No menu items!

’தக் லைஃப்’ – ரத்தமில்லாமல், சத்தமில்லாமல் கொலைகள்!

’தக் லைஃப்’ – ரத்தமில்லாமல், சத்தமில்லாமல் கொலைகள்!

யூட்யூப், இன்ஸ்டாக்ராம், எக்ஸ், ஃபேஸ்புக் என ஸ்மார்ட்ஃபோனில் எதை நோண்டினாலும், அடிக்கடி காண முடிகிற ஒரு வார்த்தைகள் ‘தக்’ ’தக் லைஃப்’ (Thug Life).

அந்தளவிற்கு இந்த டிஜிட்டல் தலைமுறை இளசுகளிடம் ஊறிப்போய் இருக்கும் இந்த வார்த்தை, அழகான தமிழ்ப்பெயர்களில் படம் இயக்குவதை வாடிக்கையாக வைத்திருந்த மணி ரத்னத்தையே புரட்டிப் போட்டு வேடிக்கைப் பார்க்கிறது.

கமலும், மணி ரத்னமும் இணையும் படத்திற்கு ’தக் லைஃப்’ என்று பெயர் வைத்துவிட்டார். இப்படியாவது ஸ்மார்ட்ஃபோன் கால இளைய தலைமுறையின் படைப்பாளியாக அடையாளம் காணப்படவேண்டுமென நினைத்திருப்பாரோ என்று யோசிக்குமளவிற்கு ’தக்’ தகதகவென மணி ரத்னத்தை தடம் மாற செய்திருக்கிறது.

’தக் லைஃப்’ படத்தின் முதல் பார்வை டிஜிட்டல் சுவரொட்டியைப் பார்த்தவர்களுக்கு, இந்த தக்கிஸ் கூட்டத்தின் தோற்றத்தைப் பார்த்தால் அட இந்த கும்பலைப் பத்திதான் மணி ரத்னம் படமெடுக்கப் போகிறாரா அல்லது வழக்கம் போல் இந்த கும்பல் செய்த கொள்ளைகளின் பாணியை வைத்து, காயல்பட்டினக்காரர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று தனது படைப்பாக கொடுக்கப் போகிறாரா என்ற சந்தேகம் எழுவது நிச்சயம்.

இந்தளவிற்கு பிரபலமாகி இருக்கும், ’தக்’ என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன, தக் என்பது யார், தக் ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டியது எப்படி என்பதை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

வீடியோ, ஷார்ட்ஸ், ரீல்ஸ் சமாச்சாரங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ‘தக்’ என்பது ஒரு அமெரிக்க வார்த்தை அல்ல. பிரிட்டிஷ்ஷின் ஆங்கில வார்த்தையும் அல்ல.

உண்மையில் இது ஒரு ஹிந்தி வார்த்தை. ‘thag’ என்பது திருடனைக் குறிக்கும் ஹிந்தி வார்த்தை. ‘sthagati’ என்ற சமஸ்கிருத வார்த்தையை அடிப்படையாக கொண்டு ’தக்’ உருவானது. சமஸ்கிருதத்தில் இந்த வார்த்தைக்கு அர்த்தம், தங்களது உருவத்தை மறைத்து அல்லது அடையாளத்தை மறைத்து செயல்படுவதைக் குறிக்கும். புரியும் படி சொல்ல வேண்டுமானால், ஆறு நூற்றாண்டுகளாக, கொள்ளை அடிக்க பல ஆயிரக்கணக்கான மக்களைக் ரத்தம் சிந்தாமல் கொன்ற ஒரு ப்ரொபஷனல் திருடர்கள் கூட்டம்தான் இந்த தக்கிஸ்.

தக்கீஸ், இப்படிதான் செயல்பட வேண்டும் என்று ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளில் மிக நேர்த்தியாக கொள்ளையடிக்கும், மிக தேர்ந்த நுணுக்கத்தோடு தொழில்ரீதியாக கொலை செய்வதில் கில்லாடிகள்.

சில நேரங்களில் இவர்களை உலகின் முதல் மாஃபியா என்றும் கூட சொல்கிறார்கள். தோராயமாக 13-ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 19-ம் நூற்றாண்டு வரையில் இவர்கள் இந்தியாவில் ஆடிய அதிரிப்புதிரி ஆட்டம் மிகவும் திவீரமானது. திகிடுக்கிட வைக்கும் கொலை விளையாட்டு.

