No menu items!

’Wow வசூல் ராஜாக்கள் – 2022’

’Wow வசூல் ராஜாக்கள் – 2022’

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இறுதியில் அல்லது புத்தாண்டு தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த ஹீரோக்களின் பட்டியலை வெளியிடுவது என்பது ஒரு சம்பிரதாயம்.

குறிப்பாக அந்த ஆண்டில் வெளியான படங்களில் பட்டையைக் கிளப்பிய 10 ஹீரோக்களை இந்தப் பட்டியலில்  வரிசைப்படுத்துவது என்பது கொஞ்சம் கடினமான வேலை. யாரை சேர்ப்பது என்பதை விட யாரை விடுவிப்பது என்பது ரொம்பவே சிரமமான ஒன்று.

சில தருணங்களில் பட்டியலில் சேர்ப்பதற்கு 10 பேர் கூட இருக்க மாட்டார்கள். காரணம் சில ஹீரோக்களின் படம் எதுவும் வெளியாகி இருக்காது. இன்னும் சில ஹீரோக்களின் படங்கள் வெளியான வேகத்தில், திரையரங்குகளை விட்டு ஓடிப் போயிருக்கும்.

இப்படியொரு சூழல்தான் 2022-ல் ஏற்பட்டிருக்கிறது.

2022-ல் ஹிட் படங்களை கொடுத்ததோடு, வசூலிலும் கலக்கிய கமர்ஷியல் ஹீரோக்களை பட்டியலிட தரவுகளை தீவிரமாக பார்த்த போது, கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. காரணம் பெரிய நடிகர்களின் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் கூட மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த ஹீரோக்கள் முன்பு எவ்வளவு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், வசூலில் கெத்து காட்டியிருந்தாலும் அவர்களை பட்டியலில் சேர்க்க முடியாத சூழல்.

சினிமாவில் தொடர் வெற்றிகளைக் கொடுத்திருந்தாலும் அந்த நடிகரது கடைசிப் படம் தோல்வியடைந்து இருந்தால், கருணை காட்டும் வழக்கம் இங்கு இல்லை. ப்ளாப் என்றால் ப்ளாப்தான். சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு படமும், வெற்றியாக இருந்தால் மட்டுமே மவுசு.

இந்த கணக்கு அடிப்படையில் 2022-ல் வெற்றிகரமான ஹீரோக்களாக கவனத்தை ஈர்த்திருக்கும் ‘Wow வசூல் ராஜாக்கள் – 2022’ பட்டியலைப் பற்றி பார்க்கலாம்.


1. கார்த்தி

2022-ல் தமிழ் சினிமாவின் ‘சக்ஸஸ் ஸ்டார்’ கார்த்திதான்.

‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’, ‘விருமன்’ என கார்த்தி பாக்ஸ் ஆபீஸில் ஹாட்ரிக் ஹிட்களை கொடுத்திருக்கிறார். விமர்சன ரீதியாக ’சர்தார் ’படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. ’பொன்னியில் செல்வன்’ முதல் பாகத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி காட்டிய ரவுசு, கார்த்தியின் மவுசை எகிற வைத்திருக்கிறது. [பிரம்மாண்ட கொண்டை, சொக்கிப்போக வைக்கும் உடல்மொழி, திரும்பிப் பார்க்கவைக்கும் தோற்றம் என த்ரிஷா கார்த்தியை ஓவர்டேக் செய்திருப்பது இந்த கணக்கில் வராது]

விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தாலும் இதன் வசூலில் கார்த்திக்கும் ஒரு பங்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக வசூலை அள்ளிய இந்தப் படத்தில் கார்த்தி இருக்கிறார்.

அடுத்து ’விருமன்’. கிராமத்து செட்டப்பில் கார்த்தி நடித்தால் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட்டில் மற்றுமொரு ஹிட். இந்தப்படம். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வசூலாக 46 கோடியும், உலக அளவில் 53 கோடியும் வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள்.

மூன்றாவதாக ’சர்தார்’. கார்த்தியின் படங்களில் இதுவரை இல்லாத வசூலைப் பெற்று கார்த்தியின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியிருக்கும் படம். ஒட்டுமொத்த வசூலாக 100 கோடியைத் தொட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் 52 கோடி வசூலையும், 24 கோடி ஷேரையும் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கின்றன. இவை தவிர ஓடிடி உரிமை, சேட்டிலைட் உரிமை என கார்த்தியின் படங்களுக்கு இப்பொழுது மதிப்பு கூடியிருக்கிறது.

