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். வக்னர் ராணுவம் 2014இல் ஆரம்பிக்கப்பட்டது. உக்ரெய்னின் கிழக்கில் டொன்பஸ் ரஷ்யர்கள் அதிகமாக வாழும் பகுதி. அங்கு தனிநாடு கோரி போராடிக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டதுதான் வக்னர் ராணுவம். இதன் தலைவராக எவ்கேனி பிரிகோசின் உள்ளார். ஆரம்பத்தில் ஐயாயிரம் வீரர்களைக் கொண்டதாகவிருந்தது. இப்பொழுது சுமார் இருபத்தையாயிரம் வீரர்கள் உள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடினின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கை பூர்விகமாகக் கொண்டவர்தான் யெவ்கெனி பிறிகோசன். 1979இல் திருட்டுக் குற்றத்துக்காக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் பிறிகோசன் சிறையிலிருந்தார். சிறைக் காலம் முடிந்த பின்னர் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கொட் டோக் கடைகளை ஆரம்பித்தார். இக் கடைகள் இவருக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தன. பின்னர் அதி உயர் உணவகங்களை ஆரம்பித்தார். இவற்றில் ஒன்று நீவா நதியில் ஆடம்பர படகில் அமைக்கப்பட்ட உணவகம்.

New Island என்ற இவரது உணவகத்தில் புடின் தனது பிறந்த நாளை 2003இல் கொண்டாடினார். இதற்கு முன்பாக ஜப்பான் பிரதமர் 2000இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வந்த போது பிறிகோசனின் உணவகமே உணவு தயாரித்து பரிமாறியது. இவருக்கும் புடினுக்குமான நெருக்கம், மாஸ்கோ கிறெம்ளின் மாளிகைக்கு உணவு தயாரித்து விநியோகிக்கும் அளவு நெருக்கமானது. இவரை ‘புடின் செஃப்’ என்றே அழைப்பார்கள். பிறிகோசனுக்கு ராணுவம், பாடசாலைகள் போன்ற பலவற்றிக்கு உணவு தயாரித்து வழங்கும் ஒப்பந்தங்களை புடின் வழங்கியுள்ளார். பிறிகோசனின் நதியில் உலாவும் படகு உணவகத்தில், பல முக்கிய விருந்துகள் புடினால் நடத்தப்பட்டுள்ளன.

வக்னர் ராணுவம் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ராணுவம்தான். உக்ரெய்னின் ரஷ்ய சார்பு டொன்பஸ் பிரதேசத்தில் தனிநாடு கோரும் போராளிகளுக்கு, ரஷ்யாவால் நேரடியாக உதவி செய்ய முடியாமையால், ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த இந்த தனியார் ராணுவத்தை களத்தில் இறக்கியது. இதே 2014இல் கிரீமியாவை ரஷ்யா மீள கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

2022-2023 காலப்பகுதியில் வக்னர் ராணுவத்துக்கு ரஷ்யா சுமார் ஒரு பில்லியன் டாலர்களை ராணுவ வீரர்களுக்குரிய சம்பளமாக வழங்கியுள்ளது.

வக்னர் ராணுவம் சிரியா, சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு போன்ற நாடுகளிலும் செயலாற்றுகின்றார்கள். சிரியாவில் பிறிகோசனுக்கு சொந்தமாக ஒரு எண்ணெய் கிணறும் உண்டு. இது ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் கட்டுப்பாட்டிலிருந்து வக்னர் ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. மற்றும் பல எண்ணெய் கிணறுகளில் சுமார் 25 வீதமான பங்குகளை சிரியா வழங்கியுள்ளது.

சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (CAR )ஆகிய நாடுகளில் தங்கச் சுரங்கங்களை பாதுகாக்கும் வேலையையும் வக்னர் ராணுவம் செய்து வருகின்றது. இதனால் இவர்களுக்கு இந்த நாடுகள் சேவைக்கான சன்மானத்தையும் வழங்கி வருகின்றன. லிபிய உள்நாட்டு யுத்தத்தில் லிபிய ஜெனரல் ஹலீபா ஹப்ரலுடன்(Khalifa Haftar) இணைந்து சுமார் ஆயிரம் வக்னர் ராணுவத்தினர் சண்டையிட்டனர். ஆப்பிரிக்க நாடான மாலியில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக மாலி அரச படைகளுடன் இணைந்து போரிட்டனர். தற்போதைய ரஷ்ய – உக்ரெய்ன் போரில் உக்ரெய்னின் Popasna, Severodonetsk ஆகிய நகரங்களை வக்னர் ராணுவத்தினர்தான் கைப்பற்றினர். இது போரின் ஆரம்ப காலங்களில் கைப்பற்றப்பட்ட நகரங்கள்.

