No menu items!

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் மர்மம்

சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் மர்மம்

சத்குரு ஜக்கி வாசதேவை மீண்டும் சர்ச்சைகள் சூழ்கின்றன. கோவையில் உள்ள அவரது ஈஷா யோகா மையதிற்கு பயிற்சிக்கு சென்று மாயமான பெண், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் ஈஷாவில் என்னதான் நடக்கிறது? மக்களின் ஆன்மிகத் தேடல் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா?

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த பழனிகுமார் என்பரின் மனைவி சுபஸ்ரீ. திருப்பூரில் உள்ள  பனியன் நிறுவனத்தில் இத்தம்பதியினர் பணியாற்றி வருகின்றனர். சுபஸ்ரீ கடந்த நான்கு வருடமாக ஈஷா  யோகா மையத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வந்தார். இதனிடையே கடந்த டிசம்பர் 11ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற ஒரு வார யோகா பயிற்சிக்காக ஈஷா மையத்தில் சுபஸ்ரீ தங்கியுள்ளார். கடந்த டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில், மனைவியை அழைத்துச் செல்ல கணவர் பழனிக்குமார் ஈஷா மையத்திற்கு வந்து காத்திருந்துள்ளார். ஆனால், பயிற்சிக்கு வந்த அனைவரும் யோகா மையத்திலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், சுபஸ்ரீ மட்டும் வெளியே  வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பழனிக் குமார் ஈஷா மைய நிர்வாகிகளிடம்  கேட்டதற்கு, பயிற்சிக்கு வந்த அனைவரும் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பழனிக்குமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, சுபஸ்ரீ டிசம்பர் 18 ஆம் தேதியன்று காலையிலேயே ஈஷா மையத்திலிருந்து வெளியில் சென்றதும், ஈஷாவிலிருந்து இருட்டுப்பள்ளம் பகுதி  வரை கால் டாக்ஸியில் சென்றதும்,  பின்னர் அவர் அங்கிருந்து பதற்றத்துடன் ஓடிச்செல்வதும் தெரியவந்தது. மேலும், சுபஸ்ரீ சாலையில் சென்ற ஒரு பெண்ணிடம் செல்போனை வாங்கி கணவர் பழனிக்குமாருக்கு பேச  முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து சுபஸ்ரீயை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று செம்மேடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் சுபஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, சுபஸ்ரீயின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு சிறப்பு மருத்துவர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கையில், ‘சுபஸ்ரீ உயிரிழந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம். நுரையீரலில் நீர் இறங்கியுள்ளது. அவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை’ உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஈஷாவிலிருந்து அனைவரும் பயிற்சி முடிந்து வெளியேறிய நிலையில், சுபஸ்ரீ மட்டும் முன்னதாகவே வெளியேறியது ஏன்? தனது உடமைகளைக் கூட எடுக்காமல் பயிற்சிக்காக அணிந்திருந்த உடையுடன் பதறியடித்து ஓடுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாத நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், “இச்சம்பவத்தில் கடந்த 12 நாட்களாக என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடமை’’ என்று கூறியுள்ளார்.

ஈஷா யோகா மையம் இதுபோல் சர்ச்சைக்குள்ளாவது இது முதல்முறையல்ல. 2016இல் கோயம்புத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் – சத்யஜோதி தம்பதியினர் முதன்முதலில், ‘எங்கள் மூத்தப் பெண் கீதா, சின்னப் பெண் லதா இருவரையுமே மூளைச்சலவை செய்து சத்குரு சன்னியாசியாக்கிவிட்டார். மகள்கள் எங்களுடன் வர மறுப்பதற்குக் காரணம் ஈஷாவில் கொடுக்கப்படுகிற போதை மருந்துகளுக்கு அவர்கள் அடிமையாகி இருப்பதுதான்” என்று புகார் தெரிவித்தார். தொடர்ந்து, தனது மகன் அரிகரனை ஈஷாவில் இருந்து மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் புகார் அளித்தார். ஈஷா பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக் கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சானத்தை அள்ளச் செய்வது, பைத்தியமாக்குவது என கொடுமைப்படுத்துவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகேந்திரன் தெரிவித்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக, யோகா மையத்திற்கு வரும் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில் குமார் என்பவரே அதிர்ச்சியளித்தார்.

ஆனால், பேராசிரியர் காமராஜ் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா யோக மையத்தில் தங்கியிருப்பதாக கீதாவும் லதாவும்’ கூறியதாக குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது.