இந்துக் கடவுளான ‘காளி’யின் பெயரில் இவர்கள் செய்த கொலைகள் எல்லாம் பகீர் ரகம். இதனாலேயே இவர்களை ப்ரிட்டிஷ் நம்மை மிரட்டி ஆட்சி செய்த போது, ஆங்கிலத்தில் ‘தக்ஸ்’ என்ற வார்த்தையை சேர்க்கத் தூண்டியது.

இந்தியாவின் தக்கி கொலைக்காரர்கள்

தக்கிஸ் தங்களது கொலை, கொள்ளையை அரங்கேற்ற செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும், ஒரு அசத்தல் ஆக்‌ஷன் படத்திற்கான முன்னோட்ட காட்சிகளாக வைக்கலாம். அந்தளவிற்கு பில்டப் அம்சங்களுடன் இருக்கும் ஒரு நுணுக்கமான ட்ராமாவாக இருக்கும் என்கிறார்கள்.

தக் கூட்டத்தினருக்கு இப்படி கொலை செய்வது, கொள்ளை அடிப்பது என்பது குறிப்பிட்ட பருவத்தில் செய்யும் தொழிலாக இருந்திருக்கிறது. அதாவது அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இலையுதிர் காலங்களின் போது தங்களது கிராமங்களில் இருந்து ஒரு கூட்டமாக கிளம்புவார்கள். பிறகு ஜூன் – ஜூலை மாதங்களில் திரும்பி விடுவார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்தியாவில் மக்கள் அதிகளவில் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏதாவது ஒரு குழுவினருடன் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி சேர்ந்துவிடுவார்கள். ஒரு சில நாட்களில், அந்த பயணத்திலேயே அந்த குழுவினரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவார்கள். அதன்பிறகு, நாள் பார்த்து, நேரம் பார்த்து, தங்களது வேலையைக் காட்டுவார்கள்.

தங்களுக்கு சாதகமான சூழல் உருவானால், 3 தக்குகள் ஒன்று சேர்ந்து அவர்கள் குறிவைத்த நபரைக் கொன்றுவிடுவார்கள். இதில் ஒருவர் அந்த நபரை இசை மூலமாகவோ அல்லது இனிப்புப்பண்டங்கள் மூலமோ கவனத்தைத் திசை திருப்புவார். அப்போது இரண்டாவது தக், அவரது பின்புறம் இருந்து ருமால் [rumal ] என்னும் துப்பட்டா மாதிரியான ஸ்கார்ப் மூலம் கழுத்தை நெறிப்பார். மற்ற இரு தக்குகள் அந்த நபரை அடக்கிப்பிடித்து கொள்வார்கள்.

நம்பிக்கை வைத்தவர்களின் மூக்கில் மயக்க மருந்தையோ, வர்மக்கலை மாதிரியான ஒரு வித்தையையோ பயன்படுத்தி மயக்கமடைய செய்துவிடுவார்கள். இதெல்லாம், ஒரு சில மைக்ரோ நொடிகளில் கச்சிதமாக முடிந்துவிடும். யாரும் யோசிப்பதற்கோ, திரும்பிப் பார்ப்பதற்கோ கூட வாய்ப்பளிக்க மாட்டார்கள். ரத்தமில்லாமல், சத்தமில்லாமல் இவர்கள் காரியத்தை முடிப்பதால், நம்மூரில் சினிமாவில் ஹீரோக்கள் ‘ஏய்ய்ய்ய்’ என சீறிக்கொண்டு அருவாளைத் தூக்கிக்கொண்டு வருவதைப் போன்ற காட்சிகளுக்கெல்லாம் இங்கே வேலையே இல்லை.

தங்களிடம் சிக்கிய அப்பாவியிடம் இருக்கும் நகைகள், நாணயங்கள் என எதுவெல்லாம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் அலேக்காக தூக்கிவிட்டு, அந்த மனுஷனை அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துவிடுவார்கள்.

