No menu items!

இலங்கை இறுதி யுத்தத்தில் Wagner Group ராணுவம்! – 2

இலங்கை இறுதி யுத்தத்தில் Wagner Group ராணுவம்! – 2

ரதன்

முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

உக்ரெய்ன் போரில் ரஷ்யாவுக்காக வக்னர் தனியார் ராணுவம் போரிடுவதைப் போல், உக்ரெய்னுக்காகவும் மேற்கு நாடுகளின் பல தனியார் ராணுவ நிறுவனங்கள் போரிடுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Mozart Group. பிரிட்டனில் இருந்தும் சில நிறுவனங்கள் இந்த போரில் பங்குபெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

வின்ட்மானும் அவரது சகோதரரும் உக்ரெய்னில் பிறந்து சிறுவயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவர்களது நிறுவனமே Vindman’s group. இவர்கள் உக்ரெய்னுக்கு ராணுவ ஆலோசனைகள் உட்பட பயிற்சி போன்ற பல சேவைகளை வழங்குகின்றனர்.

பிளக்வோற்றர் நிறுவன நிறுவனர் எறிக் பிறின்ஸ், இவர் தனியார் ராணுவ நிறுவனமொன்றின் ஊடாக உக்ரெய்னில் போரிட விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும், இதனை அமெரிக்க அதிபர் பைடன் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஜேர்மனியில் இருந்து வெளியாகும் Bild am Sonntag, Der Spiegel ஆகிய பத்திரிகைகள் பிளக்வோற்றர் நிறுவனத்தின் 400 வீரர்கள் உக்ரெய்ன் போரில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. வாசிங்டன் அதை மறுத்துள்ளது.

கடந்த வருடம் பி.பி.சி. செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அமெரிக்க தனியார் ராணுவ நிறுவனம் ஒன்று உக்ரெய்ன் போரில் பாதுகாப்பு முகவர் வேலைக்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. முகவருக்கான சம்பளம் ஒரு நாளைக்கு ஆயிரம் டாலரிலிருந்து 2000 டாலர். அத்துடன் ஊக்க சம்பளமும் வழங்கப்படும் என விளம்பரம் தெரிவித்ததாக பி.பி.சி. குறிப்பிட்டிருந்தது

டொனால்ட் ட்ரம்ப், ஆப்கான் போரை தனியார் அமெரிக்க ராணுவத்திடம் கையளிக்க வேண்டும் எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் காலங்களில் தனியார் ராணுவ நிறுவனங்களே அமெரிக்காவிற்காக போரிடலாம். ஈராக்கில் மட்டும் அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் புதிய போலிஸ் படை மற்றும் புதிய ராணுவ படைகள் உருவாக்கம், எண்ணெய்க் கிணறு பாதுகாப்பு, தலைநகர பாதுகாப்பு படை உருவாக்கம் போன்றவற்றிற்காக பல மில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்றுள்ளன.

தைவானும் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்க தனியார் ராணுவ நிறுவனங்களை நாட ஆலோசனை செய்கின்றது.

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தனியார் ராணுவம் Blackwater. காலத்துக்கு காலம் வெவ்வேறு பெயர்களை பெற்றுக்கொண்ட இந்த ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஏற்ப செயல்பட்டன. வட கரோலினாவில் ஏழாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தங்களது ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிலையத்தையும் அமைத்தார்கள். இவர்களுக்கு அமெரிக்க அரசு போஸ்னியா, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் செயலாற்ற ஒப்பந்தமிட்டது.

Triple Canopy, DynCorp போன்ற பல தனியார் ராணுவங்கள் அல்லது பாதுகாப்பு நிறுவனங்கள் அமெரிக்காவிற்காக கடமையாற்றியுள்ளன.

