No menu items!

இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் – அன்பா? அரசியலா? – மிஸ் ரகசியா!

இளையராஜாவை வாழ்த்திய முதல்வர் – அன்பா? அரசியலா? – மிஸ் ரகசியா!

”இளையராஜா பிறந்த நாளுக்கு நேர்ல போய் வாழ்த்து சொல்லியிருக்கிறாரே முதல்வர்.. என்ன காரணம்?” அலுவலகத்துக்குள் வந்த ரகசியாவிடம் உடனே கேள்வியை வைத்தோம்.

“ஒரு லைம் ஜூஸ் சொல்லுங்க…ஜூன் ஆச்சு இன்னும் வெக்க போகல..” என்று அலுத்துக் கொண்டே ஆரம்பித்தாள் ரகசியா.

“இது இளையராஜாவோட 80வது பிறந்த நாள். அதனால நேர்ல போய் வாழ்த்தலாம்னு முதல்வர் முடிவு பண்ணியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவரை பாஜக சொந்தம் கொண்டாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல நாமும் நெருக்கம் காட்டுவது நல்லது என்ற அரசியல் நோக்கமும் இருக்கு”

“இளையராஜா என்ன சொன்னாராம்?”

“முந்தின நாள் இரவே இளையராஜாவுக்கு தகவல் சென்றிருக்கிறது. அவர் இதை எதிர்பார்க்கல. கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் மகிழ்ச்சினு இருந்திருக்கிறார். வீட்டுக்கு வரவா ஸ்டூடியோவுக்கு வரவா என்று முதல்வர் அலுவலகத்துலருந்து கேட்டிருக்காங்க. ஏழு மணிக்கு ஸ்டூடியோ வந்துடுவேன்னு இளையராஜா சொல்லியிருக்கிறார். அதனால் பத்து மணி போல் ஸ்டுடியோவுக்குப் போய் வாழ்த்து சொல்லியிருக்கிறார் முதல்வர். இதில் இளையராஜா ரொம்பவே ஹேப்பி”

’பாஜக தரப்புலருந்து யாரும் போகலையே?”

”கமலாலயத்துல கொஞ்சம் லேட்டாதான் இதை யோசிச்சிருக்காங்க. நேர்ல போய் வாழ்த்தியிருக்கலாமே என்று அப்புறம் யோசிச்சிருக்காங்க. ஆனா சிஎம் முந்திக்கிட்டார்”

”கலைஞர் நூற்றாண்டு விழாவும் ஜோரா தொடங்கிருச்சு போல”

“ஆமாம். இதிலயும் முதல்வர் ரொம்பவே ஹேப்பி. ஆட்சியில இருக்கும்போது கலைஞர் நூற்றாண்டு வந்ததுனால சிறப்பா கொண்டாட முடியும்னு மூத்த தலைவர்கள்கிட்ட சொன்னாராம். அதைதான் நூற்றாண்டு விழாவுல துரைமுருகன் குறிப்பிட்டார்”

“முதல்வர் ஹேப்பி ஆனா அமைச்சர்கள் சிலர் ஹேப்பியா இல்லைனு நியூஸ் வருதே?”

“நீங்க கேள்விப்பட்டது உண்மைதான். ஒரு அமைச்சர் அமெரிக்காவுக்கே திரும்பப் போயிரலாமானு யோசிச்சுக்கிட்டு இருக்கிறதா தகவல்கள் வருது”

“யாரு பிடிஆரா?”

”கரெக்ட். பிடிஆர்தான். நிதியமைச்சர் பதவியைப் பறிச்சுட்டாங்கனு ஏற்கனவே அதிருப்தில இருந்தார். இப்ப மதுரைல அமைச்சர் மூர்த்தியோட செல்வாக்கு அதிகரிச்சு வர்றதுல இன்னும் டென்ஷன் ஆகியிருக்கிறார். இந்த அரசியல் நமக்கு சரிபட்டு வராது நிம்மதியா அமெரிக்காவுக்கே போயிரலாமானு யோசிக்கறதா மதுரை திமுகல பேசிக்கறாங்க. அவர் அமெரிக்காவுக்கு கிளம்பி போய்ட்டாருனு கூட சிலர் அறிவாலயத்துல சொன்னாங்க”

“உண்மை என்ன?”

“அவர் அதிருப்தில இருக்கிறது உண்மைதான். ஆனா அமெரிக்காவுக்கு கிளம்பிப் போற அளவுலாம் இல்லை. மதுரைல நடந்த கல்லூரி விழாவுல வெற்றியும் தோல்வியும் தற்காலிகம். விடா முயற்சியும் ஊக்கமும் இருந்தா ஜெயிக்கலாம்னு பேசியிருக்கிறார். இது மாணவர்களுக்கு சொன்னதில்ல, தனக்கே சொல்லிக்கிட்டதுனு சொல்றாங்க. மதுரை அமைச்சர் மூர்த்திதான் பிடிஆர் பத்தி தப்பான நியூஸையெல்லாம் பரப்புறார்னு பிடிஆர் தரப்பு ஆட்கள் சொல்றாங்க”

”பாவம் பிடிஆர். சரி, வேறு எந்த அமைச்சர்கள் வருத்தத்துல இருக்காங்க?”