கார்த்தியின் மார்க்கெட்டை இப்படி  ராக்கெட் வேகத்தில் உயர்த்தி இருக்கிறது 2022.


2. கமல்ஹாசன்

ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பிறகு இதுபோன்ற பட்டியல்களில் இடம்பிடித்திருக்கிறார் கமல்.

’விக்ரம்’ என்ற ஒரே படம் கமல் இதுவரை பார்த்திராத கமர்ஷியல் வேல்யூவை அவருக்கு கொடுத்திருக்கிறது.

ரிட்டையர்ட் ஆகும் வயது. அரசியலில் தீவிரமாக இருக்கிறார். இதற்கு மேல் அவரால் முன்பைப் போல மெனக்கெட முடியுமா என்று யோசித்தவர்களுக்கெல்லாம் சரியான பதிலாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.

திரையரங்குகளில் வசூலான ஒட்டுமொத்த கலெக்‌ஷன் 301 கோடியைத் தாண்டியிருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 184 கோடி ஒட்டுமொத்த வசூலையும்,  93 கோடி ஷேரையும் பெற்று தந்திருப்பதாக சொல்கிறார்கள்.

’விக்ரம்’ கமலின் கமர்ஷியல் அடையாளத்தை மாற்றியிருக்கிறது. இதன் வெற்றி கிடப்பில் போடப்பட்ட ‘இந்தியன் 2’ பட ஷுட்டிங்கை மீண்டும் தொடர வைத்திருக்கிறது.

இந்த கலெக்‌ஷன் கமலின் பழைய கடன்களை அடைக்க உதவியிருக்கிறது. இதனால் இப்போது கமலின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் மீண்டும் படத்தயாரிப்புகளில் தீவிரமாகி இருக்கிறது.

கமலை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும், கலெக்‌ஷன் கில்லாடியாகவும், தயாரிப்பாளராகவும் கெளரவித்து சபாஷ் சொல்லியிருக்கிறது 2022.


3. விஜய்

சமீப காலமாகவே விஜயின் மார்கெட், வசூல் இரண்டும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.

படம் தயாரானதும் ஆன் டேபிளில் லாபம் பார்க்க ’விஜய்’ என்ற பெயர் ஒன்றே போதுமானது என்கிற அளவுக்கு  ஒரு கம்பீரமான கமர்ஷியல் கதாநாயகனாக விஜய் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

2022-ல் விஜய் நடித்து அதிக எதிர்பார்புகளுடன் களமிறங்கியது ‘பீஸ்ட்’. இப்படத்தின் ‘அரபிக்குத்து’ இன்றும் யூட்யூப்பில் அதிகம் பார்க்கப்படும் பாடலாக இருக்கிறது.

’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற அந்த பழமொழிக்கு விஜய் மிகச்சரியான உதாரணம்.

பீஸ்ட் சரியாக போகவில்லை என்றாலும் கூட ஒட்டுமொத்த வசூலாக 237 கோடியைப் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள்.

கதை என்று ஒன்றுமில்லை. திரைக்கதையும் கூட சுவாரஸ்யமில்லை. படத்தில் ஹீரோயினுக்கும் வேலை இல்லை. இப்படி படத்தில் ‘இல்லை பல’ இருந்தாலும், விஜய் இருந்தார்.

இதனாலேயே ‘பீஸ்ட்’ எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், விமர்சன ரீதியாக கிண்டல்களையும் கேலிகளையும் அதிகம் சம்பாதித்தாலும், வசூலில் பீஸ்ட் பெஸ்ட் ஆக  இருந்திருக்கிறது.


4. அஜித் குமார் என்னும் ஏ.கே

’நேர்க்கொண்ட பார்வை’ படத்திற்கு பிறகு அஜித் குமாரும், ஹெச். வினோத்தும் மீண்டும் கைக்கோர்த்த படமென்றதால்  ‘வலிமை’க்கு எதிர்பார்பு அதிகமிருந்தது.

