No menu items!

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதனால், ராகுல் காந்தி எம்.பியாக தொடரலாம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு

கடந்த 2019 மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. அப்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், ‘மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாக’ ராகுல் காந்தி பேசியது சர்ச்சைக்குள்ளானது. இது தொடர்பாக, மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி, தனது வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியை இழந்தார்.

இதனையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த ராகுல் காந்தி, ‘இந்த வழக்கில், நான் குற்றமற்றவன்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தான் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். எனக்கு அளித்த தண்டனை நிலைக்க  தக்கதல்ல. வருத்தம் தெரிவிக்க சொல்லியிருந்தால் அதை முன்பே செய்திருப்பேன்’ என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ராகுல் காந்தி மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கவாய், நரசிம்மா, சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதம் செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.

வழக்கு விசாரணையின்போது ராகுல் தரப்பில், அவதூறு வழக்குகள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அபிஷேக் சிங்வி வாசித்தார். தொடர்ந்து, ராகுல் மீது வழக்கு தொடர்ந்த புர்நேஷ் மோடியின் உண்மையான குடும்பப் பெயர் மோடி அல்ல modh என்றும் ராகுல் தரப்பு தெரிவித்தது. ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்குத் தொடுத்தவர்கள் அனைவருமே பாஜக நிர்வாகிகள் என்பது மிகவும் விசித்திரமான உண்மை என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

மேலும், ‘ராகுல் காந்தி விவகாரம் எவ்வாறு ஒழுக்க சீர்கேடு சம்பந்தப்பட்ட வழக்காக மாறும்? ராகுல் காந்தி கிரிமினல் அல்ல; இந்த உத்தரவால் 8 ஆண்டுகள் மவுனமாக்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தில் அனைவருக்குமே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஒரு அவதூறு வழக்குக்காக 8 ஆண்டுகள் வரை குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா?’ என்று வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தண்டனை ஒருநாள் குறைவாக வழங்கப்பட்டிருந்தாலும் தகுதி நீக்கம் தொடர்பான விதிகள் பொருந்தியிருக்காது. ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமின்றி தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை ஏன் விதிக்கப்பட்டது என்பது பற்றி சூரத் நீதிமன்ற நீதிபதி விளக்கம் தர வேண்டும்” என தெரிவித்தனர். தொடர்ந்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி.யாக தொடர்வார் என கூறப்படுகிறது. நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் பங்கேற்பார் என்றும் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுத முடிவெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.. ஸ்டாலின் வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவீட்டில், ‘நீதி வென்றுள்ளது..! ராகுல் காந்தியை வயநாடு தக்கவைக்கிறது..! ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். குற்றவியல் அவதூறு வழக்கில் இந்த முடிவு, நீதித்துறையின் வலிமை, ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை இந்த தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...