ஈராக், ஆப்கான் போன்ற நாடுகளில் அமெரிக்கா போரிட்டபோது போரில் பங்குபெற்ற ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரருக்கும் இணையாக தனியார் ராணுவ வீரரும் கடமையாற்றினார். 2018இல் ஐம்பதாயிரம் தனியார் ஒப்பந்தக்காரர்கள் அமெரிக்க ராணுவத்துக்காக வேலை பார்த்தனர். இவர்களில் இருபதாயிரம் பேர் மட்டுமே அமெரிக்கர்கள்.

2010இல் ‘Host Nation Trucking’ என்ற ஒப்பந்தம் எட்டு அமெரிக்க போக்குவரத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. மொத்த ஒப்பந்தத் தொகை 2.16 பில்லியன் டாலர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக விநியோகிக்க வேண்டும். போரின் தொடர்ச்சிக்கு இது அவசியமானது. ஆனால், இந்த எட்டு நிறுவனங்களும் ஆப்கான் நிறுவனங்களை வேலைக்கு அமர்த்தி அவர்களூடாகவே பொருட்களை விநியோகித்தார்கள். Warlord, Inc ., என்ற காங்கிரஸ் விசாரணை அறிக்கை இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

பிளக்வோட்டர் ராணுவம், 2007 செப்டம்பர் 17இல் ஈராக்கில் 17 அப்பாவி ஈராக்கியரை கொன்றனர். இச் சம்பவத்தில் அமெரிக்க அரசு மீது குற்றஞ்சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2015இல் இக்கொலைகளில் ஈடுபட்ட நால்வருக்கு அமெரிக்காவால் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், 2020 டிசம்பர் 22இல் அப்போதைய அமெரிக்க அதிபர் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார். இக் கொலைகளை The Nisour Square Massacre என அழைப்பார்கள்.

தனியார் ராணுவ அமைப்பை அரசுகள் ஏற்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்குமான பிரதான காரணம் தவறுகள் ஏதாவது ஏற்படின் அது தனியார் ராணுவத்தின் மீதே பழி ஏற்படும். அரசு காப்பாற்றப்பட்டுவிடும் என்பதற்காகத்தான்.

2005இல் அமெரிக்க கடற்படை வீரர்கள் 24 ஈராக்கியரை கொன்றனர். இதனை Haditha massacre என அழைப்பார்கள். ஒரு அதிகாரிக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு ராச்சியம் ரகசியமாக யேமன் நாட்டில் ஈரானின் அனுசரனையுடன் போரிட்ட கூதி (Houthis) தீவிரவாதிகளுக்கு எதிராக தனியார் ராணுவங்களை போரிடச் செய்தது. கொலம்பியா, பனாமா, எல் சல்வடோர், சிலே ஆகிய நாட்டின் நீண்ட கால அனுபவம் கொண்ட அதிகாரிகளின் தலைமையில் தனியார் ராணுவங்கள் யேமனில் போரிட்டன. இவ் அதிகாரிகள் தங்களது நாட்டில் போதை பொருள் சட்ட விரோத வியாபாரத்துக்கு எதிராக போரிட்டவர்கள். இவர்கள் தங்களது நாடுகளில் பெற்ற சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிக சம்பளத்தை ஐக்கிய அரபு ராச்சியத்தில் பெற்றார்கள். அதேநேரம், இவர்களுக்கு கிடைக்கும் சம்பளம், ஐக்கிய ராச்சியத்தில் அமெரிக்க தனியார் ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட மிக மிகக் குறைவு.

இதுபோல் சூடான், சாட், எரித்திரியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க ராணுவ வீரர்கள் குறைந்த சம்பளத்தில் சவூதி அரேபியாவிற்காக யேமனில் போரிடுகின்றார்கள்.

கேர்டிஸானின் தலைநகரான ஏர்மிலில் (Irbil) பல நாடுகளிலிருந்து வந்த தனியார் ராணுவங்களை காணலாம். மத்திய கிழக்கிற்கான சந்தைப்படுத்தும் களமாக ஏர்மில் உள்ளது.

