No menu items!

வந்தாச்சு ரிலையன்ஸ் ஜியோ சினிமா! – தாக்குப் பிடிக்குமா நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்

வந்தாச்சு ரிலையன்ஸ் ஜியோ சினிமா! – தாக்குப் பிடிக்குமா நெட்ஃப்ளிக்ஸ், அமேசான்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ‘வியாகாம் 18’ நிறுவனம் சுமார் 3.05 பில்லியன் அமெரிக்க டாலர்களை, போகிறப் போக்கில் கடாசிவிட்டு போயிருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களுக்கான இரண்டு மாத கொண்டாட்டமாகி இருக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஸ்ட்ரீமிங் உரிமையை வாங்குவதற்காகதான் இவ்வளவு பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தம்.

2023 முதல் 2027 வரை நடக்கும் ஐபிஎல் போட்டிகளின் ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பு உரிமையை வாங்கிவிட்டால், அதை வைத்து இந்திய ஒடிடி மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஹாட் ஸ்டாரிடன் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என கணக்குதான் இதற்கு காரணம்.

வியாகாம் 18 வசமிருந்த ‘வூட்’ ஒடிடி-யில்தான் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று ஒடிடி கில்லாடிகள் கூட யூகித்து இருந்தார்கள். ஆனால், கிரிக்கெட்டை சினிமாவுக்கான ஒடிடி தளமாக உருவாக்கப்பட்ட ‘ஜியோ சினிமா’வில் அதிரிப்புதிரியாக களத்தில் இறக்கிவிட்டார் முகேஷ் அம்பானி.

அடுத்து, ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமாவில் எந்தவித கட்டணமும் இல்லாமல், இலவசமாக பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது வியாகாம் 18.

அதுவரையில் தங்களது மொபைல் ஃபோன்களிலும், டிவிகளிலும் டவுன்லோட் செய்து வைத்திருந்த ஹாட்ஸ்டாரை மறந்துவிட்டு, பட்டென்று ஜியோ சினிமாவை தேடி ஃப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் அலைப்பாய்ந்தார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

முகேஷ் அம்பானி நினைத்த மாதிரியே கிரிக்கெட் ரசிகர்களிடமும் ‘ஜியோ சினிமா’ பக்காவாக சென்றடைந்து இருக்கிறது.

இதற்கு முன்பாகவே, ஹாட்ஸ்டாருடன் கைக்கோர்த்து இருந்த, ஹெச்பிஒ பக்கம் முகேஷ் அம்பானியின் கவனம் திரும்பியிருந்தது. அடுத்து என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.

ஹாலிவுட் படங்கள், ஒரிஜினல்ஸ் என தனது லைப்ரரியில் எக்கச்சக்கமான ஹிட்களை வைத்திருக்கும் ஹெச்பிஒ மற்றும் வார்னர் ப்ரதர்ஸ் நிகழ்ச்சிகளை இனி ஜியோ சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.

களத்தில் இறங்கி போரிடுவதற்கு முன்பாகவே, போட்டியாளரின் பலத்தைக் குறைத்துவிட்டால், வெற்றியை நோகாமல் கொண்டாடலாம் என்ற அம்பானி ப்ரதர்ஸின் ஃபார்மூல இங்கேயும் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

2016-ல் மொபைல் டேடா இலவசம் என்ற அறிவிப்போடு ஜியோ சந்தையில் நுழைந்தது. அவ்வளவுதான். அதுவரையில் மார்க்கெட்டில் பல ஆயிரம் கோடிகளை செலவழித்து, பத்தாண்டுகளுக்கும் மேல் நெட்வொர்க்குகளை பலப்படுத்த கடுமையாக உழைத்த இதர தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலைகுலைந்துப் போயின. வேறு வழியில்லாமல், அப்படியே யூ டர்ன் போட்டு ஜியோவுக்கு பின்னால் இரண்டாமிடம், மூன்றாமிடத்தைப் பிடிக்கவே போட்டி போட வேண்டியதாயிற்று.

இப்பொழுதும் ஒடிடி-சந்தையில் அதே பழைய வரலாறுதான் நிகழ்ந்திருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்த மூன்று ஒடிடி தளங்களும் இந்தியாவில் தங்களுக்கென சந்தாதாரர்களைப் பெற, எக்ஸ்க்ளூசிவ் திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களை பெரும் பொருட்செலவில் எடுத்து படாதப்பாடு பட்டுகொண்டிருக்கின்றன. இவர்களின் தொடர் முயற்சியால், அதிகம் சந்தா வசூலிக்கும் நெட்ஃப்ளிக்ஸூக்கு 8 மில்லியன் சந்தாதாரர்களும், அமேசானுக்கு 17 மில்லியன் சந்தாதாரர்களும், ஹாட்ஸ்டாருக்கு 49 மில்லியன் சந்தாதாரர்களும் இருந்தனர்.

