No menu items!

புத்தகம் படிப்போம்: வ.உ.சி. பணத்தை கொடுக்காமல் காந்தி ஏமாற்றினாரா?

புத்தகம் படிப்போம்: வ.உ.சி. பணத்தை கொடுக்காமல் காந்தி ஏமாற்றினாரா?

கடன் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் யாராவது ஏமாற்றினால், அதை ‘காந்திக் கணக்கு’ என்று சொல்லும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனாருக்கு சேர வேண்டிய பணத்தை மகாத்மா காந்தி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்றும், அதனாலேயே வராக் கடன்களை ‘காந்திக் கணக்கு’ என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால், உண்மையில் ‘காந்தி கணக்கு’ என்பதன் வரலாறு உப்பு சத்தியாகிரகம் போராட்டத்துடன் தொடர்புடையது.

சரி, வ.உ.சி. பணத்தை காந்தி அபகரித்தாரா இல்லையா? உண்மையில் நடந்தது என்ன?

நூறாண்டு கடந்த இந்த கேள்விகளுக்கு விடை சொல்லும் நூல்தான், வரலாற்று பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையே நடைபெற்ற 19 கடிதங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த கேள்விகளுக்கான விடையை கண்டுபிடித்துள்ளார், சலபதி.

மகாத்மா காந்தி எழுத்துகள் தொகுக்கப்பட்டு நூறு பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆனால், இந்த நூறு நூல்களில் வ.உ.சி.க்கு காந்தி எழுதிய ஒரு கடிதம் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காந்திக்கு வ.உ.சி. எழுதிய ஒரு கடிதத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் பார்க்கும் சலபதி, அந்த கடிதத்தின் அடிப்படையில் வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையே பல காலம் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கும் என உணர்கிறார். அந்தக் கடிதங்களை தேடி ஆவணக்காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் என பல்வேறு ஊர்களில் பல்வேறு இடங்களில் படியேறி இறங்குகிறார். 40 ஆண்டுகள் நடைபெறும் இந்த தேடலில் வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையே எழுதப்பட்ட 19 கடிதங்களை கண்டுபிடிக்கிறார். இந்த கடிதங்களின் அடிப்படையில்தான் இந்நூலை எழுதியுள்ளார்.

வழக்கறிஞரான வ.உ.சி., ஆங்கிலேயருக்கு எதிரான திருநெல்வேலி எழுச்சிக்கு பின்புலமாக நின்றவர். தடையை மீறி சுயராஜ்ஜிய நாள் கொண்டாட்டங்களை நடத்தியவர். பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ‘கோரல்’ ஆலைத் தொழிலாளர்களது போராட்டத்துக்குப் பக்கபலமாக நின்று நிர்வாகத்தை அடிபணிய வைத்தவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவால் விட்டு சுதேசி கப்பல் கம்பெனியை தொடங்கி தூத்துக்குடியில் கப்பல் விட்டவர். இதனால் வ.உ.சி. மேல் மிகுந்த கோபத்துடன் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1908 மார்ச் 12இல் வ.உ.சி.யை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தது. அவருடன் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 1908 ஜூலை 7இல் தீர்ப்பு வழங்கப்பட்டது, ராஜதுரோகப் பேச்சுக்களுக்காக சுப்பிரமணிய சிவாவுக்கு பத்தாண்டுகளும் வ.உ.சி.க்கு இருபது ஆண்டுகள் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிவாவின் பேச்சுக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக வ.உ.சி.க்கு மேலும் ஓர் ஆயுள் தண்டனை என வ.உ.சி.க்கு மொத்தம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின்னர் வ.உ.சி. கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்கு வெளியே வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள் மேல் முறையீடு செய்து வழக்கை தொடர்ந்து நடத்தினார். இதில் சென்னை உயர் நீதிமன்றம், வ.உ.சி.யின் இரட்டை ஆயுள் தண்டனையை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது. அதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் அந்நாட்களில் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குத்தான் போக வேண்டும். அதற்கு அப்போதைய கணக்குப்படி 10 ஆயிரம் ரூபாய் ஆகும். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?

இதனால், வழக்கை தொடர்ந்து நடத்த நிதி கோரி வேண்டுகோள் விடுக்கிறார் மீனாட்சி அம்மாள். அது பத்திரிகைகளில் அறிக்கையாக வெளி வருகிறது. இந்த அறிக்கையை பார்க்கும் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களான தமிழர்கள், தங்களால் ஆன தொகையை திரட்டி மீனாட்சி அம்மாளுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் ஒரு பங்கு அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் காந்தியிடம் கொடுத்து அனுப்பப்படுகிறது. ஆனால், காந்தி பயணம் செய்த கப்பல் புறப்பட்ட பத்தாவது நாள் முதலாம் உலகப் போர் தொடங்கி விடுகிறது. எனவே, காந்தி நாடு திரும்ப தாமதமாகிறது. இதனால், அந்த பணமும் மீனாட்சி அம்மாள் கைக்கு வந்து சேரவில்லை.