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்றழைக்கப்படும் அஜித் குமாருக்கு படம் நன்றாக அமைந்துவிட்டால் சூப்பர் டூப்பர் ஹிட். இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்வது  கோலிவுட்டில் வழக்கமான ஒன்று.

ஆனால் வலிமை இல்லாத திரைக்கதை, அஜித்தின் ’விஸ்வாசம்’த்தைவிட பெரும் வெற்றியை இல்லாமல் செய்திருந்தது.

எதிர்பார்த்த வெற்றி இல்லையென்றாலும் இப்படம் தமிழ்நாட்டில் 99 கோடி வசூலித்ததாகவும், இதில் 54 கோடி ஷேராகவும், ஒட்டுமொத்தமாக 220 கோடி வசூலை ஈட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.


5. சிவகார்த்திகேயன்

விஜய் – அஜித் பயணித்து கொண்டிருக்கும் கமர்ஷியல் ரூட்டில் அடுத்து அடியெடுத்து வைத்திருக்கும் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன

மளமளவென இவரது மார்க்கெட் வேல்யூ அதிகரித்து வருகிறது.

2022-ல் இவருக்கு ‘டான்’ மற்றும் ‘ப்ரின்ஸ்’ என இரண்டுப்படங்கள் வெளியாகின.

இதில் ’டான்’ வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் இதன் ஒட்டுமொத்த வசூல் 78 கோடியும், ஷேராக 39 கோடியும் பெற்று தந்திருப்பதாக கூறுகிறார்கள். இதன் ஒட்டுமொத்த வசூல் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது.

முதல் படத்திலேயே 100 கோடி வசூலைப் பெற்ற இயக்குநர்கள் பட்டியலில் இப்படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இணைந்திருக்கிறார்.


6. தனுஷ்

எந்தவிதமான ப்ரமோஷனும், விளம்பரங்களும் இல்லாமல் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் வசூலையும், மக்களிடையே வரவேற்பையும் பெற்ற படமாகி இருக்கிறது ‘திருச்சிற்றம்பலம்’.

’திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ என இந்த இரண்டுப் படங்களும் சேர்ந்து தனுஷின் ஹிட் லிஸ்ட்டை நீட்டித்து இருக்கிறது.

‘நானே வருவேன்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ஆன் – டேபிள் வருவாயை 17 கோடியைப் பெற்றது.

’திருச்சிற்றம்பலம்’ ஒட்டுமொத்த வசூலில் 100 கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறார்கள். மேலும் இப்படம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 68 கோடியும், ஷேராக 34 கோடியையும் பெற்றுத் தந்திருக்கிறதாம்.


7. பிரதீப் ரங்கநாதன்

2022-ம் ஆண்டின் ‘சர்ப்ரைஸ் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன்

வெறும் நாலைந்து கோடியில் எடுக்கப்பட்ட இவரது ‘லவ் டுடே’ படம், ஒட்டுமொத்தமாக 50 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

அல்வா சாப்பிட்டால் கடைசியில் கொஞ்சம் காரத்திற்காக கொடுக்கப்படும் கார பூந்தியைப் போல ஏஜிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியான ஒரு சின்ன பட்ஜெட் படம்.

எந்தவிதமான எதிர்பார்பும், விளம்பரமும் இல்லாமல் வெளியாகி, லாங் ட்ரைவ், மாமாக்குட்டி, செல்லக்குட்டி என இளசுகளை முணுமுணுக்க வைத்தது பிரதீப் ரங்கநாதன் ஸ்கிரிப்ட்.

செல்ஃபோனை காதலனும் காதலியும் மாற்றிக் கொள்ளும் விஷயத்தை முதல்வர் வரை கமெண்ட் அடிக்க வைத்ததிலிருந்து ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி புரிகிறது.

இயக்குநராகவும் ஜெயித்த பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாகவும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிக்கண்டிருக்கிறார்.


ஏறக்குறைய 200 படங்கள் வெளியான நிலையில் வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும், சில படங்களின் வசூல் இரண்டாயிரம் கோடியைத் தொட்டிருக்கிறது.

அந்தவகையில், 2022 வருடம் தமிழ் சினிமாவிற்கு ஒரு சக்ஸஸ்ஃபுல்லான வருடமாக அமைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...