No menu items!

காசி தமிழ் சங்கமம் – மாலனோடு ஒரு யாத்திரை

காசி தமிழ் சங்கமம் – மாலனோடு ஒரு யாத்திரை

ராஜ்ஜா

1

நவம்பர் 13, 2022. காலை பத்தரை மணி. ஞாயிற்றுக்கிழமை. என் மூத்த மகன் வயிற்றுப் பேரன் ரமணன் ஓடி வந்து, “தாத்தா! இந்தா உன்னோட மொபைல். இத்தோடு மூனு தடவை அடிச்சுடுச்சி,” என்று என்னிடம் கொடுத்து விட்டு தன் நண்பனோடு விளையாட ஓடிவிட்டான். யார் தொடர்ந்து மூன்று முறை அழைத்திருப்பார் என்று நான் யோசனையில் மூழ்கிப் போனேன். அந்த சமயம் ‘டொடொய்ங்’ என்ற சத்தத்தோடு ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது. ‘வணக்கம். நான் உங்களோடு உடனே பேச வேண்டும் – சுதா சேஷய்யன்’  என்ற செய்தி!

நான் டாக்டர் சுதா சேஷய்யனின் கைபேசியை ஒலிக்க வைத்தேன். “அப்பாடா! கிடைத்தீர்களா?” என்ற முகத்துதியோடு ஆரம்பித்தார். “வாரணாசியில் நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சிக்கு உங்களை சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்ல இருக்கிறோம். பொதுத் தலைப்பு ‘காசியில் பாரதி.’ நீங்கள் ‘காசியிலிந்து புதுச்சேரி வரை’ என்ற தலைப்பில் உரையாற்றலாம். அதே மேடையில் மாலனும் உரையாற்றுகிறார். என்ன சம்மதமா?” எனக்கோ மேகத்தின் மேல் அமர்ந்து செல்வதைப் போன்ற உணர்வு.

மீண்டும் அழைத்தார், இரு தினங்கள் கழித்து. “உங்கள் வயது என்ன சார்?” என்று கேட்டார். “என் வயதைத் தெரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். “சொல்லுங்கள். வாரணாசிக்கு ஃபிளைட் டிக்கெட் எடுக்க வேண்டுமே,” என்று அவர் சொல்லியதுமே, “மேடம்! எனக்கொன்று என் மனைவிக்கு ஒன்று. என் மனைவிக்கு ஆகும் டிக்கெட் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று நான் பவ்வியமாகப் சொன்னதுமே, “சரி! வயதைச் சொல்லுங்கள்” என்றார். “எங்கள் இருவருக்குமே எழுபது வயதுதான்,” என்றேன். “உங்கள் மனைவியின் பெயர்?” “பெரியநாயகி.” “நல்ல ஹஸ்பண்ட் சார் நீங்க,” என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார்.

நவம்பர் 15, 2022 அன்று மின்னஞ்சல் ஒன்று… அனுப்பியவர் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் காம கோடி. அதில் வாரணாசியில் நடக்க இருக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ (நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை) நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் சம்மதம் தெரிவித்ததற்கு உணர்வு பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

காகிதத்தில் உருமாற்றம் பெற்ற மின்னஞ்சலை என் மனைவியிடம் காட்டினேன். அவருக்கு வாயெல்லாம் பல்லானது. “அதானெ! நீங்களாவது என்னெ காசிக்கு அழைச்சுக்கிட்டுப் போறதாவது? எல்லாம் காசி விஸ்வநாத சுவாமியின் கிருபைதான்…வயசான காலத்துல காசிக்கு சாகப் போவாங்கன்னு சொல்லுவாங்க. நீங்க என்னடான்னா, காசியில பேசப் போறேன்னு சொல்றீங்க” என்றார்.