2023-ம் முதல் காலாண்டில் ஜியோ சினிமாவுக்கு வெறும் 10 மில்லியன் சந்தாதாரர்கள்தான் இருந்தார்கள். ஆனால் ஐபிஎல் போட்டிகளின் ஸ்ட்ரீமிங்கை காசு கொடுக்காமல் பார்க்கலாம் என்று ஜியோ சினிமா தனது தில்லாலங்கடி ஃபார்மூலாவை செயல்படுத்த, இப்போது ஹாட்ஸ்டார் 8 மில்லியன் சந்தாதாரர்களை இழந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

பெரும் ஆரவாரத்துடன் அறிமுகமான ஸீ5 இப்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. இதனால் சோனி லைவ் உடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாக போய்கொண்டிருக்கிறது.
இப்படி மற்ற ஒடிடி தளங்கள் இந்தியச் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜியோ சினிமா ஷார்ட் கட்டில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

2019 ஜூலை மாதம் ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகள் ஸ்ட்ரீமிங் ஆன போது அதை 2.5 மில்லியன் பேர் பார்த்திருந்தார்கள். இவர்கள் ஹாட்ஸ்டாருக்கு சந்தா கட்டி பார்த்தவர்கள். ஆனால் ஜியோ சினிமா இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வழங்கியதால் இந்த வருடம் 3.2 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைக் கண்டுகளித்திருக்கிறார்கள்.

இந்த 3.2 கோடி பேரில் மூன்றில் ஒரு பங்கு பார்வையாளர்களை மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்தாரர்களாக தக்க வைத்தாலே ஜியோ சினிமாவுக்கு போதுமானது. ஒடிடி சந்தையில் முதலிடத்தைப் பிடித்துவிடலாம்.

இப்படியொரு கணக்கு ஒரு பக்கம். ஆனால் மறுபக்கம் ஹெச்பிஒ உடன் கூட்டு சேர்ந்ததால் ஜியோ சினிமாவின் பலம் இப்போது வேறு தளத்திற்கு சென்றடைந்திருக்கிறது. பவ்லேறு பிரிவுகளிலான திரைப்படங்கள், டிவி ஷோக்கள், ஒரிஜினல்கள், இவற்றோடு வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள், ஹெச்பிஒ-வின் நிகழ்ச்சிகள் என இப்போது ‘கேம் ஆஃப் த்ரான்ஸ்’, ‘சக்சஸ்ஷன்’, ஹாரி பாட்டர் தொடர்’ என ஜியோ சினிமா களைக்கட்ட ஆரம்பித்திருக்கிறது.

அடுத்து இந்திய மொழிகளில் 70 படங்களின் ப்ரீமியரையும், 30 நிகழ்ச்சிகளையும் வாரந்தோறும் ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறது அம்பானியின் கம்பெனி.

இப்படி ஜியோ சினிமா பில்லியன் கணக்கில் பணத்தை இறைப்பதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம், ஸ்ட்ரீமிங் சந்தை நாளுக்குநாள் வளர்ச்சிக்கண்டு வருகிறது. 2021-ல் இந்தியன் லாபி க்ரூப் சிஐஐ மற்றும் பாஸ்டன் கன்சல்ட்டிங் க்ரூப் இணைந்து வெளியிட்ட அறிவிக்கையில், 2030-ம் ஆண்டில் இந்திய ஸ்ட்ரீமிங் சந்தை 22%-25% வரை அதிகரிக்கும் என தெரிவிக்கிறது. அதாவது 13-15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் புரளும் சந்தையாக மாறிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மொபைல் டேடாவில் கட்டவிழ்த்து விட்ட அதிரடி சலுகைகளை ஒடிடி தளத்திலும் அம்பானி கையிலெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா கொஞ்ச நாட்கள் இலவசமாக கொடுத்துவிட்டு பின்னர் வருடாந்திர சந்தாவாக நிர்ணயிக்கும் எனவும் கூறப்படுகிறது. அடுத்து தற்போது ஒடிடி தளங்களின் வருடாந்திர சந்தாக்கள் எல்லாவற்றையும் விட குறைவான சந்தாவை வாங்கி சந்தையை தன் வசப்படுத்த ஜியோ சினிமா முயலும் என்கிறார்கள் ஒடிடி துறையைச் சேர்ந்தவர்கள்.

ஜியோ சினிமாவுடன் வியாகாம் 18-ன் வூட் ஸ்ட்ரீமிங் தளம் இணைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது ஜியோ சினிமா நிகழ்ச்சிகளின் தயாரிப்பில் இறங்குவதற்கான அடிப்படை வேலைகளை முழுவீச்சில் ஆரம்பித்திருக்கிறது. பல நூறு கோடிகளை தனது நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கியும் வைத்துவிட்டது.

இப்படியாக ஜியோ சினிமாவின் மாஸ் எண்ட்ரீ, ஒடிடி களத்தில் இருக்கும் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகியவற்றை உடனடியாக பாதிக்காது என்றாலும், இதர ஒடிடி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என இப்பொழுதே அலறல் ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...