ஓஸ்பெக்கிஸ்தான் (Uzbekistan)-ஐ மையமாகக் கொண்ட தனியார் ராணுவ நிறுவனம் Malhama Tactical. இவர்கள் ஜிகாதிகளுக்காக சிரியாவில் போரிட்டுள்ளார்கள். சிரியா தனது நாட்டிற்காக போரிடும் தனியார் ராணுவ நிறுவனங்களுக்கு போரிடுவதற்கான சேவைக் கட்டணத்துடன், எண்ணெய் கிணறுகளில் சுமார் 25 வீதம் வரையிலான பங்குகளையும் வழங்குகின்றது.

ரசுகளைப் போல் தீவிரவாத அமைப்புகளும் தனியார் ராணுவங்களை வேலைக்கமர்த்தி போர்க் களங்களுக்கு அனுப்புகின்றனர். இன்று கடலில் ஆயுதம் மற்றும் முக்கிய பொருட்களை ஏற்றிவரும் கப்பல்கள் பாதுகாப்பாக கரையேறுவதற்கும் தனியார் ராணுவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல் அரசு சார்பற்ற நிறுவனங்கள் சமாதான படைகளாகவும் தனியார் ராணுவங்களை பயன்படுத்துகின்றனர். கடல், தரை, விமானம், கணணி ஆகிய களங்களில் தனியார் ராணுவங்கள் இயங்குகின்றன. இனி வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என கருதப்படுகின்றது.

இதுபோல் தனியார் ராணுவம் போரில் ஈடுபடுவதால் ஏற்படும் விளைவுகள் பல.

பொதுவாக ராணுவ வீரர்கள் தங்களது நாட்டின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், தனியார் ராணுவம் போரின் போதும் தங்களை சந்தைப்படுத்துவார்கள். வேறு பல நாடுகளும் இவர்களின் சேவையை நாடுவார்கள். மேலும், இவர்கள் தங்களை வணிக நிறுவனங்களாகவே கட்டமைத்துள்ளார்கள். DynCorp International, Armor Group உட்பட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படுகின்றன. இந் நிறுவனங்கள் பெறும் லாபமே இவர்களை ஊக்கப்படுத்துகிறது.

1969இல் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய Executive Outcomes நிறுவனம் ஆப்பிரிக்க கண்ட அரசுகளுக்காக போரிட்டது. இராணவ வீரர்களை ஒரு வருடத்துக்கு 40 மில்லியன் பெற்றுக்கொண்டு பயிற்றுவித்தார்கள். ருவண்டா படுகொலைகளின் போது, இவர்கள் ஐ.நா சபையிடம், 120 மில்லியன் டாலர்கள் தங்கள் நிறுவனத்துக்கு சேவைக் கடடணமாகக் கொடுத்தால், தாங்கள் போரை நிறுத்தச் செய்வோம் எனக் கோரியது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. சபை அப்போது மறுத்துவிட்டது. அப்போதைய ஐ.நா. செயலாளர் கோர்பி அண்ணன், “தனியார்மயப்படுத்தப்பட்ட அமைதிக்கு உலகம் தயாராக இல்லை” எனக் கூறினார். எட்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.

லாபத்தை குறியாகக் கொண்டே தனியார் ராணுவ நிறுவனங்கள் இயங்குவதால் பல நாட்டு ராணுவ வீரர்களும் ஒரு போரில் ஈடுபடுவார்கள். அரசியல் நிலை மாற்றங்கள், சமாதானத்தை இவர்கள் கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.

தனியார் நிறுவன வீரர்களுக்கும் நிறுவன தலைமைக்கும் முரண்பாடுகள் ஏற்படின் எதிர்மறையான விளைவுகளும் ஏற்படும். ஒரு முக்கிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ரஷ்யாவில் வக்னர் ராணுவம் ரஷ்ய அரசையே கைப்பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அபாயம் இருந்தும் ஏன் அரசுகள் தனியார் ராணுவங்களை நாடுகின்றன?