வக்னர் என்பது நாசிகளின் இசைக் கோப்பாளர் பெயர். ஹிட்லரின் விருப்பத்துக்குரிய இசைக் கலைஞர் ரிச்சர்ட் வக்னரின் பெயரையே ராணுவத்தின் பெயராக யெவ்கெனி பிறிகோசன் சூட்டினார். ரிச்சர்ட் வக்னர் நாசிகளின் கொள்கைகளை அதிகம் நேசித்தவர்.

உக்ரெய்ன் போர் ஆரம்பமான பின்னர், பிறிகோசன், புடினிடம் கைதிகளையும் போரில் பங்குபற்றச் செய்வதற்கு அனுமதி பெற்றார். ஏற்கனவே சிறையில் பல ஆண்டுகள் இருந்தமையால் பிறிகோசனுக்கு கைதிகளுடன் இலகுவாக உரையாட முடிந்தது. “உங்களை கடவுளால் தான் சிறையிலிருந்து வெளியேற்ற முடியும். கடவுள் உங்கள் மரணத்திலியே உங்களுக்கு விடுதலை கொடுப்பார். ஆனால், என்னால் உங்களுக்கு விடுதலை கொடுக்க முடியும். நீங்கள் உங்களது தாய் நாடான ரஷ்யாவிற்காக ஆறு மாதங்கள் போரிட்டால், நீங்கள் விடுதலையடைவீர்கள்” என கைதிகளுடன் உரையாடினார். அவர்களது மனோநிலையை நன்கு அறிந்திருந்தமையால் சுமார் இருபதினாயிரம் கைதிகளை ராணுவ வீரர்களாக மாற்றினார். இவர்களே உக்ரெய்னில் முன்னின்று சண்டையிடுபவர்கள்.

ரஷ்யாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்களையும் ரஷ்யாவின் எதிரிகளையும் அழிப்பதற்கும் வக்னர் ராணுவம் பயன்படுத்தப்பட்டது.

வக்னர் மட்டுமல்லாமல் மேலும் பல தனியார் ராணுவ நிறுவனங்களையும் ரஷ்யா போரில் பயன்படுத்தி வருகின்றது. RSB-Group, MAR, ATK-GROUP, Slavonic Corps Limited, Wagner Group, E.N.O.T. Corp, Cossacks.. ஆகியவை குறிப்பிடத்தக்கன. இதனால் ரஷ்யாவுக்கும் ஆபத்து வரலாம் என்பதால் Criminal Code of the Russian Federation: Art. 359 – Mercenarism73 Art. 208 – Establishing Illegal Armed Forces74 சட்டத்தின் கீழ் இவை கண்காணிக்கப்படுகின்றன.

உக்ரெய்னில் மட்டும் 37 ரஷ்ய தனியார் ராணுவ நிறுவனங்கள் இயங்குவதாக Kyiv Post பத்திரிகை இவ்வருட ஏப்ரல் இதழில் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது.

Year formedPrivate military companies
1992Tsar’s Wolves
1998Anti-terrorist Eagle
2002Russian Imperial Movement
2005RSB Group
2008PMC Global
2011E.H.O.T, Vega (Vympel)
2013Wagner, Slavic Corps
2014MAR, Yastreb, ATK Group, Rusich, LLC CHOA “CHVK”, PMC Black Sea, PMC Strazh
2015Polite People, Byzantium
2017ISIS Hunters (Al-Sayyad), Sewa Security Service, Andreyevesky Krest
2018Patriot, Redoubt, Moran Security Group, Ferax, Shield
2022Akhmat, Tiger Battalion, BARS-13 (Russian Legion), ODSSBr Veterans, PMC Tavrida (Tavrida Battalion), Berkut PMC, Zvezda PMC, Storm special forces
2023Convoy, Gazprom, Private Military Medical Company

மேற்கூறப்பட்ட நிறுவனங்களுள் சிலவற்றிற்கு இணையத் தளங்களும் நிரந்தர முகவரியும் உள்ளன. இந்த நிறுவனங்களில் சில சிரியாவிலும் ரஷ்யாவிற்காக போரிட்டு வருகின்றன. மட்டுமல்லாமல் சுமார் முப்பது நாடுகளில் ரஷ்யாவிற்காக இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அடிப்படையில் ரஷ்யா ராணுவத்துடன் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர். அந்தந்த நாடுகளில் உளவு வேலைகளையும் செய்கின்றனர்.

இவர்கள் ரஷ்ய அரசினால் பயிற்றுவிக்கப்படுபவர்கள். இவற்றிற்கான நிதியையும் ரஷ்ய அரசே வழங்குகின்றது. ஆனால், வீரர்கள் ரஷ்யர்களாக மட்டுமே இருக்க வேண்டும். வக்னரின் தலைமையை எந்தவொரு ராணுவ அனுபவமற்ற யெவ்கெனி பிறிகோசன் ஏற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்திலும் வக்னர் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதை நாளை பார்ப்போம்…

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...