No menu items!

ஆயன்குளம் :‘அதிசய கிணறுதான், ஆனால் பயமுறுத்துது!’

ஆயன்குளம் :‘அதிசய கிணறுதான், ஆனால் பயமுறுத்துது!’

சட்டமன்ற அவைத்தலைவர் அப்பாவு அவர்களின் தொகுதி ராதாபுரம். திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்கில் அமைந்துள்ள சட்டமன்றத்தொகுதி இது.

ராதாபுரம் வட்டத்தில், திசையன்விளை-நவ்வலடி சாலையில் தங்கம்மாள்புரம் அருகே, முது மொத்தன் மொழி ஊராட்சிக்குப்பட்ட பகுதியில் இருக்கும் ஓர் அதிசயக் கிணறுதான் ஆயன் குளம் கிணறு.

\எதையும் தாங்கும் இதயம்| என்று அறிஞர் அண்ணா சொன்னாரே, அதைப்போல எவ்வளவு வெள்ளநீர் வந்தாலும் அதை வாரியிறைத்து தன் வயிற்றுக்குள் மூடி மறைத்துக் கொள்ளும் ஓர் அதிசய கிணறு இது.

திசையன்விளைக்கு 5.2 கிலோ மீட்டர் தெற்கே ஆவென்று வாய்பிளந்தபடி நிற்கிறது இந்த அதிசயக் கிணறு. சுற்றிலும் மானாவாரி தரிசுநிலம். முருங்கை விளையும் பூமி இது.

ஆயன்குளம் கிணறு இப்படி வெள்ள நீரை விழுங்குவது இன்று நேற்று நடக்கும் செயல் இல்லை. எத்தனையோ காலமாக இந்த அதிசயம் நடந்து வருகிறது. இப்படி விழுங்கப்படும் நீர் எங்கே போகிறது என்ன ஆகிறது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வந்தது.

ஆயன்குளம் கிணற்றின் ஆழம் எவ்வளவு என்பது யாருக்குமே சரிவரத் தெரியாது. சிலர் 75 அடி ஆழம் என்பார்கள். சிலர், 40 முதல் 50 அடி என்பார்கள்.

ஆயன்குளம் அருகேதான் கருமேனியாறு ஓடுகிறது. ஆயன்குளத்தை அடுத்திருக்கும் பகுதியில் வெள்ளநீர் தேங்கினால் விவசாயிகள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். நேராக ஒரு கால்வாய் வெட்டி வெள்ள நீரை ஆயன்குளம் பக்கம் அப்படியே திருப்பி விடுவார்கள். வெள்ளநீர் ஆயன்குளத்துக்குள் பாயும். அவ்வளவுதான். அத்தனை நீரும் அப்படியே ஸ்வாஹா.

இந்த ஆயன்குள அதிசயம் எப்படி நடக்கிறது? புவியிலாளர்கள் நடுவில் நீண்டகாலமாக இருந்த கேள்வி இது. இதற்கு முன் சிலர் இப்படி விடை சொன்னார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு பாறைப்பிளவு நகர்வு மண்டலங்கள் உள்ளன. ஒன்று தென்மலை-கடனா பாறைப்பிளவு நகர்வு மண்டலம்.

இந்தப் பாறைப்பிளவு நகர்வு மண்டலம், கேரள மாநிலம் தென்மலையில் இருந்து புறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி, அம்பை, ஏர்வாடி, திசையன்விளை, ஆயன்குளம் வழியாக இது உவரிக்குச் சென்று, கடலுக்குள்ளும் நீள்கிறது.

இரண்டாவதாக கூடன்குளம்-தூத்துக்குடி பாறைப்பிளவு நகர்வு மண்டலம். இது கூடன் குளத்தில் இருந்து கிளம்பி, தூத்துக்குடி வரை நீண்டுகிடக்கிறது. இந்த இரண்டு பாறைப் பிளவு நகர்வு மண்டலங்களும் சந்தித்து கைகுலுக்கிக் கொள்ளும் இடத்தில்தான் ஆயன் குளம் கிணறு அமைந்திருக்கிறது.