தக்கிஸ் செய்யும் ஒவ்வொரு கொலை, கொள்ளைகளும், ஒரு கட்டுக்கோப்பான டீம் வொர்க்தான். அவர்கள் ஒரு கூட்டத்தோடு சேரும் போதும் சரி, அவர்களில் தங்களுக்கான பலிகடாவைத் தேர்ந்தெடுத்து கொல்லும் போதும் கூட சரி அவர்களிடையே கனகச்சிதமான ஒத்திசைவு இருக்கும்.

இந்த தக்கிஸ் தாங்கள் செய்யும் இந்த கொள்ளையைப் பற்றி அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் மூச்சு கூட விடமாட்டார்கள். தங்களில் யாராவது பிடிப்பட்டால் கூட, மற்றவர்களைப் பற்றிய தகவல் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் இந்த கடுமையான விதிமுறையை பின்பற்றியிருக்கிறார்கள்.

ஒரு தக் கூட்டம் என்பது 10 முதல் 200 பேர் வரை கொண்ட ஒரு குழுவாக இருக்கலாம். இதில் உள்ள ஒவ்வொருத்தரும் விதவிதமான உடைகளை அணிவது வழக்கம்.

இந்த தக்கிஸில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்தியேக பணி வழங்கப்படும். செழிப்பான கூட்டம் ஒன்றைப் பார்த்துவிட்டால், அவர்களை மயக்கும் வகையில், உற்சாகப்படுத்தும் வகையில் பேசி கவிழ்ப்பது ஒரு தக் என்றால், அந்த கூட்டம் எதிர்பார்க்கும் வேலையை தங்களால் செய்ய முடியுமென நம்ப வைப்பது இன்னொரு தக். அப்புறம் சம்பவம் செய்யப் போவது மற்றொரு தக். இப்படி பக்காவாக தங்களுக்கான பணிகளைப் பிரித்துகொண்டு செயல்படுவார்கள்.

தக்கிஸ் பற்றிய முதல் ஆவணம்

இந்தியாவில் தக்ஸ் ஒரு குழுவாக அறியப்பட்ட முதல் ஆவணமானது, அவர்கள் ஒரு சாதாரண திருட்டுக்கும்பலுக்கு எதிராக நடத்திய முதல் சம்பவம்தான். 1356-ம் ஆண்டில், ஜியா உத் தின் பாரணியின் ‘ஹிஸ்டரி ஆஃப் ஃபிருஸ் ஷா’வில் [Ẓiyāʾ-ud-Dīn Baranī’s History of Fīrūz Shāh ] குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த தக்ஸ் 7 இஸ்லாமிய பழங்குடியினரைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இவர்களுடன் இந்துக்களும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களில் இந்துக்களில் அழித்தல் மற்றும் புதுப்பித்தலின் கடவுளான காளியை வழிப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் காளிக்கு உதவும் வகையில் நல்லது கெட்டது இரண்டையும் சமப்படுத்துவகையில் தாங்கள் செயல்படுவதாக நம்பினார்கள். இதனால் இவர்கள் யாரைக் கொன்றாலும் ரத்தம் வெளியே பிறீட்டு வராமல் கொலை செய்வார்கள்.

ஆனால் எல்லா தக்-களும் ஒரு பொதுவான மூடநம்பிக்கை, சம்பிரதாயங்களின் மூலம் ஒன்றுப்பட்டு இருந்தார்கள் எனத் தெரிகிறது. இதுவே அவர்களை ஒரு குழுவாக முத்திரைக் குத்துவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

இவர்கள் தங்கள் குழுவினருக்கு மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பிரத்தியேகமான ரமாசி [ramasi] என்னும் குறியீட்டு மொழியைப் பின்பற்றி இருக்கிறார்கள். இவர்களுக்கென ஒரு சில பொது விதிகளும் இருந்திருக்கின்றன. ஒருவரைக் கொல்லாமல் அவரது சொத்தை திருடுவது தடைவிதிக்கப்பட்ட ஒன்றாகவும், பிராமணர்களை அவர்களது தூய்மையான காரணத்திற்காக கொல்லக்கூடாது, காளியின் அவதாரமாக இருப்பதால் பெண்களைக் கொல்லக்கூடாது என்றும் அவர்களுக்குள் சில மிகவும் நாசூக்கான விதிகள் பின்பற்றப்பட்டன.

