No menu items!

EWS Reservation – திமுக கூட்டணி எதிர்ப்பது ஏன்?

EWS Reservation – திமுக கூட்டணி எதிர்ப்பது ஏன்?

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ள அதேநேரம் தமிழ்நாட்டில் திமுக உட்பட பெரும்பான்மை கட்சிகள் எதிர்த்துள்ளன.

ஏன் எதிர்ப்பு?

இதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் ஃபிளாஷ்பேக்…

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட பல திருந்தங்களுக்கு தமிழ்நாடு காரணமாக இருந்துள்ளது. அதில் முதல் திருத்தம், சமூகநீதியைக் காக்க தமிழ்நாட்டின் முன்னெடுப்பால் மேற்கொள்ளப்பட்டது. அதுதான் ‘இட இதுக்கீடு’.

சாதியின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அதனாலேயே சமூகத்தில் உருவான ஏற்றதாழ்வுகளை சரிசெய்யும் நோக்கில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு கல்வியிலும் வேலையிலும் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி, அதன்மூலம் காலப்போக்கில் சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டம்தான் இட ஒதுக்கீடு.

இந்தியா முழுவதும் தற்போது பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல்களை வகுத்தது மண்டல் வழக்கு என்று அறியப்படும் ‘இந்திரா சஹானி vs மத்திய அரசு வழக்கு’. இந்த வழக்கில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி,

  • இந்திய சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கும் புற்றுநோயாக சாதியை குறிப்பிட்ட இந்தத் தீர்ப்பு, இந்திய சமூகத்தில் ஒருவர் பின்தங்கியவரா என்பதை அடையாளம் காண சாதியே அளவுகோல் எனக் குறிப்பிட்டது. இந்து அல்லாதவர்களை, அவர்களது கல்வி மற்றும் பொருளாதார நிலையை வைத்து அடையாளம் காணவேண்டும் என்றது.
  • இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பது ஏற்கப்படாது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை அரசியல் சாஸனம் அனுமதிக்கவில்லை. இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியே தவிர, வறுமையை போக்குவதற்கான திட்டமல்ல.
  • இட ஒதுக்கீட்டிற்கு உச்சபட்ச அளவாக 50 % என்பதையும் இந்த வழக்கு உறுதி செய்தது.

இந்நிலையில்,

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியின் போது (1999-2004), பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. பின்னர், கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதும் மீண்டும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் முயற்சிகள் தொடங்கின. 2019ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 103ஆவது திருத்தம் செய்து, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக, விசிக உட்பட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வழக்குத் தொடர்ந்தன. ‘இட ஒதுக்கீடு 50%-த்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த 10 % இட ஒதுக்கீடு’ இருப்பதாக அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு இருந்தன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் திர்ப்பளித்துள்ளனர். ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, ‘பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103ஆவது அரசமைப்பு திருத்தம் செல்லும். இது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை. இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது. பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர்களை பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். 50%க்கும் கூடுதலாக பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதும் அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில், உச்சவரம்பு என்பது நெகிழ்வானது. அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்,” என்று கூறியுள்ளார்.

நீதிபதிகள் பெலா எம். திரிவேதி, ஜே.பி. பர்டிவாலா ஆகியோரும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை அம்சங்களை மீறவில்லை என தெரிவித்துள்ளனர்.

நீதிபதி ரவீந்திர பட், “பொருளாதார ரீதியான பின்னடைவுதான் இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டின் முதுகெலும்பாக இருக்கும் போது இதில் பட்டியலினம், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் சாசன ரீதியாக ஏற்புடையதல்ல. அனுமதிக்கதும் அல்ல” என்று கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்தும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் ஆதரவாக தீர்ப்பளித்துள்ளதால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு சட்டம் செல்லத்தக்காகியுள்ளது.

இந்த தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ், “பிரதமர் மோடியின் கரீப் கல்யான் தொலைநோக்கு திட்டத்திற்கான மற்றொரு பெருமையாகவும் சமூக நீதிக்கான திசையில் மிகப்பெரும் ஊக்கமாகவும் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். பாஜக பொதுச்செயலாளர் சிடி ரவி, “இந்தியாவில் வசிக்கும் ஏழைகளுக்கு சமூக நீதி அளிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்திற்கு கிடைத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்திற்கு ஒரு பின்னடைவு இந்த தீர்ப்பு’ என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “சமூகநீதிக்கு எதிரான, முன்னேறிய சாதியினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்த தீர்ப்பை எதிர்த்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். நீதியின் பெயரால் இழைக்கப்பட்ட மாபெரும் உச்சபட்ச அநீதியாகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் பேரமர்வு விசாரணைக்குச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளைப் பல ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது. தலைமை நீதிபதியாக லலித் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் இதற்கான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்காமல் தொடரச் செய்தபோதே இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு பாஜக அரசும் அவசர அவசரமாக எல்லா துறைகளிலும் 10% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளை நிறைவு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான பதவிகளை பின்னடைவுக் காலிப் பணியிடங்களாக வைத்திருக்கும் மோடி அரசு, இந்த 10% இட ஒதுக்கீட்டை மட்டும் தனிக் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்தியது. ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக்கொண்டே இந்து மதத்தில் இருக்கும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்று ஆகும்.

இட ஒதுக்கீடு அளவு 50% க்கு மேல் போகக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு மாற்ற முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு குறித்து இந்த அமர்வு முடிவு செய்திருப்பதும் சட்டப்படி ஏற்புடையதல்ல.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும்” என்று கூறியுள்ளார்.

சரி, இந்த தீர்ப்பால் ஏற்கெனவே இட ஒதுக்கீட்டால் பலனடைந்துவரும் சாதியினர் பாதிக்கப்படுவார்களா?

ஆம். எப்படி என பார்ப்போம்.

இட ஒதுக்கீடு பெறும் சாதியினரில் ஒருவர் குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அவருக்கு பொதுப்பிரிவில் இடம் கிடைக்கும். இதனால், அதே சாதியைச் சேர்ந்த இன்னொருவருக்கு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கும். இதனால், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இருவர் முன்னேறி வருவதற்கு வாய்ப்பு இருந்தது. இப்போது பொதுப்பிரிவில் 10% குறைவதால் இந்த வாய்ப்பும் குறையும்.

மேலும், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்பட்டோர் பிரிவினரிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் இந்த சட்ட திருத்தத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற அளவுகோலுக்குள் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். ‘இது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது’ என்று விசிக சார்பில் வாதம் செய்யப்பட்டதும், இதை இந்தச் சட்டத் திருத்தில் உள்ள குறைபாடாகாக நீதிபதி உமேஷ் லலித்தும், நீதிபதி ரவீந்திர பட்டில் சுட்டிக்காட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இட ஒதுக்கீடு தகுதிக்கும் திறமைக்கும் எதிரானது என்று பேசியும் போராடியும் வந்தவர்கள், தற்போது 10% இடஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்று கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...