ஆயன்குளத்தின் அடிப்பகுதி எல்லாம் சுண்ணாம்புப் பாறை, படிமப் பாறை. இந்த வகை பாறைகளுக்குள்ளே நீர் எளிதாக போய்விடும். இப்படி வெள்ளநீர் ஓடிமறைந்து ஒரு கட்டத்தில் நிலத்துக்கு அடியில் பாதாள ஆறாக மாறி பவனி வரும். இப்படிச் செல்லும் ஆற்றை குருட்டாறு (பிளைண்ட் ரிவர்) என்பார்கள். ஆயன்குளத்தின் உள்ளே ஓடி மறையும் நீர், இப்படி குருட்டாறாக உவரி கடல் வரை செல்வதாக ஒருகாலத்தில் ஐதீகம்.

2022ஆம் ஆண்டு திசையன்விளை பகுதியில் பெருமழை பெய்து வெள்ளநீர் சூழ்ந்தபோது அந்தப் பகுதி மக்கள் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ‘நமக்குத்தான் ஆயன்குளம் கிணறு இருக்குதே’ என்று வாய்க்கால் வெட்டி, வெள்ளநீரை ஆயன்குளம் பக்கம் திருப்பி விட்டார்கள். ‘வாதாபி ஜீரணோ பவ’ என்று அத்தனை வெள்ள நீரையும் வாங்கி உள்மடியில் சுருட்டிக்கொண்டது ஆயன்குளம் கிணறு.

இந்தநிலையில்தான் தென் மாவட்டங்களையும் நடுங்கவைத்த வெள்ளப்பெருக்கு அண்மையில் ஏற்பட்டது. நெல்லை அணைகள் திறக்கப்பட, மழைநீரும், அணைநீரும் சேர்ந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன.

ஆயன்குளம் கிணறு அப்போதும் சளைக்கவில்லை. 100 முதல் 200 கனஅடி நீரை அது வாரி வாரி விழுங்கியபடியே இருந்தது. டிசம்பர் 18ஆம் தேதி வரை இந்த அதிசயக் கிணறு நிரம்பவே இல்லை. டிசம்பர் 19ஆம்தேதிதான், வேகவேகமாக ரன் குவித்த ஒரு கிரிக்கெட் வீரர் திடீரென அவுட் ஆனதுபோல, வரலாற்றில் முதன்முறையாக ஆயன்குளம் கிணறு நிரம்பி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘என்ன ஆயன்குளம் கிணறு நிரம்பிவிட்டதா?’ என்று பலரும் இதை நம்ப மறுத்தார்கள். ‘தூர் வாரப்படவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் அதிகம் சேர்ந்து விட்டன. கிணற்றின் பக்கம் இருந்த பக்கச்சுவர் இடிந்து உள்ளே விழுந்து அடைத்து விட்டது. ஜல்லிக்கற்கள், கான்கீரிட் கம்பிகள், மரப்பலகைகள் விழுந்ததுதான் காரணம். கிணறு நிறைந்தற்கு இப்படி பல காரணங்கள் சொல்லப் பட்டன. ஆயன்குளத்தில் All is not ‘Well’ என்று நாளேடுகள் தலைப்புப் போட்டன.

பிறகு, ஆயன்குளம் கிணறு திரும்பவும் வெள்ள நீரை உள்வாங்கி, இப்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டது.

ஆயன்குளம் அதிசயக் கிணற்றின் மர்மம்தான் என்ன? 2022ஆம் ஆண்டு பேராசிரியர் வெங்கடரமண சீனிவாசன் தலைமையில், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக ஆய்வாளர்கள் ஆயன்குளம் கிணற்றின் மர்மத்தைத் துப்புத் துலக்கும் பணியில் இறங்கினார் கள். எட்டு மாத காலமாக, 4 முறை நடந்த ஆய்வு அது.

