No menu items!

முதல்வர் டெல்லி பயணம் மர்மம் – மிஸ் ரகசியா!

முதல்வர் டெல்லி பயணம் மர்மம் – மிஸ் ரகசியா!

கிருஷண ஜெயந்தி என்பதால் வழக்கமான ஜீன்ஸ் டீஷர்ட் உடைகளுக்குப் பதில் பட்டுப் புடவையில் ஆபீசுக்கு வந்திருந்தாள் ரகசியா. கையில் ஒரு பை நிறைய பட்சணங்கள்.

“வழக்கமாக நீங்கள்தான் எனக்கு ஏதாவது சாப்பிடத் தருவீர்கள். ஆனால் இன்று நான் உங்களுக்காக பட்சணங்களைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்று சொன்னவர், ஒரு தட்டில் சீடை, தேன்குழல், ரவா லட்டு என்று தான் கொண்டுவந்திருந்த பட்சணங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள்.

“நீ கொண்டு வந்திருக்கும் செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல். கேட்டுக்கொண்டே சாப்பிடுகிறேன். முதலில் அதிமுக பொதுக்குழு பற்றிய நீதிமன்றத்தில் தீர்ப்பில் இருந்து தொடங்கு” என்றேன்.

“எடப்பாடிக்கு இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. தீர்ப்புக்கு முன்தினம் தனக்கு ஆதரவாக இருக்கும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது ‘தீர்ப்பு நமக்கு பாதகமாக வந்தால் நாம் மேல் முறையீடு செய்யலாம்’ என்று யோசனை சொல்லியிருக்கிறார் சி.வி.சண்முகம். இதைத்தொடர்ந்து தீர்ப்பு வந்தவுடனே சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உடனே மேல்முறையீடு செய்துவிட்டார்கள். இந்தத் தீர்ப்பால் தனது அணியில் இருக்கும் யாரும் ஓபிஎஸ் அணிக்கு தாவிவிடக் கூடாது என்று நினைக்கும் எடப்பாடியார், அடுத்த பொதுக்குழு வரை பொதுக்குழு உறுப்பினர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போதைக்கு உடனடியாக பொதுக்குழு கூட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் இனிவரும் நாட்களில் மல்லுக்கட்ட இரு அணிகளும் தயாராகி வருகின்றன. அதே நேரத்தில் பாரதிய ஜனதா தனக்கு ஆதரவு கரம் நீட்டாது என்பதையும் எடப்பாடி தெளிவாக தெரிந்து கொண்டுள்ளார்.”

“தன்னுடைய ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் போய்விடுவார்கள் என்கிற அச்சம் எடப்பாடிக்கு இருக்கிறதா? அதனால்தான் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறாரா?”

“ஆமாம். அதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறார். சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக்கலாம் என்று ஓபிஏஸ் கூறியிருப்பதை அவர் எச்சரிக்கையாக பார்க்கிறார். அந்த மூன்று பேரும் இணைந்தால் பின்னணியில் பாஜகவும் இருந்தால் தன் பக்கம் இருப்பவர்கள் அங்கே போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கருதுகிறார். ஓபிஎஸ்ஸை நம்பி எதுவும் செய்ய முடியாது, அவர் தன் மகன்களை மட்டும்தான் பார்த்துக் கொள்வார், உங்களுக்கெல்லாம் எதுவும் செய்ய மாட்டார் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கட்சிக்காரர்களிடம் சொல்லி வருகிறார்கள்”

“ஓபிஎஸ்ஸில் இப்போதைய மூவ் என்ன?”

“அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு சசிகலா, தினகரன் இருவரும் தனக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ். அவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு டிடிவி தினகரன் மட்டும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். ஆனால் சசிகலா மௌனம் காக்கிறார். சசிகலாவைப் பொருத்தவரை இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார். இப்போதைக்கு தேர்தல் ஏதும் வரப்போவதில்லை என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம் என்பது அவரது முடிவாக இருக்கிறது.”

“முதல்வரின் டெல்லி பயணம் பற்றி செய்திகள் ஏதும் இல்லையா?”

“முதல்வரின் டெல்லி பயனம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதுதான். புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு வாழ்த்து, பிரதமருடன் சந்திப்பு, உடனடியாக சென்னை திரும்பல் என்று திட்டமிட்ட பயணம். அவசரமாக சென்று அவசரமாக திரும்பிவிட்டார்”

”ஏன் இந்த அவசரம்? பலவித செய்திகள் உலவுகிறதே. பிரதமரிடம் தனியே 15 நிமிடம் பேசினார் என்று கூறப்படுகிறதே? உடன் யாருமே இல்லையாமே? நிறைய மர்மம் இருக்குனு சொல்றாங்க”

“இது குறித்து டெல்லியில் விசாரித்தேன். அப்படியெல்லாம் இல்லை என்று கூறுகிறார்கள். மொத்தம் 20 நிமிடங்கள் அந்த சந்திப்பு நடந்திருக்கிறது. செஸ் துவக்க விழாவுக்கு பிரதமர் வந்ததற்கு நன்றி தெரிவித்த முதல்வர் அவருக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் மற்றும் தானியங்களை பரிசளித்தார். அந்த தானியங்கள் குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டின் தேவைகளை கோரிக்கை மனுவாக அளிக்காமல் வாய் வழி வேண்டுகோளாக மட்டும் தெரிவித்தார் என்று அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். நன்றி தெரிவிப்பு பயணமாக மட்டும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்பினாராம்”

“செஸ் துவக்க விழாவிலேயே நன்றி தெரிவித்துவிட்டாரே நேரில் போய் ஏன் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறதே?”

