No menu items!

சாகித்ய அகாதமி விருது – பரிசுத் தொகை இவ்வளவுதான்!

சாகித்ய அகாதமி விருது – பரிசுத் தொகை இவ்வளவுதான்!

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபபட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஒரு எழுத்தாளரின் வாழ்நாள் சாதனைக்கு பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைய பொருளாதார நிலையில் மிகமிகக் குறைவு, அதனை உயர்த்த வேண்டும் என எழுத்தாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரவணன் சந்திரன் தான் இந்த விவாதத்தை முதலில் தொடங்கி வைத்தவர். இது தொடர்பாக அவர் எழுதியிருந்த பதிவில், ‘சாகித்ய அகாதெமி விருதுச் செய்தி வந்த உடனேயே, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து, எழுத்தாளர் தேவிபாரதியை நேரலையில் அழைத்தார்கள். அவரால் பேசக் கூட முடியவில்லை. “எனக்கு ஒடம்பு சரியில்லை” எனத் திணறலுடன் சொன்னார். கேட்கவே சங்கடமாக இருந்தது. உடனடியாக நேரலையில் இருந்து தொலைக்காட்சி தரப்பே இணைப்பைத் துண்டித்து விட்டது. ஆனால், அந்தக் குரலில் மகிழ்ச்சியிருப்பதை உணர்ந்தேன். ஒரு மனிதன் ஒரு சிறிய மகிழ்ச்சிக்காக வாழ்நாள் முழுக்க எப்படிக் காத்திருக்க வேண்டியிருக்கிறது?

விருதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், அதை அரசு இன்னொரு விதத்தில் கையாளும் விதம் மோசமாக இருக்கிறது. 1955இல் பரிசுத் தொகை ஐயாயிரம் ரூபாயாக ஆரம்பித்து பல மாமாங்க வருடங்கள் கழித்து அது பத்தாயிரம் ரூபாயாக மாறி, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து நாற்பதாயிரம் ஐம்பதாயிரமாக மாறிக் கடைசியாய் 2009ஆம் ஆண்டு ஒரு இலட்சமாக மாறி இருக்கிறது. அதற்கடுத்திலிருந்து இப்போது வரை அது கிணற்றில் போட்ட கல் போலவே கிடக்கிறது.

இந்திய அரசாங்கத்தின் விருது இது. இந்திய அரசின் தகுதி ஆண்டுக்கு ஒரு மொழிக்கு ஒரு இலட்ச ரூபாய். ஆளும் வர்க்கம் ஒருநாள் அணியும் உடையே பதினைந்து இலட்சம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த விருதை அளிக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் மாத வருவாய் எவ்வளவு? 2009இல் விற்ற டீசல் இப்போது என்ன விலைக்கு விற்கிறது? எல்லாமே ஏறிக் கொண்டு இருக்கிற நிலையில், நங்கூரம் போட்ட கப்பல் மாதிரி விருதுத் தொகை மட்டும் ஒரே இடத்தில் அசையாமல் நிற்கிறது.

இந்த விருதுத் தொகையைக் குறைந்தது பத்து இலட்சமாக உயர்த்தித் தர இந்திய அரசால் முடியாதா? குறைந்தது பத்து இலட்ச ரூபாய் பெறுவதற்குக்கூட ஒரு விருதாளருக்குத் தகுதி இல்லையா? பத்து இலட்சத்தை விடுங்கள், ஐந்து இலட்சமாவது?

இந்த நாடு எதற்கெல்லாமோ பணத்தை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறது. இந்திய அரசுப் பணத்தில் பிறர் கொழிக்கிற காட்சிகளையும் பார்க்கிறோம்தானே? ஏன் விருதுத் தொகையில் மட்டும் இத்தனை அலட்சியம்? பசியில் கிடப்பவனுக்கு எதைப் போட்டாலும் தின்பான் என்கிற மனநிலைதானே இது?

தனியார் விருதுகளே இப்போது விருதுத் தொகை விஷயத்தில் நிறையவே முன்னேறி வந்துவிட்டன. அந்த அமைப்புகளுக்குமே ஏதோவொன்றை நீட்டிவிடக்கூடாது என்கிற கூச்சம் இருக்குமில்லையா? ஆனால், அரசுக்கு அது இல்லை. எனக்குத் தெரிந்து ‘விஷ்ணுபுரம்’ விருதே இன்னும் கொஞ்ச காலத்தில் பத்து இலட்ச ரூபாயாக மாறி விடும். அந்த வகையில் சாகித்ய அகாதெமி விருது ஒரு இலட்சம் ரூபாய் என்பது மிக மிகக் குறைவான தொகை.

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டம் மட்டுமே இருப்பதிலேயே விருதாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பது. அதுவும் இல்லாவிட்டால் இந்தத் தொகையை வைத்துக்கொண்டு கிட்னியை வெட்டிக்கூட விற்க முடியாது. அரசு கொஞ்சமாவது கூச்சப்பட்டு விருதுத் தொகையை அதிகரிக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதனையடுத்து இதே கோரிக்கையை பல எழுத்தாளர்கள் முன்வைத்துள்ளார்கள். திமுக மகளீர் அணி மாநில துணைச் செயலாளரும் கவிஞருமான சல்மா, ‘ஜேசிபி விருது 25 லட்சம். ஒரு தனியார் அமைப்பு விருதுத் தொகையாக இவ்வளவு தரமுடியும் எனில் அரசு ஏன் தரக்கூடாது? தேவிபாரதிக்கு உடனே அரசு தரும் வீடு கிடைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அராத்து, ‘ஒரு நாள் ஜிஎஸ்டியே எத்தனையோ லட்சம் கோடி என்கிறார்கள். என்னமோ ட்ரில்லியன் டாலர் எகானமி என்கிறார்கள். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிறார்கள். ஆனால், இந்த விருது விஷயத்தில் இந்தியா இன்னும் பிச்சைக்கார நாடாகவே நடந்து கொண்டிருக்கிறது. உலகின் ஆக பிச்சைக்கார நாடுதான் ஒரு லட்சம் பரிசு கொடுக்கும்.

இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடு. இந்தியா எல்லாம் இதைப்போன்ற விருதுகளுக்கு குறைந்தது 1 கோடி கொடுக்க வேண்டும். என் சிபாரிசு சாகித்ய அகாதமி 10 கோடி, ஞான பீடம் 25 கோடி என இருக்க வேண்டும்.

இது அல்லாமல் உலக அளவில் புக்கர் பரிசு போல ஒன்றை – மோடி அடிக்கடி உச்சரிக்கும் திருவள்ளுவர் பேரில் உருவாக்கி 100 கோடி கொடுக்கலாம்.

ஒவ்வொரு நாடும் தங்கள் வலிமையைக் காட்ட உலக கோப்பை கால்பந்து போட்டிகளை லட்சக்கணக்கான கோடிகள் செலவழித்து நடத்த போட்டி போடுகின்றன. தங்கள் நாட்டின் இமேஜ் உயர வேண்டும் என்பதுதான் நோக்கம். சொற்ப காசு 100 கோடி போட்டு உலக அளவில் இலக்கிய விருது கொடுத்தால் , இந்தியாவின் இமேஜ் உயரும்’ என தெரிவித்துள்ளார்.

நியாயமான கோரிக்கைதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...