ஜி.பி.எஸ். கருவிகள், நீரில் மூழ்கி படமெடுக்கும் டிரோன்கள், கோப்ரா கேமராக்கள், வைபை இணைப்புடன் கூடிய கையடக்கக் கணினி போன்றவற்றுடன் நடந்த ஆராய்ச்சி அது. தீயணைப்பு வீரர்கள் குச்சிகளில் கட்டிய நுண்துளை கேமரராக்கள் மூலம் முடிந்த அளவுக்குக் கிணற்றுக்குள் இறங்கி துழாவினார்கள்.

ஆயன்குளத்துக்கு அடியில் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். ஆனால், மழைநீரில் உள்ள ஆக்சிஜன் காற்று காரணமாக சுண்ணாம்புப் பாறைகளில் ஓட்டை விழுந்து, அவை நாளுக்குநாள் பெரிதாகி, உள்ளே ஒரு கார் ஓடும் அளவுக்கு பாதாள நீரோடைகள் இருப்பது தெரிய வந்தது. இது ஆயிரம் ஆண்டுகளாக சிறுக சிறுக உருவான புவியியல் அமைப்பு.

ஆயன்குளம் கிணற்றுக்கு அப்பால் 22 இடங்களில் ஆழ்துளை கிணறுகளை ஆய்வுக் குழுவினர் தோண்டி, மண்மாதிரி, நீர் மாதிரிகளை சேகரித்தனர்.

அதன்மூலம், ஆயன்குளம் கிணறு அடிப்பகுதியில் நிலத்தடி நீர்ப்பாதைகளை உருவாக்கி கீரைக்காரன்தட்டு, சுவிசேஷபுரம், இடைச்சிவிளை, சாத்தான்குளம், ராதாபுரம் உள்பட பல பகுதிகளை தொட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது ஆயன்குளம் கிணறு மழைநீரை வேகமாக உள்வாங்கி, 15 கிலோ மீட்டர் அப்பால் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர வழி செய்கிறது. ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த அதிசயக் கிணற்றின் குகை நீரோடைகள் செல்கின்றன.

பூதம் காத்த புதையல் போல, ஆயன்குளம் கிணறு இப்படி சேர்த்து வைத்திருக்கும் நிலத்தடி நீர், கிட்டத்தட்ட தரைக்கு அடியில் கட்டப்பட்ட ஓர் அணை போல, கார்ஸ்ட் அக்வாபேர் என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் போன்றது. இங்கிருக்கும் நீரில், ஒரு துளி நீர் கூட ஆவியா காது. ஆயன்குளம் கிணற்று நீரை எடுத்துச் செல்ல தனியாக இணைப்புக் கால்வாய்களை அமைக்க வேண்டிய தேவையில்லை. காரணம், நிலத்துக்கு அடியிலேயே இயற்கை கால் வாய்கள் உள்ளன.

‘ஆயன்குளம் கிணற்றின் அடித்தள சேமிப்பு நீரை சமமாக, தானியங்கி முறையில் பிரித்து வழங்கலாம். அந்த நீரைப் பயன்படுத்தி, கடல்நீர் உட்புகுவதைத் தடுத்து அதை பின்னோக்கி கூட தள்ளலாம்’ என்று கூறியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆயன்குளம் கிணறு இப்படி பல அதிசயங்களை தனக்குள்ளே பதுக்கி வைத்திருந்தாலும், இன்னொரு புறம், இப்போது அது பயமுறுத்தவும் தொடங்கியிருக்கிறது.

ஆயன்குளம் கிணறு நிலத்துக்கு அடியில், 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆழமான குகைள், பாதாள நீரோடைகளை வைத்திருப்பதால், அந்தப் பகுதி எந்தநேரமும் உள்வாங்கி விழுந்து விடும் ஆபத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் கருதுகிறார்கள். பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டால், ஆயன்குளம் பகுதிக்கு அது பேராபத்தாக முடியும் என்ற பீதியும் இருக்கிறது.

‘புவியியல் வல்லுநர்கள் இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து அரசிடம் உடனே அறிக்கை தர வேண்டும். அரசு போர்க்கால அடிப்படையில் ஆவன செய்ய வேண்டும்’ என்கிறார்கள் ஆயன்குளம் பகுதி மக்கள். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

……………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...