” இந்த மாதிரி கேள்விகளுக்குதான் திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் தெளிவாக பதிலளித்துவிட்டார். ‘நான் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல, முதல்வரும் கூட. எனவே நான் முதல்வர் என்ற முறையில் சுமுகமாக இருக்கவே விரும்புகிறேன் என்பதை சூசகமாக சொன்னார். பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் சமரசம் கிடையாது என்ற முதல்வரின் பேச்சு பல யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றாலும் சந்தேகங்கள் நீண்டுக் கொண்டேதான் இருக்கின்றது. டெல்லியில் உள்ள சில தமிழ் அதிகாரிகள் முதல்வருக்கும் பிரதமருக்கும் நட்பு பாலமாக இருந்து வருகிறார்கள். ‘நீங்கள் பாரதிய ஜனதாவை எதிர்த்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் மத்திய அரசை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இப்போதைக்கு அது வேண்டாம்’ என்று அவர்கள் முதல்வருக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்களாம். முதல்வரும் இப்போது அந்த ஆலோசனையைதான் கடைப்பிடிக்கிறார். முதல்வருக்கு தனக்கு எல்லா இடங்களிலிருந்தும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இன்னும் ஒன்றரை வருஷத்துல நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகுது. அதுக்குள்ள டெல்லி நல்லா பரிச்சயம் ஆயிரணும்னு நினைக்கிறார். இனிம அடிக்கடி முதல்வர் டெல்லி போவார்”

“துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் தள்ளி வைத்துள்ளாரே?”

“முதல்வர் பிரதமரை சந்திக்கச் சென்ற அன்றுதான், முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடக்க இருந்தது முதல்வரின் டெல்லி பயணம் காரணமாக அந்த மாநாடு பின்னர் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு அந்த மாநாடு நடத்தப்படுமா என்று தெரியவில்லை. முதல்வரை பல்கலைக்கழக வேந்தராக தேர்வு செய்த மசோதா ராஜ்பவனில் ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. இந்த நேரத்தில் 3 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் துணை வேந்தரை நியமித்திருக்கிறார். அவர்களும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.”

“முதல்வரை பல்கலைக்கழக வேந்தராக்கும் மசோதா எந்த நிலையில் இருக்கிறது?”

“ பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை முதல்வருக்கு மாற்றி ஏற்கெனவே கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் மசோதாக்களை அனுப்பியிருக்கின்றன. இந்த முறையை பாரதிய ஜனதா ஆளும் மாநில முதல்வர்களும் ஆதரிக்கிறார்கள். ‘இது நல்ல யோசனை’ என்று டெல்லி தலைவர்களிடம் அவர்கள் சொல்லி வருகிறார்களாம்.. ஆளுநரும் இந்த மசோதாவை அப்படியே நிராகரிக்காமல் சில விளக்கங்களை மட்டும் கேட்டு அனுப்பியிருக்கிறாராம்.”

“போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறதே?”

“இதற்கு முக்கிய காரணம் ஆளுநர்தான் என்கிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனையில் நாளொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடக்கிறது. பள்ளிக்கூட மாணவர்கள், மாணவிகள்கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள். இதற்கு சில போலீஸ் அதிகாரிகளும் உடந்தை என்பதுபோன்ற விஷயம் ஆளுநரின் காதுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் விவரம் கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்துதான் முதல்வர் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். தவறு செய்யும் அதிகாரிகளை கடுமையாகத் தண்டிப்பேன். சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளுநரும் தேநீர் விருந்தின்போது இதற்காக முதல்வரை பாராட்டினாராம்.”

“தமிழக அரசுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகளே கருத்துகளை தெரிவிக்கின்றனவே?’

“இந்த விஷயத்தில் முதல்வர் கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருக்கிறார். மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மின்சார வாரிய தலைமை அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினார்கள் அப்போது பாலகிருஷ்ணன், ‘பாரதிய ஜனதாவுடன் எந்த சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். மின் கட்டண விவகாரத்தில் அதை அவர் முதலில் செயல்படுத்தப்படும்’ என்று பேசியுள்ளார். அடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்லி போராட்டம் நடத்தி இருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிதீஷ் குமார் சொன்னதை தொடர்ந்துதான் பாரதிய ஜனதா – நிதீஷ்குமார் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.”

“ராகுல் காந்தியின் நடைப்பயண திட்டம் எந்த அளவில் இருக்கிரது?”

“ராகுல் காந்தி செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் நடைபயணம் தொடங்கயிருக்கிறார். கன்னியாகுமரியில் நடக்கும் இப்பயணத்தின் தொடக்க விழா சிறப்பாக இருக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரியிடம் தனிப்பட்ட முறையில் டெல்லி தலைவர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் முக்கிய தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் என்று எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு கூட்டம் நடத்துகிறார். இப்போதைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் கே.எஸ் அழகிரி நெருக்கமாக இருக்கிரார். அதனால் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி மேலும் நற்பெயர் வாங்க வேண்டும் என்று விரும்புகிறார்.”

“கட்சித் தலைமைக்கிட்ட நல்ல பெயர் வாங்கி என்ன புண்ணியம். மக்கள்கிட்ட வாங்கணுமே அதானே முக்கியம்”

“சரியா சொன்னிங்க” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...