No menu items!

அடி மேல் அடி – ஐபிஎல் தோல்வி, பிரிந்த மனைவி, 70% ஜீவனாம்சம், சிக்கலில் ஹர்திக் பாண்டியா!

அடி மேல் அடி – ஐபிஎல் தோல்வி, பிரிந்த மனைவி, 70% ஜீவனாம்சம், சிக்கலில் ஹர்திக் பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணி வீரரும்  மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவை அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தோல்வியில் இருந்து மீள்வதற்குள் அடிமேல்அடியாக மனைவி பிரிவு, அவருக்கு கொடுக்க வேண்டிய 70% ஜீவனாம்சம் என பெரும் சிக்கலில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேகமான முன்னேற்றமும் வேகமான வீழ்ச்சியும்

ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்த 2022, 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளுமே பிரமாதமான ஆண்டுகள். குஜராத் அணியின் கேப்டனாக ஒரு கோப்பை, ஒரு முறை இறுதி போட்டி என வேகமாக முன்னேறினார். இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு, கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என பலராலும் இந்த தொடருக்கு முன் ஆரூடம் கூறப்பட்டது. பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி ஆல்-ரவுண்டர்களிலும் எவ்வித குறையும் சொல்ல முடியாததாக மும்பை அணி இருந்தது. ஆனால், அனைவரது ஆருடங்களையும் பொய்யாக்கும் விதமாக இந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு எல்லாவற்றிலும் பயங்கரமாக சொதப்பியது. 14 போட்டிகளில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எப்போதுமே இறுதி ஆட்டம் வரை வரும் மும்பை அணி இந்தமுறை முதல் ஆளாக ஐபிஎல் தொடரிலிருந்து தோற்று வெளியே போனது.

இந்த வீழ்ச்சிக்கு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே அந்த அணியை சுற்றிய ஒரு சர்ச்சை தான் காரணம் என சொல்லப்படுகிறது. அது, ரோஹித் சர்மாவை கேப்டன்ஸியில் இருந்து தூக்கியெறிந்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது தான். இதனால் ரோஹித் சர்மா வெறும் ஓப்பனராக மட்டும் செயல்பட்டார், சில போட்டிகளில் இம்பாக்ட் வீரராகவும் இருந்தார். மேலும், முந்தைய கேப்டன் ரோகித் சர்மாவை பாண்டியா மரியாதை குறைவாக நடத்துகிறார் எனவும் பல இடங்களில் விமர்சனம் எழுந்தது. இதனால் மும்பை அணியில் இருக்கும் சில முக்கிய வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிகிறது.

ரோஹித்தை கேப்டன்ஸியில் இருந்து தூக்கியெறிந்த சர்ச்சையுடன், அணி தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியதும் மைதானங்களிலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கூச்சல்கள் எழும் அளவிற்கு பிரச்னை தீவிரமானது. ஹர்திக் பாண்டியா மீதும் அவரின் கேப்டன்ஸி மீதும் பல புகார்கள் கிளம்பின. இதனால், ஹர்திக் பாண்டியா தொடர்ந்து சர்ச்சை வலையிலேயே சிக்கியிருந்தார்.

அடிமேல் அடி – பிரிந்த மனைவி!

இந்நிலையில்தான், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக்கும் சில பிரச்னைகள் காரணமாக பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செர்பிய நடிகையான நடாசா ஸ்டான்கோவிக்கை ஹர்திக் பாண்டியா நீண்ட காலமாக காதலித்து வந்தார். அவர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. கரோனா காலகட்டத்தில் அவரது வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே நடாசா கருவுற்றிருந்தார். எனவே, 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்தயா பாண்டியா என பெயரிட்டார்கள்.

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இருவரும் கடந்த நான்காண்டுகளாக மண உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான், தற்போது இருவரிடையே உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக விளையாடிய எந்த ஒரு போட்டியும் காண நடாசா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹர்திக் பாண்டியா, நடாசா ஸ்டான்கோவிக் இருவரும் சமூக வலைதளங்களில் மற்றொருவரை குறித்து எவ்வித பதிவும் சமீப காலங்களில் போடவில்லை. மார்ச் 4ஆம் தேதி பாண்டியாவின் பிறந்தநாளாகும். அன்று நடாசா ஸ்டான்கோவிக் அவருக்கு வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை. அதுமட்டுமின்றி, நடாசா ஸ்டான்கோவிக் இன்ஸ்டாகிராமில் தனது பெயரை Natasa Stankovic Pandya என வைத்திருந்த நிலையில், Natasa Stankovic என தற்போது மாற்றியுள்ளார். இது அவர்கள் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை உறுதிபடுத்துவதாக கூறப்படுகிறது.

70% ஜீவனாம்சம்!

ஹர்திக் பாண்டியாவும் நடாசா ஸ்டான்கோவிக்கும் பிரியும்பட்சத்தில் நடாசா ஸ்டான்கோவிக்குக்கு பாண்டியா 70% ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. செர்பியா நாட்டை சேர்ந்தவரான நடாஷா உண்மையிலேயே ஹர்திக் பாண்டியாவை பிரிந்தால், அந்நாட்டின் சட்டத்தின் படி அவர் சொத்தில் 70% ஜீவனாம்சம் அளிக்க வரும் என அந்த தகவலில் சுட்டிக்காட்டப்படுகிறது.  

தற்போது உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது இந்த விவகாரத்து செய்தி. 2022, 2023இல் வேகமாக முன்னேறிய பாண்டியாவுக்கு இந்த ஆண்டு பெரும் பின்னடைவான ஒன்றாக அமைந்துள்ளது.

இருப்பினும் விவாகரத்து குறித்து கணவன், மனைவி இருவரும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...