இந்நிலையில், இப்போது சுபஸ்ரீ மரணம் மீண்டும் ஈஷா செயல்பாடுகள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது?

சரி, ஈஷாவில் பெண்களை மூளைச்சலவை செய்யப்படுகிறார்களா?

ஈஷாவில் தங்கி பணியாற்றிவிட்டு, தற்போது வெளியேவந்து ‘தான்யம்’ ஆர்கானிக் பொருட்கள் விற்பனைச் செய்யும் நிறுவனத்தை கணவருடன் இணைந்து நடத்தும் கவிஞர் தென்றல் இதனை மறுக்கிறார். “நான் கடந்த 12 ஆண்டுகளாக ஈஷா மையத்துடன் இணைந்து செயல்படுகிறேன். ஒரு பத்திரிகையில் சத்குரு எழுதிவந்த தொடரைப் படித்துவிட்டுதான் முதன்முதலில் யோகா பற்றி தெரிந்துகொண்டேன். அந்த தொடரில் சத்குரு வெளிப்படுத்திய வார்த்தைகள் என் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நான் யோகா கற்றுக்கொள்ள ஈஷா போனேன். அங்கே நான் பார்த்த ஈஷா செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, வேலையில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு ஆஷ்ரமத்திலேயே தங்கி, யோகா கற்றுகொள்ளும் அதேநேரத்தில் அவர்களுடன் வேலை செய்யவும் முடிவெடுத்தேன். நான் ஈஷா பள்ளி பிள்ளைகளோடு நேரத்தை செலவிட்டேன்.

ஈஷா என் வாழ்க்கையில் புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. என் கணவர் மதுசூதனனை அங்குதான் சந்தித்தேன். சத்குருவின் ஆலோசனையில்தான் நாங்கள் எங்கள் ஆர்கானிக் பொருட்களை விற்பனைச் செய்யும் திட்டத்தை ஆரம்பித்தோம். ஈஷா மையம் எங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்காக உதவியிருக்கிறது. எங்களுக்கு ஆர்வமான எதையும் செய்வதற்கான சுதந்திரத்தை சத்குரு கொடுத்தார்.

என் பெற்றோர்கள்கூட ஆரம்பத்தில் நான் ஆசிரமத்தில் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்தார்கள். ஆனால், அதன்பின்னர் என்னிடம் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். இப்போதும் நானும் எனது கணவரும் எங்களால் சாத்தியமான அனைத்து ஆசிரமம் நடவடிக்கைகளிலும் கலந்துகொள்கிறோம்.

என் அனுபவத்தில் தற்போது ஈஷா மீது இன்று சுமத்தப்படுபவை அனைத்தும் திரித்துக் கூறப்பட்ட பொய்கள் என்று தயங்காமல் சொல்வேன். உண்மையில் ஈஷாவின் பாதை ஆன்மிகப் பாதை, துறவறப் பாதையல்ல. ஈஷாவில் பலநூறு திருமணங்கள் நடந்திருக்கின்றன. எந்த மனித உரிமை மீறல்களும்கூட அங்கு நடைபெறவில்லை என்று சொல்லப்பட்ட பின்னரும் சிறுநீரகம் திருடுவது, கர்ப்பப் பையை நீக்குவது, குழந்தைகளுக்கு போதைப் பொருள்கள் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பதில்லை, தண்டனை கொடுக்கிறார்கள் போன்ற கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சொல்லி வருகிறார்கள்.

போதைப் பொருட்கள் கொடுத்து மதி மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஈஷா வழங்கும் யோக வகுப்புகளை பயின்று, அவற்றை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பலர் போதைப் பழக்கத்திலிருந்து வெளிவந்துள்ளார்கள், ஆரோக்கியம் அடைந்திருக்கிறார்கள் என்பதற்கு எனக்குத் தெரிந்தே பல சாட்சிகள் உள்ளன. ஆஷ்ரமத்தில் போதைப் பொருட்கள், புகைப் பிடித்தல் போன்ற பழக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளது” என்கிறார் தென்றல்.

இப்படி ஜக்கிவாசுதேவின் ஆதரவாளர்கள் நன்னடத்தை சர்டிஃபிகேட் கொடுத்தாலும் ஈஷா மையத்தை தொடர்ந்து சர்ச்சைகள் சூழந்துக் கொண்டேதான் இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...