ஒரு நாட்டின் ராணுவ வீரருக்கு ஆகக் குறைந்த கல்வி, உடற்பயிற்சி தகுதிகள் வேண்டும். வீரர்கள் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆனால், தனியார் ராணுவ வீரர்கள் அவ்வாறல்ல. தேவைக்கேற்ப சிறையையும் நாடுவார்கள். இவர்கள் மீது இலகுவாக குற்றஞ்சாட்டலாம். ராணுவத்துக்கான செலவை விட தனியார் நிறுவனங்களுக்கான செலவு குறைவு. லாபத்தை குறியாக கொண்டு இயங்குவதனால், குறிக்கோளை விரைவில் வென்றெடுப்பார்கள்.

தனியார் ராணுவம் என்பதனை விட ஆயுததாரிகள் என்பதே சரியான சொற்பதம்.

ஒரு ராணுவ வீரர் இறப்பின் அவருக்கான சம்பளக் கொடுப்பனவுகள், ஓய்வூதிய கொடுப்பனவுகள் எனச் செலவு அதிகம். தனியார் ஆயுததாரி இறந்தால், அதனை தனியார் நிறுவனமே கவனத்திற்கொள்ளும், அரசல்ல.

அதேநேரம், இதுவே தனியார் ஆயுததாரிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையுமாகும். இவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை யார் கவனத்திற்கொள்வது? போரின் போது இவர்கள் கைது செய்யப்பட்டால் யார் குரலெழுப்புவது? அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்காக ஈராக்கில் களத்தில் போரிடும் பிரேசில் நாட்டு ஆயுததாரி கைது செய்யப்பட்டால், அவரது விடுதலைக்காக பிரேசில் குரலெழுப்புமா அமெரிக்கா குரல் கொடுக்குமா?

அதே பிரேசில் வீரர் ஈராக்கிய மக்கள் சிலரை படுகொலை செய்தால், அவர் மீதான விசாரணையை யார் மேற்கொள்வார்கள்?

ஐ.நா. சபை தனியார் ஆயுததாரிகள் பற்றிய ஒரு சில சட்டங்களைக் கொண்டிருந்தாலும் சர்வதேச ரீதியாக இந் நிறுவனங்கள் சட்டமயப்படுத்தப்பட வேண்டும். இந் நிறுவனங்களுக்காக போரிடுபவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சரி இலங்கைக்கு வருவோம்…

வக்னர் தனியார் ராணுவ நிறுவனம் ரஷ்யாவுக்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில், அந்நாடுகளின் அரசுகளால் போர்களில் பயன்படுத்தப்பட்டதை பார்த்தோம். இந்நிலையில், இலங்கையிலும் வக்னர் ராணுவம் இயங்கியதாக ‘பிரண்ட்லைன்’ என்ற பத்திரிகையின் ஜூன் 26, 2023 இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பல்வேறு சிந்தனைக் குழுக்களின் பகுப்பாய்வின்படி, வாக்னர் ராணுவ குழு ஆசியாவிலும் செயலில் உள்ளது. இலங்கையில் பல PMCகள் வேலை செய்கின்றன, உக்ரெய்ன் ஆலோசகரான மோல்ஃபார் (Molfar) அறிக்கையில், வெளிநாட்டில் பணிபுரியும் 37 ரஷ்ய ராணுவ நிறுவனங்களின் பட்டியல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் புலனாய்வாளர்கள், இலங்கையில் PMCகளில் பணிபுரியும் ரஷ்ய ஆபரேட்டர்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிந்துள்ளனர்’ என அந்த கட்டுரையை எழுதிய டியூட்சே வெல்லே (Deutsche Welle) குறிப்பிடுகிறார்.

முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் இலங்கை அரச படைகளுடன் வக்னர் உட்பட பல தனியார் ராணுவங்கள் இணைந்து இயங்கியனவா என்ற கேள்வியை இந்த கட்டுரை எழுப்புகிறது. சாத்தியங்கள் இல்லை எனக் கூறவிடவும் முடியாது.

முற்றும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...