No menu items!

T20 semifinal: அணிகளின் பலமும் பலவீனமும்

T20 semifinal: அணிகளின் பலமும் பலவீனமும்

இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறது டி20 உலகக் கோப்பை. இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதில் ஆடப்போகும் 4 அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களைப் பார்ப்போம்…

இந்தியா:

இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 4 வெற்றிகளைப் பெற்ற ஒரே அணி என்ற கோதாவில் அரை இறுதிக்குள் நுழைந்திருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்த 4 வெற்றிகளில் 2 வெற்றிகளைப் பெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டி இருந்ததையும் மறந்துவிடக்கூடாது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மிகக் கடினமான சூழலில் இருந்த இந்திய அணி, 19-வது ஓவரில் விராட் கோலி அடித்த 2 சிக்சர்களால் உயிர்பெற்றது. அதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் தோல்வி முகத்தில் இருந்த இந்தியா, பின்னர் அர்ஷ்தீப்பின் ஹீரோயிசத்தால் மீண்டது. இப்படி நூலிழையில் பெற்ற 2 வெற்றிகளின் பலனால் அரை இறுதிச் சுற்றை எட்டி இருக்கிறது இந்தியா.

பலம்:

இந்த உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு பலமாக இருந்துள்ளனர். 5 லீக் போட்டிகளில் இந்த 2 வீரர்கள் மட்டும் 200 ரன்களைக் கடந்துள்ளனர். இந்த 2 வீரர்களில் விராட் கோலி அதிக ரன்களைக் குவித்திருந்தாலும் சூர்யகுமார் யாதவின் 193.96 என்ற ஸ்டிரைக் ரேட், எதிரணிகளை மிரள வைத்துள்ளது. அதேபோல் பந்துவீச்சில் 10 விக்கெட்களை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், இந்தியாவின் ஆணிவேராக இருக்கிறார்.

பலவீனம்:

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனம் என்று அதன் தொடக்க ஜோடியைச் சொல்லலாம். தொடக்க ஜோடியான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் இணைந்து இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில்கூட சரியான தொடக்கத்தை அளிக்கவில்லை. இந்த தொடரில் இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்ச ஸ்கோரே 27-தான். அதேபோல் தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் சரியாக க்ளிக் ஆகாமல் இருப்பதும் அணிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்:

இந்தியாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வே அணியிடமும் பாகிஸ்தான் தோற்றபோது அந்த அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று யாரும் நம்பவில்லை. ஆனால் நெதர்லாந்து அணியிடம் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதால், பாகிஸ்தானுக்கு கடைசி நேர வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த அதிர்ஷ்டம் பாகிஸ்தானுக்கு நாக் அவுட் தொடரிலும் உதவுமா என்று பார்க்கவேண்டும்.

பலம்:

பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்த அணியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சுதான். எதிரணிகளை மிரளவைக்கும் அளவுக்கு அந்த அணியின் பந்துவீச்சு உள்ளது. அதேபோல் அந்த அணியின் வீரரான ஷடப் கான், 10 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 177.27 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்களையும் விளாசியுள்ளார். அவரது ஆல்ரவுண்ட் ஆற்றல் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது.

பலவீனம்:

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகிய இருவரும் இந்த தொடரில் பெரிதாக சோபிக்காமல் இருப்பது அந்த அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அவர்கள் மீண்டும் ஃபார்முக்கு வருவதைப் பொறுத்தே பாகிஸ்தான் அணியின் கோப்பை கனவுகள் நனவாகும்.

நியூஸிலாந்து:

தங்கள் முதல் போட்டியிலேயே பரம எதிரியான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூஸிலாந்து அணி, அதே வேகத்தில் அரை இறுதிச் சுற்றை அடைந்துள்ளது. இதன்மூலம் சமீபத்திய உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை அரை இறுதியை எட்டிய அணி என்ற பெருமையும் நியூஸிலாந்துக்கு உள்ளது.

பலம்:

கிளென் பிலிப்ஸின் சிறப்பான பேட்டிங்கும் (இந்த தொடரில் அவர் 195 ரன்களைக் குவித்துள்ளார்.) இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் கூட்டணியின் சுழற்பந்து வீச்சும் நியூசிலாந்து அணிக்கு இந்த தொடரில் கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளன.

பலவீனம்:

நியூஸிலாந்து அணிக்கு எப்போதும் பலமாக இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இதுவரை இந்த தொடரில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் 40 ரன்களை எடுத்தாலும், அதை எடுக்க அவருக்கு 40 பந்துகள் தேவைப்பட்டதால், அணிக்கு அது பலவீனமாகவே இருந்தது.

இங்கிலாந்து

முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வென்ற இங்கிலாந்தை அடுத்த போட்டியில் அயர்லாந்து அணி வீழ்த்தியது. இதனால் சறுக்கிய இங்கிலாந்து அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் தோற்றிருந்தால் கதை கந்தலாகி இருக்கும். ஆனால் அதிர்ஷடவசமாக அந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சூழலில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை வென்று அரை இறுதியை எட்டியுள்ளது இங்கிலாந்து.

பலம்:

இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் மிகப்பெரிய பலமாக சாம் கரண் இருக்கிறார். சிஎஸ்கே அணியின் சுட்டிக் குழந்தையான அவர், இத்தொடரில் மொத்தம் 10 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கிறிஸ் வோக் மற்றும் வுட் ஆகியோரும் அவருக்கு இணையாக சிறப்பாக பந்துவீசி உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறுவார்கள். இந்த சூழலில் இங்கிலாந்து அணியில் நிறைய இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது அவர்களின் பலம்.

பலவீனம்:

இங்கிலாந்தின் அதிரடி வீரர்களாக கருதப்படும் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் இந்த தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோல் மற்ற வீரர்களின் கன்சிஸ்டன்ஸியும் சரியாக இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பலவீனமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...