மகாகவி பாரதியை நான் நன்றிப் பெருக்கோடு நினைத்துக்கொண்டேன். இந்த மாமனிதர்தான் என்னை எங்கெங்கெல்லாம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்! சேர்க்கிறார். அப்படி நான் அந்த மகாகவிக்கு என்ன செய்துவிட்டேன்? விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பாரதியின் வசன கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தேன். அவரது சிறுகதைகள், ஏறக்குறைய எல்லாவற்றையுமே, ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். அவரது பத்தாண்டு கால புதுச்சேரி வாழ்க்கையைப் பற்றி பல கட்டுரைகள், அரவிந்தரோடு அவர் கொண்டிருந்த நட்பு பற்றி சில கட்டுரைகள் — எல்லாம் ஆங்கிலத்தில் தான். நான் செய்த இந்த அணில் உதவிக்கா பாரதியும் அரவிந்தரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை பல சிம்மாசனங்களில் உட்கார வைத்து அழகு பார்க்கிறார்கள்! என்ன உலகமடா இது?

நான் மொழிபெயர்த்த பாரதியின் பல கதைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு நாளேட்டில் தொடர்ந்து வெளியானதைப் பார்த்துவிட்டு கலைஞர் அவர் எழுதிய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இப்போதோ வாரணாசிக்கு. எல்லாம் பாரதியால்தான்.

வாரணாசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், எனக்கும் என் மனைவிக்கும் சேர்த்து விமானப் பயண ரசீதினை மின்னஞ்சலில் சரியாக ஒரு வாரத்திற்கு முன்னரே அனுப்பிவிட்டது. புறப்படும் நாள் 23-11-2022. மீண்டும் திரும்பும் நாள் 26-11-2022 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமானப் படிக்கட்டில் ஏறும் போது, “வாரணாசிக்கு முன்னமேயே போய் இருக்கிறீர்களா?” என்றார் மாலன்.

“பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு செல்வது இதுவே முதல் தடவை,” என்று நான் சொல்ல, “இல்லை சார், காசிக்கு செல்வது இதுவே முதல் தடவை,” என்று என் மனைவி சொல்ல நான் தலையை சொரிந்து விட்டுக்கொண்டேன். எந்தப் பொருளும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்க வல்லதுதானோ!

விமானத்தில் ஏறி உட்கார்ந்தாகிவிட்டது. விமானமும் விண்நோக்கி உயர்ந்தது. சிறிது நேரத்தில் விமானப் பணிப்பெண் ஒருவர், ஒரு பெட்டி வண்டியில் திண்பண்டங்களையும் பானங்களையும் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டு உருட்டிக் கொண்டுவந்தார்.

எங்கள் வரிசைக்கு வந்தவர், என்ன வேண்டும் என்று கேட்டார்.

“என்ன இருக்கிறது?”

“’சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் பிரைடு ரைஸ், வெஜ் நூடுல்ஸ், உப்புமா.”

‘’எனக்கு ஒரு சிக்கன் நூடுல்ஸ் போதும். உனக்கு என்ன வேண்டுமா நீ கேட்டு வாங்கிக் கொள்,” என்று என் மனைவியிடம் சொன்னேன்.

என் மனைவி என்னைப் பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, “ஏங்க! கோயிலுக்குத்தானே போறோம். இப்போ என்ன சிக்கன், மட்டன்னு சொல்லிக்கிட்டு?” என்றார்.

“இல்லெ…நம்ம பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்குத் தானே போறோம்.”

“அதுவும் காசியிலதானே இருக்கு.”

நாங்கள் இருவரும் ஊடலில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்த பணிப்பெண், ஆளுக்கொரு வெஜ் நூடுல்ஸையும், மாதுளம் பழ ரசத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு அடுத்த வரிசைக்கு நகர்ந்தார்.

எங்களுக்கு முன் வரிசையில் இருந்த மாலன் என்ன சாப்பிடுகிறார் என்று எட்டிப் பார்ததேன். உப்புமா. அது ஒன்றும் அவ்வளவாக நன்றாய் இல்லை என்பதை அவர் முகம் சொன்னது. வெஜ் நூடுல்ஸ் பரவாயில்லை. பசிக்கு ஏதோ ஒன்று.

லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையம். பறந்து வந்த விமானம் தரை இறங்கியது. எதிர்பார்த்ததை விட பிரமாதமான விமான நிலையம். பயணப் பைகள் எங்களை வந்து சேருவதற்குள் எனக்கும், மாலனுக்கு அழைப்பு மணி வந்துகொண்டே இருந்தது…நிமிடத்திற்கு நிமிடம். “வெளியே வந்துவிட்டீர்களா?” என்று கேட்டபடி.