இந்நிலையில், 1912 டிசம்பர் 24ஆம் தேதி வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையானார். அதன்பின்னரும் வருமானமின்றி மிகுந்த சிரமத்துடன்தான் வ.உ.சி.யின் நாட்கள் நகர்ந்தது. இதனிடையே, தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.யிடம் ஒப்படைக்கும்படி கொடுத்த ஒரு தொகை தன்னிடம் இருப்பதை குறிப்பிட்டு காந்தியே 1915 ஏப்ரல் 21ஆம் தேதி வ.உ.சி.க்கு ஒரு கடிதம் எழுதுகிறார். ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் சார்பாகத் தென்னாப்பிரிக்காவில் திரட்டப்பட்ட பணத்தைத் தாங்கள் வரப்பெற்றீர்களா எனத் தங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். உங்களுக்கு அனுப்பப்பட்டதாக நான் கருதிய சில பணக்கட்டைகளைத் தேட முயன்றேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. எனவே, என்னிடம் தரப்பட்ட பணம் தங்களிடம் வந்து சேர்ந்ததா எனத் தங்களிடம் இருந்தே அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று காந்தி குறிப்பிடுகிறார்.

அதற்கு வ.உ.சி. மறுநாளே தனக்கோ தனது மனைவிக்கோ எந்தப் பணமும் காந்தியிடமிருந்து வரவில்லை என பதில் எழுதுகிறார். ஆனால், பணம் அனுப்பியது யார் யார் என்கிற பட்டியல் விவரம் தெரியாமல் பணத்தை அளிக்க முடியாது என்று பதில் எழுதிவிடுகிறார் காந்தி.

இதற்கு பதில் எழுதும் வ.உ.சி., ‘கடந்த இரண்டாண்டுகளாக அந்த தென்னாப்பிரிக்க நண்பர்கள் செய்கிற உதவிதான் என்னையும் என் குடும்பத்தையும் காத்து வருகிறது. இந்த நிலையில் எனக்கென தரப்பட தயாராய் இருக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். ஆதலால், தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை அனுப்பி உதவ வேண்டுகின்றேன்’ என்று எழுதுகிறார்.

வ.உ.சி.யின் துயர நிலையை புரியாத காந்தியோ விடாப்பிடியாக, ‘பணம் செலுத்தியவர்கள் பட்டியல் வந்தவுடன் அனுப்புகிறேன்’ என்கிறார்.

தொடர்ந்து பல கடிதங்கள் மாறி மாறி இரு பக்கம் இருந்தும் எழுதப்படுகிறது. 1916 ஜனவரி 20இல் காந்தி எழுதிய கடிதத்தில், ‘நெட்டாலில் இருந்து தகவல் வந்துவிட்டது. உங்களுக்குச் சேர வேண்டிய தொகை 347 ரூபாய் 12 அணா” என்று குறிப்பிடுகிறார். அதன் பின்னர் அந்தப் பணம் காந்தியிடம் இருந்து வ.உ.சி. வந்து சேர்கிறது.

ஆம், வ.உ.சி. பணத்தை ஏமாற்றி காந்தி எடுத்துக்கொள்ளவில்லை.

இத்துடன் முடிந்துவிடவில்லை. தென்னாப்பிரிக்காவில் இருந்த தனது நண்பர் வேதியப்பிள்ளைக்கு வ.உ.சி எழுதிய கடிதத்தின் மூலம் அந்தத் தொகையை வ.உ.சி. என்ன செய்தார் என்பதையும் கண்டுபிடித்து சேர்த்துள்ளார், சலபதி. காந்தி அனுப்பிய பணத்தில் 100 ரூபாயை புதிய டைப்புகள் வார்ப்பதற்காக ஓர் அச்சாப்பீஸ்காரருக்குக் கொடுத்ததையும், மீதி இருந்த பணத்தில் மற்ற கடன்களை எல்லாம் அடைத்ததையும் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார்.

வ.உ.சி. சிறையில் இருந்த நாட்களில் அவரது மனைவி மீனாட்சி அம்மாள் தனது இரு குழந்தைகளோடு பட்டபாடுகளும் முதன்முதலாக இந்த நூல் மூலம் வெளிவந்துள்ளது. மீனாட்சி அம்மாள் தன் உறவுகளுக்கு எழுதிய 10 கடிதங்கள் மூலம் இப்பகுதியை எழுதியுள்ளார், சலபதி.

வ.உ.சி. சிறை சென்றதும் வருமானமற்ற நிலையில் வாழ்வாதாரத்துக்கும் வ.உசி.யின் வழக்குகளைச் சந்திப்பதற்கும் மீனாட்சி அம்மாள் அனுபவித்த துயரங்கள் கண்ணீரை வரவழைக்கக்கூடியது. லட்சக்கணக்கில் பணம் போட்டு கப்பல் வாங்கிய வ.உ.சி.யின் மனைவி, ‘எனது மானம் கெடாத வகையில் கூலி வேலை செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்று தன் மாமனாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசிக்கும்போது உலுக்கியெடுக்கிறது.

ஆய்வு நூல்தான். ஆனால் புனைவுக்கான விறுவிறுப்புடன் எழுதியுள்ளார், சலபதி. எனவே, கதை போல் படிக்கலாம்.

*****

நூலை வாங்க இணைப்பை க்ளிக் செய்யவும்

வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா – ஆ.இரா.வேங்கடாசலபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...