“லிஸ்ட்ல முதல்ல இருக்கிறது செந்தில் பாலாஜி. அவருக்கு கட்சிக்குள்ள அதிருப்தி அதிகாமாகிட்டு வருதாம். முதல்வரும் முகம் கொடுத்து பேசலனு சொல்றாங்க. அவர் துறை மாற்றப்படுவார்னு சொல்றாங்க”

“அடுத்து?”

“மருத்துவத் துறை அமைச்சர் மா.சு.வுக்கும் சிக்கல் வந்திருக்கு. அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செஞ்சதுல சிஎம்க்கு அதிருப்தி வந்திருக்கு. நாம் எச்சரிக்கையா இருந்திருக்கணும்னு சொல்லியிருக்கிறார். மா.சு.வுக்கு பதில் மருத்துவம் தெரிந்த ஒருவரை மருத்துவத் துறை அமைச்சராக்கி மா.சு.வுக்கு வேறு துறை கொடுக்கலாம் என்றும் செய்திகள் வருது”

“திமுக அமைச்சர்களுக்கு மொத்தத்துல நேரம் சரியில்லை போல. சரி, அதிமுக நிலை எப்படியிருக்கு?”

“ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தோட இளைய மகன் திருமணம் ஜூன் 7-ம் தேதி நடக்குது. சசிகலா மற்றும் தினகரனை நேர்ல சந்திச்சு இந்த திருமணத்துக்கான அழைப்பிதழை கொடுத்திருக்கார் வைத்தியலிங்கம். அப்ப நாம ஒத்துமையா இருந்தாத்தான் பாஜக மேலிடம் நம்மளைக் கண்டுக்கும்னு சொல்லி இருக்கார். அதனால இந்த திருமணத்துல ஓபிஎஸ், சசிகலா, தினகரன் சந்திப்பு இருக்கும்னு ஓபிஎஸ் டீம் ஆளுங்க பேசிக்கறாங்க.”

“அவர் அதிமுகவுக்கே போயிடுவார்னு சொல்லிட்டு இருந்தியே…”

”அதுவும் ஒரு பக்கம் போய்ட்டு இருக்கு. எடப்பாடி டீம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சிலருக்கும் வைத்தியலிங்கம் பத்திரிகை தந்திருக்கார். அதனால எந்த பக்கமும் அவர் சாயலாம்னு சொல்றாங்க.”

“என்னவோ போ வைத்தியலிங்கம் கதையே புரியல. ஆமா எடப்பாடி பழனிசாமி எங்க ஆளையே காணோம்?”

“அவர் ஒரு வாரமா ஓய்வுல இருக்கார். சேலத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முதல்ல அவர்தான் தலைமை தாங்கறதா இருந்தது. ஆனா அவருக்கு உடல்நிலை சரியில்லாததால புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கைகால் வலி, முதுகு வலியால பாதிக்கப்படிருக்காராம் அதனால டாக்டர்களோட அட்வைஸுக்கு பிறகு சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அறிக்கைகள் வெளியிட்டு வர்றார் எடப்பாடி.”

“முதல்வர் ஸ்டாலினை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சந்திச்சு இருக்காரே?”

“டெல்லி முதல்வரின் அதிகாரத்தை பறிக்கும் அவசரச் சட்டத்தை எதிர்த்து ராஜ்யசபால திமுக ஓட்டு போடணும்னு கேட்டு அவர் ஸ்டாலினை சந்திச்சிருக்கார். அதுக்கு முதல்வர் ஸ்டாலின், திமுக இதை எதிர்க்கும் ஆதரிக்காது-ன்னு சொல்லி அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்கார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பிடி கொடுக்காமல் நழுவுவது பற்றி கெஜ்ரிவால் முதல்வரிடம் சொல்ல, ‘அதை பார்த்துக்கறேன். உங்களுக்கு ஆதரவா எல்லாம் நடக்கும்’ன்னு அவருக்கு நம்பிக்கை கொடுத்து ஊருக்கு அனுப்பி வச்சிருக்காரு முதல்வர் ஸ்டாலின்.”

”திமுக தலைவர் சொன்னா காங்கிரஸ் கேட்டுருமா?”

“கேக்குமா கேக்காதங்கறது மேகதாது அணை கட்டுற பிரச்சினைல தெரிஞ்சிடும் என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...