ஒரு வழியாக வெளியே வந்து சேர்ந்தோம். ஒரு மாணவப் பட்டாளமே எங்களுக்காக இரண்டு பெரிய கார்களை நிறுத்திக்கொண்டு காத்துக் கொண்டிருந்தது. எல்லாம் ஆங்கிலம் அறிந்த இந்திக்காரர்கள்தான். “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உங்கள் மூவரையும் அன்போடு வாரணாசிக்குள் வரவேற்கிறது. எங்கள் அன்பும் ஆதரவும் நீங்கள் திரும்பிச் செல்லும் வரை இருக்கும்,” என்று அழகான ஆங்கிலத்தில் சொன்னார்கள். அவர்கள் காட்டிய பாசம், நேசம் அளப்பரியது. எழுத்தாளர்களுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் கொடுக்கும் மரியாதை.

மாலனுக்கு ஒரு கார். ராஜ்ஜாவுக்கு ஒரு கார், என்று அவர்கள் சொன்னதுமே, “எங்களை எங்கே அழைத்துப் போகப்போகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “லஷ்மண் தாஸ் கெஸ்ட் ஹவுஸ். பல்கலைக்கழக வளாகத்திலேயே உள்ள பிரமாண்டமான தங்குமிடம்,” என்று பதில் வந்தது.

“நாங்கள் இருவருமே ஒரே கெஸ்ட் ஹவுஸ் என்றால், ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரெண்டு கார்கள்? ஒரே காரிலேயே சென்று விடலாமே,” என்று மாலன் சொல்ல, வந்திருந்த விழாக் குழுவினருக்கு நியாயமாய்ப்பட, ஒரே காரில் ஏறிக்கொண்டோம். எங்களுக்கு பாதுகாவலர்களாக ஒரு மாணவர் — பிரித்யூஷ் வர்மா, பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை தலையாய பாடமாக எடுத்து படிப்பவர், ஒரு மாணவி — மீரா மிஸ்ரா, உலக அரசியலை தலையாய பாடமாக பயில்பவர்.

பிரித்தியூஷீம் சரி, மீராவும் சரி…இருவருமே வாரணாசி விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியதிலிருந்து, மீண்டும் அதே நிலையத்திற்கு ஊர் திரும்ப வரும் வரை, எங்களை தங்கள் தாய் – தந்தையரையாகவே பாவித்தனர். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை, அதாவது தூங்கச் செல்லும் நேரம் வரை எங்களுடனே ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

பிரித்தியூஷ், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். மீரா – வாரணாசி, மண்ணின் புதல்வி. இருவருக்குமே வாரணாசி பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒவ்வொரு மூலை முடுக்கும் அத்துப்படி. எங்களை ஊர் சுற்றிக் காண்பிக்கும் போது கார் டிரைவர்களுக்கே இவர்கள்தான் வழிகாட்டினார்கள். ஆங்கிலமும் இந்தியும் இருவருமே சரளமாகப் பேசினர். எனவே, எங்களுக்கு மொழிப் பிரச்சினை ஏதும் இல்லாமல் போனது.

காரில் ஏறி உட்கார்ந்ததுமே, மீரா சொன்னார்: “சார், பல்கலைக்கழகம் செல்ல ரெண்டு வழிகள். ஒன்று குறுக்கு வழி. இதைப் பிடித்தால் ஒரு நாற்பது நிமிஷத்தில் போய் சேர்ந்துவிடலாம். இந்த வழி கிராமங்களின் வழியே போகும். நேர்வழியோ நகரத்தினுள் நுழைந்துதான் போக முடியும். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும். எல்லாம் போக்குவரத்தைப் பொருத்தது.”

“எங்களை நகரத்தின் வழியே அழைத்துச் செல்லுங்கள் நாங்கள் ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டாமா?” என்று மாலன் சொல்ல, “அப்படியே ஆகட்டும்” என்று டிரைவருக்கு வழிகாட்டினார் மீரா.

