No menu items!

எடப்பாடி VS ஓபிஎஸ் – பாஜகவால் இணைக்க முடியுமா?

எடப்பாடி VS ஓபிஎஸ் – பாஜகவால் இணைக்க முடியுமா?

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” – கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தி இது.

ஓ.பன்னீர்செல்வம் தனது வாழ்த்தில் ’தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த நன்னாளில்….’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இரண்டு வாழ்த்திலும் அரசியல் இருக்கிறது. ‘எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கப் போகிறது’ என்று கூறியிருப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ளப் போகும் அரசியல் திருப்பங்களை நம்பிக்கையுடன் பார்க்கிறார் என்பது தெரிகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ‘தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்த’ என்று கூறுவதன் மூலம் வழக்கம் போல் ‘தியாகத்தை’ முன்னிறுத்தி அரசியலை நகர்த்த முற்படுகிறார் என்று புரிந்துக் கொள்ளலாம்.

சமீபத்திய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக வந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நடந்த பொதுக்குழு செல்லாது என்றும் ஜூலை 23ஆம் தேதி நிலைக்கு அதிமுக செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பொதுக் குழு கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும். பொதுக்குழுவை நடத்த உதவி தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறது. ஆகஸ்ட் 22ல் விசாரணைக்கு வருகிறது.

பொதுக் குழுவை கூட்டுவது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எளிதாக இருக்கும். கட்சியில் அவர்களுக்கு பெருமளவு ஆதரவு இருக்கிறது. பொதுக்குழுவை கூட்டிவிடலாம் ஆனால் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை எப்படி பொதுக்குழுவில் வைப்பது. தீர்மானங்களுக்கான ஒப்புதலை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரின் சம்மதமும் தேவைப்படுகிறது. ஒற்றைத் தலைமை என்ற எடப்பாடியின் நோக்கத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் ஒப்புதல் தர மாட்டார். அங்கே எடப்பாடிக்கு சிக்கல் எழும்.

தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கருத்துக்களையும் கவனமாய் பார்க்க வேண்டும்.

இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார். அன்புச் சகோதரர் என்று எடப்பாடி பழனிசாமியை அழைக்கிறார். எடப்பாடியை மட்டுமல்ல, யாரை எதிர்த்து தர்மயுத்த தியானம் செய்தாரோ அவர்களையும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார். சசிகலா என்று குறிப்பிடாமல் சின்னம்மா என்று குறிப்பிடுகிறார், தினகரனையும் சேர்த்துக் கொள்கிறார்.

ஓபிஎஸ்ஸின் வரவேற்புக்கு சசிகலாவிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் தினகரன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இணைவதற்கு ஓபிஎஸ் ஆர்வம் காட்டும் நிலையில், இணைவது என்ற பேச்சிற்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

‘ஓபிஎஸ் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைத்தான் அழைக்கிறா். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை. அவருக்கு உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதே நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமியல் தொடர இயலுமா என்பது கேள்விதான்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலாவும் தினகரனும் இணைந்தால் அது பலமான அணியாக மாறும். முக்கியமாய் முக்குலத்தோர் சமூகத்தினரின் ஆதரவு முழுமையாக இந்த அணிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சசிகலா வந்தால் எடப்பாடி பழனிசாமி அணியில் அதிருப்தியில் இருப்பவர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒரு புறம் முக்குலத்தோர், தென் மற்று டெல்டா பகுதி ஆதரவாளர்கள் பலம் பெற்ற ஓபிஏஸ் அதிமுகவும் மற்றொரு புறம் கவுண்டர், வன்னியர் மற்றும் மேற்கு, வடக்கு மண்டல ஆதரவாளர்களுடன் எடப்பாடி அதிமுகவும் சாதி, சமூக அடிப்படையில் பிரிந்து பலவீனமாக நிற்கும்.

இப்படி அதிமுக பலவீனமாக நிற்பதை திமுக விரும்பலாம். ஆனால் பாஜக விரும்புமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இப்போது பிரதான எதிர்க் கட்சி என்று பாஜக மார் தட்டிக் கொள்ளலாம். சமூக ஊடகங்களில் சண்டை போட்டுக் கொள்ளலாம். அறிக்கை விடலாம். போராட்டங்கள் நடத்தலாம். ஆனால் தேர்தல் என்று வந்தால் அதிமுகவினரின் உடையாத வாக்கு வங்கி பாஜகவுக்கு மிகவும் அவசியம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு முக்கியமான தேர்தல். அதற்கு தென்னிந்தியாவிலிருந்தும் வாக்குகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டில் வாக்குகளுக்கு பாஜக நம்பியிருப்பது அதிமுகவைதான். அதனை விட்டுக் கொடுக்குமா?

எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது ஆதரவாளர்கள் பலருக்கும் மத்திய பாஜக அரசின் ஆதரவு தேவை. அந்தத் தேவையைப் பெற அவர்களுக்கு இருக்கும் துருப்புச் சீட்டு அதிமுக வாக்குகள்.

சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒரே குடைக்குள் கொண்டு வருவதுதான் பாஜகவின் முயற்சியாக இருக்கும். சமீபத்திய அமமுக கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் என்று தினகரன் மறைமுகமாக கூறிவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே பாஜகவின் பாக்கெட்டில்தான் இருக்கிறார். சசிகலாவுக்கு வேறு வழிகள் கிடையாது.

இந்தச் சூழலில் பாஜகவுக்கு சவாலாக இருக்கப் போவது எடப்பாடி பழனிசாமிதான். பேரங்கள் சரியாக படிந்தால்…..

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வர என்ற ஒற்றை வாக்கியத்தை கூறி அனைவரும் ஒன்றுபடுவார்கள். பாஜக கூட்டணியில் இணைவதுதான் அவர்களுக்கு காலத்தின் கட்டாயமாக இருக்கும்.

அதை நோக்கிதான் அதிமுக அரசியல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...