No menu items!

டி20 உலகக் கோப்பை – அவுட்டாகப் போகும் வீரர்கள்

டி20 உலகக் கோப்பை – அவுட்டாகப் போகும் வீரர்கள்

ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை போட்டிகளின்போது புதிய வீரர்கள் உருவாவதும், பழைய நட்சத்திரங்கள் உதிர்ந்துபோவதும் சகஜம். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் உருவாகவுள்ள  புதிய நட்சத்திரங்கள் யார் என்பது தொடர் முடிந்த பிறகுதான் தெரியவரும். ஆனால் இந்த தொடருடன் ஓய்வுபெற்று உதிரப் போகும் நட்சத்திரங்கள் யார் என்ற விவரம் இப்போதே வதந்திகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றன.

அந்த பட்டியலில் உள்ள நட்சத்திர வீரர்களைத் தெரிந்துகொள்வோம்…

விராட் கோலி:

எந்த விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டு. விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்குக்கும் அது பொருந்தும். இந்திய அணியில் இடம் பிடிக்க சுப்மான் கில், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் என பல இளம் வீரர்கள் வெளியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இடம்கொடுக்கும்  வகையில்  இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலியை டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுமாறு பிசிசிஐ வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.  கோலியின் சுமைகளைக் குறைக்கவும், டெஸ்ட் போட்டிகளில் அவர் கூடுதல் கவனத்தைச் செலுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோலி ஓய்வுபெற்ற பிறகு அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் வலிமையான ஒரு புதிய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்ததாலேயே ‘கிரிக்கெட் மட்டும் வாழ்க்கை இல்லை. அது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே’ என்று கூறியுள்ளார் விராட் கோலி.

ரோஹித் சர்மா:

விராட் கோலியைப் போல் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் உடனடியாக எல்லாம் ரோஹித் சர்மா ஓய்வு பெறமாட்டார். அதே நேரத்தில் இன்னும் ஓராண்டுக்கு மேல் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது.

டி20 போட்டிகள் சுறுசுறுப்பான வீரர்களுக்கான போட்டி. ஆனால் ரோஹித் சர்மா பீல்டிங்கில் சற்று மந்தமாக இருப்பதால், இந்த வகைப் போட்டிகளில் அவரை ஆடவைப்பது அணிக்கு பீல்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேர்வுக் குழுவினர் கருதுகிறார்கள். எனவே  இந்த டி20 உலகக் கோப்பைதான் ரோஹித் சர்மாவின் கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும்.  கோலி, ரோஹித் ஆகிய இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் தளபதிகளுக்கும் இது கடைசி உலகக் கோப்பை என்பதால் இந்த தொடரில் அவர்கள் அதிக ஆக்ரோஷத்துடன் ஆடி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.

தினேஷ் கார்த்திக்:

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் கடைசி நேரத்தில் இடம்பிடித்த இந்திய வீரர் தினேஷ் கார்த்தி. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பினிஷராக செயல்பட்ட விதம், அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. கடைசி 5 ஓவர்களை ஆடுவதற்கென்றே ஆஸ்திரேலியாவுக்கான பிளைட்டில் ஏற்றி அனுப்பப்பட்ட இவரது வயது 37. 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் வந்தும் போய்க்கொண்டும் இருந்த இவருக்கு வயதாவதால் இதுதான் இவருக்கு கடைசி உலகைக் கோப்பை. அதனாலேயே இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மறக்க முடியாத தொடராக மாற்றவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

2007-ம் ஆண்டில் முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், தனது கடைசி டி20 உலகக் கோப்பையிலும் அதே சாதனையை படைக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் இந்திய ரசிகர்கள்.

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச்:

இந்தியாவைப் போலவே ஆஸ்திரேலியாவும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் தங்களின் 2 நட்சத்திர வீரர்களுக்கு விடைதர உள்ளது. அந்த 2 வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். மற்றொருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.

கடந்த மாதம் ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிஞ்ச், இந்த   உலகக் கோப்பைக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த முறை கேப்டனாக இருந்து ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையை வாங்கிக்கொடுத்த ஆரோன் பிஞ்ச், அதே சாதனையை மீண்டும் செய்து டி20 தொடரில் இருந்து விலக விரும்புகிறார். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக டேவிட் வார்னரும் டி20 போட்டிகளில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.

டிரெண்ட் போல்ட்:

பேட்ஸ்மேன்களின் ஆட்டமான டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட். பேட்ஸ்மேன்களால் எளிதில் அடிக்க முடியாத அவகையில் பந்துவீசும் அவர், இதுவரை 48 டி20 போட்டிகளில் 66 விக்கெட்களைக் கொய்துள்ளார். ஓவருக்கு சராசரியாக ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்காத டிரெண்ட் போல்ட், நியூஸிலாந்து அணியின் துருப்புச் சீட்டாக உள்ளார். இந்நிலையில் பல்வேரு நாடுகளிலும் நடக்கும் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த தொடருடன் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...