நான் அடிக்கடி என் நண்பர்களிடம் சொன்னதுண்டு, “புதுச்சேரியில் வண்டி ஓட்டிப் பழகிவிட்டால், உலகத்தில் எங்கே வேண்டுமென்றாலும் ஓட்டலாம்” என்று. வாரணாசியின் அந்த இரண்டரை மணி நேரப் பயணத்தில் நான் சொன்ன சொற்களை தண்ணீரை விழுங்குவதைப் போல விழுங்கிவிட்டேன். வாரணாசி வாகன ஓட்டிகள் – புதுச்சேரி வாகன ஓட்டிகளைவிட ரெண்டு மூனு படிகள் உயர்ந்தே இருக்கிறார்கள். இவர்களது வாகனங்களை இவர்கள்தான் ஓட்டுகின்றார்களா அல்லது இவர்களுக்காக காசி விஸ்வநாதரே ஓட்டிச் செல்கிறாரா என்பது எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு சைக்கிள் ரிக்க்ஷாக்காரர் ஆமை வேகத்தில், எதைப் பற்றியும் கவலைப்படாமல். அவர் எப்போது நகர்ந்து வழி விடுவார் என்ற  எண்ணத்திலேயே எங்கள் கார் டிரைவர், பிரேக்கிலிருந்து காலை எடுக்காமலேயே, ரிக்ஷாக்காரர் ஏதோ கொஞ்சம் நகர்ந்து இடம்விட, கார் டிரைவர் அவரை முந்திச் செல்ல முயற்சிக்கிறார். அந்த சமயம் பார்த்து வலது பக்கத்தில் இருந்து ஒரு சைக்கிள், இடது பக்கத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டர் எதிரும் புதிருமாக வந்து ஒன்றை ஒன்று முந்தப் பார்க்கின்றன. அவர்களும் அந்த நேரத்திற்காக காத்திருந்திருப்பார்களோ. வேறு எந்த ஊராக இருந்தாலும் அங்கு விபத்தாகி, செய்தித்தாள்களுக்கு நிறைய தீனி கிடைத்திருக்கும். ஆனால், அங்கு எதிர்பாராதது எதுவும் நடக்கவில்லை. யாரும் யாரையும் பார்த்து சலித்துக் கொள்ளவில்லை. அகராதி ஏறாத வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை. ஒருவருக்கொருவர் சட்டையை பிடித்துக் கொள்ளவில்லை. எல்லாம் விநோதய சித்தம் என்றெண்ணி போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

வாரணாசியில் இருந்த நான்கு நாட்களில் ஒரு தெருச் சண்டையையோ, விபத்தையோ, அய்யோ அய்யோ என்று அலறி அடித்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸையே பார்க்க முடியவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுதானே பதம்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இடம்தான் வாரணாசி என்கிற காசி. சராசரியாக ஒவ்வொரு நாளும் ஏழரை லட்சம் பேர் யாத்திரிகர்களாக இங்கு வருகின்றனர் என்று பின்னர் தெரிந்துகொண்டேன்.

தொடரும்


ராஜ்ஜா, ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழியாக்கம், புத்தக விமர்சனம் எழுதும் இரு மொழி எழுத்தாளர். நாற்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற இவர் இதுவரை ஆங்கிலத்தில் 35 நூல்களும், தமிழில் 17 நூல்களும் எழுதியுள்ளார்.

5 COMMENTS

  1. பாரதியின் வசன கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தேன். அவரது சிறுகதைகள், ஏறக்குறைய எல்லாவற்றையுமே, ஆங்கிலத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். அவரது பத்தாண்டு கால புதுச்சேரி வாழ்க்கையைப் பற்றி பல கட்டுரைகள், அரவிந்தரோடு அவர் கொண்டிருந்த நட்பு பற்றி சில கட்டுரைகள் — எல்லாம் ஆங்கிலத்தில் தான். நான் செய்த இந்த அணில் உதவிக்கா பாரதியும் அரவிந்தரும் போட்டி போட்டுக்கொண்டு என்னை பல சிம்மாசனங்களில் உட்கார வைத்து அழகு பார்க்கிறார்கள்! என்ன உலகமடா இது?. சிறப்பு

  2. பேராசிரியர் ராஜ்ஜாவின் தமிழ் ராஜ நடை போடுகிறது!உளமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் அவரது இனிமையான பயண அனுபவம்.

  3. புதுவை ராஜ்ஜாவின் காசி திக் விஜயம் சுவாரஸ்யமாக தொடங்கி உள்ளது.
    கண்ணையன் தட்சிணாமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...