தக்கிஸ் மரபு

தக்கிஸ் குழுவில் இடம்பெறுபவர்கள் பெரும்பாலும் அக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு அரசியலில் அப்பாவிற்கு அடுத்து மகன்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவதைப் போலவே அப்பாவிற்குப் பிறகு மகன்களும் தக்கிஸ் ஆக களத்தில் இறங்கி வேட்டையாடி இருக்கின்றனர்.

இன்றைக்கு ஒரு வேலைக்கு புதியவர் ஒருத்தர் வருகிறார் என்றால் அவருக்கு ஒரு பாஸ் தொழிலை சொல்லிக்கொடுப்பாரே, அப்ரெண்டிஸ்ஷிப் மாதிரி ஒரு குரு தனக்குத்தெரிந்த அந்த வித்தைகளையெல்லாம் கற்றுக்கொடுப்பார். இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் தக்-களுடன் புது பார்ட்டி செட் ஆகிறாரா என்று பார்ப்பார்கள். சில சமயங்களில் பயணம் செய்பவர்களில் சிலரை இந்த தக்கிஸ் கொன்று இருப்பார்கள். அவர்களுக்கு சிறுவயது குழந்தைகள் இருந்தால், அவர்கள் வளர்த்து தங்களது குழுவில் இளம் தக் ஆக இறக்கியும் விடுவார்கள்.

இப்படி அடையாளம் இல்லாமல் அராத்து செய்த தக் கூட்டத்தை, 1830-ம் ஆண்டு வாக்கில் ப்ரிட்டிஷ் ஆட்சியர்கள் ஒடுக்க நினைத்தார்கள். அந்தளவிற்கு தக் கூட்டம் களமாடியது. இதனால் தக்கி & டாகாய்டி சப்ரெஷன் ஆக்ட் [the Thuggee and Dacoity Suppression Acts] ஒன்றை ப்ரிட்டிஷ் அரசு கொண்டு வந்தது. 13 அக்டோபர் 1830 அன்று கேப்டன் வில்லியம் ஸ்லீமேன் தக்குகளை வீழ்த்துவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகோ அல்லது அதற்கு முன்போ தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டாலோ, கிழக்கு இந்திய கம்பெனியின் ஆளுமைக்கு உட்பட்ட அல்லது உட்படாத பிராந்தியங்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கறாராக கூறியது கிழக்கு இந்திய கம்பெனி.

1835-ல் வில்லியம் ஸ்லீமேன் பரபரவென தக் கூட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தார். தக்கி & டகாய்டி டிபார்ட்மெண்ட் [Thuggee and Dacoity Department] என்று ஒரு சிறப்பு காவல் பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த குழு, அசராமல் வேட்டையாட கிளம்பியது. இதனால் 1830-35 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1562 தக்குகளைப் பிடிக்க முயற்சி செய்யப்பட்டது. 382 தக்குகளுக்கு மரண தண்டனை. 909 தக்குகள் பீனல் காலனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 77 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிட்டார்கள்.

உலக சாதனைகளைப் பட்டியலிட்டு கின்னஸ் புக், இந்தியாவைச் சேர்ந்த தக் பெராம் என்பவர் கொலைகள் செய்வதில் பக்காவாக யோசித்து, கச்சிதமாக செய்து முடிப்பவர் என்று குறிப்பிட்டு உள்ளது. மத்தியப்பிரதேசத்தின் ஒளத் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1970 மற்றும் 1840 வரையிலான காலக்கட்டத்தில் தக் கூட்ட தலைவராக இருந்து சுமார் 931 பேரை கொலை செய்திருப்பார் என்று குறிப்பிடுகிறது. இவரை 50 வருடங்கள் கழித்து 1840-ல் கைது செய்திருக்கிறார்கள்.

இப்படி ஆடுப்புலி ஆட்டம் காட்டிய தக்கிஸ் கூட்டம், ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு முடிவு வந்தது. ஆனாலும் இந்த ’தக்’ இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மணி ரத்னம், வட இந்தியாவில் பதற வைத்த இந்த தக்கிஸ் கூட்ட கதையை, தமிழுக்கு ஏற்றப்படி மாற்றி காயல்பட்டினக்காரரை வைத்து கொடுப்பாரா அல்லது டைட்டிலை மட்டும் வைத்து கொண்டு ரசிகர்களை திசை திருப்புகிறாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...